உனக்கென உனக்கெனப் பிறந்தேனே…
தன்னை இடித்துத் தள்ளிவிட்டு ஓடிய ஒரு பெண்ணை, முறைத்துக்கொண்டிருந்தான் ஸ்ரீராம். நெற்றியில் சுருக்கம் விழ, ‘யாரிவள்? கொஞ்சம் கூட நாகரிகம் அறியாதவள்’ என்று மனதில் அப்பெண்ணைத் திட்டித் தீர்த்தான். அப்படி என்ன அவசரம் என்று அப்பெண் ஓடிய திசையைப் பார்க்கையில், அங்கோ தடுமாறியபடி சாலையைக் கடக்கக் காத்திருந்த ஒரு வயதான பெண்மணிக்கு, சாலையைக் கடக்க உதவிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக, பெயர் தெரியாத அப்பெண்ணிடம் மனதில் மன்னிப்பு வேண்டினான். ஒவ்வொரு சந்திப்பிலும், ஒவ்வொரு விதமாக ஸ்ரீராமின் மனதைக் கவர்ந்தாள். ‘இதற்கு பெயர்தான் காதலா?’ ஸ்ரீராமின் மனதில் எழுந்த வினா அது.
ஆனால், ஸ்ரீராமிற்குப் பார்த்தவுடன் காதலில் விழுவதில் எல்லாம் பெரும் நம்பிக்கை இல்லை. தன் ஆருயிர் நண்பனான இனியனின் காதல், தற்கொலையில் முடிந்ததில், மனம் கனத்து, காதலையும் பெண்களையும் வெறுத்தான். நேரம், காலம் தெரியாமல் எந்நேரமும் காதலியிடம் கைத்தொலைபேசியில் உருகிக்கொண்டிருக்கும் தன் நண்பர்களையும்; காதல் திரைப்படங்களை எடுத்து இளைஞர்களின் மனதில் இடம் பிடிக்கும் இயக்குனர்களையும் மனதில் சபிப்பான். “காதல்! காதல்! காதல்! வாழ்க்கையிலே இதை விட்டா வேற எதுவுமே இல்லையா?” என்று மனதில் ஒரு பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருந்தான். ஏனோ, பெயர் தெரியா அப்பெண், இவன் கனவுகளிலும் இம்சையித்தாள். அவனின் தூக்கமும் பசியும் அவன் கைக்கெட்டா தூரம் பயணம் மேற்கொண்டிருந்தது.
நாட்கள் கடந்தன. தான் ஓர் ஆசிரியர் என்பதை மறந்து, தன் காதலியின் கால்தடத்தைப் பின்பற்றினான் ஸ்ரீராம். அவளறியாமல், அவளால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யும் குணமும் அவளின் விளையாட்டு தனத்தையும் ரசித்தான். இனியும் நேரத்தை தாமதிக்ககூடாது, அவளிடம் உடனடியாக தன் காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று அவளின் விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினான். காதலியினால் பல பேரதிர்ச்சி காத்திருந்தது அவனுக்கு. பெயர் பாரதி என்றும் அவள் மாற்றுத்திரனாளி என்றும் அறிந்து கொண்டான். ஆரம்பப் பள்ளியில் மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி, மனம் நொந்து, படிப்பை முடித்துக்கொண்டாள் என்றும் பெற்றோர்கள் எவ்வளவு எடுத்து சொல்லியும், அவர்களின் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் பாரதியிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிந்துக்கொண்டான். ஆனால், பாரதிக்கு வீட்டை அழகுபடுத்துவதில் நாட்டம் அதிகம் என்பதைக் கண்டு கொண்டான் ஸ்ரீராம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாரதியைப் பின் தொடர்ந்தான்.
ஓர் உணவகத்தில், பணப்பை ஒன்று கீழே விழுந்திருப்பதைக் கண்டாள் பாரதி. அதை எடுத்து உரியவரிடம் கொடுத்தபோது, அவரோ அந்தப் பணப்பையிலிருந்த பணம் குறைவதாகச் சொல்லி, அவளையே குற்றவாளியாக நிறுத்தினார். கேட்கும் திறனையும் பேசும் திறனையும் பறித்த இறைவனை எண்ணி, அந்நேரத்தில் கண்ணீர் மட்டும்தான் விட முடிந்தது பாரதியால். இதைப் பார்த்த ஸ்ரீராம், மனம் கொந்தளித்து, உரியவரிடம் வந்து அவரின் குழந்தைதான் கைப்பையிலிருந்து பணப்பையை எடுத்தது என்றும் பிறகு அப்பணப் பையைக் கொண்டு விளையாடும்போது பணம் அக்குழந்தையின் கையிலும், பணப்பை கீழே விழுந்ததாகவும் கூறினான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த உரிமையாளர், குழந்தையின் கையில் பணம் இருப்பதைக்கண்டு, மன்னிப்பை வேண்டினார். தனக்கென்று ஒருவர் பரிந்து பேசியதில் உச்சி குளிர்ந்தாள். அதன் தாக்கத்தில் ஸ்ரீராம் மீது மதிப்புப் பெருகியது.
மாதங்கள் பறக்க, ஸ்ரீராமும் பாரதியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். ஒருவரை ஒருவர் பிடித்திருந்தும் ஏதோ ஒன்று தடுக்க, இருவரும் தங்கள் மனதைப் பரிமாறிக் கொள்ளவில்லை. ஸ்ரீராம், பாரதியைச் சைகைமொழியை முறைப்படி கற்றுக்கொள்ளத் தூண்ட, ஆரம்பத்தில் தயங்கியவள், அவனும் கற்றுக் கொள்ள போவதாகச் சொல்ல, பாரதியும் சம்மதித்தாள். பாரதி முழு நேரமாகச் சைகை மொழியைக் கற்றுக்கொள்ள, ஸ்ரீராமோ, வேலை நிமித்தமாக, பகுதி நேரமாகச் சைகை மொழியைக் கற்றுக்கொண்டான். மாதங்கள் கடந்து வருடங்களாக மாறிப்போயின. சைகைமொழித் தேர்ச்சியில் தங்கப் பதக்கத்தை வென்றாள் பாரதி. மேலும், ஸ்ரீராமின் உந்துதலில், வடிவமைப்புத் துறையிலும் பயிற்சியை மேற்கொள்ள கால் பதித்தாள். அதிலும் சாதித்து தங்கத்தையே வென்றாள். முப்பது வயதை நெருங்கையில் இரு தங்கப் பதக்கங்களைக் கையில் ஏந்தினாள் பாரதி.
பாரதியின் பட்டமளிப்பு விழா முடிவடையும் தருவாயில், சைகை மொழியின் மூலம் தன் மனதைத் திறந்தான் ஸ்ரீராம். ரோஜாப் பூங்கொத்துடனும் ஓர் அழகிய வைர மோதிரத்துடனும் அவளை எதிர்க்கொண்டான். ஸ்ரீராம் தன்னை விரும்புவதை ஏற்கனவே உணர்ந்திருந்த பாரதி, இன்று அவன் மனதைத் திறப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘என்ன தவறு செய்தேன்? ஏன் இறைவன் என்னை இப்படிப் படைத்தான்?’ என்பதை எண்ணி தினமும் மனம் உடைவேனே முன்பு. ஆனால், ஸ்ரீராமின் நட்பில், நான் வானில் இருக்கும் நட்சத்திரம் போல், ஒரு நாள் பிரகாசிப்பேன் என்று தெரிந்திருந்தால், என் கண்ணீரை வீணடித்திருக்கமாட்டேனே’ என்று மனதில் எண்ணிக்கொண்டாள் பாரதி. அவளின் துள்ளலுக்கு அளவே இல்லை. ஆசைப்பட்டது கைகளுக்கெட்டியதில் பெரும் மகிழ்ச்சி அவளுக்கு.
சைகை மொழியிலேயே, தானும் உன்னை உயிருக்குயிராய் நேசிக்கிறேன் என்பதை மிகவும் சந்தோஷத்துடன் வெளிப்படுத்தினாள் பாரதி. அவர்களின் காதலுக்கு, அவர்களின் குடும்பத்திலிருந்து எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை. பெற்றவர்களை மதிக்காமல், ஊர் சுற்றிக் கொண்டு, கூடா நட்புடன் சேர்ந்து வாழ்க்கையைச் சாக்கடையில் அர்ப்பணம் செய்யும் இளைஞருக்கிடையில், தான் காதலித்த பெண்ணிற்கு ‘தன்னம்பிக்கை’ எனும் விதையை அவளின் மனதில் விதைத்து, மற்றவர்களும் அவளை மதிக்க வேண்டும் என்றெண்ணி அவளுடனே பயணித்த ஸ்ரீராமை அனைவருக்கும் பிடித்துப்போனது. பெரியவர்களினால் நிச்சயிக்கப்பட்டு ஸ்ரீராம்-பாரதியின் திருமணம் சிறப்புடன் நடைப்பெற்றது. அனைவரின் மனதிலும் அளவில்லா சந்தோஷத்தை ஏற்படுத்தியது அத்திருமணம். ஸ்ரீராம், கல்யாணப் பரிசாக பாரதிக்கு ‘வடிவமைப்பு நிறுவனம்’ ஒன்றை பரிசளித்தான். ஆனந்த கண்ணீர் மட்டுமே அவளின் மணக்கோல சேலையை நனைத்தது.
கடவுளின் படைப்பில் எல்லோரும் திறமையானவர்களே. வாழ்க்கை என்பது ஓர் ஓட்டப்பந்தயம் மாதிரி, வெற்றி பெற்றால் அடுத்த ஓட்டத்திற்கு நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். தோல்வியைத் தழுவினால் மீண்டும் அவ்வோட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். ‘முயற்சி செய்’ என்று நம் தோளைத் தட்டிக்கொடுக்க ஒருவரிருந்தால், எத்தனை முறை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். இது ஸ்ரீராம் பாரதிக்குச் சொல்லிக்கொடுத்த தன்னம்பிக்கை மந்திரம். வாழ்க்கையில் எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை சாதித்துக் காட்டினாள் பாரதி.
– சிந்து பைரவி
உருக்கமான கதை…. கடைசி பத்தி அனைவரையும் உற்ச்சாகபடுத்தும் வார்த்தைகள்….
வாழ்க தமிழ் வளர்க தமிழர்
நன்றி நண்பரே…