\n"; } ?>
Bottom Ad
Top Ad
banner ad

வாழையிலையும் 26 வகைகளும்

IMG_1185“கல்யாணச் சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் என்ற பாடல் “ஐம்பது ஆண்டுகளையும் கடந்து, இன்றும் நம்மிடையே பிரபலமாகவும் சுவை மாறாமலும் இருப்பதற்கு முக்கியக் காரணம், இந்தப் பாடலில் உணவை மையப்படுத்தி வரும் வரிகளும், காட்சிகளில் காண்பிக்கப்படும் உணவு வகைகளேயாகும். உணவிற்குத் திருவிழா எடுப்பது, பருவகாலத்திற்கு ஏற்றாற்போல்உணவை உண்பது, எதற்குப் பின் எதை உண்பது என்ற வரைமுறை வகுத்து , உணவே மருந்து என்று வாழ்ந்து, உணவைக் கொண்டாடிய சமூகம் நம் தமிழ்ச் சமூகம்,

 

நம்மில் பலருக்குப் பெரும்பாலும் வீட்டிலும், சிலநேரங்களில் உணவகங்களிலோ அல்லது நண்பர்கள் வீடுகளிலோ சாப்பிடுவது தான் இயல்பு. இவற்றுக்கெல்லாம் உச்சமாக இருப்பது விருந்து சாப்பாடு. விருந்து என்றவுடன் நமக்கு ஏற்படும் ஆர்வமும் உற்சாகமும் தனிதான். விருந்து சாப்பாட்டின் சுவைக்கு நிகர் விருந்து சாப்பாடு தான் . தமிழகத்தில் உள்ளவர்கள் கல்யாணம்,காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளில் விருந்து சாப்பாட்டைச் சுவைக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மூன்று வார விடுமுறையில் ஊருக்குச் செல்லும்போது தற்செயலாக அமையும் நிகழ்ச்சிகளில் விருந்தில் கலந்து கொள்கிறார்கள். அல்லது நிகழ்ச்சிகளை மையப்படுத்தி விடுமுறையை அமைத்துக்கொள்ளும் சிலர் மட்டுமே விருந்து சாப்பாட்டை ருசிக்க முடிகிறது . அவர்கள் முகப்புத்தகத்தில் பதிவு செய்யும் புகைப்படத்தைப்

பார்த்து எவ்வளவு நாளாச்சு இப்படிச் சாப்பிட்டு என்ற பெருமூச்சுடன் ‘எனக்கு ஒரு பார்சல்’ என்ற வழக்கமான மொக்க கமெண்டைப் பதிவு செய்யும் வாய்ப்பு மட்டுமே பலருக்குக் கிடைக்கின்றது.

 

நம் ஏக்கத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க , இங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும் என்ற சிந்தனை நம் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்திற்குத் தோன்ற, அதை அமுல்படுத்த பதினோரு பேர் கொண்ட குழு அமைத்து, இரகசியக் கூட்டங்கள் சில நடத்தி, “வாழையிலையில் அறுசுவை விருந்து -ஏப்ரல் 12” என்ற நல்ல செய்தியையும் அறிவித்தனர். விளம்பரத்தில் வந்த புகைப்படத்தைப் பார்த்தவுடன், உண்மையில் இவ்வளவு வகைகள் இருக்குமா இல்லை இது வெறும் விளம்பர யுக்தியா, உண்மையில் வாழையிலையா அல்லது அதைப் போன்ற காகித இலையா போன்ற சந்தேகங்கள் எழத்தான் செய்தது. ஒவ்வொரு உணவுக்கும் அந்த உணவு பிரபலமாக இருக்கும் ஊரின் பெயரைச் சேர்த்தது இந்த விளம்பரத்தின் சிறப்பம்சமாக அமைந்தது. புது வருட நாட்காட்டியில்(calendar) நம் பிறந்ததேதியை முதலில் பார்ப்பது போல், இந்த விளம்பரத்தில் அவரவர் ஊரின் பெயரைப் பார்த்து திருப்தி அடைந்தோம். விளம்பரப்படுத்திய ஒருசில நாட்களில் நண்பர்கள் மத்தியில் விருந்தைப் பற்றிய பேச்சுக்களும் அதற்கான எதிர்பார்ப்பும் வெளிப்படையாகத் தெரிந்தது.அதிகம் விளம்பரப்படுத்தாமலே, அனைத்து டிக்கெட்டுக்களையும் விற்று, ஹவுஸ்புல் போர்டையும் மாட்டிவிட்டனர் நம் சங்கத்தினர்.

 

மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஏப்ரல் 12 ஆம் தேதியும் வந்தது. ஒரு திருவிழாவிற்குக் கிளம்பும் அதே உற்சாகத்துடன் காலை உணவிற்கு விடுமுறை அளித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை குளியல் என்ற அதிசயத்தையும் முடித்து விட்டு , அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சற்று முன்னதாகவே கிளம்பும் நாங்கள் அன்றும் சற்று முன்னதாகவே நண்பர்களுடன் விருந்து மண்டபத்திற்குக் கிளம்பினோம். வாகனம் நிறுத்த இடம்கிடைக்காமல் சற்றுத்தள்ளி நிறுத்தியவுடன், ‘என்னடா இவ்ளோ கூட்டம்?’ என நண்பன் கேட்க, ‘வா பாக்கலாம்’ என்று உள்ளே சென்றோம் .

 

எப்படியும் முதல் பந்தியில் இடம் கிடைக்கும் என்ற எங்கள் நம்பிக்கையை எங்கள் முன்னால் இருந்த வரிசையின் நீளம் உடைத்து, எப்படியும் இடம் கிடைக்கும் என்ற நிலைக்குத் தள்ளியது. சிறுவண்டுகளின் விளையாட்டுக்கள், நண்பர்களின் அரட்டை கச்சேரிகள், அங்குக் கொஞ்சிவிளையாடிய எம்குல பெண்கள்… இவை அனைத்தும் தொடக்கத்திலேயே நம்மூரின் உணர்வை ஏற்படுத்தியது. 2 டிக்கெட் கிடைக்குமா என்ற கேள்விக்கு, இங்கு டிக்கெட் விற்பனைக்கு அல்ல என்று பலரைச் சிரித்த முகத்துடன் திருப்பி அனுப்பிக்கொண்டு இருந்த நண்பரின் பொறுமையைப் பாராட்டியே ஆகணும். ‘10 டிக்கெட் வாங்கிப் பிளாக்ல வித்திருக்கலாம்’ என்று கமெண்ட் அடிக்கும் அளவிற்கு டிக்கெட் கிடைக்காமல் கூட்டம் திரும்பிப் போய்க்கொண்டிருந்தது.

 

‘சங்கமம்’ நிகழ்ச்சியைப் போன்று இங்கேயும் அமைந்திருந்த டீக்கடை பலரையும் ரசிக்க வைத்தது. டீ கிடைக்குமா என்ற எட்டிப் பார்த்தால், அங்கே மல்லிகைப் பூ விற்றுக் கொண்டு இருந்தார்கள். உலகத்திலேயே பூ விற்ற டீக்கடை என்ற சாதனையும் அங்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் பயனாக அங்கிருந்த பெண்களின் கூந்தலில் மல்லிகை வாசம் வீசியது. ‘இது மதுர மல்லி’, அதான் இவ்ளோ வாசம் என்று போகிறபோக்கில் ஒரு வார்த்தையைச் சொல்லி, தன் ஊரின் பெருமையைப் பதிவு செய்தார் முகம் அறியாத நண்பர் ஒருவர்.

 

வரிசையில் நின்றுகொண்டு இருந்த சிலபேரிடம் எந்த வகை உணவு நல்லா இருக்கும் என்ற தற்செயலான பேச்சு ஒருகட்டத்தில் எந்த மாவட்டம் சிறந்த மாவட்டம் என்ற விவாத கட்டத்தைக் கடந்து, இலை போட்டாச்சு என்ற வார்த்தையைக் கேட்டவுடன் முடிவுக்கும் வந்தது. உள்ளே சென்றதும் மேசைமீது காகிதத்தை விரித்து, உண்மையான வாழையிலை போட்டு, விளம்பரத்தில் வந்ததைப் போன்று அனைத்து வகைகளையும் நேர்த்தியாக வைத்து , தண்ணிர் பாட்டிலையும் வைத்து நம்மூர் விருந்தின் நேர்த்தியை அப்படியே இங்குக் கொண்டு வந்திருந்தனர். கிண்டலுடன் ‘இலை சைஸ் சின்னதா இருக்கு’, ‘சோத்துல கல்லு’ போன்ற பழைய கமெண்ட்டுகளையும் கேட்க முடிந்தது.

 

இலையை எதிர் எதிராகப் போட்டு, முகம் பார்த்துக்கொண்டே சாப்பிட்டது ஒரு புதிய அனுபவம், இதை யோசித்தவருக்கு ஒரு பெரிய ‘ஓ’ போட்டு தான் ஆகவேண்டும். மெல்லிசையாக இசைத்துக்கொண்டு இருந்த இளையராஜா பாடல் நம் செவிகளுக்கும் விருந்தாக அமைந்தது.

 

சாம்பார் சாம்பார், கொழம்பு கொழம்பு , ரசம் ரசம் என்று சாப்பிட்டுக் கொண்டு இருந்த எங்களுக்கு, கொஞ்சமும் சலிக்காமல் , சிரித்த முகத்துடன் சோற்றைப் பரிமாறிக் கொண்டே இருந்த ஒரு சகோதரி, ஒரு கட்டத்தில் சோறில் இருந்து பொறியல் பரிமாறுவதற்கு மாற்றிக் கொண்டது பொறுமையின் எல்லையைக் காட்டியது. தன்னார்வலர்களில் இருந்த நம் நண்பர்களில் சிலர் என்ன வேண்டும் என்று பாசத்துடன் கேட்டு உள்ளே சென்றவர்கள், எப்பொழுது திரும்பி வருவார்கள் என்று . நேரம் போவதே தெரியாமல், மற்றவர்கள் எழுந்து போவதையும் அறியாமல் கொண்ட கொள்கையில் உறுதியாகவே காத்திருந்தோம். . நல்லா சாப்பிட்டதுக்கு அடையாளமா எங்கயோ கேட்ட வரி ” வாயைத் திறந்தா, காக்கா கொத்தித் திங்கணும்”. அதுக்கும் மேலயும் சாப்பிட்டு விட்டு, எந்தரிக்க முடியாமல் அமர்ந்து இருந்த நொடிப் பொழுதில், ‘இப்பல்லாம் முன்ன மாதிரிச் சாப்ட முடியல’ என்ற நண்பனின் சொல்லுக்கு, ‘ஆமால’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதும் , சோறு பரிமாறிக் கொண்டு இருந்த நண்பரைக் கண்கள் தேடியது. தண்ணீர் வேண்டுமா என்று, எதிரே இருந்த நண்பரைக் கேட்க, ‘தண்ணி குடிக்குற அளவுக்கு இடம் இருந்தால் , மோர் சாதம் சாப்டு இருப்பன்ல’ என்ற பதிலோடு எங்கள் வேட்டையை முடித்தோம். இலையை எந்தப் பக்கம் மடிப்பது என்ற பல வருட சந்தேகத்தை ,அருகில் இருந்த மூத்த நண்பரிடம் கேட்க, மெட்ராஸ்காரங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்லிக்கொண்டே, பதிலையும் சொல்லி மேலும் ஒரு மாவட்டக் கலவரத்திற்கான திரியைக் கொளுத்தினார். வயிறும், மனசும் நிறைந்து இருந்ததாலும், உண்ட களைப்பினாலும் , பதில் ஏதும் சொல்லாமல் இலையை மடித்துவிட்டு எங்கள் கடமையை நிறைவுச் செய்தோம்.

 MNTSVIV001_620x825 MNTSVIV002_620x349 MNTSVIV003_620x415 MNTSVIV004__620x415 MNTSVIV005_620x415 MNTSVIV006_620x415 MNTSVIV007_620x415 MNTSVIV008_620x415 MNTSVIV009_620x415 MNTSVIV010_620x415 MNTSVIV011_620x415 MNTSVIV012_620x926 MNTSVIV013 MNTSVIV014_620x415 MNTSVIV015_620x415 MNTSVIV016_620x415 MNTSVIV017_620x1104 MNTSVIV018_620x415 MNTSVIV019_620x415 MNTSVIV020_620x415 MNTSVIV021_620x415 MNTSVIV022_620x415 MNTSVIV023_620x415 MNTSVIV024_620x415

இதுவரை பதிவுச் செய்த அனைத்தும், திரைக்கு முன்னால் எங்களுக்குக் கிடைத்த அனுபவமே . திரைக்குப் பின்னால் ஐம்பதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் கடின உழைப்பும், விழாக் குழுவின் நேர்த்தியான திட்டமும் ,தொடக்கம் முதல் இறுதி வரை, திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய விழாக் குழுவின் தொடர் உழைப்பும் தான், சிறப்பான விருந்தை நமக்கு அளித்தது. உணவையும் கடந்து, இனிமையான அனுபவத்தையும், மகழ்ச்சியான மதியப் பொழுதையும், அமெரிக்க வாழ்க்கையின் சிறந்த நினைவுகளில் ஒன்றாகிப் போன வாழையிலை விருந்தை, நமக்கு வழங்கிய மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் அனைத்து நண்பர்களுக்கும் , வாழ்த்துகளையும் மற்றும் நன்றிகளையும் உங்கள் அனைவரின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

-விஜய் பக்கிரி

Comments (4)

Trackback URL | Comments RSS Feed

  1. saravanan says:

    மீண்டும் நினைவுகளை கொண்டுவரும் சுவை கொண்ட நல்ல கட்டுரை விஜய் !!

  2. //நல்லா சாப்பிட்டதுக்கு அடையாளமா எங்கயோ கேட்ட வரி ” வாயைத் திறந்தா, காக்கா கொத்தித் திங்கணும்”. அதுக்கும் மேலயும் சாப்பிட்டு விட்டு, எந்தரிக்க முடியாமல் அமர்ந்து இருந்த நொடிப் பொழுதில், ‘இப்பல்லாம் முன்ன மாதிரிச் சாப்ட முடியல’ என்ற நண்பனின் சொல்லுக்கு, ‘ஆமால’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதும் , சோறு பரிமாறிக் கொண்டு இருந்த நண்பரைக் கண்கள் தேடியது. தண்ணீர் வேண்டுமா என்று, எதிரே இருந்த நண்பரைக் கேட்க, ‘தண்ணி குடிக்குற அளவுக்கு இடம் இருந்தால் , மோர் சாதம் சாப்டு இருப்பன்ல’ என்ற பதிலோடு எங்கள் வேட்டையை முடித்தோம்.//

    🙂

  3. Anonymous says:

    Indha varigal mattum edharkku 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Bottom Ad
Bottom Sml Ad