தொலைந்து போன சுகங்கள்
காலை வேளையில் பனிமூட்டம் சுகம்
சாலை வளைவில் பூந்தோட்டம் சுகம்
மாலைத் தென்றலில் முகிற்கூட்டம் சுகம்
சாரல் மழையின் நீரோட்டம் சுகம்.
உயர்ந்த மலையின் வளைவுகள் சுகம்
பரந்த கடலில் அலைகள் சுகம்
அடர்ந்த சோலையில் தனிமை சுகம்
விரிந்த வயலின் பசுமை சுகம்
பச்சைக் கிளியின் கொஞ்சுமொழி சுகம்
இச்சைக் குயிலின் காதல்கீதம் சுகம்
மிச்சம் உண்டு கரையும்காகம் சுகம்
தச்சனாய் உழைக்கும் மரங்கொத்தியும் சுகம்
இத்தனையும் உணர்த்தியவளைக் கண்டது சுகம்
நித்தமெனை விழியாலவள் வீழ்த்தியது சுகம்
பித்தனெனை மென்மையாய்த் திருத்தியது சுகம்
சித்தத்தினைச் சத்தமின்றித் திருடியது சுகம்.
முத்தமாய் உதடுகள் பேசிடத் துடித்தது சுகம்
சத்தமாய் உலகுக்கு உரைத்திட நினைத்தது சுகம்
யுத்தமாய் உறவுகள் ஏசிடக் குலைந்தது சுகம்
மொத்தமாய் அவளைப் பிரித்ததும் தொலைந்தன சுகமனைத்தும்.
-ரவிக்குமார்