தலையங்கம்
மார்ச் 2015 க்கான இணைய தள இதழ் உங்களின் கணினியில் தவழ்ந்து கொண்டிருக்கும் நேரமிது. இந்த நல்ல நேரத்தில் எங்களின் மைல் கல் குறித்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறோம்.
சென்ற ஃபிப்ரவரித் திங்கள் 21 ஆம் திகதியன்று எங்கள் பனிப்பூக்கள் இதழின் இரண்டாமாண்டு பிறந்த தினம். சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதனைத் தொடங்குகையில் எங்கள் குழுவுக்கு இருந்த பதைபதைப்பு இன்றும் அடங்கியபாடில்லை. ஒவ்வொரு மாதமும் இணைய தள வெளியீட்டு தினத்தையும், அச்சுப்பிரதி வெளியிடும் தினத்தையும் ஒட்டிய நாட்களில் எங்கள் குழு படும் பாடு பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக அமையும். படைப்புகளைத் தயாரிப்பவர்கள் ஆகட்டும், படம் வரைபவர்கள் ஆகட்டும், பிழை திருத்தம் செய்பவர்கள் ஆகட்டும், புகைப்படம் பிடிப்பவர்கள் ஆகட்டும் இன்னும் தொழில்நுட்ப வேலையில் ஈடுபடுவர்களாகட்டும், அனைவரும் காலில் வென்னீர்
ஊற்றிக் கொண்ட நிலையிலேயே பணி புரிந்து கொண்டிருப்பர். முதல் மாதத்தில் தொடங்கிய இந்த வெளிப்பாடு இன்று மட்டும் மாறவில்லை என்பதுதான் உண்மை.
எவ்வளவு திட்டமிட்டு, எவ்வளவு தெளிவாகச் செயல்பட்டாலும், அந்த வெளியீட்டு நாளன்று வரும் பதைபதைப்பு எழுத்தில் எழுதி விளக்க முடியாதவொன்று. மகவைப் பிரசவிக்கும் தாய்க்கும், இறுதிப் போட்டியில் முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டியிருக்கும் விளையாட்டு வீரனுக்கும், வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனுக்கும், கடிகாரத்துடன் போட்டியிட்டு வாழ்வின் மிக முக்கியமான தேர்வை எழுதி முடிக்கும் மாணவனுக்கும், தன் உயிரின் முழு உணர்வையும் எழுத்தில் கொண்டு வந்து எழுதி முடித்த கடிதத்தைப் படித்து முடித்து, முடிவைக் கூறத் தயாராகும் காதலி முகம் பார்க்கும் காதலனுக்கும் மட்டுமே விளங்க கூடிய உணர்வு அது.
ஒரு தனி மனிதனின் பிறந்த தினம் என்பது வாழும் வரை வருடா வருடம் தானாகவே வந்து செல்லும் சாதாரணச் செயல். ஆனால் ஒரு நிறுவனத்தின், அதுவும் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் ஒன்றின் பிறந்த நாள் என்பது, வருடா வருடம் வந்து செல்லும் சாதாரண நாள் அல்ல என்பதை விளக்கத் தேவையில்லையென நினைக்கிறோம். குழுவினர் அனைவரின் கடின உழைப்பு மற்றும் வாசகர்களான உங்களின் பெருவாரியான ஆதரவால் மட்டுமே இரண்டாண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த இதழின் ஆண்டு நிறைவைக் கொண்டாடினோம்.
கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 21) உள்ளூரில் ஒரு அரங்கில் எங்களின் ஆண்டு நிறைவு விழா இனிதே கொண்டாடப்பட்டது. வழக்கம் போலப் பல ரசிகப் பெருமக்கள் வந்திருந்து எங்களுக்கு உற்சாகமளித்தனர். பனிப்பூக்கள் குழுவைச் சேர்ந்தவர்களின் அறிமுகத்துடன் தொடங்கிய விழா, ஒருசில கேளிக்கை நிகழ்ச்சிகளுடன், பனிப்பூக்களின் பயணம் குறித்த தகவல்கள் மற்றும் வாசகர்களின் கருத்து ஆகிய நிகழ்ச்சிகளைக் கொண்டு சுமார் மூன்று மணி நேரம் மிகவும் அழகாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக மினசோட்டாவின் கலைவாணி திருமதி. நிர்மலா ராஜசேகர் வந்திருந்து, பனிப்பூக்கள் பத்திரிகை குறித்தும், எங்களின் ஆசிரியர் குழு குறித்தும் சில மணித்துளிகள் சிலாகித்துப் பேசினார்.
வாசகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். திரைப்படப் பாடல் குறித்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சி அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தியது
எனலாம். பனிப்பூக்களின் சாதனைகளை ஒரு கேள்வி பதில் வடிவில் ஆசிரியர்கள் தொகுத்துத் தந்ததற்கும் நல்ல வரவேற்பு இருந்ததாகவே பட்டது. “எதிரொலி” என்ற வாசகர்களின் கருத்துப் பங்கீட்டுப் பகுதியில் பலர் உற்சாகமாக எழுந்து பேசித் தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். பனிப்பூக்களின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இது குறித்துச் சற்று விளக்கமாக வரும் இதழ்களில் பார்க்கலாம். இவை தவிர, தங்களை யாரென்று அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல், எழுத்துமூலம் தரப்பட்ட, கருத்துச் சேகரிப்புப் படிவங்களின் மூலம் வந்த கருத்துக்கள் எங்கள் குழுவுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்களில் மிகவும் சுவாரஸ்யமான புள்ளி விபரங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன;
மொத்த வாசகரகளின் வருகை: 135,000+
தனித்துவமான வாசகர்கள்: 11,500+
தொடர் வருகை தருபவர்கள்: 5,600+
வாசகர்களின் நாடுகள்: அமெரிக்கா: 46% மற்றும் இந்தியா: 35%
இரண்டு வருடங்களுக்கு முன்னர் குடத்திலிட்ட விளக்காய்ச் சிறிதளவு ஒளி கொடுக்குமளவுக்கு இருந்தோம். இந்த இரண்டு வருடங்களில் வாசகர்களாகிய உங்களின் ஆதரவினால், குன்றிலிட்ட விளக்காய் ஒளிரத் துவங்கியுள்ளோம். உங்களின் தொடர்ந்த ஆதரவின் மூலம் பெரிய மலைகளையும், உன்னத சிகரங்களையும் எட்டிப்பிடிப்போம் என்ற நம்பிக்கையுடன், வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிக் கடனை வெளிப்படுத்துகிறோம்.
– ஆசிரியர் குழு.