என்னை அறிந்தால்
மாசி 2015 இல் வெளிவந்து, இன்றுவரை உலகெங்கிலும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் “என்னை அறிந்தால்” திரைப்படத்தை திரையில் பார்த்து இரசித்த எனது சுய அனுபவத்தை, இங்கு பரிமாறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். வழமைபோல இங்கும் திரையின் கதையை விவரிக்காமல் அதே நேரத்தில் திரைப்படத்தில் உள்ள குறை நிறைகளை எந்தவித பாரபட்சம் இல்லாமல் எனது சுய கருத்தை, குறிப்பாக இரசித்த காட்சிகளை, இங்கே சுருக்கமாக கூற விரும்புகிறேன்.
பொதுவாக ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது திரையில் பங்கு பெறும் அனைவரது கடுமையான உழைப்பு மட்டுமன்றி அதையும் மீறி மக்கள் இரசிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும். மக்களைச் சென்றடையும் திரைப்படங்களுக்கு அரங்குகளில் வரவேற்பு இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு பல காரணிகள் உள்ளன. இங்கு இயக்குனர் கௌதம் மேனன் அதனைச் சரியாக கணித்து, சரியான முறையில் திட்டமிட்டு, கலந்தாலோசித்து, திரைக்கதை முடிச்சுகள், ரசிகர்களின் புரிந்துணர்வு அனைத்தும் ஒன்று சேரும் புள்ளி விவரவியல் முதலியவற்றை யதார்த்தமாக்கி மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளார்.
இயக்குனர், இப்படத்தில் நடிகர்கள் எவரையும் புதிதாக அறிமுகப்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் அனுபவ முதிர்ச்சி உள்ள பிரபல நடிகர்களைத் தெரிவு செய்து இருப்பது ஒருபுறத்தில் இயக்குனரின் வேலைப்பளுவை இலகுவாகி இருக்கலாம். அதே நேரத்தில் சில பிரபல நடிகர்களை இயக்குனர் தனது மனதில் உள்ள பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி நடிக்க வைப்பதும் சற்று கடினமான விடயமே. பிரபல நடிகர்களாக அஜித், திரிஷா, நாசர், விவேக், அருண் விஜய் அனுஷ்கா மற்றும் பலர் தங்கள் அரும்பெரும் பங்களிப்பை வழங்கி கௌதம் மேனனின் மனத்திரையில் உள்ள கனவை நிஜமாக்கியுள்ளார்கள் என்பதே எனது கருத்து.
முதலில் இப்படத்துக்கு பின்னனி இசை அமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களைப் பற்றி இங்கு குறிப்பாகச் சொல்லியே ஆக வேண்டும். தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து அதனைக் கடந்த பலவருடங்களாக, வெற்றிகரமாக தக்கவைத்து கொண்டுள்ளார் என்றால் அது மிகையில்லை. அந்த வகையில் ஹாரிஸ் ஜெயராஜின் இசை இப்படத்துக்குப் பக்க பலமாக அமைந்தது கௌதம் மேனனுக்கு கிடைத்த அதிர்ஷ்டமே. பெரும்பான்மையாக கௌதம் மேனனின் திரைப்படங்களில் இவரது இசையே இருக்கும். பாடல்கள் அனைத்தும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திரையில் ஒவ்வொரு பாடல்களும் உயிர்பெற்று மெருகேறியது என்று சொன்னால் அது மிகையில்லை. பாடல்கள் திரையில் உயிர்பெறுவதை பார்த்த பின்பு மீண்டும் மீண்டும் கேட்க அவா தோன்றுகிறது. பாடல்களில் வரும் ஒவ்வொரு நாழிகையையும், மிகவும் சிரமப்பட்டு எந்த ஒரு குறையும் வரக்கூடாது என்பதில் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அதிக கவனம் செலுத்தி, ஒவ்வொரு பாடலும் வெற்றிபெற அவர்கள் போட்ட உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது.
ஆரம்பப் பாடலாக வரும் “கடிகாரம் பார்த்தால் தவறு” என்ற பாடலுடன் திரைப்படம் ஆரம்பிக்கிறது. அந்தப் பாடல் அமைத்த விதம் பார்வையாளர்களுக்கு ஏதோ ஒரு ஆங்கிலத் திரைப்படம் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. திரையில் அறிமுகமாகும் பெயர்கள் மற்றும் பாடலின் வரிகள் வரவிருக்கும் காட்சிகள் பற்றியும், கதையின் வலுவையும் முன்கூட்டியே கட்டியம் கூறுவதுபோல அமைத்து இருப்பதற்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.
அடுத்ததாக எனது மனதில் நிற்கும் பாடல் “வா ராஜா வா வா இத உன் டாவா” என்ற பாடல். இந்த பாடலை கௌதம் மேனன் திரையில் அமைத்து இருக்கும் அழகே தனி. பாடல் ஆடலுடன் மட்டும் நின்றுவிடாது அதுனூடே திரைக்கதையும் கோர்த்து கதையின் நாயகனை கதையின் விரோதிகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமே தனி. அதைப் பாட்டாகவே செதுக்கி உள்ளார்கள் என்றே கூறலாம் – அந்த அளவு கொள்ளை அழகு இந்த பாடலுக்கு.
அடுத்ததாக எனது மனதைக் கவர்ந்த பாடலாக நான் இங்கு தெரிவு செய்வது ” உனக்கென்ன வேணும் சொல்லு”. திரையில் இப்பாடலுக்கு ஒரு குட்டி மழலைப் பெண் கதையின் நாயகனாகிய அஜித்துடன் சேர்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பல்வேறு விதமான அனுபவங்களைப் பெறும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அழகான இடங்களைப் புகைப்படக்கருவியினூடே அடக்கி எந்த விதமான குறையுமில்லாமல் நிறைவாக திரையில் கருணை, பாசம் அன்பு கலந்து கொடுத்திருக்கும் இந்தப் பாடல் எனது மனதை மிகவும் கவர்ந்த பாடலாகும்.
திரிஷா பங்கேற்கும் நாடக காட்சி பாடல் உண்மையிலேயே திரை அரங்கில் உள்ளவர்களை, அவர்களது அனுமதியின்றி ஒரு நாடக அரங்கிற்கு அழைத்து செல்கிறது “கட கட கட கடோட்ஜகன்” என்ற அருமையான பாடல். இந்தப் பாடல் பல வருடங்கள் எம்மை பின்னோக்கி அழைத்துச் செல்கின்றது. பாடலை சிறு சிறு நாடக காட்சிகளாக்கி பல்வேறுபட்ட கதா பாத்திரங்களை உருவாக்கி வாசகர்களை ஒரு மாயை உலகத்திற்கே அழைத்து செல்கிறது என்றே சொல்லலாம். பழைய பாடல்களைப் பாடிய பாடகர்களை நினைவுகூரும் வகையில் மிகவும் நேர்த்தியாக அமைத்து சிறப்புச் சேர்த்த பெருமை அதில் பங்கேற்ற அனைத்துக் கலைஞர்களையே சாரும். மிகவும் ரசித்த பாடல் / காட்சிகளில் இதுவும் ஒன்று.
இனி திரைப்படத்தின் பாடல் காட்சிகளிலிருந்து சற்றே விலகி நகைச்சுவைக் காட்சிகளுக்குள் நகர்வோம் எனில் அங்கு எம்மை வரவேற்பது விவேக் அவர்களே. விவேக் தனது தன்னிகரற்ற நகைச்சுவைத் திறமையை இங்கு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருப்பதை அவதானிக்கலாம். அதிக நேரம் நகைச்சுவை திரையில் இல்லாவிட்டாலும் விவேக் வரும் காட்சிகளில் திரையரங்கை அதிரவைத்து உள்ளார் என்றால் அது மிகையில்லை. மென்மையான நகைச்சுவையை விவேக் நடைமுறை யதார்த்தம் கலந்து கதையின் வீரியத்தைக் குறைக்காமலும் அதன் திசையைத் திருப்பாமலும் சொல்லியிருப்பது கௌதம் மேனனின் சரியான முன்கணிப்பு.
நாசர் குறைவான நேரங்களில் வந்தாலும் நிறைவாகவே காணப்படுகிறார். ஆலோசனை என்ற விதத்தில் கௌதம் மேனன் சரியான தகவலை நாசர் மூலம் வாசகர்களுக்குச் சொல்வது மிக அருமை.
இனி திரைப்படத்தின் பிரதான கருவான கதையை மேலோட்டமாக பார்ப்போம்.
சாதாரண கதையாக இல்லாத வலுவான, யதார்த்தமான, பாரமான கதைக்கு, அதன் கருவை சிதைக்காமல் திரைக்கதை மிகவும் அழகாகச் செதுக்கப்பட்டு உள்ளது என்றே சொல்லலாம். திரைப்படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை யதார்த்தம் எங்கும் பரவி காணப்படுவது தற்போதில் உள்ள மிகச் சில இயக்குனர்களாலேயே முடியும் அதில் கௌதம் மேனனும் ஒருவர் என்பதை இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன் .
திரையில் சண்டைக்காட்சிகள் பல இருந்தாலும், ஒவ்வொன்றும் இயல்பான விரைவான யதார்த்தமான சண்டைகளைக் கொண்டதாகவே அரங்கேற்றி இருப்பது ரசிக்கக்கூடியதாக இருந்தது.
கதையின் திருப்பம் ஒரு குட்டி மழலைப் பெண் அறிமுகமாவதும் அஜித்துக்கு போட்டியாக நடிப்பில் நிகராக நின்று படம் முடியும் வரை சமநிலையைப் பேணுவதும் குறிப்பிடும்படியாக உள்ளது. திரைக்கதையின் ஒருபக்கம் மிகக் கொடிய விரோதியும் மறுபக்கம் இளகிய மென்மையை தனது இயல்பான நடிப்பினால் வெளிப்படுத்தும் இந்தக் குட்டியும் நிறைத்திருப்பதால் சமநிலை பேணப்படுவது என்று கூறினால் அது பொய்யில்லை. திரைப்படம் முடிந்த பின்னரும் மனதில் நிற்பது அந்த பிஞ்சு மழலைப் பெண் குழந்தைதான்.
இனி திரைக்கதையில் எனக்கு உடன்பாடில்லாத ஒருசில பகுதிகளை சற்று அலசுவோம்.
அனுஷ்கா முதல் பார்வையிலேயே அஜித்தை விரும்புவதும் அவரைப் பின் தொடர்ந்து போவதும் மிகவும் செயற்கையாகவே எனக்கு படுகிறது.
அஜித்தின் இரவு பாதுகாப்பாக வரும் இரண்டு காவல் அதிகாரிகள் நல்ல வெள்ளை நிற உடையுடன் இரவில் உளவு பார்க்க வீதியில் காத்திருப்பது கதைக்கு ஒவ்வாததாகவே தென்படுகிறது.
திரைக்கதை முன்னுக்கும் பின்னுக்கும் மாறி மாறி வருவதும் அஜித்தின் தலை முடியை வைத்தே கணிக்கக்கூடியதாக இருப்பது எனக்குமட்டுமோ? தலை முடி நரையாக இருந்தால் தற்போதைய நிலையையும் அதே நேரத்தில் தலை முடி கறுப்பாக இருந்தால் அவர் பழைய நிலையையும் திரையில் பார்த்து ஊகிக்க வேண்டியதாக உள்ளது.
அஜித் தனது கடமையைச் செய்யும் விதமும் அதற்கு அவரது வேலை செய்யும் அலுவலகம் அளவு கடந்த அதிகாரம் கொடுத்திருப்பதையும் திரையில் மட்டுமே காணலாம் நடைமுறைக்கு சாத்தியமில்லை.
ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களான “காக்க காக்க” மற்றும் “வேட்டையாடு விளையாடு” படங்களின் தொடர்ச்சியே “என்னை அறிந்தால்” என எண்ண தோன்றுகிறது.
இவை தவிர்த்த அனைத்து காட்சிகளுமே பிரமாதமாக உள்ளபோதும் என்னை மிகவும் கவர்ந்த காட்சி
கதையின் பிரதான எதிரி கை தொலைபேசியை எடுத்து வழமையான வெருட்டல் உருட்டல் இல்லாமல் நாயகனுடன் சேர்ந்து ஆரம்பகாலத்தில் ஆடிப்பாடிய பாடிய பாடலை சென்னை தமிழ் பாசையில் “ஆத்தாறு ஆத்தாறு ஆத்தாறு ஆத்தாறு உதாரு உதாரு உதாரு உதாரு காட்டதே உதாரு” என்று சொல்லும் போது திரை அரங்கே களை கட்டும். மிக மிக அருமையான காட்சி.
தமிழில் திரைப்படங்கள் ஒருகாலத்தில் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்தது. ஆனால் இப்போது வரும் திரைப்படங்கள் அந்த குறுகிய வட்டத்திற்குள் இருந்து மெல்ல மெல்ல வெளியே வரத்தொடங்கியுள்ளதற்கு இந்த படமும் ஒரு சான்றாகும். காதல், கருணை, பாசம், நட்பு, அன்பு என அனைத்தையும் கலந்து ஒரு முழு நீளத் திரைப்படத்தை மக்களுக்குச் சொல்லவேண்டிய கருத்தைச் சொல்லி அதை அவர்கள் ஏற்கும் வகையில் திரையில் ஆரம்பம் முதல் இறுதிவரை எந்தவிதமான தொய்வும் இல்லாமல் தனக்கு ஒதுக்கபட்ட நேரத்தைச் சரியாக இயக்குனர் இங்கே பாவித்து இருப்பதே “என்னை அறிந்தால்” திரைப்படத்தினுடைய மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாகும் எனக்கூறி மேலும் தரமானப் படங்களை கௌதம் மேனன் தொடர்ந்து தர வேண்டும் என வாழ்த்துக்கள் கூறி முடிக்கின்றேன்.
-வீ. முரளீதரன்