தமிழர்களும் விழாக்களும்
நம் வாழ்க்கை வாழ்வதற்கே என்பது அனைவரும் அறிந்த கூற்றே, அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் வழி நடத்திச் செல்வதில் கொண்டாட்டங்களும் அதை ஏற்படுத்தும் விழாக்களும் முக்கிய பங்கு வகுக்கின்றன. நம் முன்னோர்களின் வழக்கை முறை,பண்பாடு, கலை போன்றவற்றை நாம் அறிவதற்கும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கும் விழாக்கள் அடிப்படையாக அமைகின்றது. இன்று நாம் கொண்டாடும் பல விழாக்கள், நம் முன்னோர்களின் வேர்களைத் தொட்டு, பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும், நம் வாழ்வியலோடு தொடர்ச்சியாக வலம் வருகின்றது. கால மாற்றத்திற்கு ஏற்ப விழாக்களும், கொண்டாட்டங்களும், உற்சாகம் மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
உலகத்தின் மூத்த இனமான நம் தமிழ் இனம்,வாழும் சூழலுக்கு ஏற்பவும், இயற்கை மாற்றத்திற்கு ஏற்பவும், விழாக்கள் அமைத்து, உற்சாகத்துடன் கொண்டாடி, சமச்சீரான, வாழ்க்கை வாழ்வியல் அமைத்து , மற்ற இனங்களுக்கு முன்மாதிரியாக வாழும் பெருமைக்குரிய இனமாகும்.
உலகமயமாக்கலுக்குப் பிறகு, கல்வி மற்றும் வேலை முன்னிட்டு, வேர்களை விட்டுப் புலம் பெயர்ந்தவர்கள்,தம் உறவுகளோடும், நண்பர்களோடும், ஒன்று கூடுவதற்கும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு வேர்களின் வாசம் மறக்காமல் இருப்பதற்கும் விழாக்கள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் மக்களை ஒருங்கிணைப்பதற்கு விழாக்கள் இன்றியமையாதவை.
இயற்கையின் பருவ மாற்றங்களில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, உற்சாகத்துடனும் கொண்டாடப்படுவது வசந்த காலம் ஆகும். இதை காமம் மற்றும் காதலுக்கான காலமாகக் கருதி, அதைக் கொண்டாடுவதற்கு ஏற்ப, வேனில் விழா அமைத்து, காமத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியதற்கான குறிப்புக்கள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு முன்மாதிரியாக நம் வேனில் விழா கொண்டாடப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.
தென்மேற்குப் பருவத்தில், நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையினால், ஆற்றில் புதுவெள்ளம் பொங்கி வரும், உழவுச் சமூகமாக வாழும் நம் தமிழர்கள், ஆறுகளில் வரும் நீர்ப்பெருக்கைப் பார்த்து, மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும், விவசாயப் பணிகளைத் தொடங்குவர். இந்தப் பருவ மாற்றம் ஆடி மாதத்தில் நடப்பதாலும், ஆறுகளில் நீர்ப் பெருக்கு வருவதாலும், இதற்கு ஆடிப் பெருக்கு என்று பெயரிட்டு, மழைக் காலத்தையும் கொண்டாடிய இனம் நம் இனம்.
ஆடியில் விவசாயத்தைத் தொடங்கி, தொடர்ச்சியான உழவுப் பணிகளின் பலனை, சுவைக்கத் தொடங்கும் நாள் தைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உழவுக்கு உதவிய இயற்கை, உடன் உழைத்த மக்கள், கால்நடைகளின் உழைப்பு ஆகியவற்றை நினைவு கூறவும், நன்றி சொல்லவும், அனைத்துத் தமிழர்களால் மிக விமர்சியாக கொண்டாடப்படும் தவிர்க்கமுடியாத விழாவாகும்.
இன்றைய சூழலிலும், மக்களுக்காகவே வாழ்ந்து, உழைத்து, தொண்டு செய்த பல தலைவர்களின் பிறந்த மற்றும் மறைந்த தினங்களையொட்டி, நினைவேந்தல் நிகழ்சிகள் நடத்துகிறோம். அவர்களது தொண்டுகள், கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று அவை நீர்த்துப் போகாமல் இருப்பதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் உதவுகின்றன.
இடையில் ஏற்பட்ட காலமாற்றத்தின் விளைவாக, பெரும்பான்மையான தமிழர் விழாக்களில், சமயச் சாயங்கள் பூசப்பட்டு, சமயத்தின் விழாவாக மாற்றப்பட்டுக் கொண்டாடப்படுவது இன்றைய நிதர்சனம்.தமிழர் விழாக்களின் அடிப்படை நோக்கத்தினை அறிந்து, சரியான புரிதலோடு, சாதி, மத பேதங்களைக் கடந்து கொண்டாடுவதின் வாயிலாக இழந்த நம் பெருமையை மீட்டு எடுப்பதோடு நில்லாமல், சமுதாயத்தில் சமத்துவ மாற்றம் ஏற்படுத்தவும் வழிவகுக்க இயலும். அதே புரிதலோடு அடுத்த தலை முறைக்கும் கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகக் கருதுவோம்.
விழாக்களை நம் வாழ்வின் அடிப்படையாகக் கருதி, கொண்டாடி, மகிழ்ச்சியான வாழ்க்கையை வழி நடத்திச் செல்வோம்.
நன்றி
விஜய் பக்கிரி