இது கவியல்ல நிஜம்
விண்டுரைக்க வரவில்லை
முத்திரைக் கவி நானெழுதி
மூண்டெள முயலவில்லை
கொத்துக் கொத்தாய் எம்மவர்கள்
செத்து விழுந்தபோதும்
தத்துவங்கள் பேசியிங்கே
தரித்திரராய் வாழ்ந்திடுவோம்
மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து
மடிந்திடும் நிலைதான் கண்டும்
என்னுயிர் பிழைத்தல் வேண்டி
ஒதுங்கிநான் நிற்கக் கண்டு
முன்வாயிற் சொற்கள் சேர்ந்து
முரண்டு பிடித்தெனைக் கொல்ல
என்னுடல் நிமிர்ந்து நானும்
ஏற்றந்தான் காண்பதெப்போ
சாப்பாடு இன்றியங்கே
தமிழ்ச்சாதி சாகக்கண்டும்
காப்பீடு ஏதுமில்லாக்
காரியங்கள் நாங்கள் செய்து
ஏற்பாடு ஏதும் இன்றி
ஆர்ப்பரித்தே எழுந்திடாமல்
கூப்பாடு போட்டு இங்கே
கும்மாளம் போட்டிருந்தோம்
வில்லில் இருந்து வெளிப்பட்ட
அம்புபோலத் தமிழ்ச்
சொல்லில் வார்த்தெடுத்தென்
ஆத்திரத்தைக் கொட்டி நல்லாய்
கல்லில் வடித்த சித்திரம் போல்
கவியெழுதி வைத்திருக்க
நல்லில் சொற்கள் இவையென்று
நவின்றதனைத் தூற்றிடுவர்
வெட்டிப் போட்டு எங்கள்
தமிழ்ச்சாதி மரித்த போது
தட்டிக் கேட்டு அங்கே
தடுத்தவர் யாருமில்லை
கொட்டித் தீர்த்து எந்தன்
கவிவரியை நான்வடித்தால்
தட்டிக் கழித்த பின்னதனில்
அரசியல் வாடை என்பர்.
மனக்கோலம் போட்டு நல்லாய்
மாண்புடனே வாழ்ந்த போதும்
வனக்கோலம் பூண்ட பின்னர்
வாழ்ந்ததெல்லாம் இழந்தபோதும்
தினக்கூலி வேலை செய்து
உயிர் பிழைத்து வாழ்ந்த போதும்
மனப்பிரமை பிடித்து நாங்கள்
மண்டியிட்டுப் போகவில்லை
அநியாயம் கண்டு எந்தன்
பேணாமை கண்ணுதிர்த்தால்
இதுஞாயம் இல்லையென்றென்
கவிவரியைக் கொய்யநிற்பர்
எதுஞாயம் என்றெனக்கு
எதுவுமே தெரியாதா
புதுஞாயம் வேண்டாம் புவிமேலே
நானும் மானிடந்தான்
- தியா –