\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வாடகை சைக்கிள்

Filed in இலக்கியம், கதை by on April 27, 2015 0 Comments

cycle_rental_620x461நம் சிறுவயது மகிழ்ச்சியும்,  நினைவுகளுமான  கூட்டாஞ்சோறு, நொண்டி, கில்லி-தாண்டு, பல்லாங்குழி, நண்பர்களுடன் சேர்ந்து கட்டிய மண் கோவில், அதற்கு நடத்திய திருவிழா, இதன் வரிசையில் வாடகை சைக்கிளுக்கு முக்கிய இடம் உண்டு. சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் வேளையில், எனது பார்வையில் பட்டது வாடகை சைக்கிள், இதைப் படித்த நொடிப் பொழுதில் என் நினைவுகள் என் பால்ய பருவத்திற்குச் சென்றதை என்னால் உணர முடிந்தது. நாம் மறந்த, நம்மை விட்டு மறைந்த வாடகை சைக்கிள் பற்றிய நினைவு அலைகளே இந்தக் கட்டுரை.

எங்கள் பகுதியில், சைக்கிள் கடை நடத்தி வந்த, தங்கமணியை தவிர்த்து என்னால் எழுத இயலாது. நம் ஊர்களில் பலர், பல காரணங்களுக்காக முக்கிய  பிரமுகர்களாக வலம் வருவார்கள், சைக்கிள் கடை நடத்தி வந்த ஒரே காரணத்துக்காக, தங்கமணி எங்கள் பகுதி சிறுவண்டுகளுக்கு முக்கிய பிரமுகரானார். தங்கமணி சைக்கிள் கடைக்கென்றே செதுக்கிய, அனைத்து அம்சங்களும் பொருந்திய உருவத்தைக் கொண்டவர், அதன்பின் அந்த உருவ ஒற்றுமையை வேறு எந்த சைக்கிள் கடைக்காரரிடமும் நான் கண்டதில்லை. சைக்கிள் எடுக்கப் போகும்பொழுது, பல கேள்விகளைக் கேட்டு விட்டு, அதன்பின்னர் தருவாரா மாட்டாரா என்ற பீதியைக் கிளப்பும் சிறு மௌன இடைவெளியில், ஒரு இனம்புரியாத பதற்றத்தைக் கிளப்பியவர். அதன்பின் அந்த உணர்வை, அமெரிக்க விசாவிற்காக முதல்முறை சென்றபொழுது, தூதரக அதிகாரி அனைத்துக் கேள்விகளையும் கேட்டபின், அவரின் சிறு மௌன இடைவேளியில் மட்டும்தான் உணர முடிந்தது. பஞ்சர் ஆன சைக்கிள் டியூபில் காற்றை நிரப்பி, தண்ணீரில் முக்கி ஓட்டையைக் கண்டுபிடித்த அவர் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி.

பெரும்பாலான பள்ளி விடுமுறை நாட்கள், சைக்கிள் ஓட்டக் காத்திருப்பதிலோ, ஓட்டுவதிலோ அல்லது ஒட்டியபின் அன்றைய வீர சாகசங்களை நண்பர்களுடனும், வீட்டிலும் சொல்லி பெருமைபீத்திக் கொள்வதிலேயோ கழிந்தது. எங்கள் பகுதியில் உள்ள ஒரே ஒரு கடையில் இருந்த இரண்டே சைக்கிளிற்காகப் பல மணி நேரம் காத்திருந்து, அரை மணிநேரம் மட்டுமே ஓட்டி மகிழ்ந்த அந்தக் காலத்தை நினைக்கும் நொடியில், மனதும்,உதடும் ஒரே நேர்கோட்டில் புன்னகைக்கின்றன.

பிரேக் இல்லாத, மணியில்லாத, எப்பொழுது வெடிக்கும் என்றே தெரியாத, ஐந்து நிமிடத்திருக்கு ஒருமுறை சுழலும் செய்னுடன் (chain), என்ன நிறம் என்றே யாரும் கண்டுபிடிக்க இயலாத நிலையில் இருந்த வாடகை சைக்கிளில்  பயின்ற அனுபவத்தினால் தான் இன்று எந்த வாகனத்தையும் எளிதில் பயில முடிகின்றது. வாடகை சைக்கிள் ஓட்டுவதற்கு ஐம்பது பைசா, ஒரு ரூபாய்க்காக நாங்கள் பட்ட சிரமம், நடத்திய நாடகங்கள், வீட்டில் வாங்கிய அடிகள்  இவற்றை நினைத்தால், கால  இயந்திரத்தில் மீண்டும் பள்ளிப்  பருவத்திற்குச்  சென்று சில நாட்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பெரியமுள் மூணுல இருக்கு, ஒன்பதுல வரும் போது விட்ரணும் என்று கடைக்காரர் சொல்ல, ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கடைப்பக்கம் வந்து பெரியமுள் எங்கு இருக்கிறது என்று பார்த்துச் சென்ற நினைவுகளும் வந்து செல்கின்றன.  சைக்கிள் கடைக் கடிகாரத்தில் தான் நாங்கள் மணிபார்க்கவே  கற்றுக் கொண்டோம். கீழே விழாமல் சைக்கிள் கற்றுக்கொள்ள முடியாது என்ற அடிப்படை விதியை மீறாமல் தான், நாம் அனைவரும் சைக்கிள் பழகி இருப்போம். நம் கை, கால்களில் உள்ள வீரத் தழும்புகளே இதற்குச் சாட்சியாகவும், நினைவுப் பரிசாகவும் அமைந்து விட்டன. மற்றவர்களை விட எனக்கு இந்த வீரத் தழும்புகள் சற்றுக் குறைவு தான், இதற்கு நான் அதிகம் விழாமல்  எனக்கு சைக்கிள் சொல்லிக் கொடுத்த என் அக்காவே காரணம். மன்னர்களின் காலத்தில் நம் முன்னோர்கள் போரில் வீரத் தழும்புகள் பெற்றார்கள், நம் பெற்றோர் விவசாயம் மற்றும் காடுகளைச் சீரமைப்பதிலும், நமக்குச் சைக்கிள் மூலமாகவும் வீரத் தழும்புகள் கிடைத்தன. இதற்கும் வழி இன்றி விழித்துக் கொண்டிருகின்றது இன்றைய ஐபேட் தலைமுறை.

பெரும்பாலும் சைக்கிளில்  இருந்து கீழே விழுந்து ரத்தகாயம் ஏற்பட்டாலும், கீழ விழுந்த வலியை விட, மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற பதற்றத்தில், விழுந்த வேகத்தில் எழுந்து,எவ்வளவு வலித்தாலும், வலிக்காத மாதிரியே சிரித்துகொண்டே அந்த இடத்தை காலி செய்ததெல்லாம் இன்றைக்கும் பசுமையான நினைவுகள். அடிபட்ட காயத்தில், தமிழ்ப்பட பாதிப்பினால் அருகில் இருந்த மண்ணை அள்ளிப் போட்டுக் காயத்தை ஆற்றிய சமூகத்தில், இன்று மண்ணில் விளையாடினால் 23 கிருமிகள் வரும் என்று விளம்பரப்படுத்தி , சோப்பு விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் இன்றைய வியாபார காந்தங்கள் .

சைக்கிள் பழகும் வேலையில் தண்ணீர் தாகம் எடுத்தால், அருகில் உள்ள குழாயிலோ, டீக் கடையிலோ (அறிவிக்கப் படாத தண்ணீர்ப் பந்தலாகவே அன்றைய டீக் கடைகள் காட்சி அளித்தன) அல்லது அருகில் உள்ள வீட்டிலோ தண்ணீர் குடித்துத் தாகம் தீர்ப்போம்.

இன்றைய சூழலில், பள்ளிச் சிறார்கள்  நான்கு  சக்கரம் பொருத்திய சைக்கிளில், கீழே விழாமல் சைக்கிள் பழகிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்பொழுது, முதுகெலும்பு இல்லாத, பயம் நிறைந்த ஒரு தலைமுறை உருவாகிடுமோ என்ற அச்சமும் நம்மைத் தொற்றிக் கொள்கிறது.

இருவர் பயணித்தால் டயர் வெடித்துவிடும் அல்லது சைக்கிள் உடைந்து விடும் என்ற கடைகாரரின் பயத்தினால், பெரும்பாலும் வாடகை சைக்கிளில் பின்னிருக்கை இருக்காது. அந்த நிலையிலும் சக்கரத்தை இணைக்கும் நட்டுகளின் மேல் நின்று பயணம் செய்து அன்றைய வீரத்தை வெளிப்படுத்தினோம்.

சைக்கிள் பழகுவதில்,   டபுள்ஸ் ஒட்டிப் பழகுவது முக்கியமான கட்டம், பெரும்பாலும் நம்மை நம்பி யாரும் பின்னால் உட்காரவும்  மாட்டார்கள்.  அனேகமாக நண்பர்கள் வட்டாரத்திலும், எவ்வளவு அடித்தாலும் தாங்குகின்ற, தன்னைத் தானே வீரன் என்று நம்பி ஏமாந்து கொண்டு இருப்பன் இருந்தே தீருவான்.  இதுபோன்ற ஒரு பலிஆட்டை வைத்துதான் நாங்கள் அனைவரும்  டபுள்ஸ் பழகினோம், அந்த வேளையில் பலமுறை நாங்கள் சேர்ந்தே விழுந்து, பல  வீரப்புண்களைப் பரிசாக  வாரியிருக்கிறோம். எங்கள் எல்லோரையும் விட, எங்கள் பலி ஆடு தான் பல பரிசுகளை வாரி, எப்பொழுதும் வீரமகனாகவே  வலம் வந்து கொண்டுஇருந்தான். இதையெல்லாம் அசைபோடும் வேளையில் மனது லேசாகித்தான்  போகிறது.    ஓரளவுக்கு ஓட்டிப் பழகியபின், கைகளை விட்டு ஓட்டுவதும், போக்குவரத்துகள் அதிகம் உள்ள சாலைகளில் ஓட்டுவதும் தான், சைக்கிள் பழகும் களத்தின் நிறைவுப் பகுதி. பின்னர் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பதவி உயர்வு நமக்கு அளிக்கப்பட்டது. சிறுவர்க்கும், சிறுமியர்க்கும் ஒரே சைக்கிள் கொடுத்துச் சமத்துவத்தை நிலை நிறுத்தியது வாடகை சைக்கிள்.

வீட்டுக்கு உறவுக்காரர்கள் வந்தாலே சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தான் (உடனே பெரியவர்களுக்கு மகிழ்ச்சி இல்லையான்னு கேக்கக் கூடாது) அவர்களே சைக்கிளில் வந்தால் கூடுதல் மகிழ்ச்சி, அதுவும் BSA -SLR சைக்கிளில்  வந்தால் கொண்டாட்டம் தான். அன்றைய நாட்களில் BSA SLR சைக்கிள் வைத்திருந்தவர்களுக்குத் தனி மரியாதை உண்டு. வீட்டிற்கு வந்தவர்களை நச்சரித்து, அதற்கு வீட்டில் திட்டு வாங்கி, பின்னர் அவர்களின் சைக்கிளை  ஓட்டியதெல்லாம்   சுவாரசியம் நிறைந்தவை.

ஒரு கட்டத்தில் , வாடகை சைக்கிள்  எடுப்பது குறைந்து, அப்பாவின் பெரிய சைக்கிளில் குரங்குப் பெடல் அடித்து ஒட்டியது இன்றும் பசுமையாக நம் நினைவில் நிழலாடுகிறது.  எங்கள் நண்பர்களுக்குச்  சொந்த சைக்கிள் வாங்க வேண்டும் என்பதே  அன்றைய லட்சியமாக இருந்தது. அது கிடைத்த தருணத்தில், நங்கள் அடைந்த மகழ்ச்சி, பெரியவன் ஆகிவிட்டோம் என்ற மமதை, இலட்சியத்தை அடைந்து விட்டோம் என்ற தன்னிறைவு அடைந்தோம். அதன்பின் எந்த ஒரு நிகழ்விலும் எம்மால் அதை உணர முடியவில்லை.

என் அப்பா உட்பட, என் நண்பர்களின் அப்பாக்கள் பெரும்பாலும் பச்சை நிற ஹீரோ சைக்கிலே வைத்து இருந்தார்கள். அப்பாக்கள் வீட்டிற்கு அருகில் வந்தவுடன். மணி அடிப்பதும், அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன், அப்பா வந்துட்டார் என்று கத்திகொண்டே தெருவிற்கு ஓடியதும் பசுமை நினைவுகள். இன்றைக்கும் அப்பாவின் வயதையுடைய பெரியவர்கள் சைக்கிள் ஒட்டிக்கொண்டு செல்வதைப் பார்க்கும் பொழுது, அந்த நாட்களை மனது தூசி தட்டிப் பார்க்கின்றது. இவற்றையெல்லாம் நினைக்கும் பொழுது நம் கண்கள், நம்மை அறியாமல் சிறிது வேர்க்கத் தான் செய்கின்றது.

பெரும்பாலும் பொருளாதரத்தில் தன்னிறைவு பெறாத குடும்பங்கள் வாழ்ந்த எங்கள் பகுதியில், ஒரு வீட்டின் சிறுவன் வைத்திருந்த சொந்த சைக்கிள், அவர்கள் பணக்காரர்கள் என்ற அடையாளத்தைக் கொடுத்தது. பணப்புழக்கம் அதிகரித்த இன்றைய சூழலில், பொருளாதாரத்தில் வலுவடைந்த பல குடும்பங்கள், அதை வெளிபடுத்திக் கொள்வதற்காகவே, தேடிப்பிடித்துப் பொருள் வாங்கிக் குவிப்பது தான் இன்றைய சூழல், ஆனால் ஒரு சாதாரண சைக்கிள் அந்த அடையாளத்தைக் கொடுத்தது.

சைக்கிளின் தேவை குறைந்த காரணத்தினாலும்,பலர் சொந்த சைக்கிள் வாங்கும் நிலைக்கு  முன்னேறியதாலும், நாம் அறியாமலே நம்மை விட்டுப் பறந்து சென்ற சிட்டுக்குருவியைப் போல், வாடகை சைக்கிளும் நம்மை விட்டு மறைந்து விட்டது நாம் அறியாமலேயே.

வாடகை சைக்கிளை போல் நம் வாழ்வியலோடு கலந்து இருந்த பல சிறு வயது விளையாட்டுகளை நம் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, அவர்களைக் கம்ப்யூட்டர், மொபைல், டேபிலேட் போன்ற சிறைகளில் இருந்து  மீட்டெடுத்து, வலிமையான தலைமுறையை உருவாக்குவோம் என்ற நம்பிக்கையுடன்

-விஜய் பக்கிரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad