\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தலையங்கம்

Heading_620x620வாசகப் பெருமக்களுக்கு அன்பான வணக்கங்கள் !

நம்மில் பலர் – குறிப்பாக கீழை நாடுகளில் – உழைக்கும் தோழர்களை இன்றும் பெருமளவில் சமமாக நடத்துவது இல்லையென்பதே கசப்பான உண்மை. பொதுவாக, நன்கு படித்து உலகம் “ஒய்ட் காலர்ட்” (White Collared) என்று குறிப்பிடும் மேல்தட்டு வேலைகளில் இருப்பவர்கள் உயர்வு என்றும், படிப்பறிவு தவிர்த்து உடலுழைப்பை முன்னிறுத்தி வாழ்க்கை நடத்தி “ப்ளூ காலர்ட்” (Blue Collared) என்று குறிப்பிடப்படும் தொழில்கள் புரியும் உழைப்பாளிகளைச் சற்றுத் தாழ்வு என்றும் கருதுவதே பலருக்கும் வழக்கமாகி விட்ட ஒன்றாகத் தோன்றுகிறது.

படிப்பறிவு என்பது ஒருவரை உலகம் அறிந்தவராக மாற்றுவதற்கும், உலக நடப்பு புரிந்தவராக்குவதற்கும் உறுதுணையாக இருக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் படிப்பறிவில்லாத ஒருவரை விட, நல்ல மனிதராக மாற்றுகிறதா என்றால் இல்லையென்பதே நாமனைவரும் ஏற்றுககொள்ளவேண்டிய  உண்மை. அப்படியிருக்கையில், உழைப்பாளிகளைக் காட்டிலும் படித்தவர்கள் மேம்பட்டவர்கள் என்ற மனப்போக்கு ஏன்?

உலகத் தொழிலாளர்களால் உலகுக்கு ஏற்படும் நன்மைகள் என நம்மால் பக்கம் பக்கமாக எழுத முடியும், பேசமுடியும்,. பாட்டுக்கள் பாட முடியும், உணர்ச்சிபூர்வமாக மேடையில் முழங்க முடியும். ஆனால் அவற்றையெல்லாம் விட சக மனிதனாக மனதளவில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே இன்றைய மி்க முக்கியமான தேவையாக உள்ளது. மனம் இதமாக இருப்பவனே மனிதன் என்பது அமிழ்தொத்த நம்மொழி நமக்குக் கற்றுக் கொடுக்கும் பண்பாகும். அதுபோன்ற பண்புடையவர்களாக மனிதரை மாற்றுவதற்காகத் தான் பல தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் தினம் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த இதழ் தங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், நாம் மே தினத்தை மிகவும் அருகில் நெருங்கியிருப்போம்.

”மே தினம்

உழைப்பவர் சீதனம்”

என்ற வாசகம் மிகவும் சக்தி வாய்ந்த வாசகமாக தமிழரின் நெஞ்சில் பதிந்த ஒன்று. இந்த வாசகத்தை வெறும் பேச்சில் மட்டும் வைத்துக் கொள்ளாமல், உண்மையாய் உணர்ந்து எந்தத் தொழில் புரிபவரையும், சக மனிதர் என்ற உணர்வில் மனதால், வாக்கால் செயலால் வேற்றுமையின்றி நடத்தும் பக்குவத்தை இந்த மொத்த மனித சமுதாயமும் பெறவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைத் தொழுது வணங்குவோம்.

வழக்கம் போல் எங்களின் இந்த மாத இணையதள வெளியீடும் பல கதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்ற படைப்புகளுடன் வெளிவந்துள்ளது. வழக்கம் போல அனைத்தையும் படித்துத் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கவும் என வேண்டிக்கொள்ளும்,

ஆசிரியர் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad