நிலையாமை
இடுப்பு வலியால் இல்லாள் துடிக்க
இங்கும் அங்கும் இவன்நடை பயில
இருக்கும் அனைத்து இதந்தரு மனிதரும்
இதமாய் வருடி இவர்கட்கு உதவிட
இரவு முழுவதும் இடையறாத் துடிப்புடன்
இழுத்துப் பிடித்த இவளின் உறுதியும்
இறைவன் அருளும் இணைந்து செயல்பட
இவ்வுலகு தோன்றிய இணையிலாப் பிறப்பு
இனிய குழந்தை இன்னல் துரத்தி
இன்பம் கொடுத்து இமைக்கும் முன்னரே
இரத்தம் கொதித்து இளமை எய்திட
இரவு பகலென இருபொழுதிலும் உழைத்து
இரந்து பிழைத்திடும் இழிநிலை ஒதுக்கி
இகத்தில் அனைத்தும் இலகுவாய்க் காட்ட
இயைந்து முயன்று இன்றுபோல் என்றும்
இனிமை கூட்டி இல்வாழ்வு வாழ்ந்திட
இழப்பு இன்றி இழிநிலை அகற்றி
இரும்பின் உறுதியாய் இருதயம் வளர்ந்திட
இருப்பது கொண்டு இல்லாதது அடைய
இலக்கு நோக்கி இணையிலாப் பயணமாய்
இருக்கையில் அங்கு இருப்பவர் அனைவரும்
இறையடி சேருதலெனும் இயற்கையின் விதியால்
இறத்தல் அணுகிட இரங்கல் சொல்லியே
இருந்தவர் அழுதிட இல்லாது போனவாழ்வு
இளகிய மனதோடு இதனை நினைக்கையில்
இன்னுமொரு உண்மை இனியதாய் விளங்கும்
இரவியின் ஒளியில் இதழ்விடும் மலர்போல்
இரயில் பயணத்தில் இடைவரும் சினேகம்போல்
இன்றிருக்கும் ஒருவன் இன்னொரு நாள்
இல்லாத அனித்தியமே இன்னுயிர் எனுமுண்மை
இந்நிலை உணர்வோர் இயம்புதல் கேட்டு
இறும்பூது எய்தி இறப்பதை வென்றிடுவோம் !!!
– வெ. மதுசூதனன்.