குருவிச்சி ஆறு
இது எங்கள் கிராமத்தின் இதய நாடி.
மாரியிலே ஊர் மூழ்கும்போது வடிகாலாய்
கோடையிலே எம் பயிர் வாடும்போது
உயிர் ஊற்றாய்
மாரிச் சொத சொதப்பில் காலுன்ற முடியாமல்
கோடிவரை வரத் துடிக்கும்
கொடு விலங்குக் கூட்டத்தை
அகழியாய் விரிந்துநின்று
ஊர் காக்கும் காவலனாய்,
எம் ஊரின் முகமாய்.முகவரியாய்
குருவிச்சி அம்மா,எத்தனை அவதாரங்கள் ,
நீ விரித்த மடியில்தானே
மண்வீடு கட்டி விளையாடினோம்.
நீ ஒதுக்கிய மணலில்தானே
கல்வீடு கட்டிக் குடியேறினோம்.
தேம்ஸ் நதிக் கரையில் நின்று
கண்மூடி ரசித்திருக்கிறேன்.
காதலியின் கை பிடித்து கரை நீளம்
நடந்துபோன உணர்வு தெரிந்தது.
அமெரிக்காவின் மிசூசிப்பியில்
கால் நனைத்து நடந்திருக்கிறேன்.
கொலம்பஸ்ஸின் பெருமிதம் புரிந்தது.
உன் குளிர் நீரிலே முகம்புதைக்கும் நேரம்
மீண்டும் குழந்தையாகி
தாய் மடியில் தலைவைத்து அழும்
சுகம் கிடைத்தது.
தூர நின்று நினைக்கும்போது
படமாய் விரியும் உன் அழகுக் கோலம்
கிட்ட வந்து பார்த்ததும்
துயராய் வருத்தும் உன் சிதைவின் தாக்கம்.
உன் கையெட்டும் தூரம் தொட்டு
கண் எட்டும் தூரம்வரை
உயிரூட்டி,உணவூட்டி,உரமிட்டு
நீ ஆடையாய் நெய்து போட்ட காடுகளைத்தானே
எங்கள் ஊரே உடுத்து அழகு காட்டியது.
அவை அனைத்தும் அப்படியே காணாமல்போனது எப்படி?
துணி உருவும் துச்சாதனர்களுக்கு
விலை போகும் இன்றைய கண்ணன்களை
தண்டிப்பது யார்?
குருவிச்சி அம்மா மன்னித்துவிடு.
வெள்ளை வேட்டிக்கு கட்டியவனே கறை என்றால்
அடித்துத் துவைப்பதற்கு
அடுத்து ஒருவன் வரும்வரை.
–முல்லை சதா-