அகத்தின் அழகு
உலகில் உள்ள ஜீவராசிகளில் மனிதன் தான் வெளித்தோற்றத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறான். இன்பத்தை அடைய எல்லாருமே ஒருவிதத்தில் அல்லது பலவிதத்தில் முயன்று கொண்டு இருக்கிறோம். அனால் வேதங்களோ, நாம் ஆனந்தத்தாலே உருவாக்க பட்டவர்கள். மாயை மறைப்பதால் அதை உணராமல் உடலோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம் என்று சொல்கிறது.
அதை அப்படியே நம்பச் சொல்லவில்லை, அப்படிச் சொல்லும் நிலையிலும் நான் இல்லை. அனால், அதில் அறிவியலுடன் கலந்து ஆராய்ந்து பார்போம். “இது என் கை” என்று நான் கூறினால், நான் அந்தக் கை அல்ல என்று தானே பொருள்? கை வேறு நான் வேறு என்று தானே அர்த்தம்? “இது என் கண்”, “இது என் காது” எனச் சொல்லிக்கொண்டே போகலாம். அப்படிச் சொல்லுகையில் இந்த வெளி உறுப்புக்கள் எனக்குச் சொந்தமானவை, ஆனால் நான் அதுவல்ல எனக் கொள்ளலாம். அப்படி என்றால் நான் யார்?
வேதங்கள் நம்மை ஐந்து கோஷங்களாகப் பிரிக்கின்றன. நாம் புறத்தில் இருந்து ஒவ்வொரு அடுக்காக உள்ளே செல்வோம். அதில் முதலாவது அன்னமயகோஷா. அதாவது நமது உடல் அன்னம் (உணவு) கொண்டு உருவானது. அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் இது உண்மையே. நாம் உணவு சாப்பிட்டால் தான் நமது உடல் வளர்கிறது. உடலுக்கு உணவு காரணமாக இருக்கிறது. ஆஃப்ரிக்க நாடுகளில் உள்ள ஏழை குழந்தைகளின் படத்தை நாம் கணினியில் பார்த்திருக்கிறோம். அவர்கள் சதைகள் எலும்பை ஓடியபடி வளர்ச்சி இன்றி வாட்டத்துடன் இருக்கின்றன.
அதேபோல் தேவைக்கு அதிகமாக உண்பவனின் உடல் அவன் உணவு பழக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இதில் உடல் ஆரோக்கியமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் சோர்வு எனப் பல விடயங்களுக்கு நாம் உண்ணும் உணவு காரணமாக இருக்கிறது. நம் உடலில் இயங்கும் இயந்திரம் நன்றாக இயங்கவேண்டுமெனில் அதை நன்றாகப் பாதுக்காக வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது.
சர்க்கரை, கொழுப்பு, உப்பு ஆகியவை நமது உடம்புக்குத் தேவையான பொருட்கள். ஆனால் இரசாயன செயலாக்க முறையில் ஆன உணவு வகைகளால் நமது உடம்புக்கு கேடு ஏற்படுகிறது. இயற்கை குடுக்கும் உணவு வகைகளில் மிகுந்த சக்தி உள்ளது. அதில் சர்க்கரையுடன் இழை சக்தியும் உள்ளது. இது நமது உடல் உட்கொள்ள எதுவாக உள்ளது. கொழுப்பிலும் நல்லது, கெட்டது என உள்ளது. அதைப் பார்த்து உண்பது நலம். அசைவ உணவில் நிறையப் புற்று ஊக்கிகள் உள்ளதாக விஞ்யானிகள் சொல்கிறார்கள். அத்துடன் இரசாயன செயலாக்கத்தையும் சேர்த்தால் பதிப்பு மிகுதியாக இருக்கும். உடலை கோவிலுக்கு ஒப்பிடுவர். கோவிலுக்கு இருக்கவேண்டிய சுத்தத்தை நாம் உடலுக்கும் அளிப்பது அவசியம்.
அன்னமயகோஷா உள்ளில் இரண்டாவது அடியாக இருப்பது ப்ரானமயகோஷா. நாம் சுவாசிக்கும் பிராணவாயுவான மூச்சுக் காற்று நமக்குத் தரும் சக்தியை குறிப்பிடுது. இப்பொழுது பல மருத்துவர்கள் தங்களிடம் வருபவர்களிடம்] சுவாசப்பயிர்ச்சியும் பரிந்துரைக்கத் துவங்கியுள்ளனர். வாய்ப்பாட்டுக் கற்றுக்கொள்ளும் பொழுதும் சுவாசப்பயிர்ச்சி அவசியமாகிறது. நீச்சல், விளையாட்டு, யோகா என பல துறைகளில் சுவாசப்பயிர்ச்சி அவசியமாகக் கருதப்படுகிறது. சுவாசம் நமக்குத் தேவையான சக்தியை கொடுக்கிறது.
இந்தக்காலத்தில் அறிவியல் ரீதியாக நமக்குத் தெரிந்த உணவுக்கட்டுப்பாடு மற்றும் சுவாசப்பயிர்ச்சி போன்றவை நமது முன்னோர்கள் எப்பொழுதோ நமக்குச் சொல்லிவைத்தும் எழுதிவைத்தும் இருக்கிறார்கள். அதை நாம் மூடநம்பிக்கை என்ற பெயரில் விலக்கி விடாமல் நமது வருங்காலச் சந்ததியினர்களுக்கும் கற்று கொடுத்து அவர்கள் ஆரோக்கியமாக வளரவும் நமது பண்பாட்டின் அருமைகளை உணர்ந்து பெருமைக்கொள்ளவும் பின்பற்றுவோம்.
ஐந்து கோஷங்களில் இரண்டை இந்தக் கட்டுரையில் பார்த்தோம். மனம், அறிவு, ஆன்மா ஆகிய மற்ற மூன்றை பின்னொரு கட்டுரையில் படிப்போம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நம் அகத்தில் அழகு சேர்த்திட மேலே விளக்கிய பயிற்சிகளைப் பின்பற்றி, அகமும் புறமும் அழுகுடன் நலம் காண வாழ்த்துகிறோம்.
-பிரபு
Awesome and very useful. Thanks for sharing it Prabu.