\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மாற்றமே உலக நியதி

Filed in இலக்கியம், கதை by on February 28, 2015 0 Comments

maatrramv2_620x439அதிகாலை மணி நான்கு. திடீரென்று யாரோ உசுப்பியது போல எழுந்தார் சதானந்தன். ஒரு விநாடியில் முழுவதுமாக விழித்தும் விட்டார். இனம் புரியாத ஒரு சங்கடம் அவர் மனதில் உருவானது. அது என்னவென்று புரியவில்லை. சிறிது நேரம் கண் மூடி உறக்கம் செய்ய முயற்சித்தார். பலன் இல்லை. அருகில் வித்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். சிறிது நேரம் அவளைப் பார்த்தபடி அமைதியாகப் படுத்திருந்தார். உடல், மனம் இரண்டும் உறங்க மறுத்தது.

இன்று அவர் வாழ்வின் முக்கியமான நாள். அவரது பல வருட உழைப்பின் சிகர நாள். அவரின் கீழ் வேலை செய்யும் பல ஆயிரம் பேருக்கும் இது முக்கியான நாள். அவர்களின் உழைப்பும் இன்று முதல் முறையாக அங்கீகரிக்கப்படும் நாள். ஒரு வேளை அந்த குதூகலத்தினால் உறக்கம் வரவில்லையோ  என்னவோ என்று எண்ணியபடி எழுந்து விட்டார். அவர் எழுந்ததை உணர்ந்த வித்யா, “என்ன சதா ஒரே எக்ஸைட்மென்ட் ஆ? தூக்கம் வரலியா?”.

“ம் . இல்லை நீ தூங்கு “

“பாத்து உங்க Presentation speech போது tired ஆ தெரியப் போறீங்க. அத்தனை பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் ரொம்ப சோர்ந்து இருக்கப் போகுது. கொஞ்சம் படுத்துட்டு அப்புறம் எழுந்திருங்க.”

” இல்லை வித்யா. என்னமோ தூக்கம் வரலை. நீ தூங்கு. நான் கீழே போறேன்.”

கீழே இறங்கும் முன் குழந்தைகள் அறையை ஒரு முறை திறந்து பார்த்தார். அவரது இரு பெண்களும் அழகாக ஒரு பொம்மையை அணைத்தபடி உறங்கிக் கொண்டு இருந்தனர். இருவருக்கும் ஒன்பது வயது. இரட்டைப் பிறவிகள். கவிதா, பவித்ரா, இருவரையும் ஒரு நிமிடம் நெகிழ்வுடன் பார்த்த பின், மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார் சதா. படியின் இடையில் வழக்கமாகக் கண்ணில் தென்படும் கீதாச்சாரம் படம் பார்த்தபடி கீழே இறங்கினார். குதிரைகள் ஓட்டிய ரதம் செலுத்தியபடி கிருஷ்ணர், குருக்ஷேத்ர பூமியில் அர்ஜூனர் பின் வில்லுடன் அந்த கீதாச்சார படம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒரு வித பரவச உணர்வைத் தரும்.

அந்தப் படத்தை மனதில் நினைத்தபடி இறங்கியவர் கண்கள் பழக்க தோஷத்தில் அம்மாவின் படத்தை முதலில் நோக்கியது. அம்மா !! எந்த நிலையிலும் மனம் தளராது, அசராத அம்மா. இன்று என் வெற்றி கண்டு குதூகலித்துப் போவாள். அவ்வாறு எண்ணிய பொழுது மீண்டும் ஏதோ சங்கடம் உருவானது.

“அம்மா உண்மையில் மனம் குளிர்வாளா?. என்ன சொல்வாள்?”. ஏன் இந்தச் சங்கடம் என் மனதில். இன்று என் வெற்றியினால் பல ஆயிரம் குடும்பங்கள் வேலை வாய்ப்புப் பெறும் அல்லவா? அவர்கள் குடும்பங்கள் மகிழ்ச்சி பெரும் அல்லவா?. அம்மாவின் ஆசையும் என்றுமே அது தான். பல ஆண்டு உழைப்பு, கனவு. இன்று உலகம் பார்த்து அசந்து போகும் புதிய தொழில் நுட்பம். இதை உலகிற்கு அறிமுகம் செய்யும் ஒரு பெரிய Presentation நான் செய்யப் போகிறேன். அத்தனை தொலைக்காட்சிகளிலும் என்னுடைய நிறுவனத்தின் CEO என்ற முறையில் என்னுடைய உரை ஒளிபரப்பாகும். முக்கியமாக, பல வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதையெல்லாம் கண்டு அம்மா பெருமையில் பூரித்தது இருப்பாள். பின் ஏன் என் மனம் சங்கடம் கொள்கிறது. கண் மூடி நினைவில் இருந்த சதானந்தன்  மனம் இருபத்தி ஐந்து வருடம் பின் நோக்கிச் சென்றது.

                                ***

“அப்பா இன்னும் அலுவலகம் இருந்து திரும்பவில்லையா?” என்று கேட்டபடி வந்தான் பதினைந்து வயது சதா. ” இல்லப்பா இன்னிக்கு அப்பா ஆஃபீஸில் ஒரு முக்கியமான சந்திப்பு. அவரது நிறுவனம் புது இயந்திரம் கொண்டு வருது , பெரிய மாற்றம் அப்படின்னு அப்பா சொன்னாரே சதா. அதனால அப்பா வர்றதுக்கு நேரம் ஆகும். நீ உன்னையுடைய பாடம் படிச்சிட்டியா?”.

“ம் ஆச்சு”. “சரி இந்த தேவிக்குக் கொஞ்சம் கணக்கு பாடம்சொல்லி தா.”

சதா தன் தங்கை தேவிக்கு அவளது வீட்டுப் பாடம்செய்ய உதவி செய்து கொண்டிருந்தான். அவனது தாயார் சமையல் வேலை செய்தபடி வாசலைப் பார்த்தபடி இருந்தார். சிறிது நேரம் கழித்து, இருண்ட முகத்துடன் சதாவின் தந்தை உள்ளே வந்தார். அவனது தாயார் வினவியதைத் தொடர்ந்து அவர் பதில் உரைத்தது, “நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி காரணமாக புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைப் பற்றிய விளக்கப்படம் ஒன்றை இன்று திரையிட்டனர். எனக்கென்னவோ இந்த மாற்றத்தால் நிறுவனத்தில் நிறைய ஆட்குறைப்பு ஏற்படுமோ என்ற பயம் உள்ளது” என்று தந்தை பேசியபடி இருந்ததைச் சதானந்தன் கேட்டுக் கொண்டு இருந்தான். அதைத் தொடர்ந்து தாயும் தந்தையும் இருவரும் முன்னெச்சரிக்கையாக வேறு வேலை தேடுவது பற்றிப் பேசியபடி இருந்ததையும் கேட்டபடி இருந்தான்.

                                   ***

கண்மூடி யோசித்திருந்த சதானந்தனுக்கு அதன் பின் நடந்த ஒவ்வொரு சம்பவமும் இன்று நடந்தது போல் தோன்றியது. தந்தை கவலைப்பட்டது போலவே வேலை பறி போனது, பின் கடினமாக முயற்சித்தும் எந்த வேலையும் கிடைக்காமல் மனம் உடைந்த தந்தை தற்கொலை புரிந்து கொண்டது, குடும்பம் வறுமையால் தத்தளித்தது, மனம் தளராத தாயார் இரு குழந்தைகளையும் தேற்‌றி, தானும் ஒரு வேலை தேடி, எப்படியோ படிக்க வைத்து, சதா வேலையில் சேரும் வரை ஓயாமல் உழைத்தவர். ஒரு நாளும் அசரவில்லை. தாயின் நினைவுகள் அந்த அதி காலையில் மனதை நெகிழ்த்தியது. ஒரு கோப்பை காப்பியை அருந்தியவாறு நினைவுகளைத் திசை திருப்ப முயன்றார். மனக் குதிரை திரும்ப மறுத்து மீண்டும் பழைய நினைவினை நோக்கி விரைந்தது. நீண்ட பெருமூச்சுடன் நினைவினில் மீண்டும் மூழ்கினார். தாயாரின் உழைப்பு! உழைப்பு! உழைப்பு!.. சதா வேலையில் சேரும் பொழுது தாயாரின் ஒரே விண்ணப்பம். “சதா நம்மளால முடிஞ்ச வரைக்கும் நிறைய குடும்பங்கள் வாழ வழி வகுக்கணும். யாரோட குடும்பமும் சீர் அழியாமப் பார்த்துக்கணும். “.. படிப் படியாக வாழ்வில் முன்னேறி, தங்கை திருமணம் முடித்து, வித்யாவை மணந்து, கவி,பவி இரட்டையரைப் பெற்று, இதோ உலகத்தின் பெரிய நிறுவனம் ஒன்றின், முக்கியப் பகுதி ஒன்றின் தலைவர் பொறுப்பில் இருந்து அவர் உருவாக்கிய தொழில் நுட்ப முன்னேற்றத்திற்குப் பல ஆயிரம் வேலை வாய்ப்பு உருவாக இருக்கிறது.

இன்று தாயார் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் பல மடங்கு பெருமிதம் கொண்டிருப்பார். சட்டென்று அது வரை மனதை நெருடியது என்னவென்று புரிந்தது.

இந்தப் புதிய வளர்ச்சியால் மாற்றம் உண்டு. வேலை வாய்ப்பு மட்டும் அல்லாது நீக்கமும் உண்டு. கடைசியில் தாயார் கூறியது போல நடக்கவில்லையே. மனதில் பெரிய பாரம் அழுத்தியது. என்ன செய்ய முடியும் இப்போது? இத்தனை ஆண்டு உழைப்பை நிறுத்த முடியாதே. யோசித்தபடி அமர்ந்திருந்த சதானந்தனுக்கு நேரம் ஆனதை உணர்த்துவது போலப் பெண்கள் இருவர் மற்றும் வித்யா அனைவரும் எழுந்து வர மனத்தின் கலக்கத்தை மறைத்தபடிக் கிளம்பினார். வித்யா “முகம் ஏன் டல் ஆ இருக்கு” என வினவிய போது “ஒண்ணும் இல்லை இன்னிக்கு presentation பத்திய டென்ஷன்” என்று சமாளித்தார். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குக் கோபம் காண்பிக்க அவர்கள் அமைதியாகி பள்ளிக்குக் கிளம்பினார்கள்.

                                    ***

Presentation முடிந்தது. அனைத்துத் தொலைக்காட்சியிலும் இதைப் பற்றி, இதன் நன்மைகளைப் பற்றி அலசிக் கொண்டு இருந்தனர். இதனால் வேலை இழப்பின் சதவிகிதம் கணக்கிட்டுக் கூறிய பொழுது பார்த்து கொண்டு இருந்த சாதானந்தனின் மனபாரம் மேலும் அழுத்தியது.

வித்யா எத்தனையோ கேட்டும் பதில் சொல்லாமல் மௌனம் காத்தபடி சிந்தனையிலேயே இருந்தார்.

இரவு படுக்கச் செல்லும் பொழுது கண்ணில் வழக்கம் போலத் தென் படும் கீதாச்சாரப் படம் பார்த்தவர், ஒரு நிமிடம் அங்கு நின்றார். ஏதோ புதிதாகத் தோன்றியது. சிறிது நேரம் அங்கே நின்று படத்தைக் கவனித்த பொழுது ஏதோ புரிந்தது. மன பாரம் இளகியது. கடைசி வரியினில் கண் படித்துப் புரிந்த பொழுது மனம் அமைதி கொண்டது. “The change is the law of the universe”.  மாற்றம் என்பதே உலக நியதி.

–    லக்ஷ்மி சுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad