\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 8

Filed in இலக்கியம், கதை by on March 30, 2015 0 Comments

24hrs_chapter8_620x918முன்கதைச் சுருக்கம்:

(இருபத்தி நான்கு மணி நேரம் பகுதி 7)

கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, கணேஷ் அதனைப் போலீஸ் அதிகாரி ராஜேந்திரனிடம் விளக்கி கார்டையும் ஒப்படைக்கிறான்.

ஆனால், ராஜேந்திரன் அந்தக் கார்டுடன் தனது பர்ஸ் முழுவதையும் தவற விடுகிறார். அதே நேரத்தில் இறந்த சபாரத்தினத்தின் சம்பந்தி சண்முக சுந்தரத்திடம் போலீஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறது. தட்சிணா மூர்த்தியின் உயிரைக் காப்பாற்ற அறுவைச் சிகிச்சை செய்யும் டாக்டர் தேசிகனின் மகள் டாக்டர் புஷ்பா கடத்தப்பட்டுகிறாள். தட்சிணா மூர்த்தியை அவர் கொலை செய்தால் புஷ்பாவை விட்டு விடுவதாக ஃபோனில் டாக்டருக்கு மிரட்டல் வருகிறது. இதற்கு நடுவில் செல்வந்தர் வேலாயுதமும் ஒரு சில தனவான்களும் தட்சிணா மூர்த்தியிடம் சிக்கிய மைக்ரோ எஸ்.டி கார்டை எவ்வாறு கைப்பற்றுவது எனப் பேசிக் கொண்டு இருக்கின்ற பொழுது, வேலாயுதம் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் அவரைத் தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருக்கையில் ஒரு தொலைபேசிச் செய்தி தந்த கலவரத்தால் உடனடியாக எழுந்து அழைப்பு வந்த இடத்தை அடைய, அங்கே அவரை அழைத்த ஆடு மேய்க்கும் இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு விழுந்து கிடக்கிறான். அவனை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, பாரதியைக் கடத்திச் சென்ற காரைத் தேடிப் பக்கத்து ஊருக்குச் சென்று, அந்த வீட்டைக் கண்டுபிடிக்கிறார் முருகன்.  இதற்கிடையில், கல்லூரிக்கு வந்த பாரதி கடத்தப்பட்டதை அறிந்த கணேஷ், நண்பனுடன் அவளைத் தேடிப் புறப்படுகின்றான், வழியில் பாரதியின் வீட்டிலிருந்து அழைப்பு வருகிறது. இதற்கிடையில், தட்சிணாமூர்த்தியின் தொலைபேசியிலிருந்து கிடைத்த துப்புக்களைக்கொண்டு அவனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமனாதனுக்கு இந்தக் கொலைகளில் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அவன் வீட்டை அடைந்த போலீசார் அவன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்க்கின்றனர்.

ராஜேந்திரன் தவற விட்ட பர்ஸை எடுத்தது துப்புறவு ஊழியன் மாசான் என்றறிந்து அவனை விசாரிக்கையில், அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு மைக்ரோ எஸ்.டி கார்டை வீசி எறிந்த இடத்தைக் காட்டுவதாகக் கூறுகிறான். இதனிடையில், துப்பாக்கி ஏந்திய உருவமொன்று டாக்டர் தேசிகனின் வீட்டிற்குள் புகுந்து அவரை மிரட்டத் துவங்குகிறது.

அதன் பிறகு என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

திங்கட்கிழமை மாலை பத்து மணி:

சப் இன்ஸ்பெக்டர் முருகன் புறப்படுகையில், வேலாயுதத்தைக் காவல் நிலைய செல்லில் வைத்துப் பூட்டும்படி ஆணையிட்டுச் சென்றிருந்தார். வேலாயுதத்திற்குப் பெருமளவு கோபம் வந்து , அடித்தொண்டையிலிருந்து கெட்ட வார்த்தைகளால் போலிஸ்காரர்களை ஏசத் தொடங்க, அங்கிருந்த  அனைவரும் சேர்ந்து அவரை அழுத்திப் பிடித்து செல்லுக்குள் இழுத்துச் சென்று போட்டிருந்தனர். பல முறை, பல வகையிலும் இருப்பவர்களையெல்லாம் திட்டித்தீர்த்த வேலாயுதம், கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களாய் நான்கு சுவர்களையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம். அழுக்கான சுவர்கள், அழுக்கான தரை, மூலையில் பார்த்தாலே வாந்தி வருமளவு அசிங்கமான கழிவறை.. பணத்திலேயே புரண்ட அவரால் அவற்றைச் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

மூன்று மணி நேரங்களாக என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டார். திட்டி முடித்த பிறகு, அங்கிருந்த காவலர்களிடம் பேரம் பேசத் தொடங்கியிருந்தார். லட்சக்கணக்காகப் பணம் தருவதற்கும் அவர் ரெடி, ஆனால் ஒரு காவலரும் அவர் புலம்புவதைக் கேட்பதாக இல்லை. பொதுவாக கதாநாயகன் வில்லனைச் சிறையில் அடைத்துவிட்டு வெளியில் கிளம்பிய உடனேயே, தலையைச் சொறிந்து கொண்டு தொப்பிக்குள் வாங்கிய பணத்தை வைத்துக் கொண்டு வில்லனை வெளியில் விடும் சாதாரண போலீஸையே சினிமாவில் பார்த்துப் பழகிவிட்ட வேலாயுதத்திற்கு இதை நம்ப முடியவில்லை. காவல் துறையின் மீதுள்ள பெருமிதம் மற்றும் தங்களது நேர்மையான மேலதிகாரி முருகன் மீதுள்ள மரியாதை ஆகியவற்றால் லட்சத்தைப் பெரிதாக மதிக்காத தன்மையை அடைந்திருந்தனர். இது போன்றவர்களையெல்லாம் பத்திரிகைகளும், சினிமாக்களும் கொண்டாடாத காரணத்தால் வேலாயுதம் போன்றவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

மூன்று மணி நேரமாகப் பல வழிகளில் முயன்றும் வெளியில் வர இயலாததால், தற்பொழுது அவருக்கு பயம் வரத் தொடங்கியிருந்தது. முருகன் திரும்பி வந்ததும் விசாரணை என்று அடிக்கத் தொடங்குவாரோ என்ற பயம். சொகுசாகவே வாழ்ந்து பழகிய உடம்பு இந்தத் தரையில் படுக்க வேண்டும், இந்த நாற்றத்தில் உழல வேண்டும் என்பதே அவரின் உறுதியை உடைப்பதற்குப் போதுமானதாக இருந்தது, இதற்கு மத்தியில் இன்னும் அடி உதைகளை வேறு தாங்க வேண்டுமா என்று நினைக்கையில் அழுகையே வரத் தொடங்கியிருந்தது.

இவர் இவ்வளவு விஷயங்களை நினைத்துக் கொண்டே இருக்கையில் ஒரு ஒற்றை நாடி மனிதர் கருப்புக் கோட்டைப் போட்டுக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து “நான் மிஸ்டர். வேலாயுதத்தை ஜாமீனில் எடுக்க வந்திருக்கேன்” என்று கான்ஸ்டபிள்களிடம் சொல்லும் குரல் கேட்டு, மகிழ்ச்சியான அதிர்ச்சியுடன் எட்டிப்பார்த்தார் வேலாயுதம். “நீங்க யாரு சார்?” கான்ஸ்டபிள் கேட்க, “நான் ஒரு லாயர், இந்த ஊர்ல என்னத் தெரியாதவங்களே இருக்க முடியாது, மொதல்ல அவரை வெளியில விடுங்க, இல்லன்னா யூ வில் ஹேவ் டு ஃபேஸ் த கான்சிகுவன்ஸஸ்..” என ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். கான்ஸ்டபிள் “மன்னிச்சிக்குங்க சார், எங்க சார் வந்து விடச் சொன்னா மட்டுந்தான் வெளியில விடுவோம். உங்களாலானதப் பாத்துக்குங்க” என உறுதியாய் பதிலளித்தார்.

திங்கட்கிழமை மாலை பத்து மணி முப்பது நிமிடம்:

நாற்காலியில் கட்டிப் போடப்பட்டிருந்த டாக்டர் தேசிகன், மயக்கமடைந்திருந்தார். முகம் முழுவதும் வேர்த்துக் கொட்டியிருந்தது. வாயருகிலிருந்து லேசாக ரத்தம் வழிந்த வண்ணமிருந்தது. கட்டிப் போடப்பட்டிருந்த இடது கையில் நன்கு கூர்ந்து கவனித்தால், சுண்டு விரலும், மோதிர விரலும் பின்பக்கம் திருப்பப்பட்டு உடைக்கப்பட்டிருந்தன, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ரத்தம் நிறைய வெளியேறியிருந்ததாலோ அல்லது வலி பொறுக்க முடியாமலோ அவர் மயக்கமடைந்திருக்க வேண்டும். அதே நிலையில் கிட்டத்தட்ட நான்கு மணி் நேரங்களாக இருந்திருக்கிறார். அவர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் பாதி குடித்து விட்டு அவர் விட்டிருந்த விஸ்கி கிளாஸ்….

அவரை அடித்துத் துன்புறுத்திய அந்த அடியாள் உள்ளே வருவதற்கு முன்னரே வாசலில் காவல் காத்துக் கொண்டிருந்த இரண்டு காவலர்களையும் சுட்டுத் தள்ளி விட்டு உள்ளே வந்திருந்தான். இவையெல்லாம் முடிந்த பின்னர், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு முன்னரே தனது முதலாளிக்கு ஃபோன் செய்து சொல்லியிருந்தான். விபரம் முழுவதும் கேட்ட அவன் முதலாளி ராமச்சந்திரன் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர். மன மகிழ் மன்றத்தில் வேலாயுதத்துடன் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த தனவந்தர்கள் இருவரில் ஒருவர்.

ராமச்சந்திரன் பெரிய பணக்காரர். பலவித தொழில்களுக்கு அதிபதி. பெண்கள் விஷயத்தில் சற்று பலவீனமானவர். அவரது எந்தத் தொழிலிலும் பெரிய அளவில் நேர்மையை எதிர்பார்க்க இயலாது. வேலாயுதத்தைப் போல பல மடங்கு பணக்காரர். நூற்றுக் கணக்கில் அடியாட்களை வைத்திருப்பவர்; கிட்டத்தட்ட ஜேம்ஸ் பாண்ட் சினிமாக்களில் வரும் வில்லன்களைப் போல வாழ்க்கைத் தரத்தை உடையவர்.

தனது ஆள் ஃபோன் செய்தவுடன் புறப்பட்டு வருவதாகச் சொன்ன ராமச்சந்திரன், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கு வந்து சேர்ந்தார். டிரைவர் இறங்கிக் கதவைத் திறந்து விட, அவருடன் எப்பொழுதும் கூட வரும் இரண்டு பாடிகார்ட்களும் இறங்கி நடந்து வர, டாக்டர் தேசிகன் வீட்டின் பின்புறமாக அவர்கள் உள்ளே நுழைந்தனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சந்தேகம் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதால் டிரைவரைக் காரை எடுத்துக் கொண்டு செல்லுமாறு பணித்துவிட்டு இவர்கள் மூவரும் உள்ளே நுழைகின்றனர். இவர்கள் வருவதற்காகக் காத்திருந்த அவர்களின் அடியாள், அனைவரையும் உள்ளே அழைத்துச் செல்கிறான்.“என்ன, மயக்கம் தெளிய வச்சுட்டியா?” ராமச்சந்திரனின் முதல் கேள்வி.

“ஆமா சார், மருந்து குடுத்து பத்து நிமிஷம் ஆச்சு, இப்ப எழுந்திருக்கிற நேரந்தான்..” அடியாளின் பதில்.

சீக்கிரம் ஆகட்டும், என்று சொல்லிக் கொண்டே ஒரு ஃபாரின் சிகரெட்டை எடுத்துப் பத்த வைக்கத் தொடங்குகிறார் ராமச்சந்திரன். சற்று டென்ஷனுடன் இருப்பதாகத்தான் பட்டது. அந்த சிகரெட் கிட்டத்தட்ட முடியும் நிலையில் டாக்டர் தேசிகனின் முனகல் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. சத்தம் வரத்தொடங்கியவுடன் சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்து விட்டு அவரை நோக்கி நடக்கத் தொடங்கினார் ராமச்சந்திரன்.

“அவனை ஏன் டாக்டர் காப்பாத்தினீங்க?” …. கட்டிப்போடப்பட்டிருந்த டாக்டரின் வழுக்கைத் தலையிலிருந்த சிறிதளவு முடியைக் கோதிவிட்டுக் கொண்டே கேட்டார் ராமச்சந்திரன்..

“அ.. ஃப்.. ம்.. அஃபு.. “ என என்னவோ பேசினார் தேசிகன், யாருக்கும் விளங்கவில்லை.

“சரி, பரவாயில்ல போகட்டும். எப்படியும் அவன் இன்னும் உங்க ஹாஸ்பிடல்லதான் இருக்கான். டிஸ்சார்ஜ் ஆகுறதுக்குள்ள ஏதோ செய்ங்க டாக்டர்.. அவன் உசுரோட வெளியில வரக்கூடாது… வந்தா உங்க பொண்ணு பீஸ் பீஸா உங்ககிட்ட வருவா”…

பேச இயலாவிட்டாலும், டாக்டரின் கண்களில் மரண பயம் தெரிந்தது.

திங்கட்கிழமை மாலை பதினோரு மணி:

மாசானை விசாரித்ததில் அந்த மைக்ரோ சிப் குப்பத்தின் குப்பையில் எறியப்பட்டது என்பதை உணர்ந்த ராஜேந்திரன் பெரிய போலீஸ் படை ஒன்றை அழைத்துக் கொண்டு அந்த அர்த்த ராத்திரி வேளையில் சிப்பைத் தேடிக்கொண்டு வரப் புறப்பட்டார். அவருடன் ஒரு தீயணைப்பு வண்டியும் சில கார்களும் பின் தொடர்ந்து சென்றன. போலீஸ் சைரனுடன் பல வண்டிகள் வருவதைப் பார்த்ததும், குப்பமே அதிரத் தொடங்கியது.

முதல் ஜீப்பில் விலங்குடன் அமர்ந்திருந்த மாசான் வழி காட்டிக் கொண்டிருந்தான். தனது ஏரியா பக்கம் விலங்கில்லாமல் அழைத்து வரச் சொல்லி எவ்வளவோ கெஞ்சியும் ராஜேந்திரன் மறுத்து விட்டார். அவமானமாய் அமர்ந்திருந்த மாசான், கீழே கிடந்த பர்ஸை உடனடியாக போலீஸிடம் கொடுக்காததற்காகக் கடவுள் தந்த தண்டனையாக நினைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தான். பல எண்ண ஓட்டங்களுடன் தன் குடிசை இருக்கும் இடம் நோக்கி வந்து சேர்ந்தான்.

முதல் வண்டியிலிருந்து கீழிறங்கி, தான் எங்கே உட்கார்ந்து பர்ஸைத் திறந்தான் என்பதில் தொடங்கி, எங்கே சிப்ஸை விட்டெறிந்தான் எனத் தனக்குத் தெரிந்த விஷயங்களை உள்ளது உள்ளபடிக் கூறி முடித்தான். வந்திருந்த அனைத்து வண்டிகளும், தீயணைப்பு வண்டியும் இருந்த அனைத்து விளக்குகளையும் போட்டு அந்த இடத்தை ஒரு அதிகாலைப் பொழுது போல் மாற்றியிருந்தன. இவை தவிர, எல்லோருடைய தொப்பியிலும் ஒரு ஃப்ளாஷ் லைட் பொருத்தப்பட்டு, தேடவேண்டிய சிறிய மைக்ரோ சிப் தெரிவதற்கு வழி வகை செய்யப்பட்டிருந்தது.

குழு முழுவதும் துருவித் துருவித் தேட, இருபது நிமிடங்களுக்கு எதுவும் தென்படவில்லை. அதனைத் தொடர்ந்து அனைவரும் அவரவர்களின் தேடலில் முழுகி இருக்கையில் “சார்ர்ர்ர்ர்… இங்க பாருங்க….” என்று ஒரு பலத்த குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்ப ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று உணர முடிந்தது.

தூரத்தில் செல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த ராஜேந்திரன் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அவசர அவசரமாக கூட்டம் இருந்த இடத்தை நோக்கி வருகிறார். “விலகுங்க, விலகுங்க” என்று தள்ளி விட்டுக் கொண்டே கூட்டத்திற்கு நடுவில் சென்ற ராஜேந்திரன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். கூட்டத்திற்கு நடுவே, குப்பைக் கூளங்களுக்கே நடுவே, சேற்றில் புதைந்து அழுக்குப்படிந்த ஒரு மனிதக் கை தெரிந்தது.. உற்றுப்பார்க்கையில் அது ஒரு பெண்ணின் கை என்று தெரிந்தது. அந்தக் கைக்கு அருகே, ராஜேந்திரன் தேடிக் கொண்டிருக்கும் மைக்ரோ எஸ். டி கார்ட் அமைதியாய்க் கிடந்தது.

திங்கட்கிழமை மாலை பதினோரு மணி முப்பது நிமிடம்:

பாரதியைப் பல விதங்களில், பல முறைகளில் பயமுறுத்திக் கொண்டிருந்தது அந்தக் கூட்டம். சில முறை மயக்கத்திலிருந்து எழுந்து, மீண்டும் மயங்கி, அழுது, கதறி, அலறி, பல்வேறு உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருந்தாள் பாரதி. கிட்டத்தட்ட நான்கைந்து மணி நேரங்களாய் இதே கதியில் இருக்கும் அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இனிமேல் இவர்களுக்காகப் பயப்படுவதிலும் ஒரு பிரயோஜனமும் இல்லையென நினைக்கத் தொடங்கினாள்.

“உங்களுக்கு என்ன வேணும்? என்னை ஏன் இப்படி சித்திரவதை பண்றேள், நான் என்ன தப்பு செஞ்சேன், ப்ளீஸ் இந்தக் கைய அவுத்து விடுறேளா?” எனப் பலவிதங்களில் கெஞ்சத் தொடங்கியிருந்தாள்.

“தே… பாப்….. களுத.. சொம்மா இருக்க மாட்ட…” என அதட்டினான் ஒருவன்.

“உங்கள எல்லாம் இப்படி பண்ணச் சொல்றவா யாரு? கூட்டிண்டு வாங்கோ அவர, நான் அவரண்ட பேசிக்கிறேன்” பொறிந்து தள்ளிக் கொண்டிருந்தாள் பாரதி.

அவளின் புலம்பலைக் கேட்டுக் கொண்டே வெளியே வந்த அந்த தனவந்தரின் பெயர் விஸ்வநாத். இவர் வேலாயுதம் மற்றும் ராமச்சந்திரனுடன் அமர்ந்து மனமகிழ் மன்றத்தில் சீட்டாடிக் கொண்டிருந்தவர். C.A. முடித்து ஆடிட்டராக இருப்பவர். வேலாயுதத்திற்கும், ராமச்சந்திரனுக்கும் இவரே ஆடிட்டர். படித்து விட்டு ஆடிட்டர் தொழில் செய்து கொண்டிருந்தாலும், பல வில்லத்தனங்களைச் செய்வது அவருக்குக் கை வந்த கலை. அந்தக் கூட்டத்திலேயே படித்த ஒருவர், பல ஏமாற்று வேலை செய்யும் பணக்காரர்களின் பணத்தைத் தனது புத்திசாலித்தனத்தால் காத்து வருபவர். இவரின் மிகப் பெரிய பலவீனம் பெண்கள்.

திருமணமாகி பதினைந்து மற்றும் பதிமூன்று வயது கொண்ட இரண்டு மகன்கள் இருந்தாலும் இன்னும் இளமையான பெண்கள் வேண்டும் இவருக்கு. முடிந்தமட்டும் பணம் கொடுத்து விலைக்கு வாங்க நினைப்பவர். சில முறை அதைவிட அடுத்த நிலைக்குப் போய், பலவந்தப் படுத்துவதிலும் பெரிதாக வருந்துபவரில்லை. சற்று பலமான பெண்ணாக இருந்தால் அடியாட்களின் உதவி தேவை அவருக்கு.

பாரதியைக் கடத்தி வந்த காரணம் வேறு. ஆனால் அவள் விஸ்வனாத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவர் அவளைச் சுவைபார்ப்பது குறித்து யாருக்கும் வருத்தம் வரப்போவதில்லை. ஏற்கனவே குறிப்பிட்டபடி தளதளவென வளர்ந்து, வெள்ளை நிறத்தோலுடன் நீண்டு வளர்ந்த அடர்த்தியான கரிய முடியுடன் அழகுப்பதுமையாய் விளங்கும் 21 வயது பாரதியைப் பார்க்கப் பார்க்க விஸ்வநாத் தன்னையே இழக்கத் தொடங்கியிருந்தார்.

கைகளிரண்டும் கட்டப்பட்டு, சற்றே தாவணி விலகி அதனை இழுத்து விட்டுக் கொள்ளக் கூட முடியாத நிலையில் அமர்ந்திருக்கும் பாரதியை நாவில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருந்த விஸ்வநாத்தை தோட்டக்காரனின் அலறல் உலுக்கி எழுப்பியது. அவனின் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் ஓட எத்தனிக்க, யாரோ இருவர் “போலீஸ்டா, போலீஸ்டா…” எனக் குரல் கொடுத்துக் கொண்டே ஓடினர். அனைவரும் வேகமாக ஓட, விஸ்வநாத் மட்டும் தன் பருமனான உடலைத் தூக்கிக் கொண்டு ஓட இயலாத நிலையில், மெதுவாகச் செல்கையில், பின்னாலிருந்து திடமான குரலில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ”ஹேண்ட்ஸ் அப்” என்று கூற, செய்வதறியாது உறைந்து போய் நின்றார் விஸ்வநாத்.

(தொடரும்)

– வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad