பால் உரொட்டி
இது பலகாரமாக உண்ணப்படும் பண்டம். உரொட்டி உணவு வகையானவை தமிழரிடையே பண்டைய காலத்தில் இருந்து உட்கொள்ளப்படும் இலகுவான மாச்சத்துப் (starch) பண்டம். முந்தைய காலத்தில் தீட்டிய அரிசிமாவில் இருந்து செய்யப்பட்டிருப்பினும், தற்காலத்தில் கோதுமை மாவு (wheat flour) சேர்த்து செய்யப்பட்டு வருகின்றது. கோதுமை மாவுப் பண்டங்கள் பல உட்கொள்ளல் எம்மவர்களுக்கு உடல் ஒவ்வாமையைத் தருவதையும் தற்காலத்தில் அவதானிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்தச் சமையல் முறையில் நாம் எமது மூதாதையர் வழிக்குச் செல்வோம்.
தேவையானவை
3 கோப்பை தீட்டிய வெள்ளையரிசி
1 கோப்பை கட்டித் தேங்காய்ப்பால்
¼ தேக்கரண்டி சமையல் சோடா (baking powder – இது வட அமெரிக்கத் தட்பவெப்ப நிலையில் அரிசிமாவு பொங்கி மிருதுவாக வர உதவும்)
உப்பு – தேவையான அளவு
பொறித்து எடுக்கச் சமையல் எண்ணெய்
செய்முறை
அரிசியை 2 மணித்தியாலங்கள் வரை குளிர் தண்ணீர்ல் ஊற வைக்கவும். அடுத்து நீர் வடித்து நன்றாகப் பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்தெடுத்த அரிசி மாவில் அரைவாசியை சிறு பொடியாகவே பக்கத்தில் வைத்து, மீதியை மேலும் சிறுதூளாக பசைபோன்று அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அரைத்த இரண்டு பகுதி மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டுச் சமையல் சோடா, உப்புச் சேர்த்து மசித்துப் பிணைந்து கொள்ளவும்.
அடுத்துத் தேங்காய்ப் பாலை விட்டுக் குழைத்து மாவு மிருதுவாகவும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரையும் அழுத்திப் பிசைந்து (knead) கொள்ளவும்.
உள்ளங்கையில் கோளைக்கல் அளவில் (size of marble) மாவை உருட்டி எடுத்துக் கையில் சிறு வளையத் தட்டுக்கள் போல அழுத்தவும். எண்ணெய் தடவிய வாழையிலை, அல்லது எண்ணெய் சார்ந்த இடுதல் காகித்தின் (parchment paper) மேல் வளையத் தட்டுக்களை வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சமையல் எண்ணெயைக் கொதிக்க வைத்து, சிறிய மாவுத் தட்டுக்களை ஒவ்வொன்றாக அவதானமாக இறக்கி உரொட்டி பொங்கி வர (puff-up), மற்றைய பக்கம் திருப்பி பொன்னிறமாகும் வரைப் பொறித்தெடுக்கவும். பால் ரொட்டியானது மிருதுவாகப் பொங்கி வருவது முக்கியம்.
இப்பொழுது சுவையான பால் உரொட்டி தயார்.
– யோகி அருமைநாயகம்