பழமொழிகளும் மரபுத் தொடர்களும்
மொழி என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டு நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் இயல்புடையது. தலைமுறை தலைமுறையாக இயற்கையுடன் பின்னிப் பிணைந்த நிலையில் அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பேசப்படும் அனுபவ மொழிகளின் தொகுப்பினை நாம் பழமொழிகள் என்று அழைக்கிறோம். அதுபோல தொன்று தொட்டு மரபு பிறழாமல் ஒரு பண்பாட்டினரின் நடைமுறை வாழ்வியலில் உள்ள சொற்களின் திரட்சியை மரபுத் தொடர்கள் என்கிறோம். சிலர் இவை இரண்டுக்குமான வேறுபாட்டை உணரத் தவறுகின்றனர். சிலரோ பழமொழிகள் மற்றும் மரபுத் தொடர்கள் என்பன வழக்கிழந்துவிட்ட மொழிகள், எனவே அவை பற்றிய பேச்சு எதற்கு என விலகி நிற்கின்றனர்.
பழமொழிகள் அதிகமான அளவில் கிராமப் புறங்களில் கீழ்த்தட்டு நிலையில் உள்ள மக்களாலேயே பேசப் படுவதாகவும் படித்த மேல்தட்டு வர்க்கத்தினர் பழமொழிகளை வேண்டா வெறுப்பாக விலக்கி விடுவதாகவும் குறையுண்டு.
ஆங்கிலம், ஃபிரெஞ்சு போன்ற மொழிகளிலும் பழமொழிகள் உண்டு. ஆனால் எம்மொழியிலும் பழமொழிக்கென்று ஒரு தனி நூல் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழில் பழமொழிக்கென்று நூல்கள் உள்ளன. அவற்றுள் பழமொழி நானூறு, பழமொழி விளக்கம் ஆகியன பழமொழிக்கேன்றே தனித்துவமான நூல்கள். பழமொழி விளக்கம் என்பதைத் தண்டலையார் சதகம் என்றும் அழைப்பர்.
தொல்காப்பியத்தில் பழமொழியை ‘முதுமொழி’ என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
“அங்கதம் முதுசொலோடு ”
(தொல்.பொருள்.செய்:79)
என்று இம்முதுமொழிக்குரிய இலக்கணத்தைத் தொல்காப்பியர் வகுத்தும், தொகுத்தும் உரைத்தார்..
“நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது முதலிய முதுமொழி யென்ப “ (தொல்.பொருள்.செய்:177) |
என்ற தொப்காப்பியரின் பாவில்; ஒரு பழமொழியானது கூர்மையோடு திட்ப நுட்பம் உடையதாய் இருத்தல் வேண்டும் எனவும் சுருங்கச் சொல்லிக் கருத்தை விளங்க வைக்க வேண்டும் எனவும் எளிமையானதாக அமைந்து இருக்க வேண்டும் எனவும் குறித்த பொருள் ஒன்றினை வரையறுத்துக் கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் தொல்காப்பியர் பழமொழிக்கு வகுத்த இலக்கணங்கள், இன்று பழமொழிக்கு மேலைநாட்டார் கூறும் விளக்கத்தோடு பொருந்துகின்றன என்பதும் முக்கியமாக இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.
எனக்குச் சரியாக ஞாபகத்துக்கு வராத ஏதோ ஒரு தமிழ்ப் படத்தில் சத்தியராஜ் பாடுவதுபோல் ஒரு பாடல் இவ்வாறு தொடங்குகின்றது;
“நேற்றுப் பெஞ்ச மழையில் இன்னைக்கு முளைத்த காளான் என்னைப் பாத்து ஒரு கேள்வி கேட்டாளே ” இன்னொரு படத்தில்;
“ நான் உப்பு விக்கப் போனா மழை கொட்டு கொட்டென்று கொட்டுது … “
என்று ஒரு அருமையான பாடல் உண்டு. “அறிவாளி” என்று ஒரு படம் அதில் “ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்” என வருகிறது ஒரு இனிமையான பாடல். இரவின் மடியில் தவழ்ந்து வரும் இதயராகமாய், மனதுக்கு இதமான தாலாட்டாய், இனிமையான தமிழ்ப் பாடல்கள் அமைய பழமொழிகளும் காரணமாக அமைந்தன. இதேபோல் “வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ” எனத் தொடங்கும் ஒரு பாடல் அருமையான பல பழமொழிகளின் அடக்கமாக அமைவதை நாம் காண்கிறோம்.
தமிழில் நம் சான்றோர்களும், முன்னோர்களும் வழிவழியாகப் பொருள் பொதிந்த சொற்றொடர்கள் பலவற்றைப் பேச்சிலும் எழுத்திலும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். அச்சொற்களை வழிவழியாக வழங்கி வந்த முறையை “மரபுச் சொற்கள்’ (தொடர்கள்) என்று வழங்குவர். தமிழில் கணக்கற்ற மரபுச் சொற்கள் வழக்கில் இருக்கின்றன. வம்பு தும்பு, அமளி துமளி, ஏட்டிக்குப் போட்டி, ஆர அமர, இவ்வாறு நம் முன்னோர் பேசும் மரபுச் சொற்கள் ஏராளம்.
“றெக்கை கட்டிப் பறக்குதடா அண்ணாமல சைக்கிள்….” ஆகா என்ன ஒரு அருமையான மரபுத்தொடர் “ றெக்கை கட்டிப் பறத்தல்” என்றால் விரைவாக என்று பொருள் கொள்வர். “சிங்கம் போல சீறி வரான் செல்லப் பேராண்டி ….” எனத் தொடங்கும் பாடலும் துள்ளலுடன் கூடிய மரபுச் சொற்கள் நிறைந்த கலவையாக உள்ளது. எனவே தமிழர்களாகிய நாம் மேம் முன்னோர் வழிவந்த சொற்களை மரபு தவறிப் பேசுவதோ, எழுதுவதோ குற்றம் ஆகும். இத்தகைய பெருமைக்குரிய மரபுச் சொற்களையும் பழமொழிகளையும் அழியாமல் காப்பது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.
- ஊர்க்காரன் –