நேர்மைக் காதல்
கன்னியிவளைக் காதலிக்கும் வேளையிலே
கண்களிரண்டிருந்தும் காட்சியிலாக் குருடனாயிருந்தேன்
கண்ணொத்த கன்னியவள் காதலினால்
கருத்தொருமித்துக் கண்களாயிருப்பாளென்ற கற்பனையால்.
அகம்புறமென அறுபதுக்குமேல் செய்யுளறிந்தும்
அறிவிலியாய் இருப்பதே அவளின்கவனமென
அமைதியாய் வாழ்ந்திருந்தேன் அந்நாளில்
அணங்கவளின் கடைப்பார்வை என்மேல்விழுமென…
விரைந்து படித்தறிந்து தேர்வுதனில்
விழுக்காடு பலவெடுக்கும் முயற்சிதனில்
விழுந்துவிடாது இருக்கும் நம்பிக்கையிருப்பினும்
வித்தகத்தி விழியதனில் வீழ்ந்துகிடந்தேன்.
தேடித்தேடி நானெடுத்த நன்முத்து
தேரோடும் தெருவினிலே நூற்றருபது
தேகங்கள் சூழ்ந்திடும் போதினிலும்
தேவதை போலெனக்குத் தெரிந்தனளே…
தெருவினிலே நானாடிய ஆட்டமதில்
தெளிந்திடுமுன் விளைந்தந்தக் காயமதைத்
தெரிந்தவுடன் அவள்பட்ட பாடதனைத்
தெளிகையிலே உறுதியான ஒருகாதல்…
பாட்டது பயின்றிடப் பக்குவமாய்
பாட்டது பயிற்றுவிக்கும் பள்ளியதற்குப்
பாவையவள் வந்திடுவாள் எனநோக்கிப்
பார்வையினை முழுவதுமாய் வைத்திட்டேன்…
சங்கீத ஞானமது விளங்கிடாத
சலமனில்லாச் சிறுபிறவி என்னைக்கூடச்
சலங்கையொலி சங்கீதமாய்க் கேட்டிடச்
சங்கதி பலசொன்ன சரஸ்வதியவளே…..
வனப்பான எந்தனந்தக் காதலியோ
வருத்தமுற இல்லமதில் முடங்கையிலே
வளமான தோற்றத்தால் வதைத்தெனையே
வஞ்சிக்கு வந்தனங்கள் செய்வித்தனளே….
உலகம்பல சுற்றி உணர்ந்தபின்னும்
உண்மைபல கற்று இறுதியாக
உறவதன் உண்மை நிறம்
உறுதியாய்ப் புரிகையிலும் உழன்றிருப்பேன்…
கிழங்குபோல் கட்டுடல் கொண்டோருடனும்
கிறங்கிடும் காதலதும் எளிதுமாமே..
கிஞ்சித்தும் அழகிலாக் கிளத்தியுடனும்
கிளர்ந்திடுமோ இணையிலாக் காதலதுவே…..
கணையதுவாய்க் கேள்வியிது துளைத்திடவே
கலக்கமுற்றுக் கருத்தினைச் சற்றுக்
கவனமுடன் செலுத்திடவே உலகமுற்றும்
களங்கமில்லாக் காதலாய்த் திகழ்வது
உருவம் பார்த்து வருவதில்லையென
உறுதியாய்த் தெரியத் தொடங்க
உள்ளம் முற்றும் பெருமிதமெனும்
உணர்வால் நிறைந்ததெம் நேர்மைக்காதல் !!!
– வெ. மதுசூதனன்
Tags: love