எழுமின் இளைஞர்காள் !!
ஈராயிரம் ஆண்டென்பார் ஒருவர்
ஆறாயிரம் இருக்குமென்பார் இன்னொருவர்
தோராயமாய்ச் சொன்னால் பத்தாயிரத்திற்கும்
மேலென்று பகர்வார் மூன்றாமவர்
கணக்கிட முடியாத காலமென்பதால்
கல்தோன்றி மண் தோன்றுமுன்
தோன்றிய மூத்த மொழியிதெனக்
கணக்குச் சொல்வார் மற்றொருவர் !!
உலகிலுள்ள மூத்த மொழிகளில்
இதுவும் ஒன்றென்பர் சிலர்
உலகத்திலேயே மூத்த மொழியிதுவே
இறுதி முடிவென்பர் இன்னும்சிலர்
உலக மொழிகள் அனைத்திலும்
உன்னதம் இதுவென்பர் பலர்
உலக மொழிகள் அனைத்திற்கும்
உண்மையில் அன்னையென்பர் வேறுபலர் !!
தொன்மையானது இம்மொழி என்பதில்
இம்மியளவும் நமக்கிலை ஐயம்
மென்மையானதென்றும் மேன்மை மிகுதானதென்றும்
மொழிந்திடில் இல்லையென்பார் எவருமிலர்!!
இம்மைதாண்டி மறுமையிலும் உடன்வரும்
இனிமை மொழியிதுவாம் மறுப்பில்லை
செம்மையான இம்மொழியின் இன்றிருக்கும்
செழுமை வந்ததெதனால் என்றாய்வோம்!
பல்லாயிரம் ஆண்டுமுன்னே புலவர்பலர்
பண்பாடு வளர்த்திடப் பண்பாடிட
பல்லக்கில் பவனிவரும் புரவலரும்
பரிவுடனே காத்திட்ட பண்ணாயிரம் !!
அல்லாட்சி அளித்திடும் அரசர்க்கெல்லாம்
வில்லாட்சி வதைத்திடும் விசனமின்றி
சொல்லாட்சிக் கணைதொடுத்து, இடித்துரைத்து
நல்லாட்சி வழங்கச்செய்த நயங்கவிகள் !!
இரண்டாயிரம் ஆண்டுமுன்னே அவதரித்து
இகம்முழுதும் வாழுகின்ற மனிதகுலம்
இருள்நீங்கி அருள்பெற்றுத் தழைத்தோங்க
இணையில்லாக் குறளளித்த வள்ளுவனார் !!
ஊழ்வினை உருத்து வந்தூட்டி
வாழ்வினைப் பறித்த சிலம்பு
தாழ்வினை புரிந்தால் என்றும்
மாள்வினை விளையுமென்ற இராமகாதை
ஐம்பெரும் காப்பியங்களில் மற்றநான்கு
ஐயமனைத்தும் போக்கிடும் ஔவையமது
எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு
எளிதான பதினெண்கீழ்க் கணக்கு
முதலிடைக் கடைச் சங்கங்கள்
முத்தமிழில் படைத்திட்ட முத்துக்கள்
முன்னோர்கள் அயராது முனைப்புடனே
முழுவதுமாய்த் தந்திட்ட முல்லைப்பூக்கள்
என்று பிறந்தெங்கு வளர்ந்தது
என்று அறிந்திடா எந்தைமொழி
நின்று திடமாய்ப் பகைமோதி
வென்று முடித்ததன் சூத்திரம்
எண்ணற்ற பெருங்கவிகள் இயற்றிட்ட
கண்ணொத்த இலக்கிய அற்புதங்களென்ற
உண்மையது தெளிந்ததும் ஓய்வுறாது
திண்மையுடன் இளைஞர்நோக்கி யாசிக்கலானோம்!!
நேற்றுவரை இளமை கெடாமல்
காத்து வந்தது பழங்கவிகள் !
நாளைமுதல் சிறுமை வராமல்
வாழையடி வாழையாய் வளர்த்திட
இனிதான இலக்கியங்கள் மிகத்தெளிவாய்
இனிநாளும் படைத்திட உறுதியேற்றே
களம்புகுந்த காளைகளாய் கர்ஜித்தே
கிளம்பிடுக நீங்களென விடுத்திட்டோம்
அறைகூவல், செவிசாய்த்து இனிபல
மறைகளைச் செந்தமிழில் படைத்திடுங்கள்
இறைப்புகழோ இல்லையெனும் நாத்திகமோ
குறையில்லாப் புதுப்படைப்பே குறிக்கோளாகும் !!!
– வெ. மதுசூதனன்
அடுத்த தலைமுறைக்கு அடி எடுத்துக்கொடுத்த பாரதியையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்