துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge)
உறைபனி ஏரியில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து வெறும் நீச்சலுடையுடன் நீருக்குள் பாய்ந்து கடும் குளிரில் நீந்துவதா? யார்தான் இப்படிச் செய்வார்கள் என்று வெப்பவலயத் தக்கிணபூமியில் பிறந்த தமிழன் யோசிக்கக் கூடும். ஆனால் எமது மினசோட்டா மாநிலத்தில் வாழும் ஐரோப்பியச் சந்ததியினரில் சிலருக்கு இது பனிக்காலச் சாகசப் பொழுது போக்குப் போட்டி, கூத்துக் கும்மாளம் எனலாம்.
இந்தப் போட்டிகளும், கொண்டாட்டங்களும் உறைபனி அதிகமாக உள்ள மினசோட்டா மாநில ஏரிகளிலும், ஆறுகளிலும் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் நிகழ்வாகும். அமெரிக்காவிலும் கனடாவிலும் துருவக்கரடிக் குழுமியம் எனப்படும் கூட்டமும் உண்டு.
இந்தக் குழுமியம் 1920ம் ஆண்டில் தாபிக்கப்பட்டு இன்றுவரை, ஆயிரமாயிரம் உறுப்பினர்களுடன் குதூகலமாகப் பனிகாலத்தில் பொதுத்தொண்டுகளுக்காக நிதி சேகரிக்கும் வகையில் உறைபனி நீரில் தோய்தலை வீரமாக நடாத்தி வருகின்றனர்.
மினசோட்டாவில் துருவத் தோய்தல் (Polar Plunge) என்பது மினசோட்டா பாதுகாப்புத் தாபனங்களின் உறுப்பினர்களால் வருடாந்திர விசேட ஒலிம்பிக் போட்டிகளுக்காக நிதி திரட்டப்படும் ஒரு நிகழ்ச்சி. இந்த நிதி மினசோட்டா வாழ் உடல் நலமற்ற விசேட ஒலிம்பிக் போட்டியாளர்கள் பங்கு பெறுவதற்கான செலவுகளுக்குப் பாவிக்கப்படும்.
இந்த நிகழ்வுகள் வழக்கமாக சனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை ஏறத்தாழ 20 உறைபனி ஏரிகளில் நடைபெறும். இந்த நிகழ்வுகளில் வெறும் உடலில் உறைந்த நீருக்குள் குதிக்கும் போட்டிகள் வைக்கப்படும்.
உறைபனியையும் பொருட்படுத்தாத வீரமிக்க தமிழன் தமிழச்சியாக இருந்தால் நீங்களும் இந்தப் போட்டிகள் பங்கு பெற்று நிதி திரட்டும் ல். முயற்சிக்கு உதவலாம்.
தொடர்புகளுக்கு:
Special Olympics Minnesota
Attn: Polar Plunge / participant’s name
100 Washington Avenue South
Suite 550
Minneapolis, MN 55401
நீங்கள் கொடுக்கும் தொகைக்கு நீங்கள் பொதுத்தொண்டு (Charity) வருமான வரிச்சலுகைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
Tax ID/EIN number is 41-1228157
தொகுப்பு: யோகி அருமைநாயகம்
படங்கள்: – இராஜேஷ் கோவிந்தராஜ்
தெரியாம போச்சே!