கோமகன்
சிவகங்கை மாவட்டம் சின்னாளப்பட்டி கிராமத்துப் பெரிய கோவில் பரபரத்துக் கொண்டிருந்தது. பூசாரி சுப்ரமணிய ஐயரும் அவரின் வளர்ப்பு மகன் மணிகண்டனும், சிவனுக்கும் அம்மைக்கும் அலங்காரம் செய்துக்கொண்டிருந்தனர். சுப்ரமணிய ஐயர் செய்கின்ற சந்தனகாப்பு அலங்காரம் சுத்துப்பட்டுப் பதினெட்டு கிராமத்திலும் பிரபலம். பதினெட்டு கிராமத்திலும் எல்லா கிராமத் திருவிழாக்களிலும் சுப்பிரமணிய ஐயரின் சுவாமி அலங்காரமே பேசும் பொருளாக இருக்கும். கடந்த இரண்டு வருடமாகத்தான் அவரின் வளர்ப்பு மகன் மணிகண்டனைக் கோவிலில் சுவாமி கைங்கரியங்களுக்கு அனுமதித்திருக்கின்றார்.
“மணி இத கவனமா பார்த்துச் சந்தனக்காப்பு அலங்காரம் எப்படிச் செய்யறதுனு கத்துக்கோ, சும்மா சந்தனத்தச் சாமி ஒடம்பு முழுசா பூசிவிட்டுட்டா அதுக்குப் பேர் சந்தனக்காப்பு இல்ல. சந்தனக்காப்புக்குச் சந்தனக்கட்டைய நாம இழைச்சிக் கொண்டு வரணும்.. கடையில வாங்குனா நல்லா வராது. இப்ப எல்லாம் கண்ட கருமாயத்த அதுல கலக்கறாங்க. அப்படி வாங்கி வந்து செஞ்சா நாம அலங்காரம் செய்யற சாமிக்கும் நல்லதல்ல, சாமி அபிஷேகத்துக்கப்புறம் அதக் குடிக்கிற மக்களுக்கும் நல்லதல்ல.
சந்தனக்காப்புல ரொம்ப முக்கியம் சாமிக்குக் கண்னு தொறக்கறதும், சாமி ஒடம்புக்கு பண்ற அலங்காரமும் தாண்டா மணி. கண்னு ரொம்பத் திருத்தமா வரணும். அது தான் சாமியோட அழகையே தூக்கிக் கொடுக்கும். சாமிகும்பிட வரவங்க மனசு பூராவும் சாமி மேலேயே இருக்கும் ,கோவிலுக்கு வந்த திருப்தி மனசு பூரா நெறஞ்சிருக்கும். சாமியோட உடம்புல ஜிகினாத் தாளை மெலிசு மெலிசா நீட்டமா வெட்டி பஞ்சகச்சமும் மடிசாரும் கட்டிருக்க மாதிரி ஒட்டணும். கருவறையில லைட்ட அனைச்சிட்டுத் தீபாராதனை காட்டும் போது சாமியோட உருவம் கற்பூர வெளிச்சத்துல அப்படியே பளபளக்கும் பாரு… தீபாராதனை காட்றத நிறுத்திட்டுப் போய் விபூதி கொடுக்க எனக்கே மனசு வராது. அந்தக் கண்கொள்ளாக் காட்சியப் பாக்கற சாமிகும்பிட வந்த ஜனங்க அப்படியே மெய்மறந்து நிக்கும். சாமிகும்பிட்டு அவுங்க நிதானத்துக்கு வந்தவுடனே நீ விபூதி கொடுக்கணும்”. இப்படி அவர் கடந்த இரண்டாண்டுகளாக மணிக்குப் பாலபாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
மணி அட்சரசுத்தமாகத் தொழிலைக் கற்றுக் கொண்டாலும் மனிதர்களை மதிப்பதில் மட்டும் சற்றுத் தடுமாற்றம் இருந்தது. எல்லாரும் சாமி சாமி என்று கூப்பிடுவதால் தன்னைச் சாமி அளவிற்கு உயர்வாக நினைத்து வருகின்ற பக்தர்களை ஒருமையில் அழைப்பதும் அவர்களை வேலையாள் மாதிரி நடத்துவதும் சுப்ரமணிய ஐயரின் கண்டிப்புக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஊர் பெரிய அம்பலம் மூன்று வருடங்களுக்குப் பின் இன்று கோவிலுக்கு வருவதாய்ச் சொல்லி இருக்கின்றார். பத்தாயிரம் பேர் நிக்கிற கூட்டத்திலேயும் அம்பலம் இருந்தால் கூட்டத்தில் குண்டூசி விழுகின்ற சத்தம் கேட்கும். இது அம்பலத்தின் மேல் ஊர் மக்களுக்கு இருக்கின்ற மரியாதை. கேட்டாலே உதவி செய்யாத இந்த நாட்களில் கேட்காமலே உதவி செய்கின்ற குனம் படைத்த மனிதர். அப்பேர்ப்பட்ட அம்பலம் கோவிலுக்கு வருவதால் சுப்ரமணிய ஐயர் சற்றே பதட்டத்திலிருந்தார். கொடுத்தே பழக்கப்பட்ட மனிதர். யாரிடமும் அவர்கள் பரம்பரையில் கைநீட்டி வாங்கியது இல்லை. சுப்ரமணிய ஐயர் சிறுவனாக இருக்கும் போது, அவருடைய தந்தையார் தன் உடன் பிறந்தோரால் சொத்தில் பங்கின்றியும் , மணியடித்துக் கைங்கரியம் செய்து பிழைப்பு நடத்த கோவில் எதுவும் ஒதுக்காமலும் ஏமாற்றப்பட்ட போது, சின்னாளப்பட்டிக்கு அழைத்துவந்து, அவர்கள் குடும்பத்தை இன்று வரை பாதுகாத்து வருவது பெரிய அம்பலத்தின் குடும்பமே.
அம்பலத்தின் கார் கோவிலின் வாசலுக்கு வந்தது தெரிந்தவுடன் , சாமிக்கு முன் உள்ள யாழிச் சிலையையும் கொடிமரத்தையும் தாண்டி ராஜகோபுர வாசலுக்கே சுப்ரமணிய ஐயர் ஓட்டமும் நடையுமாக சென்று வரவேற்றது மணிக்கு ஏனோ பிடிக்கவில்லை. பெரிய அம்பலத்தின் கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கிய அம்பலம் எளிமையாக வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை மற்றும் அங்கவஸ்திரம் தோளில் தொங்க இறங்கிய அம்பலத்தைப் பார்த்த ஊர் இளவட்டங்கள் இருவர் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். சுப்ரமணிய ஐயரைப் பார்த்து வணக்கம் தெரிவித்து அவருடன் குடும்ப நலன்களை விசாரித்துக் கொண்டே சிவன் சன்னதிக்கு வருவதற்கும், மணிகண்டன் கருவறை விளக்கை அணைத்துவிட்டு ஐந்து முக விளக்கை ஆராதனை செய்யும் போது உள்ளம் உருகி “ஊருக்கு எந்தக் குறையும் இல்லாமக் காப்பாத்து தொன்முகச் சாமியே” என்று அவர் வேண்டவும், “அம்பலமும் அவர் குடும்பமும் எந்தக் குறையும் இல்லாம் நீடோடி வாழணும்” என்று சுப்ரமணிய ஐயர் வேண்டவும் சற்று நேரம் எடுத்துக்கொண்டது. மணி பிறருக்கு விபூதி கொடுக்க ஆரம்பித்திருந்தான். கடவுளைத் தவிர எவரிடமும் கைநீட்டி எதுவுமே யாசிக்காத அம்பலம் கண்விழித்து விபூதியைத் தட்டிலிருந்து எடுத்து நெற்றியில் வைப்பதற்கும் , அவர் திருநீற்றுத் தட்டில் கை வைத்ததற்காகக் கோபப்பட்டு, தட்டை மேல்நோக்கி எரிந்து சாபம் கொடுப்பது போல் மணி வார்த்தைகளைக் கொட்டுவதற்கும், ஐயரின் கைவிரல்கள் மணியின் கன்னத்தில் பதிவதற்கும் இடைவெளி இல்லாதொரு தொடர் நிகழ்வாகவே நடந்திட அய்யர் மணியின் பிடரியைப் பிடித்து அம்பலத்தின் காலில் தள்ளி மன்னிப்புக் கோரச் சொல்லியும் அடங்காத ஆத்திரத்துடன் மணியை நோக்கி “பகவானே நமக்கு அம்பலத்தின் உருவுல தாண்டா படி அளக்கின்றார். நீ அவரை நிந்தித்தது அந்தக் கடவுளையே நிந்தித்ததுக்குச் சமம்” என்று சொல்லி முடித்துப் பெருமூச்சு வாங்கினார். இத்தனைக்கும் அம்பலம் புன்னகை மாறாமல், “விடுங்க ஐயரே சின்னப்பையன், விவரம் பத்தலை, போகப் போகப் புரிஞ்சிக்குவான்” எனச் சொல்லி , மணியை முதுகில் தட்டிக்கொடுத்து அம்மாள் சன்னதி நோக்கி நடக்க, அவரின் பெருந்தன்மையை நினைத்துச் சுப்ரமணி ஐயரும் அவர் மகனும் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டுக், கண்ணிர் மல்க வணங்கினர்.
-சத்யா-