\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஜெயகாந்தன்

jesyakathan_620x620இரு வாரங்களுக்கு முன்னர், ஏப்ரல் 8 ஆம் திகதி, தமிழ் எழுத்துலகச் சூரியன் ஒன்று அஸ்தமித்தது. தமிழ் எழுத்துலகில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் பற்பல சூரியன்கள் ஒளிர்ந்து பிரகாசமுறச் செய்தன என்பது நாமறிந்ததே. எனினும், ஒவ்வொரு சூரியனுக்கும் ஒவ்வொரு விதமான ஒளிக்கிரணங்கள்  உண்டென்று , அதன் ஒளிக்கிரணங்களினால் அனுதினமும் மலர்ச்சியுறும் தாமரை போன்ற தமிழ் நெஞ்சங்களுக்கு அத்துபடி.   தனது நிலவுலகப் பயணத்தைச் சமீபத்தில் முடித்துக் கொண்ட, ஒப்பாரும் மிக்காருமற்ற, இன்னொரு ஒளிக்கிரணம், ஜே.கே. என்று சமகாலத்தவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட திரு. ஜெயகாந்தன் அவர்கள்.

இந்தியாவின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருது பெற்றவர். எழுத்துலகின் முதன்மை விருதான ஞான பீட விருதையும் பெற்றவர் மேலும் சாகித்ய அகாடமி விருதுக்கும் சொந்தமானவர்.  இவைதவிர இன்னும் பல விருதுகளைப் பெற்றவர் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன், 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 24 ஆம் நாள், அன்றைய மதராஸ் மாகாணத்திலிருந்த தென்னாற்காடு ஜில்லாவில் கடலூர் நகருக்கு அருகிலுள்ள மஞ்சக்குப்பம் என்ற கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை தண்டபாணிப் பிள்ளை, தாயார் மஹாலக்‌ஷ்மி அம்மாள். இளம் வயதிலேயே சுப்பிரமணிய பாரதியால் மிகவும் கவரப்பட்டு படிப்பில் நாட்டமில்லாதிருந்ததால் அவரது தந்தை அவரைக் கடுமையாகத் தண்டிக்க, அவர்களிருவருக்கும் பல பிணக்கங்கள் உருவாகத் தொடங்கின.

இருவருக்கிடையேயும் பேச்சு வார்த்தை இல்லாத நிலை தொடர்ந்தது. இவர் ஐந்தாம் வகுப்புடனேயே பள்ளிப்படிப்பினைத் தாமாகவே நிறுத்தினார். அதன் பின் வீட்டை விட்டு வெளியேறிச் சென்னைக்கு அருகிலுள்ள விழுப்புரத்தில் தனது மாமாவின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், படிப்பு தனது அரசியல் வேட்கையைத்  தடுத்துவிடுமென்பதே. கம்யூனிஸக் கொள்கையால் இளம் வயதில் பெரிதும் கவரப்பட்ட இவர், ப. ஜீவானந்தம் போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களால் எழுதுமாறு உற்சாகப்படுத்தப்பட்டார். இவரின் இளமைக்கால எழுத்துக்கள் பெரும்பாலும் இவர் சென்று வந்த கம்யூனிஸ்ட் அலுவலகத்தைச் சுற்றியிருந்த நடைபாதைகளில் வாழ்க்கை நடத்துபவர்களைப் பற்றியதாகவே அமைந்திருந்தது. பெரும்பாலும் கம்யூனிஸம் பேசும் பத்திரிகைகளில் மட்டுமே பிரசுரமானது. மிக விரைவிலேயே கம்யூனிஸம் பேசுபவர்களின் மத்தியிலே ஒரு பிரபலமான எழுத்தாளராக மாறினார்.

அவரின் முதல் கதை பிரசுரமானது “சௌபாக்கியவதி” என்ற ஒரு சிறு பத்திரிகையில் – பிரசுரிக்கப்பட்ட ஆண்டு 1952. அதன் பிறகு ஜனசக்தி, சரஸ்வதி, தாமரை, மனிதன் எனப் பல சிறிய பத்திரிகைகளுக்காக எழுதிக் கொண்டிருந்த அவர், 1960 களில் பிரசித்தி பெற்ற ஆனந்த விகடன் பத்திரிகையில் எழுதினார். இதனைத் தொடர்ந்து குமுதம், தினமணிக்கதிர் மற்றும் சில பிரசித்தி பெற்ற பத்திரிகைகள் இவரின் எழுத்துக்களைப் பிரசுரிக்கத் தொடங்கின.

நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதிய இவர், 35 நெடுங்கதைகள் (Novels) எழுதியுள்ளார். இவரின் நாவல்களில் சில திரைப்படங்களாகவும் வெளியாகியுள்ளது. இவரே தனது நாவல்களான “உன்னைப்போல் ஒருவன்”, “பாதை தெரியுது பார்” மற்றும் “யாருக்காக அழுதான்” ஆகிய மூன்றையும் திரைப்படங்களாக இயக்கியுள்ளார். வியாபார ரீதியாக இவை பெருமளவு வெற்றிப்படங்களாக அமையவில்லையெனினும், 1965 ஆம் ஆண்டு வெளியான ”உன்னைப் போல் ஒருவன்” அந்த ஆண்டுக்கான மூன்றாவது சிறந்த திரைப்படமாக ஜனாதிபதி விருதைப் பெற்றது.

இவரின் நாவல்களை அடிப்படையாக வைத்து வெளிவந்த “சில நேரங்களில் சில மனிதர்கள்”, “சினிமாவுக்குப் போன சித்தாளு” மற்றும் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” ஆகிய படங்கள் இவருக்குப் பெரும் புகழை வாங்கித் தந்தன. “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவல் இவருக்கு சாகித்ய அகாடமி விருதை வாங்கித் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது நாவல்கள் மற்றும் கதைகள், இந்தியத் தேசிய மொழி ஹிந்தி உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது.

சிறு வயதிலிருந்தே இவர் அரசியலில் பெருமளவு நாட்டம் கொண்டவராக இருந்தார். முதலில் கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு அந்தக் கட்சியுடன் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டிருந்தார். அதே சமயத்தில் நேருவின் சோஷலிஸத்தில் பெருமளவு நம்பிக்கை கொண்டவரான இவர், இந்திரா காந்தியின் தலைமையில் முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அன்றைய தி.மு.கழகத்தை தன் வாழ்நாளின் பெரும்பகுதி தீவிரமாக எதிர்த்தவர் இவர். அந்த தி.மு.க. வை விட்டு வெளியேறிய ஈ.வி.கே. சம்பத் அமைத்த “தமிழ் தேசியக் கட்சி”யில் சேர்ந்து சில காலம் தொண்டாற்றிய ஜெயகாந்தன், பின்னர்  ”இந்திய தேசியக் காங்கிரஸில்” தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பாலதண்டாயுதபாணி அவர்களின் மேடைப்பேச்சுக்களினால் ஈர்க்கப்பட்டே தான் அரசியலில் நுழைந்ததாகத் தனது சுய சரிதையிலே குறிப்பிட்டுள்ளார் ஜெயகாந்தன். காட்டாற்று வெள்ளமென மேடைப்பேச்சு புரியும் இவர், தனது மனதில் பட்டதைப் பேசுபவராக இருந்தார். அன்றைய தமிழகக் கட்சிகளில் பல, ஒரு குறிப்பிட்ட சாதியினரை உயர் சாதியெனப் பறையறிவித்து அவர்களுக்கு எதிராகப் பேசுவதே சிறந்தது என்ற எழுதப்படாத விதியைப் பின்பற்றி வருகையில், அந்தச் சமுதாயத்தின் பிரச்சினைகளை வெளிப்படையாக மேடையேறி முழங்கியவர் ஜெயகாந்தன். சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற, அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணாவின் மறைவையொட்டி நடந்த இரங்கல் கூட்டத்தில், அனைவரின் முன்னிலையிலும் அண்ணாவின் குறைகளை வெளிப்படையாகப் பேசியது இவர் தன் மனதில் பட்டதைத் தயங்காமல் பேசுபவர் என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்தது.

தனது மனதில்பட்டதை வெளிப்படையாகப் பேசக் கூடியவராக இருப்பினும், பழகுவதற்கு இனிமையானவர். பன்முகத் திறமை படைத்தவர். இவரை அறிந்தவர்கள் அனைவரும் இவரின் திறமை குறித்துப் பெருமளவு பாராட்டுபவர்களாகவே இருந்தனர். குறிப்பாக சமகாலத்து எழுத்துலக ஜாம்பவான்களான அசோகமித்திரன், வண்ணநிலவன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் கீழ்க்கண்டவாறு புகழ்கின்றனர்.

“ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்குச் சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து நீடிக்காமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்” – அசோகமித்திரன்.

“மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ஜெயகாந்தன் என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் தத்ரூபம் என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருக்கின்றன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான விஷயம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். ” – வண்ணநிலவன்

“பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பரிசு பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்படுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்.” – எஸ். ராமகிருஷ்ணன்

வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப் படிப்பு பெற்றவர், மற்றவர்களுக்காக ஜோடனையாகப் பேசாதவர், மனதில் பட்டதைப் பட்டெனச் சொல்பவர் என ஒருவரின் வளர்ச்சிக்குப் பெருமளவு தடையாக இருக்கும் பல குணாதிசியங்களைக் கொண்டிருந்தாலும், தமிழ் இலக்கிய உலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இடத்தைப் பிடித்த ஒரு சாதனையாளர் ஜெயகாந்தன் இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாதிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நிலவுலகு நீத்தார். அவரின் பூதவுடல் மறைந்தாலும், அவரின் புகழும், படைப்புகளும் உலகில் கடைசித் தமிழன் வாழும்வரை மறையாதிருக்கும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

– வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Rajesh Pillai says:

    Mr. Jayakanthan about foreign life
    நான் வெளி நாடுகளுக்குப் போனதில்லை. அன்னியர் வீட்டில் நுழைந்து பார்த்து, “அங்கே அது இருக்கிறது; இது இருக்கிறது, நம்மிடம் அதெல்லாம் இல்லையே…’ என்று, தம் வீட்டோடு ஒப்பிட்டு ஏங்கி, அங்கலாய்க்கும், அலையும் குணமே, வெளிநாடு சுற்றிப் பார்க்கும் பலரிடமும் நிறைந்திருப்பதாக, எனக்குத் தோன்றுகிறது.
    வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் செல்கின்றனர். எனக்கோ, நம் வீதிகளில் நடக்கும் வேடிக்கைகளே, இன்னும் பார்த்துத் தீரவில்லை. புதுமைகளை ரசிப்பது எனில், என்னைத் தேடி வரும் ஒவ்வொன்றுமே, புதுமையாக இருக்கின்றன. கற்றுக் கொள்வதற்காக எனில், என்னைச் சுற்றி இருக்கும் மிகக் குறுகிய வட்டத்தில் கூட, நான் காணவும், கற்கவும், ஏராளமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.
    ரஷ்ய எழுத்தாளர்களான கோகோல், புஷ்கின், தாஸ்தியேவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனீவ் ஆகியோரின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவர்கள் நேசித்த ருஷ்ய ஆத்மா மிக உயர்வாக இருந்தது. அதன் காரணமாகவே, ரஷ்யாவை காண, நான் ஒருமுறை இசைந்தேன்.
    நம் பெருமையை உலகு அறிவதற்காக, அதனால், உலகு பயன் உறுவதற்காக – ஒரு விவேகானந்தர் போல் நம்மால் போக முடியுமா?
    அல்லாமல், லண்டனில் இட்லி – சாம்பார், கும்பகோணம் வெற்றிலை – சீவல் கிடைப்பதைப் பற்றி, கதை அளந்து, ஜப்பானிய, “கீய்ஷா’ பெண்களைப் பார்த்து, “அப்பப்பா… அச்சச்சோ!’ என்று வாய் பிளந்து, ஆச்சரியப் படுவதற்கும் தானா போக வேண்டும்!
    சுங்க இலாகா சோதனை, வருமான வரி சர்ட்டிபிகேட், பாஸ்போர்ட், விசா, அறிமுகக் கடிதங்கள், இத்யாதி சங்கடங்களைத் தாங்கிக் கொண்டு, ஒரு சர்வதேச கைதி போல, இந்தச் சடங்குகளைச் சுமந்துகொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் ஏறியும், இறங்கியும், நான் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்று எனக்குத் தெரியும். நான் இருக்குமிடத்தில் தான், எனக்குச் சிறப்பு.
    எங்கும், எல்லாரும் சுதந்திரமாகத் திரியும் காலம் வரும். அப்போது, எல்லாருக்கும் இந்த மோகம் குறையும். எனக்கு, இப்போது இந்த மோகம் இல்லை
    — ஜெயகாந்தன் ஒரு கட்டுரையில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad