எசப்பாட்டு – உலகக் கோப்பை
உலகக் கோப்பையென உலாவரும் ஆட்டம்
உழைப்பவன் படைப்பவன் அனைவரின் நாட்டம்
உண்மையில் பார்க்கையில் உழன்றிடும் தேட்டம்
உயர்வறுத்து பந்தயமே பெரிதாக்கும் கூட்டம் !!
திறமைமிக்க அணியே தேர்ந்து வென்றிடுமென
திடமாய்ச் சொல்லிடவியலா திறனற்ற அவலம்
திக்கெட்டும் புகழ்மணந்த தீர்க்கமான ஆட்டமது
திசைதவறிப் போனதோவெனத் திகைத்தழியும் தருணம் !!!
ஆடுபவன் அனைவருமே அறிவில்லா மடையனாகும்
ஆட்டத்தைக் களித்திடும் அண்டமெலாம் மூடர்களாம்
ஆங்காரமாய்ச் சொல்லிட்ட அறிவாளி சரியெனவே
ஆக்கியது இவர்களின் அளவற்ற பணத்தாசை !!!
– வெ. மதுசூதனன்.
அந்நிய கனவான்கள் ஆடிய உல்லாசத் துடுப்பாட்டம்
கண்ணிய மிழந்து தளர்ந்தது பெரும் துரதிர்ஷ்டம்!
துல்லிய சாதுர்யத் திறமை கொண்ட இவ்வாட்டம்
மிஞ்சிய சாமர்த்திய வெறியால் கண்டது திண்டாட்டம்
ஆட்டத்தில் அரசியலென ஓலமிடுது வித்தக வட்டம்
ஆர்வத்துக்கு அவசியமென அதுவே நடத்துது சூதாட்டம்
சாவகாசமாய் ஐந்துநாள் ஆடுவது அன்றைய திட்டம்
சுவாரசியம் அதிலில்லையெனக் குறைத்தது யார் குற்றம்.
ஆட்டத்தை ரசிப்பதே பொதுவாய் உலக வாடிக்கை
ஆடுபவரைத் துதிப்பது நம்மவர் என்பது வேடிக்கை
விளையாடும் வீரனிடம் இழந்து விட்டோம் நம்பிக்கை
வினையாடும் இறையிடம் ஏந்திநின்றோம் நம் கை
அண்டை நாட்டிடம் மட்டுமாவது நம்மணி வெல்லட்டும்
மண்டை குனிந்து அவர்தம் நாடுநோக்கிச் செல்லட்டும்
தொண்டைக் கிழியக் கத்துங் கூட்டம் ஒழியட்டும்!
கொண்டைச் சேவல் சண்டையது இன்றோடு ஓயட்டும்
விரிந்த உலகில் உறவை உருவாக்கிடவே உலகக்கோப்பை
மறந்தே நாமும் உடைப்பதோ நாகரீகக் கட்டுக்கோப்பை
திறந்த மனதோடு வளர்த்திடுவோம் சர்வதேச நட்பை
சிறந்த அணியே வென்றிட வழங்குவோமொரு தீர்ப்பை.
– ரவிக்குமார்