தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் !!
இந்த இதழின் தலையங்கம் எழுதப்படும் இத்தருணம், அறிவியல் மேதை, இந்தியத் திருநாட்டின் முன்னாள் அதிபர், பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் காலமான செய்தி கிடைக்கப் பெறுகிறோம். வாழ்க்கையின் மிகவும் அடிமட்டத்திலிருந்து, தன் சுய முயற்சி ஒன்றினால் மட்டுமே உலமகே வியக்கும் இடத்தை எட்டிப்பிடித்த மேதாவி அவர் என்பதை நாமனைவருமறிவோம். அவரின் வாழ்க்கையும் வார்த்தைகளும் மனித இனம் முழுவதிற்குமே ஒர் பெரிய வழிகாட்டுதலாக அமையும் என்றால் அதிலேதும் மிகைப்படுத்துதல் இருக்காது என நம்புகிறோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஒரு பெரியவர். இந்திய தேசத்தின் முதல் குடிமகன் என்ற நிலையை அடைந்த தினம், ஜனாதிபதி மாளிகையின் உள்ளே அடி எடுத்து வைத்த அவர் கையில் வைத்திருந்தது இரண்டு பெட்டிகள். அவைமுழுவதும் அவருக்குத் தேவையான துணிமணிகளும், புத்தகங்களும் மட்டுமே. ஐந்து வருடங்கள் சிறப்பாகத் தன் பணியைப் புரிந்து, பணிமுடிந்த தருணம் அந்த மாளிகையை விட்டு வெளியேறும் நாளிலும் அவர் கையிலிருந்தது அதே இரண்டு பெட்டிகள். சாதாரண வார்டுச் செயலாளர் பதவி வகிப்பவரே கோடிக்கோடியாய்ச் சேர்ப்பது சாதாரணச் செயலாகிவிட்ட இந்த இருபது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளில் இது போன்ற நேர்மையின் பிம்பமாக வாழ்ந்து முடித்த டாக்டர். கலாம் அவர்களை என்னவென்று புகழ்வது என்று நம் தமிழே தடுமாறுகிறது.
அத்தகைய பெருந்தகை நம் தமிழ் மண்ணில் அவதரித்தார் என்று நினைக்கையில் உள்ளம் உவகை அடைகிறது. அவருக்கு நாம் செலுத்தும் சரியான மரியாதை அவரின் சிந்தனையையும், சொற்களையும் உணர்ந்து பின்பற்றுவதேயன்றி வேறேதுமிருக்க இயலாது என முழுமையாக நம்புகிறோம்.
அவரின் பிரிவை நினைந்து உருகும் ஒவ்வொரு மனிதனுக்கும் பனிப்பூக்கள் குடும்பம் தமது ஆழ்ந்த அனுதாபங்களை உரித்தாக்குகிறது.
ஆசிரியர்.