அழியும் மானுடம்
உயிரினம் அனைத்தும் ஒப்பிட்டு நோக்கின்
உயரினம் எம்மினமென ஓலமிடும் மானிடா!
தன்னினம் அழித்துத் தரித்திரம் சமைக்கும்
தனியினம் மனிதயினம் மட்டும் தானடா!
பழிக்குப் பழியெனப் பகைதனைத் தீர்த்து
பசியாறிப் புசித்திடும் முரட்டுக் கூட்டமடா!
விழிக்கு விழியென வீம்புடன் வாழ்ந்து
விடியலைத் தேடிடும் குருட்டுக் கும்பலடா!
பிஞ்சு உடலின் பஞ்சம் போக்க
புஞ்சை உலகும் கெஞ்சி வாடுதடா!
விஞ்சி நிற்கும் எஞ்சிய உலகும்
தஞ்சம் அளிக்க அஞ்சியே ஓடுதடா!
நிறத்தால் மதத்தால் பிரிவினைக் காட்டி
நிஜத்தில் மனதால் பிரிந்தே அலையுதடா!
உரிமை உடைமை எனக் குரலுயர்த்தி
உளச் சிறுமை கொண்டே தொலையுதடா!
பிறப்பால் கிடைத்த தோலினை வைத்து
பிறர்பால் செலுத்தும் அன்பினை அளக்குதடா!
மனதைப் பண்படுத்துவது மதமென மறந்து
மனிதரைப் புண்படுத்தி மமதை வளர்க்குதடா!
விண்ணில் துளிர்த்துப் பொழியும் மழையிலும்
மண்ணில் விழுமுன் பிரிவுகள் இல்லையடா!
கண்ணில் தோன்றாக் கடவுளரில் மட்டும்
எண்ணில் கொள்ளா வகைகள் பிரிக்குதடா!
தீராத இனநோய் தன்னில் புரையோடி
தீவிர வாதம் பிடித்து உழலுதடா!
உன்மதம் என்மதமென எல்லைகள் தீட்டி
உன்மத்தம் உக்கிரத்தில் ஏறித் திரியுதடா!
எமது எனும் சொல்லினை விடுத்து
நமது எனச் சொல்லிப் பழகுமோடா?
தீவிரவாத இம்சைகளை வேரோடு எரித்து
தீர்க்கமாய் அறவழியில் தேர்ந்தே மூழ்குமோடா?
-ரவிக்குமார்-