\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உத்தம வில்லன்

ஒரு ரசிகனின் பார்வை

”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே”

பாடலை அறியாத தமிழர்களே கிடையாது என்று சொல்லிவிடலாம். அந்தப் பாடல் காட்சியில் நடித்த குழந்தையை அறியாத தமிழ்த் திரைப்பட – ஏன் இந்தியத் திரைப்பட ரசிகர்களே இல்லை என்றும் கூறிவிடலாம். குறுகுறுத்த கண்களுடனும், துடிப்பான முகபாவங்களுடனும், வெடுக்கான வசனம் பேசும் தன்மையுடனும் “களத்தூர் கண்ணம்மா”வில் களம் புகுந்து, ஐம்பது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படத் துறையில் முடிசூடா மன்னனாய்த் திகழும் நடிகர் கமலஹாசனுக்கு அறிமுகம் தேவையில்லை. நடிக்காத பாத்திரமில்லை, காட்டாத பாவங்களில்லையென நடிகர் திலகத்தைத்தான் சொல்வார்கள் – அவரை மானசீக குருவாக, வழிகாட்டியாக, ஒரு தந்தை  ஸ்தானத்தில் உளமாறக் கொண்டாடும் சகலகலா வல்லவன் கமலஹாசன். திரையுலகில் அவரையும் விஞ்சுமளவுக்குப் பல துறைகளில் தேர்ச்சி பெற்றவர் என்பதையும் அனைவரும் ஏற்றுக் கொள்வர். அவ்வளவு பெருமையும், திறமையும், புகழும் கொண்ட கமலஹாசனின் ஆத்மார்த்த விசிறிகளில் நானும் ஒருவன் என்ற முன்னுரையுடன் இதனைத் தொடங்குகிறேன்.

இந்தக் கட்டுரை ”உத்தம வில்லன்” திரைப்படம் குறித்த எனது பார்வை. இதில் குறிப்பிடப்படும் அனைத்தும் என்னுடைய கருத்துக்கள் மட்டுமே.  இதனை ஒரு திரை விமரிசனம் என்றோ திறனாய்வு என்றோ கருதுவதில் எனக்கு ஒப்புதலில்லை. நான் மிகப்பெரிய திறமையாளராக மதிக்கும் ஒருவரிடம், என்னுடைய எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்த, அதனை மிஞ்சிய, அவ்வளவாக நிவர்த்தி செய்யத் தவறிய சில விஷயங்களைக் குறித்து ஒரு கருத்துப் பரிமாறலாகவே குறிப்பிட விரும்புகிறேன். அருமை, உலகின் அனைத்துத் திரைப்படங்களையும் மிஞ்சிய படம், கமலின் நடிப்பு அட்டகாசம், மகாநதியைவிட மேலான படம் என்ற பல விமரிசனங்களை இணையதளத்தில் பார்க்க முடியும், அவற்றிற்கு மத்தியில், எனக்கு ஏமாற்றங்களை அளித்த விஷயங்களைக் குறிப்பிடுவது சற்று ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கூட இருக்கக்கூடும். டெண்டுல்கர் சதத்தை ஒரு ரன்னில் தவறவிட்டால், நூறு மைலில் வீசப்படும் அந்தப் பந்துகளில் ஒரு பந்தைக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாத நாமும் அவரை உரிமையுடன் ஏசுவதே வழக்கம். நம் விமரிசனம் டெண்டுல்கரின் திறமையை மனதில் வைத்து இருக்கவேண்டுமேயொழிய, நம் தரத்தில் இருப்பதாகாது. இதே மனநிலையுடன் மேலே தொடர்ந்து படிக்கவும்.

அழகான தமிழ் வசனங்கள், படமாக்கப்பட்ட ஒவ்வொரு தினமும் பல மணிநேரங்கள் மெனக்கெட்டுப் பொறுமையாய்ப் போடப்பட்ட ஒப்பனைகள், அற்புதமான வில்லுப்பாட்டு, நெஞ்சை நெகிழ வைக்கும் பின்னணி இசை, ஒரு சில அற்புதமான பாடல்கள், வழக்கம் போல கமலஹாசனின் அனாயசமான நடிப்பு இவை படத்தின் சிறப்பம்சங்கள்.

”பத்தும் புகுந்து பிறந்து

வளர்ந்து பட்டாடை சுற்றி

முத்தும் பவளமும் பூண்டோடி

ஆடி முடிந்த பின்பு

செத்துக் கிடக்கும் பிணத்தருகே

இனிச் சாம் பிணங்கள்

கத்தும் கணக்கென்ன காண்

கயிலா புரிக் காளத்தியே!!!”

பட்டிணத்தாரின் அருமையான தத்துவார்த்தம் மிகுந்த கவிதை. படத்தில் ஒரு காமெடியான காட்சியில் பயன்படுத்தப்படுகிறது, கமலுக்குக் கண்டிப்பாகப் புரிந்த தத்துவம், அவர் பகுத்தறிவாக நினைத்துப் பேசும் நாத்திகத்தை, நாத்திகமாகக் காட்டிப் பகுத்தறிவு புகுத்திய தத்துவஞானி பட்டிணத்தார். அவரின் பாடலை உபயோகப்படுத்துவதில் இன்னும் சற்றுக் கவனம் செலுத்தியிருக்கலாம்.

“வில்லன்ங்கிற வார்த்தை ஆங்கில வார்த்தை ஆச்சே, ஆங்கில வார்த்தையில பேர் வைச்சா வரிச்சலுகை கிடைக்காதே” சினிமாவிலேயே வரும் வசனம் இது. பதிலாக, “மல்யுத்தம் செய்பவன் மல்லன், வில்லையெடுத்தவன் வில்லன், இந்தக் கதையின் நாயகன் வில்லுப்பாட்டுப் பாடுபவன்” என்று கூறப்படுகிறது கமல் கதாபாத்திரத்தாலேயே. மேலெழுந்தவாரியாகக் கேட்பதற்குச் சரியெனப்பட்டாலும், வில்லையெடுத்தவனுக்குப் பெயர் வில்லாளியேயன்றி வில்லன் அல்ல என்பது கமலுக்குத் தெரியாது என ஒத்துக் கொள்ள நான் தயாராக இல்லை. வரிச்சலுகை முடிவு செய்பவர்களின் தமிழறிவு குறித்து நமக்குத் தெரியாது. முதலில் இதுபோன்ற ஒரு விதி வைத்திருப்பதே சரியாயென்ற கேள்விக்குறி நமக்குண்டு. கோடிக்கோடியாய்ச் செலவளித்து, கோடிக்கோடியாய்ச் சம்பாதிக்கும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை வந்தாலும் வராவிட்டாலும் வில்லன் என்ற வார்த்தை தமிழ் வார்த்தை என்று ஒப்புக்கொள்ள நாம் தயாராக இல்லை.

இறந்து போனவரின் சடலத்தைச் சுமந்து கொண்டு செல்பவர்களின் பின்னால், சில திருநீற்றுப் பட்டையணிந்தவர்கள் ஓடிவந்து கொண்டே, “உத்தமன் கைலாயம் போறான், கைலாயம் போறான்” என்பதும், திருமண் கொண்டு நாமம் அணிந்த வேறுசிலர் ஓடி வந்துகொண்டு, “இல்லையில்லை, அவன் வைகுண்டத்துக்குத்தான் போறான்” என்று சொல்வதும் கமலுக்கு வேண்டுமானால் பகுத்தறிவின் வெளிப்பாடாகத் தெரியலாம். நமக்கு இரண்டு வழிமுறைகளின் தாத்பரியங்களையும், அவற்றின் கைலாயம் வைகுண்டம் பற்றிய தத்துவங்களையும், நம்பிக்கைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு மேலோட்டமான நாத்திகத்தனமாகவே படுகிறது.

காலைப் பற்றிக் கொண்ட முதலையிடமிருந்து தப்ப “நாராயணா” என்று அலறிய யானையையும், அதற்கு ரட்சிக்க முடிவு செய்து சக்கரம் ஏவி முதலையைக் கொன்ற நாராயணனும் முட்டாள் தனமான கற்பனையாகத் தெரியும் கண்களுக்கு, தன்னைக் கடிக்க வரும் ஒரு முதலையை இன்னொரு முதலை எங்கிருந்தோ வந்து கடித்துக் குதறுவதாகவும், அந்த இரண்டு முதலைகளும் சேர்ந்து அல்லது ஒன்றைக் கொன்றபின் இன்னொரு முதலையாவது வந்து உத்தமனைத் தாக்காததும் முட்டாள் தனமான கற்பனையாகத் தெரியவில்லையே என்பது நம் மனத்தை மிகவும் நெருடுகிறது.

காதைக் கடித்துத் துப்புவது, குதத்தில் பாம்பு கடிப்பது, க்ரௌச்சிங்க் டைகர் ஹிட்டன் டிராகன் போன்ற படங்களில் வருவது போல திடீரென பல்டி அடித்துச் சுவற்றில் ஏறி நிற்கும், பாய் கட் செய்த சரித்திர காலத்து இளவரசி, ”கால்தான் இருக்கே, அப்புறம் எப்படிப் பேய்” என்று கேள்வி கேட்டுவிட்டு, அதற்கு எந்தவிதமான விளக்கமுமில்லாமல் சுற்றி இருப்பவர்கள் விடாமல் பேயென நம்புவது, சாகாவரம் பெற்ற மிருத்துஞ்சயன் என்று தெருவில் போகிறவனை அழைத்து வந்துக் கோமாளித்தனம் செய்யும் கொடுங்கோல் மன்னன், சாப்பாட்டில் எதையோ கலந்ததால் புழக்கடைப் பக்கம் பல்லக்கில் ”அலுங்காமல் குலுங்காமல்” புலம்பிக் கொண்டே போகும் அறிவிலி, “முக்காலமும் உணர்வதென்ன, முக்காமலேயே வருகிறதே” எனப் புலம்புவது… இது போன்ற ரசனைக் குறைவான குழந்தைத் தனங்களுக்கு அளவே இல்லை. இவை போன்ற, சிந்தனைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இடங்களைக் கத்தரித்து எடுத்திருந்தால் ஒரு 45 நிமிடங்களுக்கு மேல் சேமித்திருக்கலாம், ரசிகர்களின் பொறுமையையும் சோதிக்காது இருந்திருக்கலாம்.

சரி இவையெல்லாம் சிறிய விஷயங்கள். பெரிய விஷயங்களைப் பார்க்கலாம். குடிகாரனாகச் சித்தரிக்கப்படும் புகழ் பெற்ற நடிகர், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெளியில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க, உள்ளே அறையில் வைத்தியம் செய்ய வரும் கவர்ச்சி மிகு இளம் டாக்டரான ஆண்ட்ரியாவுடன் சல்லாபம் செய்கிறார்.. இப்படியெல்லாம் தொடங்கும் இந்தக் கதாபாத்திரம், கிட்டத்தட்ட இருபது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த காதலியை இன்னும் நினைத்து உருகுவதாகப் பின் பகுதியில் காட்டப்படுவது சற்றும் மனதைத் தொடவில்லை.

பல வருடங்களுக்கு முன்னர் ஆத்மார்த்தமாக இருந்த காதலர்கள் பிரிந்தது கதாநாயகனின் தவறல்ல என்று நம்மை நம்ப வைப்பதற்காக இரண்டு கடிதங்கள். ஒன்றை உதவியாளராக வரும் பாஸ்கி படிக்கிறார், மற்றொன்றை கமலஹாசனே படிக்கின்றார். ஆயிரத்தித் தொள்ளாயிரத்து அறுபதிகளில் கையாண்ட உக்தி. இயக்குநர் ரமேஷ் அரவிந்த் – அவர் உண்மையிலேயே இயக்குநர் வேலைகளைச் செய்திருந்தால் – இன்னும் பயணப்பட வேண்டிய தூரம் பல மைல்கள் என்பதை மன வருத்தத்துடன் சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக, கமலுக்கே உரித்தான சற்று மேற்கத்திய பாணி தொனிக்கும் விதத்தில் எழுதப்பட்டிருக்கும் கடிதம். இருபது அல்லது இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னராக மேற்கத்திய பாணி – அதிலும் அமெரிக்க பாணி – தொனித்ததா என்பது நமது சிற்றறிவுக்கு எட்டாத விஷயம்.

திருமணம் செய்து கொண்டு, பதின்பருவத்தை எய்தியிருக்கும் பிள்ளையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ ஒரு காரணத்துக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மனைவி ஊர்வசியையும், அவருக்கு மருத்துவம் பார்க்கும் தனது செட்டப் ஆண்ட்ரியாவையும் ஒரே அறையில் வைத்துக் கொண்டிருக்கையில் மனதில் பழைய காதலியை நினைத்து உருகும் கமலஹாசனின் கதாபாத்திரத்தை விவரிக்கும் அளவுக்கு சாதாரண குடும்பஸ்தர்களான நமக்கு அனுபவம் அதிகமில்லை என்றுதான் கூற வேண்டும்.

வில்லுப் பாட்டு, சுப்பு ஆறுமுகம், இரண்யனின் கதை, நாசர் போன்ற திறமையான நடிகர்கள், சரித்திர காலக் காட்சிகள் – இப்படி பெருமைக்குரிய விஷயங்களாகப் பலவற்றைப் படம் பார்ப்பதற்கு முன்னரே கேள்விப்பட்டதில் நமது எதிர்பார்ப்பு வானளாவ உயர்ந்து நின்றது. ஆனால் அதை முழுவதும் நிவர்த்தி செய்யும் வகையில் படம் அமையவில்லை என்பதுதான் நமது தாழ்மையான கருத்து.

கமலின் அடுத்த படமாவது நம்மை முழுவதுமாகத் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கையெனும் வேதாளத்தைத் தொடர்ந்து தோளில் போட்டுக் கொண்டும் “பாபநாசம்” நோக்கி நடக்கும் ஆதர்ச ரசிகன்.

வெ. மதுசூதனன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad