\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பிள்ளைகளும் மின்நுகர்கருவி உபயோகங்களும்

Filed in கட்டுரை by on January 22, 2015 0 Comments

kides-devices_620x850முன்குறிப்பு – இந்தக்கட்டுரை  பயம், பூச்சாண்டி காட்டுவதற்காக எழுதப்படவில்லை. மாறாக பெற்றோர்களைச் சற்றுத் தட்டியெழுப்பி  சிந்திக்க வைக்கவே எழுதப்பட்டுள்ளது.

கண் இமைக்கவே காட்டாறு மாதிரி ஓடும் மின்தகவல் நூற்றாண்டில் பிள்ளைகளின் கைத்தொடர்பு சாதனங்களைத் தவிர்ப்பதா? மட்டுப்படுத்துவதா? இது நடைமுறைக்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறது என்றும் நினைப்போம் நாம். ஆயினும் வளரும் மூளைக்கும் அதி மின்தகவல் நுகர்தலுக்கும் இடையே பிரதி விளைவுள்ள தொடர்புகள் உள்ளன என்கின்றன பத்து வருடங்களிற்கு மேற்பட்ட ஆராய்ச்சிகள். இதற்கான காரணங்களை மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் தினமும் தமது காரியாலயங்களிற்கு வருகை தரும் பிள்ளைகளில் இருந்து அவதானிக்கலாம்.மேலும் குழந்தை பரிபாலன மருத்துவர்கள் குழுமியங்கள் (pediatric associations) அமெரிக்க, கனேடிய, ஐரோப்பிய மற்றும் சீன, தென் கொரிய நாடுகளிலும் இது பற்றிய சுகாதார எச்சரிக்கைளை விடுத்து வருகின்றன.

நவீனம் மேலும் முன்னேற்றம் என்றால் இலத்திரினியல் நூற்றாண்டுத் தகவல் பரிமாற்றம் நுகர்தல் தானே என்பது ஒரு சிந்தனை. எனவே எமது குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முந்துவதற்கான யுக்திகளைக் கற்றுத் தர வேண்டாமா என்று நினைப்பவர் ஒரு சாரார். பெற்றோராகிய பலர் வெளியே ஒப்புக்கொள்ளக் கூச்சப்பட்டாலும், மின் கைத்தொடர்புச்சாதனங்கள் வேண்டும் பொழுது குழந்தைகளைப் பராமரிக்கும் இலகு பொருள் என்று இளைப்பாறக் கூடும். மேலும், வசதியுள்ளவர் மற்றைய பிள்ளைகள் வைத்திருக்கிறார்களே என்று தமது பிள்ளைகள் தொந்தரவினால் மனம் இழகி மின்நுகர் உபகரணங்களை வேண்டித் தரவும் கூடும். மேலும் தற்போது வடஅமெரிக்காவில் பாடசாலைகள் சிலவும் மின்பலகைகளை வகுப்பு உபயோகத்திற்கு வேண்டும் எனவும் சொல்கின்றனவாம். இப்படிப் பல விதங்களில் நமது குழந்தைகள், சிறுவர் சிறுமியர் கைத்தொலைபேசி, மின்பலகை உபயோகத்திற்குப் பிரவேசித்தாலும், அதன் நன்மை தீமைகளை அறிந்து கொள்வதும் முக்கியமாகும்.

கையில் வைத்து உபயோகிக்கப்படும் மின்நுகர் சாதனங்களாகிய கணினித் தொலைபேசி, மின் பலகைகள், மற்றும் தொலைக்காட்சி உபகரணத்திலோ அல்லது கண்ணுக்குக்குள் பிரதிபலிக்கும் கூகிள் கண்ணாடியுடன் இணையும் கணினி (xBox,PlayStation, WII) விளையாட்டுக்கள் யாவும் சிறுநேரம் கேளிக்கையாக இருப்பினும் தொடர்ந்து உபயோகித்தல் பாதிப்பை ஏற்படுத்தும். மின் நுகர்வு உபகரணத்தினால் வளரும் பிள்ளைகளின் மூளைகளில் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களாவன உடன் அறிந்து கொள்ள முடியாதவை. இதனால் கண்ணினால் பார்த்தோ, காதினால் கேட்டோ உணர முடியாதவற்றைப் பற்றி நாம் அன்றாடத்தில் பெரிதும் சிந்திப்பதில்லை.

ஆயினும் தகவல்தரவு முன்னேற்றத்தில் எமது புதிய தலைமுறைகள் ஆயிரம் மக்கள் அயலில் இருந்தும் மின்நுகர் தொழிநுட்பங்களினால் ஒருவருக்கொருவர் அந்நியராக இருப்பதும் புதிய சமூக நடைமுறையாக மாறிவருகிறது என்பதையும் அவதானித்துக் கொள்ளலாம்.

தற்போது வட அமெரிக்கக் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் ஏறத்தாழ நடைமுறையில் அவர்கள் வளரும் மூளை தாக்காட்டும் ஆற்றலிலும் நான்கு தொடக்கம் ஐந்து மடங்கு அதிகமாக இலத்திரனியல் சாதனங்களை உபயோகித்து வருகிறார்கள் என்கிறது கைசர் அறிக்கை (Kaiser Foundation Report). இது பலவகையிலும் குழந்தைகளின் மூளை வளர்ப்பிற்குப் பாதகமாக மாறிவருகிறது என்று பன்முக ஆராய்ச்சிச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இதையொற்றி அறிவுரையாக அமெரிக்க, மற்றும் கனேடியக் குழந்தை மருத்துவர்கள் கைக்குழந்தைகளில் இருந்து இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகள் மின் உபகரண பாவனையை ஒட்டு மொத்தமாகத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறது. மேலும் மூன்று தொடக்கம் ஐந்து வயதுப்பிள்ளைகள் நாளுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேற்படாமலும், ஆறு தொட்டு பதினெட்டு வயது வரை இரண்டு மணித்தியாலத்திற்கு மேலும் உபயோகப் படுத்தாமல் இருப்பது நல்லது என்கிறது. இந்த அறிக்கைகள் பல தரப்பட்ட பண்டப் பொருள் விளம்பரங்கள், மற்றும் வர்த்தகச் செய்திகளினால் பின்னணியில் மூழ்கடிக்கப் பட்டுவிடுகிறது. உரிய காலத்தில் முக்கியமான விடயங்கள் பெற்றோர்க்கும் கிடைப்பதில்லை என்று அங்கலாய்ப்பர் சிகிச்சையாளர் சிலர்.

குழந்தைகளின் அதி மூளை வளர்ச்சிகாலம்

பிறந்தநாளில் இருந்து இரண்டு வயது வரை குழந்தைகளின் மூளை மூன்று மடங்காக அதிகரிக்கிறது. தொடர்ந்து மூளை வளர்ச்சி ஏறத்தாழ இருபத்தியொரு வயது வரை தொடரும். இதில் முக்கிய விடயமானது ஆரம்ப மூளைப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும் சூழற் காரணிகளின் பங்களிப்புமாகும். ஆரம்ப மூளையை கை மின்சாதனங்களின் அதிவெளிப்பாட்டிற்கு உள்ளாக்கினால் அது குழந்தையின் மூளையைத் திணறடிக்க வைக்கிறது. பிரதானமாக ஆரம்ப மூளையின் பகுத்தறியும் ஆற்றலையும், அவதானிக்கும் ஆற்றலையும் நேரடியாகத் தாக்குகிறது. இதன் பிரதிவிளைவாகப் பிள்ளைகள் பிற்காலத்தில் கற்பதில் பின்தங்குவதிலும், சூழல் காரணிகளைத் தேர்ந்து அறிதலில் குறைவு, மற்றும் அதியுணர்ச்சித் தன்மை, தாமாகத் தம்மை ஆற்றிக்கொள்ளும் தன்மை குறைவு, மற்றும் அதிக ஆத்திரம், மன எழுச்சி போன்றவற்றிற்கு உள்ளாகின்றனராம்.

வளர்ச்சி குன்றுதல்

பாரதியார் ஓடி விளையாடு பாப்பா என்கிறார். இன்று எமது நவீன சந்ததிகள் அதுதான் நான் எனது இலத்திரனியல் பிரதிபலிப்பை-அவதாரத்தைக் கணினி விளையாட்டில் ஓட்டுகிறேன் என்பார்களாக்கும்.

மின்நுகர்சாதனப் பாவனைப் பிள்ளைகளின் சாதாரண ஓடியாடி விளையாடும் உடல் அசைவுகளையும் தவிர்க்க வைக்கிறது. வட அமெரிக்காவில் ஆரம்பப் பள்ளியில் சேரும் மூன்றில் ஒரு பிள்ளை வளர்ச்சி குன்றிக் காணப்படுகிறதாம். இதில் மனவருத்தத்திற்குரிய செயல் பெற்றோர் கற்றவர்களாக, வாழ்க்கை வசதியுள்ளோர்களாக இருந்தாலும் கூடப் பாதிக்கப் பட்ட பிள்ளைகள் தொடர்ந்தும் கற்பதிலும், கல்விக்கூடத் தேர்ச்சிகளிலும் தொடர்ந்து பின்தங்கியவாறே உள்ளனராம். பிள்ளைகள் உடல் அசைவுகள் நேரடியாக அவர்கள் மூளை கிரகிப்புக்கு அவசியமானதொன்று. இதை நவீன தொழிநுட்பச்சாதனங்கள் முறியடிக்கின்றன என்று ஆராய்ச்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிள்ளைகள் பருமன் பெருவாரியாகப் பரவுதல்

ஆத்திசூடியில் ஔவையார் உண்டி சுருங்கல் நலம் என்கிறார். இன்று தொழிநுட்பத்தேர்ச்சியுள்ள நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒன்று பெருவாரி உடல் பருமன் அதிகரிப்பு (Obesity). அதுவும் பிள்ளைகள் சென்ற பத்து வருடங்களில் உடல் பருமன் முப்பது சதவீதமாக  அதிகரித்துள்ளது. இதற்கும் அதிகத் தொலைக் காட்சி, கணினி விளையாட்டுக்கள் கட்டில், சொகுசு கதிரைகளில் இருந்து பார்ப்பதற்கும் நேரடித்தொடர்புண்டு என்று தெரிவருகிறது.

இந்தக் குழந்தைகளில் மேலும் முப்பது சதவீதமானோர் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், மாரடைப்பு, போன்றவற்றை மிகவும் சிறிய வயதுகளிலேயே பெறுகிறார்கள் என்று அமெரிக்க நோய்த்தடுப்பு இலாக்கா குறிப்பிட்டுள்ளது. மேலும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இருப்பத்தோராம் நூற்றாண்டில் மருத்துவ, இலத்திரனியல் நவீனமயத்தில் உச்சக் கட்டத்தில் இருப்பினும், இந்தச் சூழலில் வளரும் பிள்ளைகள் பலவேறு சூழல் பிரதிவிளைவுகளால் அவர் தாய்,தந்தையரிலும் கூடிய ஆயுளுடன் வாழுவதே கேள்விக்குறி என்றும் சில குழந்தைப் பரிபாலன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் அதிகரிப்புக்கும் நித்திரையின்மைக்கும் தொடர்புண்டு.. தூக்கம்பற்றிய சில விடயங்களை இங்கே ஆராயலாம்.

குழந்கைகளின் நித்திரையின்மை

சிறுகுழந்தைகள் தூங்குவதற்கு அடம்பிடிப்பது சகஜம், ஆயினும் போஸ்டன் கல்லூரி (Boston College) ஆராய்ச்சி எழுபத்து ஐந்து சதவீதமான ஒன்பது தொடக்கம் பத்து வயதுப்பிள்ளைகள் நித்திரையின்மையால் தவிக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. அதனால் அவர்கள் பாடசாலைக் கல்வியும் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கைசர் ஒன்றியத்தின் அறிக்கையின் படி ஏறத்தான அறுபது சதவீதமான பெற்றோர்கள் வட அமெரிக்காவில் பிள்ளைகளின் தொழிநுட்ப சாதன உபயோகத்தைக் கண்டு கொள்வதில்லை என்றும் மேலும் எழுபத்தைந்து சத வீதமான பிள்ளைகள் படுக்கையறையிலேயே சாதனங்களை உபயோகிக்க அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் குறிப்பிடுகிறது.

அன்றாட சூழலில் காணப்படும் இயற்கையொளியானது மஞ்சள் நிறத்தைக் கொண்டது. இது நமது மூளைக்குச் சாதகமானது. எனினும் மின் நுகர்கருவிகளில் இருந்து வெளிவரும் இலத்திரினியல் கதிரானது நீல ஒளியை உடையது. இது இரவில் இருளில் பிள்ளைகள் உபயோகித்தால் அது அவர்கள் மூளையைத் தொடர்ந்து தட்டி எழுப்பியவாறே இருக்கும். இது மூளைவளர்ச்சிக்குத் தேவையான ஆழ்ந்த தூக்கத்தை இழக்க வைக்கும். இதன் பிரதிபலிப்பு தூக்கம் மிகுந்து பள்ளிக்குத் தடுமாறிச் செல்லும் பிள்ளைகளே. அவையாவும் பெற்றோர் அறிந்தோ அறியாமலோ பிள்ளைகளின் மூளைத் தொழிற்பாட்டிற்குப் பாதகமாகவே அமைகின்றன. நித்திரையின்மை வளரும் மூளையில் மறதித்தன்மை, கவனமின்மை, மற்றும் சில மனநோய்களுக்கும் அடியூன்றலாம்.

மனநோய் அதிகரிப்பு

வட அமெரிக்காவில் கனடாவில் ஒன்றில் ஆறு பிள்ளைகள் மனநோய் மருந்துகள் உபயோகிக்க வேண்டிய சூழலிற்குள்ளாகியுள்ளனர். இதைப் போன்ற கணிப்புக்கள் அமெரிக்காவிலும் மற்றைய தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளிலும் காணப்படுகிறது. பல் வேறு சூழல் காரணிகள் மத்தியில் சிறார்களின் அதி தொழில்நுட்பம் பாவித்தலுக்கும் மனநோய்களுக்கும் தொடர்புண்டு என்றும் இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக அறிக்கைகள் தற்போது கூறுகின்றன. தற்போது மனத்தாழ்வு (depression), பயம் (anxiety), கவனயின்மைக் கோளாறு (attention deficit), பலரக மூளைப் பற்றாக்குறை (autism)(, இருமுனையப் பிறழ்வு வியாதி (bipolar disorder), சுயநிலைச் சிந்தனை அனுமானிப்புக் குன்றுதல் அதன் பரிவிளைவுகள் (psychosis and problematic child behavior) ஆகிய மனநோய்கள் பிள்ளைகளில் அதிகரித்தவாறுள்ளனவாம். இதனால் பாரதூரமான பல இரசாயன மருந்துக்களைப் பச்சிளம் பிள்ளைகளும் உட்கொள்ள வேண்டியுள்ளது.

பிள்ளைகள் தமது சமூகத்தின் தானங்களை விளையாட்டில் வெவ்வேறு பாகங்களாக நடித்து விளையாடி அறிந்து கொள்வர் என்கிறது குழந்தை வளர்ச்சி ஆராய்ச்சிகள். குழந்தைகள் சந்தோஷத்தையும், சண்டைகள் விவாதங்கள் பிடித்தலும் இயல்பானவை. அவை சமூகவியல் வளர்ச்சிக்குத் தேவையான தன்மை. ஆயினும் அடிக்கடி வலுச்சண்டை போடும் நடத்தையானது இயல்பானதொன்றல்ல.

பிள்ளைகள் விளையாட்டில் வலுச்சண்டை (aggression)

சந்ததி சந்ததியாகப் படம் பார்த்துப் பொழுதுபோக்கும் தமிழர்களின் மத்தியிலும் தற்போதைய பன்மொழி, பல் கலாச்சார கேளிக்கைப் படங்கள், கணினி விளையாட்டுக்கள் சற்று வித்தியாசமானவையாகவே காணப்படுகின்றன. வட அமெரிக்காவில் படங்களைப் போன்று தற்போது கணினி விளையாட்டுக்களிலும் வயதுக்கேற்ப தராதரங்களைப் பிரித்து சான்றிதழ் வழங்கும் முறையை அரசு அமுலில் கொண்டு வந்துள்ளது. இதன் அடிப்படைக் காரணம் பிள்ளைகளின் மனோத்துவ வளர்ச்சியை உரிய வயதுகளில் பேணுதலே.

எனினும் வரையறை மீறி வர்த்தக வருமான வெற்றிக்காக முனைகிறது பல கூட்டம். இதனிடையில் மாட்டுப்பட்டவர்கள் விவரம் தெரியாத மின்நுகர் கருவிகளை உபயோகிக்கும் சிறுவர்கள். காலாகாலத்தில் அராஜகம், ஆக்கிரமிப்பு வலுச்சண்டைகள், வல்லுறவு, உடற் கொடுமை, கொலை விஸ்தீரணங்கள், துப்பாக்கி மற்றும் வன்முறை உபயோகம் எனப் பலவும் தற்போது மின்நுகர் சாதனங்களிலும், கணனி விளையாட்டுப் பொருட்களிலும் உள்ளிட்டு விற்கப்படுகின்றன.

முந்தைய காலத்தில் வயதுக்கு வந்தவர்கள் திரைக் காட்சியறைகளுக்குப் போய்த்தான் சில ஓடு படங்களைப் பார்த்துக் கொள்ள முடியும். ஆயினும் காட்டாறு மாதிரி ஓடிவரும் இலத்திரனியல் நூற்றாண்டில் கையில் உள்ள மின் நுகர்வு சாதனம் எதையும் இலகுவாக எடுத்துத் தரக் கூடியது. ஆனால் எந்தத் தகவல் எந்த வயதுப் பிள்ளைகளுக்கு ஏற்றது என்பதை இந்தக் கருவிகள் நுகருபவரை அறிந்து இன்று தருவதில்லை.

இதனைப் பற்றிக் கரிசனை செலுத்துபவர் சிலர், பொருட்படுத்தாதவர் பலர். இந்த பிள்ளைகள் நுகரும் மின்தகவல் பரிபாலனையை எடுத்துப் பார்த்தால் வேறுபாடுகள் வட அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் பலவிதமாகக் காணப்படும். பழைய தமிழ்ப் படத்து குத்துச் சண்டைகளும் தற்போதைய குரோத வன்முறை விவரிப்புக்களும் மனோவியல் ரீதியில் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஒன்றானவையல்ல. ஆயினும் நம்மவரில் பலர் பிள்ளைகள் தாமாகவே மின்நுகர் உபகரணங்களில் பார்ப்பதைப் பற்றிச் சிந்திக்கத் தவறுகிறோம்.

இவை வளரும் மூளைகளில் பகுத்தறியும் ஆற்றல்கள் குறைந்தமையாலும், பெற்றோர், பெரியவர் உடன் அவதானமில்லாமலும் வெகுவிரைவில் பாராதூரமாக மாறியும் விடுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சமூகத்தின் நாளாந்த வாழ்க்கையில் இல்லாவிடினும், வகுப்பிலும், விளையாட்டரங்கிலும், பிள்ளைகளின் வலுச்சண்டை போடுதல் பல சமயம் மின் நுகர்ச்சிச் சாதனங்களில் இருந்து தாம் வருகிறது என்று வாதாடுகின்றனர் ஒரு சாரார்.

மின்நுகர்வுச் சாதனத்தின் போதைக்கு அடிமையாதல்

இலத்திரன் கதிர்களின் நீண்டகால நேரடிப் பதிப்புக்கு மேலாகத் தொழில் நுட்பம் மிகுந்த நாடுகளில் எட்டு வயது தொடங்கி பதினெட்டு வயதுப் பிள்ளைகள் வரை ஏறத்தாழ பதினொன்றில் ஒருவர் மின் நுகர்வுசாதனத்திற்கு அடிமையாகியுள்ளனர் எனத்தெரிவிக்கிறது அமெரிக்க மனோத்துவ வைத்தியர் சம்மேளன அறிக்கை. இதே போன்று தென் கொரியாவிலும், ஜப்பானிலும், சீன நாட்டு வைத்திய சம்மேளனங்களும் தெரிவித்துக் கொள்கின்றன

மின் கைச்சாதனங்களிலான பாதகங்கள் உடன் உணர முடியாதவை. ஒருகாலத்தில் புகையிலை, சிகரெட் பிடிப்பதும் அதனால் அருகாமையில் உள்ள பிள்ளைகளின் சுவாசக் கால்வாயில் ஏற்படும் பாதகங்களும் உணராமல் இருந்தவை தான். ஆனால் இதன் பிரதி விளைவுகளை இன்று நாம் தெளிவாக அறிந்து முடிந்தளவு தவிர்க்கவே பார்க்கிறோம். அதே போல மின் கைச்சாதனங்களையும் அதனைச் சிறுவர்கள் உபயோகித்தலையும் தணித்து அவர்களை ஆரோக்கியமாக வளர வைப்பது பெற்றோர், உற்றாராகிய எமது கடமை.

உச்சாந்துணை:

  1.       Treatment Outcomes in Patients with Internet Addiction: A Clinical Pilot Study on the Effects of a Cognitive-Behavioral Therapy Program – K. Wölfling, M. E. Beutel, M. Dreier, and K. W. Müller, July 2014
  2.        Results from the Active Healthy Kids Canada 2012 Report Card on Physical Activity for Children and Youth – Joel D Barnes, MSc, et al.
  3.       Generation M2 – Media in the Lives of 8- to 18-Year-Olds – A Kaiser Family Foundation Study January, 2010
  4.       Pathological video-game use among youth ages 8 to 18: a national study. Gentile D. Department of Psychology, Iowa State University and National Institute on Media and the Family, Minneapolis, Minnesota, USA.
  5.       Anderson CA, Bushman BJ. Effects of violent video games on aggressive behavior, aggressive cognition, aggressive affect, physiological arousal, and prosocial behavior: A meta-analytic review of the scientific literature. Psychological Science. 2001
  6.      Defining Pathological Video-gaming: Conceptual and Measurement Issues, Daniel King, School of Psychology, The University of Adelaide, Adelaide, SA, Australia

–    யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad