ஐ பட விமர்சனம்
ஷங்கர் இயக்கத்தில் உருவான, திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ஐ படத்தை திரையில் பார்த்த எனது அனுபவத்தை இங்கு பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன்.
“யானை வரும் பின்னே ;மணியோசை கேட்கும் முன்னே” என்பதற்கிணங்க, சங்கரின் திரைப்படமாகிய ஐ வெளிவருவதற்கு முன்பே பரபரப்புகளும் பேட்டிகளும் படக்காட்சிகளும் இணையத்தளத்தில், வலம் வர தொடங்கி விட்டன. இது மேலும் எனது ஆவலைப் பெருமளவில் தூண்டிவிட்டது என்னமோ உண்மைதான்.
திரைப்படம் வெளிவரும் நாளும், தமிழர் தைப்பொங்கல் நாளும் ஒன்றாக அமைந்துவிட நாட்களை எண்ணத் தொடங்கியாது மனம், ஷங்கரின் மேல் உள்ள அபிமானம் கூட காரணமாக இருக்கலாம். எதிர்பார்த்த ஆவலை ஷங்கரின் திரைப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதைச் சற்று பார்ப்போம் .
ஐ திரைப்படத்துக்கு வழமை போல வலது கரமாகவும், பெரும் தூணாகவும் இருப்பது A.R. ரகுமானின் இசையெனக் குறிப்பிட்டால் அது மிகையாகாது. மறு தூணாக விக்ரம்; ஷங்கரின் திரைப் படத்தை மிகப் பெரிய அளவில் வெற்றி படமாக மாற்ற அல்லும் பகலும் பாடுபட்டு, காட்சிகளுக்கேற்ப உடம்பை மெருகூட்டி பின்பு மெலிந்து திரைப்பட துறைக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு முறை இந்தப் படம் மூலம் நிரூபித்துள்ளார்.
அழகான கதையின் நாயகியாக எமி ஜாக்சனை தெரிவு செய்து இருப்பது திரைப்படத்துக்கு மிகப் பெரிய பலம். அத்துடன் அவரது பாத்திரத்தை மென்மையாக காட்டியிருப்பது ஷங்கருக்கு கிடைத்தவெற்றியாகும்
கதையின் நாயகி மிகவும் மென்மையானவள் அதற்கு எமி மிகவும் பொருத்தமாக அமைய பாடல்களில் குரல் சரியாகப் பொருத்தியிருப்பது சங்கர் / A.R. ரகுமானின் திறமையே.
ஐ படத்தில் வரும் பாடல்களில், எனது மனதை விட்டு நீங்காமல் இருக்கும் மூன்று அழகிய பாடல்களைப் பற்றி எனது கருத்தை இங்கே பகிர மனம் நாடுகிறது. பாடல்கள் திரைக்கு வருமுன்னே இணையத்தில் வெளி வந்தது ஆவலைக் கூட்டியதேயன்றி எள்ளளவும் குறையவில்லை. திரையில் பாடல்கள் உயிர் பெற்றன என்றால் அது ஷங்கரின் கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.
ஷங்கரின் திரைப்படங்களில் பாடல் காட்சிகளுக்கு அவர் செலுத்தும் அக்கறை எள்ளளவும் இப்படத்திலும் குறையவில்லை என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட விரும்புகிறேன். பாடல் காட்சிகளுக்காகவே சீனா வரை சென்று இது வரை திரையில் வராத இடங்களை தனது திரைப்படத்துக்குள் அழகா கொண்டு வந்து, பாடல்களைப் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஷங்கர் தனது கனவுலகத்துக்கு அழைத்துச் சென்று விட்டார் என்றே நான் நினைக்கின்றேன்.
இது தான் சொர்க்கத்திற்கு செல்லும் வாயிலோ என வியக்க வைத்த பெருமை பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள் என்ற பாடலைச் சாரும். புகைப்படக் கருவியை எந்த கோணத்தில் வைத்தால் அதிக உச்ச பட்ச காட்சிகளை உள்ளடக்கலாம் என்ற ரகசியம் ஷங்கருக்கு மட்டுந்தான் தெரியுமோ? திரைப்படம் பார்க்க வந்தவர்கள் அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கும்படி செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
அடுத்ததாக, சங்கரின் கற்பனை வண்ணத்தில் உருவானது, ஆங்கிலத்தில் (beauty & beast) அழகியும் அசுரனும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவானதே என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் என்ற பாடல்.
கவிஞர் இங்கே சொல்ல வருவது என்னவென்றால், காதலி தான் உயிருடன்
வாழ அதற்கு காதலன் தேவை எனவும் இன்னுமொரு கோணத்தில் பார்க்கும்போது தனது உயிரே காதலன் என்பதனால் அவன் இன்றி தான் வாழ முடியாது என்பதை ஒரேவரியில் இரண்டு அர்த்தங்களாக காதலின் ஆழத்தையும் அதன் மென்மையையும் பாடல் அழகாக எழுதப்பட்டு அதற்கு உயிரும் உடலும் உருவமும் அசைவும் கொடுக்கப்படும்போது
அந்த அழகை திரையில் பார்க்கும் எவருக்கும் மெய் சிலிர்ப்பது என்னவோ தவிர்கக முடியாத ஒன்றாகவே அமைகிறது.
மூன்றாவது பாடலாக நான் தெரிவு செய்வது – கதாநாயன், ஒரு வயது வந்த வாலிபன், தனது கனவுக் கன்னி நேரில் வந்து தன்னைச் சந்தித்ததையும் அந்த இன்ப அதிர்ச்சித் தந்த தாக்கத்தினை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த பாடலான மெர்சலாயிட்டேன். இங்கு கவிஞர் பாடல் வரிகளைத் தெரிவு செய்திருக்கும் அழகே தனி. நகரத்தில் வாழும், குறைந்த படிப்பறிவு ஒருவன் பாவிக்கும் நாளாந்தச் சொற்களைப் பயன்படுத்தி அதற்குள் ஆங்கிலச் சொற்களை இணைத்து ஒரு அழகான பாடலை உருவாக்கி அதற்கு திரையில் அழகாக உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதரணமாக குளத்து நீர் சாந்தமாகவும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பதும் அனைவரும் அறிந்தது. அப்பேற்பட்ட குளத்து நீர், காதலியின் ஒரு புன்னகை புரியாமலே கொழுந்து விட்டு எறிவதாக நாயகன் நாயகியை நினைத்துப் பாடுவதாகவும் அதற்கேற்றபடி பட்டிதொட்டியெல்லாம் ஓடி பாடுவதாக இந்த காட்சியமைக்கப்பட்டிருந்தது மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது.
இனி படத்தின் கருவான பிரதான கதையைப் பற்றி சற்று அலசுவோம். சங்கர் வழமைக்கு மாறாக பிரதான கருவான கதையைத் தெரிவு செய்யும் போது சற்று கவனம் சிதறியிருப்பது திரைப்படத்தைப் பார்த்த என் மனதில் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை. நகைச்சுவை காட்சிகளில் பவர் ஸ்டாரை அறிமுகப்படுத்தியிருப்பது ஓரிரு நிமிடமாகயிருந்தாலும் அது நகைச்சுவையைத் தூண்டாமல் வெறுப்பையே தூண்டுகிறது. இதனால் ஷங்கர் நகைப்புக்காளாகிறார். இது சங்கரின் பலவீனத்தையே இங்கு காட்டுகிறது. பவர் ஸ்டார் என்பவருக்கும் நடிப்புக்கும் வெகுதூரம். அதுவும் திரையில் காட்டப்பட்டது ஷங்கர் அனுமதித்திருப்பது நிச்சயம் வருத்தப்பட வேண்டிய விடயம்.
அடுத்ததாக திருனங்கை என்ற பாத்திரத்தை கதையினுள் கொண்டுவந்து அவரது பாத்திரத்தை கொச்சைப்படுத்தி என்ன செய்தியை மக்களுக்கு கொண்டு செல்கிறார் என்று கடைசி வரை புரியாத புதிராகவே இருந்தது. அதனைச் தவிர்த்திருக்கலாம்.
விக்கிரமின் நடிப்பில் குறை என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் நிறைவு என்றும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக காதல் காட்சிகளில் அவரிடமிருந்து முக பாவங்களை அதிகம் எதிர்பார்த்த எனக்குச் சற்று ஏமாற்றமே மிஞ்சியது என்றால் அது பொய்யில்லை.
சண்டைக் காட்சிகளில் வழமையான தமிழ்ப் படங்களைப் போலவே இங்கும் கதையின் நாயகன் விரோதிகளைப் புரட்டி புரட்டி எடுப்பது தமிழ் திரையுலகத்துக்கு வந்த சாபம் இன்னும் நீங்கிய பாடில்லை என்று வருந்தக் கூடிய விடயம். சங்கரும் அதே பாதையில் பயணித்திருப்பது வேதனையாகவே இருந்தது.
ஐ திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு ஷங்கரின் இரு முந்தைய படங்களாகிய காதலன் மற்றும் அந்நியன் நினைவுக்கு வருவது எனக்கு மட்டும் தானோ.
இறுதியாக சந்தானத்தைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். சந்தானத்தின் நடிப்பில் குறை ஒன்றுமில்லை. ஆனால் அவரை நிறைவாகப் பாவிக்கவில்லை என்ற ஆதங்கமே நிறைந்துள்ளது. குறிப்பாக திரைப்படம் முடியும் தருவாயில் சந்தானம் இடம்பெற்ற காட்சிகள் இருக்கையில் இருப்பவர்களைச் சற்று நெளியச் செய்தது என்னமோ உண்மை. மிகவும் தரக் குறைவான நேரக் கடத்தல் என்றே எனக்கு தோன்றியது.
முடிவுரை : குறை நிறை விமர்சனமில்லாமல் , திரைப்படம் எதுவுமே வெளிவருவதில்லை. இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் திரைப்படம் தொடங்கியதிலிருந்து மூன்று மணிநேரம் போனது தெரியாமல் என்னை இன்னொரு மாயை உலகத்துக்கு ஷங்கர் அழைத்து சென்றதை திரையில் எழுத்துக்கள் ஓடும் போதே உணர்ந்தேன்., நன்றி திரு. ஷங்கர், மேலும் தரமான திரைப்படங்களைத் தர எனது வாழ்த்துகள்.
இப்படிக்கு அன்புடன்
வீ.முரளீதரன்