\n"; } ?>
Bottom Ad
Top Ad
banner ad

மினசோட்டா ஹிந்து மந்திர் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

HM_TAMNYR_003_620x443மினசோட்டா வாழ் தமிழர்களுக்கு இது கொஞ்சம் பிசியான வாரயிறுதி. ஆரம்பித்து வைத்தது, ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று மெபில் க்ரோவ் (Maplegrove) ஹிந்து மந்திரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்.

ஹிந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும், பொதுவாக அமெரிக்காவில் அனைத்துக் கடவுள்களுக்கும் அனைத்து இடங்களிலும் கோவில்கள் இருப்பதில்லை. ஈஸ்ட் கோஸ்ட் பகுதிகளை விதிவிலக்கு எனலாம். மற்ற பகுதிகளில் வெகு சொற்பமே. அந்த வகையில், மினசோட்டா இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள் எனலாம். பெரும்பாலான கடவுள்களின் பெரிய சிலைகள் கொண்ட கோவில் – மெபில் க்ரோவ் ஹிந்து மந்திர். அதனால், அனைத்து வித விழாக்களும் இங்கு தொடர்ந்து நடைபெறும். ஒரு முறை சென்று வந்தால், அனைத்துக் கடவுள்களின் தரிசனத்தையும் (நண்பரொருவர் பாணியில் சொல்வதென்றால், பஃபே முறையில்!!) பெற்றுவிட்டு வரலாம்.

HM_TAMNYR_004_620x620அந்த வகையில், மன்மத வருடப் பிறப்பை வரவேற்கும் விதமாக, ஏப்ரல் 11 ஆம் தேதி கோவிலில் விசேஷ பூஜைகளும், சுவையான மதிய உணவும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, வந்திருந்த தமிழர்களுக்குக் கொண்டாட்ட உணர்வைக் கொடுத்தது. அதுதானே விழாக்களின் நோக்கமும் கூட. இக்கோவிலில் தொடர்ச்சியாக இது நான்காவது வருட தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம்.

HM_TAMNYR_007_620x349மேல்மட்டத்தில் அமைந்திருக்கும் கோவிலில், முருகன், வள்ளி, தெய்வானை விக்ரகங்கள் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. விசேஷ வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ‘தமிழ்க் கடவுள்’ முருகனுக்குக் கந்த சஷ்டி கவசமும், பால் குட பூஜையும் நடத்தப்பட்டது. பிறகு, பூஜைகள் மதியம் 12 மணியளவில் முடிய, கீழ்மட்டத்தில் அமைந்திருக்கும் கூடத்தில் உணவுப் பரிமாறல் தொடங்கியது.

சிறப்பு உணவாகத் தமிழ் நாட்டுச் சுவையில் சாதத்துடன் சாம்பார், புளிக்குழம்பு போன்ற குழம்பு வகைகளும், உருளைக்கிழங்குப் பொரியல், கோஸ்-கேரட் பொரியல் போன்ற கூட்டு வகைகளும், தயிர் சாதம், சேமியாப் பாயாசத்துடன் பரிமாறப்பட்டது. எப்போதுமே, இந்தக் கோவில் சாம்பாருக்கு நான் ரசிகன்.

உணவுக்கூடத்திற்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ள அரங்கில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு, அப்பொழுதே தொடங்கிவிட்டது. உணவு உண்ட குடும்பங்கள், அடுத்ததாக கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க, அரங்க இருக்கைகளை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கினர்.

HM_TAMNYR_001_620x620 HM_TAMNYR_002_620x620 HM_TAMNYR_012_620x620 HM_TAMNYR_011_620x349 HM_TAMNYR_010_620x620 HM_TAMNYR_009_620x620 HM_TAMNYR_008_620x620 HM_TAMNYR_006_620x620 HM_TAMNYR_005_620x620

கலை நிகழ்ச்சிகளுக்கு ஐந்து டாலர் நுழைவுக் கட்டணமாக வைத்திருந்தாலும், டிக்கெட் பரிசோதனை கெடுபிடிகள் ஏதும் இல்லாமல், தாராளமாக அனைவரையும் அனுமதித்தனர். வசூலிக்கப்படும் அனைத்துக் கட்டணங்களும், கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் தகவலைக் கூறி, கூட்டத்தினரிடம் நுழைவுக்கட்டணம் அளிக்குமாறு வேண்டுகோள்கள் மட்டும் வைக்கப்பட்டது. இவுங்க ரொம்ப நல்லவங்க!!!

நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பே, வந்திருந்த கூட்டத்தை மகிழ்விக்கும் விதமாக, சில திரையிசைப் பாடல்கள் பாடப்பட்டன. கரோக்கியில் இளையராஜா பாடல்களின் (வெள்ளைப் புறா ஒன்று, வானிலே தேனிலா…) பின்னணி இசை ஒலிக்க, மினசோட்டா தமிழ்ப் பாடகர்கள் பாடினார்கள். இளையராஜா இசையையும், தமிழ் உணர்வையும் பிரிக்க முடியுமா? எந்த நேரத்திலும், உடனடியாகத் தமிழ்நாட்டுக்குச் சென்று வர எளிய வழி – கண்ணை மூடிக்கொண்டு இளையராஜா பாடல் கேட்பது தான்.

சிறிது நேரத்தில், அதாவது மதியம் இரண்டரை மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பள்ளிக்காலத்தில் தினமும் பாடும் பாடல். கல்லூரியில் பாடிய நினைவு இல்லை. பெங்களூரில் வேலை பார்த்த காலத்தில், வாய்ப்பே இல்லை. ஆனால், மினசோட்டா வந்த பிறகு, அடிக்கடி பாடுகிறேன். நல்லது. (ஒருவேளை தமிழகத் திரையரங்குகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் முறை மட்டும் இருந்திருந்தால், நானெல்லாம் கனவில் கூட முதலிலும் முடிவிலும் பாடியிருப்பேன்!!!)

அடுத்ததாக, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஒரு நிகழ்ச்சியைப்பற்றிக் கூறுவதற்காக திரு. சுவாமி பழனிச்சாமி அவர்கள் மேடையேறினார்கள். அவர் பேச்சில் இருந்து, அவர் பல வருடங்களாக அமெரிக்காவில், மினசோட்டாவில் கட்டிடப் பொறியாளராக இருப்பதை அறிய முடிந்து, இணையத்தில் அவர் நிறுவனத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அடேங்கப்பா! மினசோட்டாவின் பல முக்கியக் கட்டிடங்களில் அவர் பங்கு இருப்பதை அறிந்து, ஆச்சரியப்பட்டு, பிறகு, தமிழனாகப் பெருமைப்பட்டுக்கொண்டேன்.

அதன் பிறகு, கோவில் கமிட்டித் தலைவர் வாழ்த்துரையுடன், நிகழ்ச்சிகள் தொடங்கின. இம்மாதிரி நிகழ்ச்சிகளின் பலன் – நம்மூர் குழந்தைகள் நல்லதோ, கெட்டதோ, நம்மூர்க் கலாச்சாரத்தின் தொடர்பில் இருக்க வைப்பது. கலாச்சாரம் என்பது எதுவாகவும் இருக்கலாம். கடைபிடிக்கப்படும் நடைமுறை, நிகழ்த்தப்படும் கலை முறை என்று பார்த்தோமானால், அன்றைய கரகாட்டம், வில்லுப்பாட்டு முதல் இன்றைய டங்காமாரி, டண்டணக்கா வரை எனலாம். இவையனைத்தும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரதிபலித்தன.

முந்தைய பத்தியில், தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிச் சொன்னது போல், இந்த பரத நாட்டியத்தையும், தமிழ் நாட்டிலோ, இந்தியாவிலோ இருக்கும் வரை, ‘நான்’ அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. இப்போது, அதிகம் பார்க்கிறேன். நுட்பம் மெதுவாகப் புரிபடுகிறது. தில்லானாவெல்லாம் பார்ப்பதால், கூடிய சீக்கரம் சுப்புடு போல் விமர்சனம் செய்தாலும் செய்வேன்!!!

பட்டாம்பூச்சிகள் என்ற பெயரில் ஐந்து இளம் சிறார்கள், மாறுவேட நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் எம்ஜிஆர் வேடமணிந்து வந்த சுட்டி, படு அட்டகாசம் பண்ணியது. அவன் ஒரு நிமிடம் கூட சும்மா நிற்கவில்லை. வேஷ்டி கட்டிய இடுப்பை ஆட்டியவாறு அங்கும் இங்கும் நடப்பதும், அவ்வப்போது வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வம்பிழுப்பதுமாகத் தன்னிச்சையாக நன்றாக வேடிக்கை காட்டினான்.

இங்குள்ள குழந்தைகள் தமிழ் பேசுவது ஒரு அழகு. மற்ற அமெரிக்கக் குழந்தைகளுடன் உறவாடி பழகிய நாக்கு, அம்மாதிரி உச்சரிப்புடனேயே தமிழையும் பேசுவது, ஒருவித மழலை. அதே சமயம், தொடர் பயிற்சியால் அவற்றைத் திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை.

ஆனால், அவ்வாறு அனைவரும் திருத்துவதில்லை. உதாரணத்திற்கு, இன்று ‘ஐ’ படத்தில் வரும் ‘என்னோடு நீ இருந்தால்’ பாடலைப் பாடிய சிறுமி, அம்மாதிரியான உச்சரிப்பிலேயே அப்பாடலைப் பாடினாள். ஆனால், அது கொஞ்சம் கூட அப்பாடலைக் கெடுக்கவில்லை. நன்றாகவே இருந்தது. ஒருவேளை, அப்பாடலைப் பாடிய ஒரிஜினல் ‘தமிழ்’ பாடகர், அமெரிக்க உச்சரிப்பில் பாடியதால் இருக்கலாமோ?!!!

ஆட்டம் பாட்டத்துடன் கூடவே மெல்லிசையும் வல்லிசையும் மேடையில் வெளிப்பட்டது. மேடையில் மதுமிதா என்ற சிறுமி, கிட்டாரில் பழைய இளையராஜாவின் இசைத்துணுக்குகளை இசைக்க, நானும் என் மனைவியும் அது என்ன பாடல்? என்று யூகிப்பது சிறு விளையாட்டாக நிகழ்ந்தது. பிறகு, மினசோட்டா கலைக்குழு, பறை இசையை அதிரடியாக எழுப்பியது. ‘இது சாவுக்கான இசையல்ல, வாழ்வுக்கானது’ என்ற முழக்கம் புல்லரிக்க வைத்து, அரங்கில் கரகோஷத்தை எழுப்பியது.

பின்பு, “கவிப்பேரரசு கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது காதலா? தத்துவமா?” என்ற தலைப்பிலான பட்டிமன்றம், சொல்லின் செல்வி. உமையாள் முத்து அவர்கள் தலைமையில் நடைபெறத் தொடங்கியது. உமையாள் முத்து அவர்கள் 18 வருடங்களாக அமெரிக்காவில் இருக்கிறாராம். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும், பிற நாடுகளிலும், பட்டிமன்றம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சுமார் 6000 மேடைகளில் கலந்து கொண்டுள்ளாராம். பட்டிமன்றம் என்ற வடிவம் தமிழர்களுக்கான தனித்தன்மை கொண்டது. நாமறிந்த பிரபலங்கள் தவிர்த்த ஒருவர் தமிழகத்திற்கு வெளியே இவ்வளவு மேடைகளில் அதை நிகழ்த்திக்கொண்டு இருப்பது ஆச்சரியத்திற்குரியது மட்டுமல்ல, பாராட்டுக்குரியது.

அவர் தனக்கே உரிய வகையில், கண்ணதாசன் குறித்த தகவல்களுடன், அவர் இயற்றிய பாடல்கள் குறித்துப் பேசியது, முக்கியமாக நகைச்சுவையுடன் பேசியது, அந்தப் பட்டிமன்றத்தைச் சிறப்பாகக் கொண்டு சென்றது. அவருடன் பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்டு பேசிய உள்ளூர் ‘ராஜா’க்களும், ‘பாரதி’களும் தயக்கமின்றிக் கலகலப்பாக பேசினார்கள். கண்ணதாசனைப் பற்றி மட்டும் பேசாமல், அவ்வப்போது, கண்ணதாசனையே மறந்துவிட்டு, உள்வீட்டு விவகாரங்களைப் பேசிக்கொண்டிருந்தது, உள்ளூர் ‘கல கல’ சிற(ரி)ப்பு.

அனைத்தையும் விட, இந்த பட்டிமன்றத்தில் முக்கியப் பங்காற்றியது, அவ்வப்போது நேரத்தைச் சுட்டிக்காட்ட, மணி அடித்த குழு தான். பேச்சாளர்கள் பேசுவதற்கு, பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டு வந்திருக்க, அதற்கெல்லாம் சலுகை கொடுக்காமல், ‘டாண் டாண்’ என்று மணியடித்து, தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி, ஓவர் பேச்சுப் பேசும் பேச்சாளர்களை விரட்டிக்கொண்டிருந்தனர். ஹைலைட் என்னவென்றால், அவர்களிடம் நடுவரும் தப்ப முடியவில்லை!!!

குறைந்த நேரமே இருந்ததால், அனைவரும் சுருக்கமாகப் பேச, நடுவர் ‘ரொம்பவும்’ சிரமப்பட்டு, 15 நிமிடத்திற்குள் அவருடைய தீர்ப்புரையைக் கூறி பட்டிமன்றத்தை முடித்து வைத்தார். அதுவொரு பின்னவீனத்துவ பட்டிமன்றம். ஆம். முடிவில் நடுவரிடம் தீர்ப்பு என்னவென்று கேட்டதற்கு, ‘நான் பேசியவற்றில் இருந்து, நீங்களே அதை யூகியுங்கள்’ என்றாரே பாருங்கள்!!!

அவருடைய நீண்ட உரையைக் கேட்க முடியாமல் வருத்தப்பட்டவர்களுக்கு, அடுத்த நாள் ப்ளைமுத் நூலகத்தில் ‘தமிழ் இன்பம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கும் தகவலைக் கூறி சமாதானப்படுத்தினார்.

மாலை நேரமானதால், அச்சமயம் வெளியே தேனீரும், பக்கோடாவும் கிடைக்கப் பெற்ற தமிழ்ச் சமூகம், அதையும் ஒரு வாய் பார்த்தது.

உள்ளேயோ, ‘அவுங்க இவுங்க எவுங்க’ என்ற குழு, பிரபலங்களைப் போல் பேசுவது எப்படி என்று மிமிக்ரி கற்றுக் கொடுத்துக்கொண்டு இருந்தனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சிறு இசை நிகழ்ச்சியும் நடந்தது. முடிவில், நன்றியுரை எனப்படும் ‘ஓவுரை’ (அதாங்க, நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உதவியவர்களுக்கு ‘ஓ…’ போடச் சொல்லும் உரை) நடந்து முடிந்த போது, மணி ஆறரையாகியிருந்தது. காலை 9 மணியளவில் சித்திரைப் பொங்கலுடன் தொடங்கிய நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணிக்கு முடிவுற்றது.

மொத்தத்தில் நிகழ்ச்சிகள் அனைத்தும் மகிழ்ச்சி என்னும் ஒற்றைக் குறிக்கோளுடன் ரொம்பவும் லைட் ஹார்ட்டுடன் நடந்து முடிந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எமது வாழ்த்துக்கள். அதைப்போல், தமிழ் மக்கள் அனைவருக்கும் இப்புத்தாண்டு மகிழ்ச்சியை மட்டும் தருமாறு வேண்டுதல்களும் லைட் ஹார்ட்டுடன் எமது வாழ்த்துக்களும்.

  • தொகுப்பு மற்றும் படப்பிடிப்பு: சரவணக்குமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad