மொந்தன் வாழைக்காய்ச் சம்பல் (Ash Plantain Coconut Salad)
இலங்கை யாழ்ப்பாணத்தில் கறி வாழைக்காய் அல்லது சமைக்கும் வாழைக்காய், சாம்பல் மொந்தன் எனும் வகை வாழைக்காய்களைப் பல வகையான சம்பல் மற்றும் பச்சடிகளிற்கும் பாவிப்பர். இதனை இந்தோனேசிய மற்றும் மத்திய ஆப்பிரிக்க மக்களும் சமையலில் உபயோகிப்பர். வாழைக்காயானது உருளைக்கிழங்கு, கோதுமை போன்றவற்றை விடக் குறைந்த சக்கரையைக் (low glycemic index) கொண்டது. ஆயினும் அதன் உயிர்ச் சத்து (vitamin C) உயர்ந்ததாகவே காணப்படும்.
மொந்தன் வாழைக் காய்ச் சம்பல் மதிய உணவுடன் சேர்த்துக் கொள்ளச் சிறந்த பக்க உணவாகும்.
தேவையானவை
¼ கரண்டி மஞ்சள் தூள்
½ lbs வாழைக்காய்
1 சிறு கிளை கறியிலை
5 அரிந்த பச்சை மிளகாய் (காரத்தைப் பொறுத்து தொகையை தேர்ந்து கொள்ளவும்)
10 அரிந்தெடுத்த சின்ன வெங்காயங்கள்
½ கோப்பைக் கட்டித் தேங்காய்ப் பால்
1 ½ கோப்பை கட்டித் தயிர் அல்லது காரம் விரும்புவர் ½ தேசிக்காய்
செய்முறை
வாழைக்காய்களைக் கழுவி எடுத்துக் கொள்ளவும். தொடர்ந்து சட்டியில் நீர் விட்டு 10-15 நிமிடங்கள் மத்திம வெப்பத்தில் அவித்து உட்பகுதி மிருதுவாக வரும் வரை பார்த்து எடுத்துக் கொள்ளலாம். ஊர்ப் புறங்களில் சில சமயம் அகழியில் முழு வாழைக்காயைப் பொரித்தும், அல்லது விறகடுப்புத் தணலில் தோலில் சற்று எண்ணை தடவி உட்பாகம் மிருதுவாக வரும் வரை சுட்டும் எடுத்துக் கொள்வர்.
அடுத்து வெந்த வாழைக்காயின் தோலை உரித்துச் சூடாக இருக்கும் போதே மசுக்கி (mash it) எடுத்துக் கொள்ளவும். இடுத்து மஞ்சள் தூள், வெங்காயம், கறியிலை, மிளகாய் போன்றவற்றைச் சேர்த்து சற்று அரைத்துக் கொள்ளவும்.
இந்த வாழைக்காய் அரையலுக்குக் கட்டித் தேங்காய்ப்பால், மற்றும் கட்டித் தயிர் சேர்த்துக் குழைத்து உடன் பரிமாறலாம்.
பின்குறிப்பு:
யாழ்ப்பாணத்தவர்களில் சிலர் இஞ்சி, உள்ளி மற்றும் தட்டியெடுத்த மாலத்தீவு மாசிக் கருவாட்டுத் தூள்கள் (Maldives fish chips) போன்றவற்றையும் சேர்த்துக் கொள்வர்.
– யோகி அருமைநாயகம்.