மார்லன் பிராண்டோ
1973ஆம் ஆண்டு, மார்ச் 27ஆம் நாள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள டோரோதி சான்ட்லர் அரங்கம் (Dorothy Chandler Pavilion) – 45வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. சிறந்த நடிகர் விருதுக்காக நியமனமாகியிருந்த ஐந்து பெயர்களை நடிகை லீவ் உல்மன் வாசித்து விட்டார். நடிகர் ரோஜர் மூர் வெற்றியாளரின் பெயரை அறிவித்தார். அரங்கம் முழுதும் பலத்த கரகோஷம். ‘சிறந்த நடிகரு’க்கான விருதைப் பெற ஒரு ‘பெண்’ மேடையேறினாள்.
பார்வையாளர்களுக்குக் குழப்பம். ரோஜர் மூர் ஆஸ்கர் விருதினை அந்தப் பெண்ணிடம் நீட்ட, மென்மையான செய்கையினால் அதை வாங்க மறுத்த அப்பெண் கையோடு கொண்டு வந்திருந்த காகிதத்தைப் பேச்சு மேடையில் வைத்துப் படிக்கத் துவங்கினார்.
“நானிங்கு உங்கள் அபிமான நடிகரின் பிரதிநிதியாக நிற்கிறேன். அவர் உங்களிடம், அன்போடு நீங்கள் அளித்த இந்த விருதினை ஏற்க முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கச் சொன்னார். அமெரிக்க இந்தியர்களை, (Native Indians) ஹாலிவுட் மற்றும் அமெரிக்கத் திரைப்படத் துறை நிராகரித்து வருவதைக் கண்டித்து இதை ஏற்க மறுத்திருக்கிறார்.” இதனை வாசித்தவர் சச்சின் லிட்டில்ப்ளவர் என்ற அமெரிக்க இந்தியப் பெண்.
உலகில் உள்ள ஒவ்வொரு கலைஞனும் இந்த மேடையில் நம் பெயர் உச்சரிக்கப்படாதா என்று காத்துக் கொண்டிருக்குமளவுக்கு புகழ் பெற்ற விருது. அந்தக் குறிப்பிட்ட படத்தில் தன்னை நடிக்க வைக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்த தயாரிப்பாளரின் முகத்தில் கரியைப் பூச அந்த நடிகருக்குக் கிடைத்த அட்டகாசமான வாய்ப்பு. அதற்கு முன் சில படங்கள் தோல்வி கண்ட போது, ஒழிந்தான் இவன் என்று ஹாலிவுட் மகிழ்ந்திருந்த தருணமது. எதையும் எண்ணாமல் தான் பணியாற்றும் துறையில் படர்ந்திருந்த சமூக அவலமொன்றைக் களையாமல் விருதினை ஏற்பதில் அர்த்தமில்லை என்று மறுத்தவர் அந்த நடிகர்.
அந்த நடிகர் – மார்லன் பிராண்டோ ; திரைப்படம் – காட்ஃபாதர்
மார்லன் பிராண்டோவை நம்மில் பலர் ஹாலிவுட் நடிகராக, உலகின் மிகச் சிறந்த நடிகர்களுள் ஒருவராக, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்களில் ஒருவராக அறிவோமே தவிர ஏழ்மை நிறைந்த, சமூகத்தினரால் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகயிருந்து அவர்களுடைய போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவராக நாம் அறிந்ததில்லை.
பிராண்டோ, 1924 ஏப்ரல் 3ஆம் தேதி நெப்ராஸ்கா மாநிலத்திலுள்ள ஒமஹா நகரில், பிறந்தார். இவரது மூதாதையர் ஜெர்மானிய பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை மார்லன் பிராண்டோ சீனியர். பூச்சி மருந்துக் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். தாயார் டோரோதி ஜூலியா. சின்ன வேடங்களில், திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்து வந்தவர். மார்லன். பிராண்டோவுக்கு இரண்டு மூத்த சகோதரிகள்.
பிராண்டோவின் பிள்ளைப் பிராயம் மகிழ்ச்சிகரமாக இருந்ததில்லை. அவரது பெற்றோரிடையே நிலவிய கருத்து வேற்றுமை காரணமாக தினசரி சண்டையும் சச்சரவுமாகவே அவர்களது பொழுது கழிந்தது. அவர்களது பிள்ளைகள் பற்றி இருவரும் கவலைப்படவில்லை. பிராண்டோவின் தாய் அக்காலப் பெண்களுக்கிருந்த கட்டுப்பாட்டை மீறி ஆண்களைப் போல கிராப் முடியுடன், ட்ரவுசர், சட்டை அணிவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். அளவுக்கதிகமான மதுப்பழக்கம், புகைப்பழக்கம் கொண்டிருந்தார். அதனால் பிராண்டோவின் தந்தை குடும்பத்தைப் பிரிந்து சென்று விட்டார். தன் தாயின் குடிப்பழக்கத்தைத் திசைதிருப்ப பிராண்டோ அவ்வப்போது ‘மிமிக்ரி’ என்று சொல்லப்படும் பலகுரல் நடிப்பினைச் செய்து வந்தார். அதில் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ந்தாலும் அவரது தாயால் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வரமுடியவில்லை.
தாயின் அரவணைப்புக் கிடைக்காத பிள்ளைகள் மூவருமே இறுகிய மனநிலையோடு வளர்ந்தனர். அதிலும் பிராண்டோ யாரையும் நம்பாத, மதிக்காத, முரட்டு குணத்துடன் வளர்ந்தார். பள்ளியில் பல பிரச்சனைகளை இழுத்து வந்ததால் ராணுவப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இதனிடையே பிராண்டோவின் அக்கா ஜோசலின் நியுயார்க் நடிப்புப் பயிற்சி பள்ளியில் சேர்ந்திருந்தார். மற்றொரு சகோதரியும் அதே பள்ளியில் ஓவியப் படிப்பு படித்து வந்தார். அவர்களின் வற்புறுத்தலின் பேரில் பிராண்டோவும் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். அந்தப் பள்ளியின் பொறுப்பாளராக இருந்த திருமதி. ஸ்டெல்லா ஆல்டர் மிகவும் கட்டுக்கோப்பான, கண்டிப்பான ஆசிரியர். பிராண்டோவின் திறமைகளை உடனே உணர்ந்துக் கொண்ட அவர், அவரது மனநிலையை மாற்றி ஓரளவுக்கு அவரை அமைதிப்படுத்தினார். பெரிய நடிகனாக வளர்ந்த பிறகு ஒரு பேட்டியில் ‘திருமதி. ஆல்டர் என் வாழ்வில் வந்திராவிட்டால் நான் ஒரு திருடனாக மாறியிருப்பேன்’ என்று குறிப்பிட்டார் பிராண்டோ.
ஆல்டரின் பயிற்சி முற்றிலும் புதுமையான முறையில் அமைந்திருந்தது. அவரது பள்ளியில் படித்த பலராலும் அவரைப் புரிந்து கொள்ள இயலவில்லை. ஒரு கதாபாத்திரத்தின் வெளிப்பாடு அனைவரும் எதிர்பார்ப்பது போலில்லாமல் தனித்தன்மையுடன், மாறுபட்ட கோணத்தில் அமைய வேண்டுமேனும் ‘மெத்தட் ஆக்டிங்’ முறையைக் கற்பித்தார். இயற்கையிலேயே நடிப்பாற்றல் பெற்றிருந்த பிராண்டோவுக்கு இது மிக இயல்பாக வந்ததை ஆல்டர் உணர்ந்தார். ஆல்டரின் கணவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ‘ட்ரக்லைன் கஃபே’ (Truckline Café) என்ற நாடகத்தை உருவாக்கியபோது பிராண்டோவுக்கு முதல் முறையாக மேடையேற வாய்ப்புக் கிடைத்தது. இளம் ராணுவ வீரன் ஒருவன் போர்முனையிலிருந்து வீட்டுக்கு வந்தபோது தன் மனைவியின் பிறழ்ந்த நடத்தையைக் கண்டு அவளைக் கொன்று விடும் பாத்திரம் பிராண்டோவுக்கு. கோபத்தில் கொன்று விட்டாலும், பின்னர் அந்த கொலைக்காக வருந்த வேண்டும் என்பது மட்டுமே கதையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பயிற்சிகளின் போது கதைப்படி நடித்த பிராண்டோ, மேடையேறியதும் மனைவியைக் கொன்று விட்டு, கையால் தனது மார்பைப் பிடித்துக் கொண்டு மாரடைப்பு வந்ததைப் போலத் துடித்தார். உடன் நடித்தவர்களும், பார்வையாளர்களும் அவருக்கு நிஜமாகவே மாரடைப்பு வந்து விட்டது என்று எண்ணி முதலுதவிக்கு விரைந்தனர். இப்படித் தத்ரூபமாக நடித்துத் தனது முதல் மேடையிலேயே பார்வையாளர்களைத் தன் வசம் இழுத்தவர் பிராண்டோ.
அந்தச் சமயத்தில் திருமதி.ஐரின் செல்ஸ்னிக் தான் தயாரிக்கவிருந்த ‘எ ஸ்ட்ரீட்கார் நேம்ட் டிசையர்’ எனும் நாடகத்துக்கு, அப்போது பிரபலாமாகவிருந்த நடிகர் ஜான் கார்ஃபீல்டை (John Garfield) வைத்து இயக்கித் தருமாறு எலியா கசான் (Elia Kazan) எனும் இயக்குனரை அணுகினார். அதற்கு முந்தைய வருடம் தான் கசான், கார்ஃபீல்டை வைத்து ‘எ ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட்’ என்ற திரைப்படத்தை இயக்கி ஆஸ்கர் விருதும் பெற்றிருந்தார். இருப்பினும் கசான், மார்லன் பிராண்டோவைக் கொண்டு வந்தால் நான் நாடகத்தை இயக்குகிறேன் இல்லையென்றால் வேறு இயக்குனரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுமளவுக்கு பிராண்டோவின் தாக்கம் பரவியிருந்தது.
திருமதி. ஆல்டர், பிராண்டோவை மாணவனாக மட்டுமல்லாமல் தன் குடும்பத்தில் ஒருவனாக நடத்தினார். பிராண்டோவின் தொழில் பற்று அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. தனது மகள் எல்லனை பிராண்டோவுக்குத் திருமணம் செய்ய நினைத்தார் ஆல்டர். ஆனால் பிராண்டோ. தனது குணம் ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டு, ‘ஒருத்திக்கு ஒருவன்’ என்று வாழ்வதற்குத் தகுதியற்றது என மறுத்துவிட்டார். ஆனால் தனது கடைசி நாள்வரை எல்லனோடு நட்புக் கொண்டிருந்தார் அவர். இரண்டாண்டுகளுக்கும் மேலாக ‘எ ஸ்ட்ரீட்கார் நேம்ட் டிசையர்’ நாடகம் மேடையில் நடத்தப்பட்டு வந்தது. பிராண்டோவுக்குத் தினமும் அதே வேடத்தைச் செய்வது சலிப்பைத் தந்தது. அவ்வப்போது ஏதாவது ஏடாகூடமான செயல்களைச் செய்து வந்தார். ஒரு முறை தனது காட்சிக்கு முன்னர், குழுவிலிருந்த ஒரு சண்டை நிபுணரை வலுக்கட்டாயமாகச் சண்டைக்கிழுத்து மூக்கை உடைத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட மேடையேறினார். அந்த நாடகத்தில் அவர் நடித்து வந்த ரவுடி கதாபாத்திரத்துக்கு அது மிகவும் பொருத்தமாக அமைந்து விட்டதாகப் பார்வையாளர்கள் பாராட்டினர். இது போன்ற நிகழ்வுகளால், பிராண்டோ கலைக்காக எதையும் செய்யக் கூடியவர் என்ற செய்தி பரவியது.
மெதுவே ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் பார்வை பிராண்டோ மீது விழத் துவங்கியது. பொதுவாக அந்நாட்களில் நாடக நடிகர்களை ஹாலிவுட் ஏற்றதில்லை. ஆனால் பிராண்டோவின் திறமை அவர்களைச் சற்று யோசிக்க வைத்தது. ஹாலிவுட் இயக்குனர் பிரெட் சினமென் (Fred Zinnemann) பிராண்டோவை அணுகியபோது தனது வழிகாட்டியான ஆல்டரிடம் ஆலோசனை பெற்ற பின் ஒப்புக் கொண்டார் பிராண்டோ. என்றுமே பணத்துக்காக எதையும் செய்யலாம் என்று நினைத்ததில்லை பிராண்டோ. அவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் தனது நண்பனுடன் ஒரு அறையில் தங்கியிருந்தார். இருவரும் தங்கள் சட்டைப் பையில் வைக்கும் பணம் அடிக்கடி திருடு போவதை உணர்ந்தனர். பிராண்டோவின் நண்பர் அறையைச் சுத்தம் செய்யும் நபர் தான் பணத்தைத் திருடுகிறார் என்பதை ஒரு நாள் கண்டுபிடித்து அவரைப் போலீசில் மாட்டிவிடலாம் என்று பிராண்டோவிடம் சொன்ன போது, ‘பாவம் அவனுக்கு நம்மை விடத் தேவை அதிகம் போலிருக்கிறது. இல்லையென்றால் அவன் இப்படி செய்பவனில்லை’ என்று சொல்லி அவனுக்காகவே தனது சட்டைப் பையில் பணத்தை வைக்கத் துவங்கினார். ஏழைகளிடமும், அல்லல்பட்டு சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களிடமும் இனம் புரியாத பற்றுதலைக் கொண்டிருந்தார் பிராண்டோ.
பிராண்டோவின் முதல் திரைப்படம் ‘தி மென்’ எனும் படம். காயமடைந்த ஒரு போர் வீரனைப் பற்றிய படமென்பதால் சில மாதங்கள் ராணுவ மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து பழகி, அங்கிருந்த நோயாளிகளின் மன நிலையைக் கூர்ந்து கவனித்தார். நடிப்புக்காக மட்டுமல்லாமல் வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வாக அவருக்கு அது அமைந்தது. அவரது முதல் படம் மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதான பொருளாதார வெற்றி பெறவில்லை. இருந்தாலும் பிராண்டோவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அடுத்ததாக பிராண்டோ ஏற்கனவே நடித்து 855 முறை மேடையேறிய ‘எ ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசையர்’ திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இந்த திரைப் படம் 1951ல் வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் டாலர்களைச் சம்பாதித்தது. பல பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட இந்தத் திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், துணை நடிகை, சிறந்த கலை போன்ற பிரிவுகளில் விருதினை வென்றது. சிறந்த நடிகர் பிரிவில் பிராண்டோ நியமிக்கப்பட்ட போதினும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. அதன் பின்னர் ‘விவா சபடா’, ‘ஜூலியஸ் சீசர்’, ‘வைல்ட் ஒன்’ போன்ற படங்களிலும் அவரது நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது. அவரது ஆறாவது படமான ‘ஆன் த வாட்டர் ஃபிரண்ட்’ அவருக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் இயக்குனர் கஸான், பிராண்டோவை அந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்குப் பிரம்மப் பிரயத்தனம் செய்ததாகத் தெரிகிறது. கதையைக் கேட்டுவிட்டு முதலில் பிராண்டோ மறுத்துவிட, படம் கைவிடப்பட்டதாம். பின்னர் வேறொரு தயாரிப்பாளர் பிராண்டோவைச் சம்மதிக்க வைத்து மீண்டும் படம் துவங்கப்பட்டதாம். ஐம்பதுகளின் மிகச் சிறந்த ஐந்து நடிகர்களின் வட்டத்தில் இடம் பிடித்தார் பிராண்டோ. அவரது சம்பளமும் பல மடங்கு உயர்ந்தது. கூடவே பிராண்டோவின் பிடிவாதமும் பெருகியது. கதைகளில் குறுக்கிடுவதும், சொன்ன நேரத்துக்குப் படப்பதிவுக்கு வராமலிருப்பதும் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்தன. கூடவே குடிப்பழக்கமும், பெண்களின் சகவாசமும் தொற்றிக் கொள்ள அவர் நினைத்தபோது தான் படப்பிடிப்பு நடத்த முடியும் என்ற நிலை உருவானது. மிகச் சிறந்த நடிகராக இருந்தபோதிலும் இந்த ஒழுங்கின்மை அனைவரையும் அவரை விட்டு விலகியிருக்கச் செய்தது. அவரது வித்தியாசமான சமூகப் பார்வையும் அனைவரின் வெறுப்புக்கு உள்ளானது.
1960களில் பிராண்டோவுடைய நடவடிக்கைகள் பெரும் விமர்சனத்துக்குள்ளாயின. படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தபோது தென்னாப்பிரிக்க தூதரகத்திற்கு முன்பு, தென்னாப்பிரிக்க அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி நடந்து கொண்டிருந்த போராட்டத்தைப் பற்றி அறிந்து படப்பிடிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு போராட்டத்தில் தானும் கலந்து கொண்டார். மார்ட்டின் லூதர் கிங் இனப் பிரிவினைக்கு எதிராக நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டார். ஜான் எஃப். கென்னடி அதிபராகப் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாகப் பல கூட்டங்களில் படப்பிடிப்பைப் புறக்கணித்து விட்டுப் பங்கேற்றார். ‘சான் குவென்டின்’ (San Quentin) சிறையில் ஒரு கைதியின் மரண தண்டனையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
அது மட்டுமின்றிப் படப்பிடிப்புகளின் இடையே அதிகமாக உண்பது, உறங்குவது, உடன் நடிப்பவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருந்த வசனங்களைக் கடைசி நிமிடத்தில் மாற்றுவது போன்ற தலையீடுகள் கட்டுக்கடங்காமல் போனது. பிராண்டோவை வைத்துப் படமெடுப்பது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியமாகிப் போனது. அறுபதுகளில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியுற்றன. ஒவ்வொரு படத்திலும் சுயநலத்தோடு தனது பாத்திரத்தை மட்டும் மெருகேற்றி மற்றவர்களின் பாத்திரங்களையும் கதையையும் உதாசீனப் படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்தது. ஆனால் அவர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. யாருடைய அறிவுரையையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. பூர்வீக அமெரிக்கர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களை அமெரிக்க அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்ற கருத்து அவர் மனதில் ஆழமாகப் பதிந்து விட அவர்களுக்காகப் போராடத் துவங்கினார் பிராண்டோ. பல முறை சிறைவாசமும் கிடைத்தது அவருக்கு. பிராண்டோவின் சகாப்தம் முடிந்தது என்றே எல்லோரும் நினைத்திருந்தனர்.
துவக்கத்தில் பிராண்டோவை வைத்துப் பல படங்களை இயக்கிய கஸானுக்கு மாத்திரம் அவர் மீதிருந்த நம்பிக்கை குறையவில்லை. எப்படியாவது அவரை வைத்து ஒரு வெற்றிப் படம் இயக்க வேண்டுமென்று தொடர்ந்து தனது படங்களில் அவரை நடிக்க வைத்தார். “ ‘ஆன் த வாட்டர் ஃபிரண்ட்’ படத்தில் பல காட்சிகளில் நான் நினைத்துக் கூடப் பார்த்திராத நடிப்பை அளித்தவர் பிராண்டோ. பல சமயங்களில் நான் ‘கட்’ சொல்ல மறந்து நின்றதுண்டு. அவருடைய கதாபாத்திர ஆளுமை அவ்வளவு சக்தி வாய்ந்தது. கேமரா முன் நின்றால் அவரது பணியின் ஈடுபாடு நம்மை அசர வைக்கும். தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களையும் தனது இருப்பின் ஆளுமையால் ஒடுங்கச் செய்து விடுவார். செட்டில் எங்கோ ஒரு பறவை சத்தமிட்டால் கூட அதைத் தன் ஒற்றைப் பார்வையால் அடக்கி விடுவார் அவர். என்னுடைய வெற்றி என்று சொல்லிக் கொள்ள அந்தப் படத்தில் நான் பணியாற்றவில்லை” என்று பின்னர் ஒரு பேட்டியில் கஸான் சொல்லியிருக்கிறார்.
1969ம் ஆண்டு மரியோ பூஸோ (Mario Puzo) எழுதிய நாவலான காட்ஃபாதர் வெளியான நாளிலிருந்தே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நாவலின் மீது கண் வைத்த பாரமவுண்ட் சினிமாஸ் கதை உரிமையை வாங்கி வைத்துக் கொண்டு இயக்குநரைத் தேடி வந்தது. அதன் பொறுப்பிலிருந்தவர் ராபர்ட் இவான்ஸ் (Robert Evans). அவர் ஆர்த்தர் பென், கோஸ்டா காவ்ராஸ், எலியா கஸான் போன்ற இயக்குநர்களைப் பரிசீலனை செய்து வந்தார். இருப்பினும் காட்ஃபாதர் கதைக்களம் இத்தாலிய பின்னணியில், மாஃபியா கும்பலைப் பற்றியதாக இருந்ததால் இத்தாலியர் ஒருவர் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என்று கொப்பல்லாவை (Franscis Ford Coppola) அணுகினார். இந்த வாய்ப்பை உடனே ஏற்றுக் கொண்ட கொப்பல்லா போட்ட ஒரே நிபந்தனை பிராண்டோ நாயகனாக நடிக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் ராபர்ட் இவான்ஸ் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ‘திமிர் பிடித்தவன், யாருக்கும் அடங்க மாட்டான், முசுடன், அவனது படங்கள் வரிசையாகத் தோல்வி கண்டன’ போன்ற காரணங்களைச் சொல்லி பிராண்டோவை புறக்கணித்தார். மற்ற பாத்திரங்களுக்கு, அல்பசினோ (Al Pacino) உட்பட அனைவரும் ஒப்பந்தமாகினர். நாயகனுக்கானத் தேர்வு மட்டும் முடிந்த பாடில்லை. இறுதி நேர நெருக்கடியில் பாரமவுண்ட் சினிமாஸ் தயக்கத்துடன் பிராண்டோவின் ஒப்பனைத் தேர்வுக்கு ஒப்புக் கொண்டது. இதைக் கேள்விப் பட்ட பிராண்டோ தனது ஒப்பனையாளரை வைத்தே ‘கார்லோன்’ பாத்திரத்துக்கான ஒப்பனை போட்டுப் படங்களை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த கொப்பல்லோவும், பூஸோவும் தாங்கள் மனதில் நினைத்திருந்த கதாபாத்திரம் நேரில் வந்ததாகவே உணர்ந்தனர். பிராண்டோ நாயகனாக ஒப்பந்தமானார். படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களில் கொப்பல்லாவின் போக்கில் திருப்தியடையாத பாரமவுண்ட் அவரை மாற்ற முடிவு செய்தது. இதனால் வருத்தம் கொண்டிருந்த கொப்பல்லோவின் முகத்தை வைத்து விஷயத்தை அறிந்த பிராண்டோ, “கொப்பல்லோ இல்லையென்றால் நான் இந்தப் படத்தில் தொடரப் போவதில்லை” என்று பகிரங்கமாக அறிவித்தார். வேறு வழியில்லாமல் பாரமவுண்ட் சினிமாஸ் அமைதி காத்தது.
1972ல் ‘காட்ஃபாதர்’ படம் வெளியானது. தொடர்ந்து பதினான்கு தோல்விப் படங்களைக் கொடுத்திருந்த பிராண்டோவுக்கு இந்தப் படம் மறுவாழ்வை அளித்தது. ‘கார்லோன்’ நேரில் உயிர்பெற்று வந்ததாக அனைவரும் எண்ணும் வண்ணம் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் பிராண்டோ. உலகளவில் புகழ் பெற்ற இந்தப் படம் பிராண்டோவைப் புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. ‘டைம்’ பத்திரிக்கை 2000ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வின்படி சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐம்பது படங்களில் ‘காட்ஃபாதர்’ படமும் இடம் பெற்றது. இந்தப் படத்திற்காக பிராண்டோவுக்கு ஆஸ்கர் விருதும் அளிக்கப்பட்டது. அந்த விழாவில் இடம் பெற்ற நிகழ்வைத் தான் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் படித்தீர்கள்.
இந்தப் படத்துக்குப் பின்னர் தனது சம்பளத்தைப் பல மடங்காக உயர்த்தினார் பிராண்டோ. ‘லாஸ்ட் டாங்கோ இன் பாரீஸ்’ படத்தில் மிக ஆபாசமான காட்சிகளில் நடித்திருந்ததால் பெரும் சர்ச்சைக்குள்ளானார் பிராண்டோ. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்பட்டவரில்லை அவர்.
சமூக நீதிக்கான போராட்டங்களில் விரும்பி இணைத்துக் கொண்டார் பிராண்டோ. மனிதர்களின் அதிகாரப்போக்கு எந்த விதத்தில் வெளிப்பட்டாலும் அதை எதிர்த்து வந்தார். எந்த ஒழுக்க நியதிப்படியும் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளாத பிராண்டோ, தனது குற்றம், குறைபாடுகளை மறைத்து நன்மதிப்பை ஏற்படுத்திக் கொள்ள என்றுமே முயன்றதில்லை. தன்னைப் பற்றிய எந்த விமர்சனங்களையும் அவர் பெரிதாக எண்ணியதில்லை. தனது அற்புத நடிப்புத் திறமையின் மூலம் மட்டுமே அனைவருக்கும் பதிலளித்து வந்தார் பிராண்டோ. அபரிமிதமான ரசிகர்கள் செல்வாக்கு இருந்த போதிலும், அவர்கள் தன்னை அளவுக்கதிமாக நேசிப்பது மற்றவரை அந்த அளவிற்கு வெறுப்பதாக அமையும் என்று ரசிகர்களைத் தங்கள் பிழைப்பில் கவனம் செலுத்துமாறு சொன்னவர் பிராண்டோ.
பல பெண்களுடன் உறவு வைத்திருந்தவருக்கு மூன்று மனைவிகள். பதினாறு பிள்ளைகள். இதைத் தவிர மர்லின் மன்ரோ போன்ற நடிகைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு விழுந்தது.
“நான் மரபுகளை மீறுபவன். அது என் தனிப்பட்ட குணம்” என்று தன்னைத் தானே அவர் சுயவிமர்சனம் செய்து கொண்டாலும் உண்மையான அன்பும், நல்லுணர்வும் கொண்டிருந்தார். “என் வாழ்க்கையின் அடுத்த புள்ளி என்ன என்பது எனக்குத் தெரியாது. வெற்றி என்பது என் வாழ்வில் எதேச்சையாக அமைந்தது. எல்லோரையும் போல எனக்கும் பெற்றோர் அமைந்திருந்தால் என் வாழ்க்கை எப்படியோ அமைந்திருக்கும்” என்று அவரது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.
மேற்கத்திய உலகைத் தன் நடிப்பால் கட்டிப் போட்டிருந்த பிராண்டோ சிவாஜி (கணேசன்) யின் நடிப்பைப் பார்த்துவிட்டு அவரிடமே “என்னைப் போல் உங்களால் நடிக்க முடியும்; ஆனால் உங்களைப் போல் என்னால் நடிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
தனது வாழ்நாட்களின் இறுதிப் பெரும்பகுதியை மைக்கேல் ஜாக்சனின் ‘நெவர்மேன்ஸ் லாண்டில்’ கழித்தார் பிராண்டோ. இயற்கையை ரசித்து வாழ்ந்து வந்த மார்லன் பிராண்டோ 2௦௦4 ஆம் ஜூலை ஒன்றாம் தேதி மரணமடைந்தார்.
பிராண்டோ இயல்பிலேயே ஊழல், நேர்மையற்ற தன்மை போன்றவற்றை வெறுத்தவர். மனித ஆளுமை, நிலைமை இவற்றைக் கூர்ந்து கவனிக்கும் குணங்களைக் கொண்டிருந்தார். அபரிமிதமான நடிப்பாற்றல் கொண்டிருந்த போதிலும் இவரது வித்தியாசமான பார்வை அமெரிக்கத் திரைத்துறை இவரைச் சற்று விலக்கியே வைக்கக் காரணமாக அமைந்துவிட்டது. இது திரைத்துறைக்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய நட்டம் என்றே சொல்ல வேண்டும்.
தனது வழிகாட்டியான திருமதி. ஸ்டெல்லா ஆல்டரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நடிக்கும்பொழுது நிஜமாக இருக்கவேண்டும் என்றும், ஒருவர் சொந்தமாக உணராத உணர்வுகளை நடிக்க முயலக் கூடாது என்றும் அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார்” என்றார் மார்லன் பிராண்டோ.
தனது நிஜ வாழ்விலும் இந்த உயரிய கொள்கைகளைக் கடைப்பிடித்த உன்னத மனிதர் மார்லன் பிராண்டோ.
– ரவிக்குமார்.