\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எம். கே. தியாகராஜ பாகவதர்

MKThiagarajapakavathar_320x423“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை”

சூப்பர் ஸ்டாரின் வார்த்தைகள் இவை!

பதினான்கு ஆண்டுகளில் பதினான்கு படங்களில் மட்டுமே நடித்து தமிழ்த் திரையுலகில் அழிக்க முடியாத முத்திரை பதித்தவரின் இறுதிக் கால வார்த்தைகள் இவை!

பளபளக்கும் சரீரம், கருகருத்த நீண்ட கேசம், பட்டுச் சட்டை, பட்டு அங்கவஸ்திரம், பட்டு வேட்டி, ஜவ்வாதுப் பொட்டு, வைரக் கடுக்கன், பத்து விரல்களிலும் மோதிரம், கணீரென்ற குரல் இவற்றின் மொத்த உருவமாக, ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்துடன் முடிசூடா மன்னராக வாழ்ந்த எம்.கே.தியாகராஜ பாகவதரின் வார்த்தைகள் இவை!

நூறு ஆண்டுகளைக் கடந்த இந்தியத் திரைப்பட வரலாற்றில், சென்னை பிராட்வே திரையரங்கில்,  தொடர்ந்து மூன்று தீபாவளிகளைக் கண்டு, 110 வாரங்கள் ஓடிய ‘ஹரிதாஸ்’ படத்தின் கதாநாயகன் – மயிலாடுதுறை கிருஷ்ணமூர்த்தி தியாகராஜர்.

1910ல் மார்ச் முதல் தேதி, மயிலாடுதுறையில் பிறந்தவர் தியாகராஜர். தந்தை  கிருஷ்ணமூர்த்தி, தாய் மாணிக்கத்தம்மாள். பிழைப்பு நாடி இவர்களது குடும்பம் திருச்சி செல்ல நேர்ந்தது. படிப்பில் தியாகராஜருக்கு பெரிய நாட்டமில்லை. இசை கேட்பதிலும், பாடுவதிலும் இவரது நாட்கள் கழிந்தன. காதில் விழுந்ததை அப்படியே பாடிக் காண்பிக்கும் அவரது திறனைப் பலர் போற்றினாலும், குடும்பத்தினர் கண்டிக்கவே வீட்டை விட்டு வெளியேறினார் தியாகராஜர். எங்கெல்லாமோ பயணித்து கடப்பாவில் தனக்கென்று ஒரு நண்பர் கூட்டத்தை அமைத்துக்கொண்டு வாழ்ந்திருந்தார். மகனுக்கிருக்கும் இசை ஆர்வத்தைக் கண்ட கிருஷ்ணமூர்த்தி அவரைத் திருச்சிக்கு அழைத்துச் சென்று இசை பயில அனுமதித்தார்.

திருச்சி திரும்பிய பின் தொடர்ந்து இசைப் பயிற்சியை மேற்கொண்டவரின் குரல் வளமும், இசை ஞானமும் பலரைக் கவர்ந்திழுத்தது. அந்நாட்களில் நாடக வசனங்களும் பாடல் வடிவிலேயே இருந்ததால் எம்.கே.டியின் குரல் வளம் அவருக்கு நாடக வாய்ப்பினை எளிதில் பெற்றுத் தந்தது.  பத்து வயதில், எப்.ஜி. நடேச ஐயர் நடத்தி வந்த திருச்சி ரசிக ரஞ்சனி சபாவினரின் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தில் லோகிதாசன் கதாபாத்திரம் தான் எம்.கே.டி ஏற்ற முதல் வேடம். நாடகத்தைப் பார்த்த மதுரை பொன்னு ஐயங்கார், எம்.கே.டியின் குரல் வளத்தைக் கண்டு அசந்து, அவருக்குக் கட்டணமின்றி இசை சொல்லித் தர முன்வந்தார். இசை பயிலும் போதே நடராஜ வாத்தியாரிடம் நடிப்புப் பயிற்சியும் பெற்றார் தியாகராஜர்.  ஆறு வருடப் பயிற்சிக்குப் பிறகு முறையான இசைக் கச்சேரி அரங்கேற்றத்துக்கு ஏற்பாடானது. அரங்கேற்றமே பெரிய இசை மேதைகளின் பக்க வாத்தியத் துணையுடன் பிரம்மாண்டமாக அமைந்து விட்டது. அன்றைய கச்சேரியைக் காண வந்திருந்த புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி, கச்சேரி முடிந்ததும், ‘இன்று முதல் தியாகராஜர் ஒரு பாகவதர்’ என்று அறிவித்தார்.

1926ல் பாகவதர் ‘பவளக்கொடி’ என்ற மேடை நாடகத்தில் கதாநாயகனாக நடித்தார். நாடகத்தைக் கண்ட லெட்சுமணச் செட்டியார் அதைத் திரைப்படமாகத் தயாரிக்க முடிவெடுத்து எம்.கே.டியைச் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். 1931ல் தமிழில் வெளியான பேசும் திரைப்படம் காளிதாஸ். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து வெளிவந்தது பவளக்கொடி. தமிழ்த் திரைத்துறை மிகச் சொற்ப தொழில் நுட்ப வசதியே பெற்றிருந்த காலம் அது. படங்கள் பெரும்பாலும் புராண, இதிகாச நிகழ்வுகளை ஒட்டியே அமைக்கப்பட்டிருந்தன. வசனங்களை விட பாடல்களே அதிகம் இடம் பெற்றிருந்தன. பவளக்கொடியில் 55 பாடல்கள். அதில் 22 எம்.கே.டி. பாடியவை. மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற பவளக்கொடி ஒன்பது மாதங்கள் ஓடியது. முதல் படத்திலேயே தமிழகம் முழுதும் அவரது புகழ் பரவியது. பட்டி தொட்டிகள் எங்கும் எம்.கே.டியின் பாடல்கள் ஒலித்தன. அசத்தும் அழகு, கந்தர்வக் குரல் பெற்றிருந்த பாகவதரைத் தெய்வ அவதாரமாகவே கருதினர் மக்கள். பாகவதரைச் சுந்தர புருஷராக நினைத்த திருமணமாகாத பெண்கள் அவரைக் கணவனாக அடையத் துடித்தனர். திருமணமான பெண்கள் தங்களது கணவன்மாரை விட்டுவிட்டு பாகவதருடன் வாழவும் துணிந்தனர். நடிகர்களை அண்ணாந்து பார்த்து ஆராதிக்கும் வழக்கம் பாகவதர் காலத்தில் தான் துவங்கியது.

தொடர்ந்து நவீன சாரங்கதாரா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, நீலகண்டர், அசோக்குமார்,சிவகவி போன்ற பல படங்களில் நடித்தார். ஒவ்வொரு படமும் ஒன்றையொன்று மிஞ்சும் அளவுக்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. செல்வத்தில் புரண்டார் பாகவதர். நூறு சவரன்கள் கொண்ட தங்கத்தட்டில் சாப்பாடு; ஓய்வெடுக்க முழுதும் வெள்ளியில் செய்யப்பட ஊஞ்சல்; ஜெர்மன் தயாரிப்பான ஓபல் காபிடன் காரில் பவனி வந்தார்; பொழுதுபோக்கிற்குச் சவாரி செய்ய வீட்டில் மூன்று குதிரைகள்; இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் ஆங்கில அரசு நிதிப் பற்றாக்குறையால் தவித்த போது கலையுலகம் சார்பில், கச்சேரிகள் நடத்தி மிகப் பெரிய தொகையைத் திரட்டித் தந்தார் பாகவதர். அதற்கு அவரைப் பாராட்டி நன்றி கூறும் வகையில் நூறு ஏக்கர் நிலத்தையும், திவான் பகதூர் பட்டத்தையும் அளிக்க முனைந்தது அரசு. இதை நிராகரிக்கும் அளவுக்குப் பணமும், செருக்கும் கொண்டிருந்தார் பாகவதர். அதே போல் காங்கிரஸுக்குப் பலம் சேர்க்கும் முயற்சியில் சென்னை வந்திருந்த நேரு, காமராஜருடன் பல இடங்களுக்குச் சென்ற போது, ஒரு இடத்தில் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களைப் பார்த்துவிட்டு நேரு, தங்களைப் பார்க்கத்தான் இவ்வளவு கூட்டம் கூடியுள்ளது என்று நினைக்க, காமராஜர் அது பாகவதரைக் காணக் காத்திருக்கும் கூட்டம் என்று விளக்க வேண்டியிருந்தது. இதனைக் கண்டு ஆச்சரியப்பட்ட நேரு எம்.கே.டி. அவர்களை காங்கிரஸில் சேர வற்புறுத்திய போது, என்னால் இயன்ற பண உதவியைச் செய்வேனே தவிர எனக்கு அரசியல் தெரியாது, அதற்கு தகுதியற்றவன் என்று விலகியே இருந்தார்.

பாகவதருக்குத் தொழில்முனைப் போட்டியாக வந்த பல நடிகர்கள்  நொடித்துப் போயினர். தொழில் நுட்ப வசதிகள் அதிகம் இல்லாதபடியால் ஒரு சமயத்தில் ஒரு திரைப்படம் மட்டுமே நடிக்க முடியும் என்றிருந்த நிலை மாறிக் கொண்டிருந்த காலம் அது. 1944ல் ஹரிதாஸ் படம் முடிவடையும் தருவாயில், பதினான்கு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து, முன்பணமும் வாங்கியிருந்தார்.

அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தார் பாகவதர். மளமளவென்று படங்கள் குவிந்தன. அவரது உன்னதமான வெற்றியையும், புகழையும் கண்டு பொறாமை கொண்ட சிலர் அவரைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி வந்தனர்.  அவரை ஒழித்துக் கட்ட சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர்.    அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்பு லட்சுமிகாந்தன் வடிவில் வந்தது.

லட்சுமிகாந்தன் – சிறு வயது முதல் படித்து வக்கீலாக வேண்டுமென்ற கனவுகளோடு வளர்ந்தவன். கல்லூரியில் சேர்ந்து படிக்குமளவுக்குக் குடும்பச் சூழ்நிலை இடம் கொடுக்காதலால், அவரது பட்டப்படிப்பு ஆசை கைகூடவில்லை. இருப்பினும் ஓரளவுக்குச் சட்ட நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருந்த லட்சுமிகாந்தன், வக்கீல்களுக்கு வழக்குகள் பெற்றுத் தரும் தரகர் தொழிலை நடத்தி வந்தான். ஓரளவுச் சுமாராக வளர்ந்து கொண்டிருந்த லட்சுமிகாந்தனுக்குப் பணத்தாசை வரவே, பத்திரங்களில் போலிக் கையெழுத்துக்களைப் போட்டுச் சிக்கிக் கொண்டான். ராஜமுந்திரி சிறையில் தண்டனைக் காலம் முடியும் முன்னர் தப்பிக்க முனைந்து, பின்னர் அந்தமான் தீவுச் சிறையில் ஒன்பது ஆண்டுகள் தண்டனை அனுபவித்துத் திரும்பியிருந்தான்.

சினிமாத் துறையின் முன்னேற்றத்தினைக் கண்ட பிறகு, திரைப்படங்கள் தொடர்பான தொழில் தொடங்குவது என்று முடிவு செய்து, ‘சினிமாத் தூது’ எனும் வாராந்திரப் பத்திரிக்கையைத் தொடங்கினான். இதில் குறிப்பாக நடிக, நடிகையரின் அந்தரங்கங்களைப் பற்றி எழுதத் தொடங்கவே பத்திரிக்கை வியாபாரம் சூடு பிடித்தது. பல நடிகர், நடிகைகள் தங்கள் அந்தரங்க வாழ்க்கை ‘சினிமாத் தூது’ பத்திரிக்கையில் வந்துவிடக் கூடாது என்பதற்காக லட்சுமிகாந்தனுக்குப் பணம் கொடுத்து அமைதிப்படுத்தி வந்தனர். இவனது இப்போக்கைக் கண்டு வெகுண்டனர் எம்.கே.டியும், என்.எஸ். கிருஷ்ணனும். இவர்களுடன் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடுவும் இணைந்து, மூவரும் அப்போதைய சென்னை ஆளுநரான ஆர்த்தர் ஆஸ்வால்ட் என்பவரிடம், ‘சினிமாத் தூது’ பத்திரிகைக் குறித்து புகார் அளித்தனர். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்த ஆளுநர் ‘சினிமாத் தூது’ பத்திரிகையைத் தடை செய்தார். இதனால் லட்சுமிகாந்தன் அந்தப் பத்திரிகைத் தொழிலை மூட நேர்ந்தது. இருப்பினும் வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் ஏதோவொரு பத்திரிகையில் சினிமாத் துறை ரகசியங்களை எழுதி வந்தான். இந்த நேரத்தில் அவனது கவனத்தை ஈர்த்தது ‘இந்து நேசன்’ என்ற பத்திரிகை.

இந்து நேசன் பத்திரிகையைத் தன் வசமாக்கிக் கொண்டான் லட்சுமிகாந்தன். இதில் தொடர்ந்து சினிமாத் துறையிலிருந்த பலரைப் பற்றிய அந்தரங்கச் செய்திகளை வெளியிட்டும், அவர்களை மிரட்டிப் பணம் பறித்தும் வந்தான். பாகவதரைப் பற்றியும், என்.எஸ்.கே. பற்றியும் கூடச் செய்திகள் வந்தன. சினிமாக்காரர்கள் மட்டுமின்றி தொழிலதிபர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், ஜமீன்தார்கள் எனப் பலரது அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்தினான்.  அந்நாட்களில் சென்னைக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஓடிக் கொண்டிருந்த ‘போட் மெயில்’ எனும் ரயிலில் தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் திரையுலகைச் சேர்ந்த சிலருக்குத் தொடர்பிருப்பதாக இந்து நேசனில் செய்திகள் வரத் துவங்கின.

இதற்கிடையில் 1944-ஆம் ஆண்டு அக்டோபர் 16, தீபாவளியன்று ‘ஹரிதாஸ்’ படம் வெளியானது. இதில் எம்.கே.டி.யுடன், என்.எஸ்.கே, டி.ஆர். ராஜகுமாரி, வசந்தகோகிலம், டி.ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்தை இயக்கியிருந்தவர் சுந்தர் ராவ் நட்கர்னி. எழுபது ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரத்துடன் ஒலிக்கும் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’, ‘கிருஷ்ணா முகுந்தா முராரே’ போன்ற பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன. இந்தப் படம் வந்த சில நாட்களிலேயே படத்தின் வெற்றியைக் கணித்த பல தயாரிப்பாளர்கள் அவரை மொய்க்க மேலும் பன்னிரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் பாகவதர். இதற்குச் சன்மானமாக ஒரு லட்ச ரூபாயை விட அதிகச் சம்பளம் தரத் தயாராக இருந்தன சினிமா நிறுவனங்கள்.

நவம்பர் 8-ஆம் தேதியன்று, லட்சுமிகாந்தன், வேப்பேரியில் தனது நண்பரான வக்கீல் ஒருவரைச் சந்தித்துவிட்டு கை ரிக்ஷவில் வீடு திரும்புகையில் சிலரால் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டான். காயத்துடனே மீண்டும் தனது வக்கீல் நண்பன் வீட்டுக்குச் சென்றவன், அவரிடம் நடந்தவற்றை வாக்குமூலமாகச் சொல்லிவிட்டு, வழியில் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தான். இதற்குள் ரத்தப் போக்கு அதிகமாகி அவனது உடல்நிலை மிக மோசமாகி விட்டிருந்தது. அடுத்த நாள் லட்சுமிகாந்தன் இறந்து விட்டான்.

போலீசார் அவன் கொடுத்த வாக்குமூலத்தின்படி சிலரைக் கைது செய்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் மேலும் சிலரைக் கைது செய்த போது, ஏற்கனவே பாகவதர், என்.எஸ்.கே., ஸ்ரீராமுலு ஆகியோர் அவன் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டிருந்ததாகக் கருதி அவர்களும் கைதாகினர்.

பாகவதர் கைதான தகவல் தமிழக மாவட்டங்கள் முழுதும் பரவியது. போர்ச் செய்திகளுக்கு மட்டுமே வானொலி கேட்டவர்கள், பாகவதரின் வழக்குப் பற்றி அறியச் செய்திகள் கேட்கத் துவங்கினர். விசாரணைக் கைது என்றால் ஓரிரு வாரங்களில் வந்து விடுவார் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் எம்.கே.டி.யும், என்.எஸ்.கே.வும் குற்றவாளிகள் எனக் கருதப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரது கணக்குப் புத்தகத்தில் பெருந்தொகை குறைந்திருப்பதைக் காட்டி, அவர் இந்தப் பணத்தைக் கொலையாளிகளுக்குக் கூலியாகக் கொடுத்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் ஆராய்ந்தது சட்டத்துறை. 1945 ஆம் ஆண்டு மத்தியில் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை தீர்ப்பானது.

அது நாள் வரை பாகவதர் நிரபராதி என்றும், விரைவில் திரும்பிவிடுவார் என்றும் நம்பிக் கொண்டிருந்த திரையுலகம் அப்படியே எதிர்மறையாகத் திரும்பத் தொடங்கியது. தங்களது படத்தில் அவர் தலைகாட்டி இரண்டு மூன்று பாடல்கள் பாடினால் போதும் என்று நினைத்தவர்கள், அவருக்குக் கொடுத்த முன் பணத்தைக் கேட்டு நச்சரித்தனர். சிறையிலிருந்த போது இதையெல்லாம் கேள்விபட்ட பாகவதர் தனது உடமைகளை விற்று கடனைத் திருப்ப அடைக்குமாறு கேட்டுக் கொண்டார். வழக்கில் அவர் சார்பில் வாதாட வந்த பம்பாய் வக்கீல் முன்ஷிக்கு ஒரு நாள் சம்பளமாக 75000   ரூபாய் தரப்பட்டதாம்.  மேலும் மேலும் கடன் அதிகரித்துச் சென்ற போது தனது சொத்துக்கள் முழுவதையும் விற்றார். பின்னர் ஆங்கில அரசாங்கம் அவரது வழக்குச் சம்பந்தப்பட்ட முறையீடுகளை லண்டனுக்கு அனுப்பியதில் அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் இருவரும் விடுதலை பெற்றனர்.

ஆனால் அதற்குள் போதுமான இழப்புகளால், அவரது புகழ் மங்கி விட்டது. லட்ச லட்சமாகச் சம்பளம் கொடுக்கக் காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஒருவரும் அவரது வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. பாகவதரும் தன்னுடைய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் எவரிடமும் உதவி கேட்காமல் இருந்தார். எப்போதாவது தேடி வந்த ஓரிரு தயாரிப்பாளர்களும் குணச்சித்திர வேடங்களில், துணை நடிகராக நடிக்க வைக்க அணுகினர். கதாநாயகனாக நடித்தேன் கடைசி வரை அப்படியே இருந்துவிட்டு போகிறேன் என்று நிராகரித்து விட்டார் பாகவதர்.

பிறகு தானே சொந்தமாகப் படம் தயாரித்து வெளியிடலாம் என்ற எண்ணத்தில் ‘ராஜமுக்தி’ என்ற படமெடுத்து நடித்தார். இதற்கு முன்னர் அவர் நடித்து வெளியான ‘ஹரிதாஸ்’ அவர் சிறையிலிருந்து வெளிவரும் வரை, 110 வாரங்கள் ஓடியது.

ஆனால் ராஜமுக்தி, மூன்று மாதங்கள் கூட ஓடவில்லை.  படத்தில் பின்னர் அவர் நடித்த படங்கள் ‘அமரகவி’, ‘புது வாழ்வு’, ‘சியாமளா’ எதுவும் ஓடவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி, சில காலம் கச்சேரிகளில் மட்டும் பாடி வந்தார். பாகவதர் மீது மிகுந்த பற்றும் அன்பும் கொண்டிருந்தவர் முக்கூடல் சொக்கலால். ராம் சேட் புகையிலை நிறுவனத்தின் உரிமையாளர். பாகவதரிடம் சில காலம் இசை பயின்றவர். அவர் முக்கூடலில் பெரிய வீட்டைக் கட்டி பாகவதரை அங்கு வந்து தங்குமாறு அழைத்த போதும் மறுத்து விட்டார் பாகவதர். சொக்கலால் சேட் பாகவதருக்கு குருதட்சணையாக கொடுத்திருந்த செவர்லே காரை மட்டும் தனது இறுதி நாள் வரை பயன்படுத்தி வந்தார் எம்.கே.டி. அறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தில் சேரக் கோரிய போதும் மறுத்தார் எம்.கே.டி.

இந்தச் சமயத்தில் சக்கரை நோயும், ரத்த அழுத்தமும் அவரைப் பாதித்தன. அவரது உற்ற நண்பரும், கடவுள் நம்பிக்கையற்றவருமான என்.எஸ். கிருஷ்ணன் எவ்வளவோ வற்புறுத்தியும் பழுத்த ஆத்திக நம்பிக்கை கொண்டிருந்த பாகவதர் இறைவழிபாடு மட்டுமே தன்னைக் காப்பாற்றட்டும் என்று கூறி மறுத்து விட்டார். இருப்பினும் மூலிகை என்று எவரோ கொடுத்த கஷாயத்தைச் சாப்பிட்ட பிறகு அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னர், ஏழிசை மன்னர், இசைவாணர், கந்தர்வகான ரத்னம், சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் பெயர் பெற்றிருந்த எம்.கே. தியாகராஜ பாகவதர், மிகுந்த துன்பப்பட்டு, நோய் முற்றி 1959 ஆம் ஆண்டு, நவம்பர் முதல் தேதி இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட ஒரே புகழ் பெற்ற நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.

ஏழ்மை காரணமாகப் பாகவதரின் குடும்பம் சிதைந்து சின்னாபின்னமாகி விட்டது. அவரது இரண்டாம் மனைவியான ராஜம்மாளின் குடும்பத்திற்கு 2010ல் பாகவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட சமயத்தில் அவருக்கு ஒரு சிறிய தொகை அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அதுவரை அந்தக் குடும்பம் வாழ்ந்து வந்தது நடிகர் சிவகுமார் அவ்வப்போது செய்து வந்த உதவிகளால் தானாம்.

-ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad