ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10)
பண்பாட்டுச் சிக்கல்
உலகில் வாழும் எல்லா இனங்களுக்கும் தனித்துவமான மொழி, பண்பாடு என்பன இன்றியமையாதனவாக அமையப் பெற்றிருக்கும். எதை விட்டுக் கொடுத்தாலும் தமது தனித்துவத்தின் அடையாளங்களான இவற்றை விட்டுக்கொடுக்க இலகுவில் யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இவை சவால் நிறைந்ததாக மாறியிருக்கின்றன.
புலம்பெயர்ந்து சென்ற பலர் தாம் வாழ்கின்ற நாடுகளில் தமது பண்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுகின்றனர். கலாசார விழாக்களை வருடந்தோறும் பல நாடுகளில் கொண்டாடி வருகின்றனர். இரண்டாம் தலைமுறையினரில் பலர் நடனம், இசை எனப் பாரம்பரியக் கலைகளைப் பயின்று வருகின்றனர். இத்தனைக்கும் மேலாகப் பண்பாட்டு மாற்றம் என்பதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. கட்டுப்பாடுகள் நிறைந்த எமது தமிழ்ச் சமூக அமைப்பிலிருந்து சென்றவர்களின் கவிதைகளில் மேற்குலகின் சம்பாசனை முறைகள், பாலியல் உணர்வுகள், அது சம்பந்தமான விருப்பு வெறுப்புகள் என்பனவும் அடிக்கடி இடம்பெறத் தொடங்கின.
“மாறும் ஸ்கன்டிநேவிய
நாகரிகத்துக்கேற்ப
அவர்களின் நிறமும் அமைப்பும் மாறும்
கை போய்க் கரண்டி வரும்
உதட்டில் தமிழுடன்
நோர்வீஜியன் கொஞ்சும்
சிலவேளை’பிஸா’வுடன்
‘ஒல்’லும் கூட
உனது மாற்றத்தின்
வேகத்தில் அயர்ந்தேன்”1
கையில் மதுக்கிண்ணம் முதலிய நாகரிக மாற்றத்தின் போக்கினை இங்கு அவதானிக்க முடிகின்றது. என்னதான் நாகரிகம் மாறினாலும் இன்னும் ஒருசிலர், குறிப்பாக இளம் வயதினரிடையே மரபு ரீதியான தாக்கம் பண்பாடு என்ற பெயரில் வேரூன்றியிருப்பதைப் பின்வரும் வரிகள் மூலம் அறியலாம்.
“என்றாலும் தோழீ
…………..
ஆண்களும் பெண்களும்
தனித்தனியாய்க் குழுமியிருந்தபோது
ஏதோ பகிடி கேட்டு
வாய்விட்டு நாம் சிரித்தோம்
…………………..
அப்போது நீ சொன்னாய்
‘ஐயையோ பெண் பிள்ளைகள்
இப்படிச் சிரிக்கலாமா’ ”2
அந்நிய நாட்டில் கலாசாரப் பிறழ்வு என்பது தமிழர்களிடையே மலிந்துவிட்ட இன்றைய சூழலில் மாறுபட்ட பண்பாட்டுக் கோலம் ஒரு சிலருக்கு ஆச்சரியத்தையும் தருகின்றது. மேலை நாடுகளில் திருமணம் செய்து கொண்டாலும் ஆண்களைத் ‘திரு’ என்ற அடைமொழியிலும் பெண்களைச் ‘செல்வி’ என்ற அடைமொழியிலும் வழமைபோல் அழைக்கப் படுவதையும் குழந்தை பிறந்த பின்கூடத் தாயின் பெயரைச் ‘செல்வி’ என்ற அடைமொழியிட்டு வழங்குவதையும் ஒருவித விசித்திர உணர்வுடன் எமது கீழை நாட்டினர் நோக்கினர்.
“இங்குக் கலாசாரம், மொழி காலநிலை
எல்லாமே மாறுபட்டதாக இருக்கிறது…
சிலநேரங்களில் நட்பும் கூட!
……………………………..
அதே புன்னகையில் வரவேற்றாள் சிறுமி
பிஞ்சுக் கன்னத்தைத் தட்டிக் கேட்டேன்
‘என் பெயர் கிறிஸ்ரின்’ என மழலை மொழிந்தாள்
‘பெற்றோர்? ’ ஐக்கியமாக வினவ
‘திரு பெத்தர்சன், செல்வி எலினின் ஒரே பிள்ளை’
அரிசிப் பற்களினூடே கொஞ்சி வரும் வார்த்தை கேட்டு
விழிகளில் கேள்வி தேங்க நிமிர்ந்த என்னை…………..”3
‘திரு பெத்தர்சன் செல்வி எலினின் ஒரே பிள்ளை’ என்ற வார்த்தை அவனுக்கு வியப்பைத் தருகின்றது. தமிழ்க் கலாசாரத்தில் ஊறிப்போன அவனுக்கு இது புதிய அனுபவமாக அமைந்தமையினால் அதிர்ச்சியைத் தருகின்றது.
அடிக்குறிப்புகள்
- திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.35
- மேலது, பக்.43
- சண்முகம்.செ.வை, கவிதை மொழி, பக்.93
-தியா-