தேன்குருவித் தோழமை
முன்குறிப்பு – கோடைகாலத்தில் எமது மினசோட்டா மாநிலத்தில் சுற்றாடல்களில் நமது பெருவிரல் பருமன் அளவே உள்ள வெட்கம் கொண்ட அழகாகவும் வேகமாகவும் பறக்கும் சின்னச் சிறிய தேன்குருவிகளை அவதானித்திருப்பீர்கள். இயற்கையில் விறுவிறுப்பான இந்தக் குட்டிக்குருவிகளுடன் நாம் வேண்டினால் சிநேகிதம் கொள்ளலாம் என்பதே இந்தக் கட்டுரை.
சிறகடிக்கும் சின்னப்பறவை
மினசோட்டா மாநிலவாசிகள் பலர் அன்றாடம் வசிப்பதற்கு ஒரு வீடும், விடுமுறை நாட்களைச் செலவிடுவதற்காக ஒரு வனக்குடிலும் (cabin) வைத்திருப்பதே பாரியவழக்கம். எனது நண்பன் ஒருவன் தனது காணிப் பொட்டலத்தில் கிராண்மறே (Grand Marais) என்னும் வடகிழக்கு பெரும் சுப்பீரியர் எரிக்கரையோரத்திலிருந்து சுமார் 25 மைல்கள் உட்புறத்தில் ஒரு வனக்குடில் கட்ட உதவிசெய்ய அழைத்திருந்தான். நானும் எனது கோடைக்கால விடுமுறையை வெளியே இயற்கை அன்னையின் எழிலை நுகர்ந்து திளைக்கலாம் என்று நினைத்துச் சென்றேன்.
வனக்குடில் கட்டும் வேலை, நகரங்களில் நாற்காலியில் அமர்ந்து கணினியைத் தட்டுவது போன்று எளிய காரியமில்லை ஜிம்மில் போய் செயற்கை ஓடுபாதையில் ஓடுவது போன்றும் எளிதில்லை. ஏங்கு Cedar மரப்பலகைகள் மற்றும் நீண்ட உருளை மரக்குற்றிகளை வெட்டி, தூக்கிச் சென்று, மரச்சுத்தியல்கள் கொண்டு தட்டிச் செய்யும் 6-10 மணி நேர வேலை. இந்த மரக்குற்றிகள் தோல்கள் அகற்றப்பட்ட பின் அடிவானச் செம்மஞ்சளைப் போன்று மஞ்சள் நிறமாகவும், கற்பூரம் போன்றதொரு வாசனை தருபவையாக இருக்கும்.
ஒரு காலையில் நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போது தேன்குருவி ஒன்று ‘விட்டென’ குடிலுக்கு அருகாமையில் உள்ள ஓக் Oak மரத்திலிருந்து சுற்றிச் சுற்றிப் பறந்தவாறு இருப்பதைக் கண்டேன். இந்தத் தேன்குருவிகள் அருகாமை ஏரிக்கரை, மற்றும் காட்டில் உள்ள பூக்களின் தேனையும் சிறு பூச்சிகளையும் உண்டு வாழ்வன..
இந்தச் சிறுகுருவி காற்றில் பின்செட்டை அடித்து என்னருகே, அந்தரத்தில் தொங்குவது போல நின்று, நான் செய்வதை அவதானித்தது. அப்போது எனக்கு எங்கோ ஒரு தடவை இயற்கையிலாளர் ஒருவர் எவ்வாறு தாம் தேன்குருவியொன்றின் தோழமை பெற்றார் என்று எழுதிய கட்டுரையை நூலகத்தில் வாசித்த ஞாபகம் வந்தது. தேன்குருவிகளைக் கவர வெல்லமும், தண்ணீரும் சேர்ந்த கலவையை கண்ணைக்கவரும் நிறமுள்ள ஏதனத்தில் (Bottle) நிரப்பி, குருவிகளின் அலகுகள் நுழையக் கூடிய அளவில் துவாரங்களை மூடியில் போட்டு விட்டால் குருவிகள் வரும் என்று கூறியிருந்தார். மேலும் சிவப்பு மஞ்சள் போன்று பூக்களின் நிறமுள்ள சருகை ribbon துணியைக் கட்டிவிட்டால் தேன்குருவிகள் விரைவில் வரும் என்றும் கட்டுரையில் எழுதப்பட்டிருந்ததாக ஞாபகம். மேலும் கூடிய அளவு ஆழ்ந்த பொறுமை இருந்தால் மட்டுமே தேன்குருவிகள் அருகில் வரும் தோழமையைப் பெறலாம். எனவே நான் பக்கத்தில் ஏதாவது சிறிய பாத்திரம் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்துத் தெரிந்தெடுத்துக் கொண்டேன்.
ஒரு சிறிய பிரச்சனை நாம் சூப்பீரியர் காட்டுக்கு அருகாமையில் காட்டுக்குடில் அமைத்துக் கொண்டிருந்தோம், அழகிய நிறமுள்ள சருகைத் துணிக்கு எங்கே போவது என்று தலையை சொறியவேண்டி ஆகியது. கடைசியில் பழைய வர்ணச் சித்திரக் கதைத் தொடர் செய்தித்தாளிலிருந்து சருகைக் கண்டெடுத்தேன் . இது நான் வாசித்த கட்டுரையின் படி இல்லாவிடினும் ஏறத்தாழ சரிக்கட்டிடலாம் என்று நினைத்துக் கொண்டேன்.
அடுத்து எனது சிறிய கண்ணாடிக் குவளையை glass bottle தலைகீழாக, ஒரு பக்கம் தாழ்வாக இருக்குமாறு பக்கத்தில் இருந்த கயிற்றில் கட்டினேன். இதைக் குடிலுக்குப் பக்கத்தில் தேன்குருவி வந்த, இலைகள் நிறைந்த அடர்த்தியான ஓக் மரக் கிளையில் கட்டிவிட்டேன்.
இதில் நேரம் செலவழித்ததால் அன்றைய நாள் குடில் கட்டும் வேலைகள் சில தாமதமாகின. காரணம், எனது ஆர்வம் எப்போது முதல் தேன்குருவி எனது கண்ணாடிக்கோளைக்கு வந்து வெல்ல நீரை அருந்தும் என்பதிலேயே இருந்தது. மாலை இரவாகியது சிறகடிக்கும் சத்தம் எதுவும் கேட்கவில்லை. சற்று ஏமாற்றம் அடைந்தாலும் நான் அடுத்தநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தவாறு தூங்கச் சென்றேன்.
அடுத்த நாள் மதியம் வெயில் நன்றாக வனக்காட்டு இலைகளை ஊடுருவி அடித்துக்கொண்டிருந்தது. நான் குடிலின் உள்ளே கட்டிட வேலைகளைச் செய்தாலும் ஒரு கண்ணை எனது வெல்ல நீர் தேன்குருவிப் பொறி மீதும் வைத்திருந்தேன். திடீரென விர் விர் என சிறிய செட்டைகள் அடிக்கும் ஒலியைக்கேட்டேன். நானும் பறவையைத் திகைப்பூட்டாமல் பார்ப்பதற்காக மெதுவாகப் பதுங்கிச் சென்று, தரையில் தவழ்ந்து, சிறிது சிறிதாக எழும்பி குடிலின் மரச் சன்னலூடே ஓக் மரக் கிளையை நோக்கிக் கண்ணைச் செலுத்தினேன். நான் பார்த்த காட்சி எனது இருதயத்தை சற்று வேகமாக படக் படக் என அடிக்க வைத்தது.
ஆகா வந்திட்டது எனது அருமைத் தேன்குருவி. அழகாக சிறகடித்து அந்தரத்தில் நேர்த்தியாகத் தொங்கியவாறு நான் வைத்த வெல்ல நீரைப் பருகத்தொடங்கியது . அதன் உடல் பருமனிலும் நீளமான சற்று வளைந்த சொண்டை வைத்து கண்ணாடிக் கோளையில் உறிஞ்சிக் குடித்தது. சிறிய காற்றுக் குமிழிகள் வந்ததும், வெல்ல நீர் சிறிது சிறிதாக குறைந்ததும் தேன்குருவி நீரை உட்கொள்ளுகிறது என்பதைத் திடமாக்கியது.
வெல்ல நீர் பருகிய சில நொடிகளிலேயே வந்த வேகத்தில் மீண்டது அந்தத் தேன்குருவி. அது தனது உற்றார் உறவினருக்கும் ஓக் மரத்துக்கு அருகாமையில் புதிய உணவகம் வந்துள்ளதைச் சொல்லப் போயிருக்கும் என்று எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன். சற்று நேரத்தில் மீண்டும் அந்த சிறு இறகுகளின் படபடப்புச் சத்தம் கேட்க நானும் தலையைத் திருப்பி சன்னலூடே வெளியே பார்த்தேன். ஓ இம்முறை எனது வெல்லநீர் வாடிக்கையாளர் என்னைக் கண்டு பயந்துவிட்டதோ என்னமோ! விருக்கென இலைசெடிகளுக்குள் சென்று மறைந்து விட்டது.
நானும் குடில் கட்ட மரத்துண்டை வெட்டும் வேலையில் அக்கறை காட்டினேன். சில நிமிடங்களில் செட்டைப் படபடப்பும் அத்துடன் சிறியக் குருவி ஒன்றின் குரலையும் கேட்டேன். இம்முறை மெதுவாகத் திரும்பி ஓக் மரக்கிளையைப் பார்த்தேன். நமது தேன்குருவி தனது சோடிக் குருவியையும் வெல்லநீர்க் கலத்திற்கு அழைத்து வந்திருந்தது.
.
தேன்குருவியைக் கவரும் எனது வெல்லநீர்ப் பொறி வேலை செய்கிறது என்பதில் மகிழ்ச்சியடைந்தேன். அன்றிலிருந்து தினமும் பல தேன்குருவிகள் வந்து போவது வாடிக்கையாகி விட்டது. முதலில் வெல்ல நீர்க் குவளையை நாளுக்கு ஒரு தரம் நிரப்பினால் போதுமானதாக இருந்தது, ஆனால் சில நாட்களில் தினமும் இரு தடவை நிரப்ப வேண்டியிருந்தது. மேலும் சில நாட்களில் தினமும் பத்து தடவை வரை நிரப்ப வேண்டியதாகிற்று.
விரைவில் எனது வெல்ல நீர்க்குவளையின் அளவு போதவில்லை என்றதால் மேலும் குவளைகளில் வெல்ல நீர் நிரப்பி ஆங்காங்கே ஓக் மரம் மட்டுமல்லாது மற்ற மரக்கிளைகளிலும், செடிகளிலும் கட்டிவிட்டேன்.
முதலில் நான் இந்த நீர்க்குவளைகளின் அமைப்பைப் பற்றிக் கவனம் செலுத்தாவிட்டாலும், தேன்குருவிகள் நீர் பருகும் முறைகளை அவதானித்தபோது சில விடயங்கள் தெரிய வந்தன. அதாவது வெல்ல நீர் குவளையின் ஆழம் தேன்குருவியின் அலகின் நீளத்தில் இருமடங்குக்கு மேல் இருக்கக்கூடாது. இதன் காரணம் அருகில் அவதானித்த போது தான் புரிந்து கொண்டேன் தேன்குருவிகள் வெல்ல நீரையோ, இல்லை தேன் மதுரத்தையோ அலகால் உறிஞ்சிக்குடிப்பதில்லை. அவை நமது வீட்டு நாய்கள் போன்று தமது கயிற்று நூல் போன்ற நாக்கினால் நக்கிக்குடித்தன.
மேலும் நான் முதலில் போட்டிருந்த வெல்லநீர்க் குவளைகளைச் சுற்றிவைத்த வண்ணச் சித்திரச் செய்தித் தாள்களை அகற்றிவிட்டேன். காரணம் தேன்குருவிகள் தமது உணவிடத்தை மனதில் பதிந்து கொண்ட பிறகு அவற்றுக்கு நிறக்கவர்ச்சிகள் பிரதானமானவையாகத் தோன்றவில்லை.
உணவு பரிமாற அழைத்தல்
ஐந்தாவது வெல்ல நீர்க்குவளையைக் கட்டும் போதுதான்இன்னொன்றை உணர்ந்து கொண்டேன். எனது குரல் தேன்குருவிகளுக்குப் பழக்கமாகிய பின்னர் நான் அவற்றுடன் குரல் கொடுத்து மெதுவாகப் பேசுவேன். அவற்றிற்கு அது புரிந்ததோ என்னமோ நான் எனது சந்தோசத்தைத் தெரிவித்துக்கொள்வேன். இந்தத் தேன் குருவிகளும் நாம் வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளைப் போல் அழைத்தால் வருமோ என்றும் யோசித்துப் பார்த்தேன். விசிலடித்துப் பார்ப்போம் என்று நினைத்தாலும் வாயில் நிலக்கடலைபாகு வைத்திருந்ததால் அதை துப்ப மனமில்லாமல் போனது. எனவே கையில் வைத்திருந்த கரண்டியினால் வெல்லநீர்க் கண்ணாடிக்குவளைகளில் மெதுவாகத் தட்டினேன்.
இவ்வாறு தட்டுவது உடனே வேலை செய்யவில்லை. மெதுவாக நாம் அவற்றைப் பயிற்றுவித்துப் பார்க்கலாம் என்று ஒரு வாரம் ஒவ்வொருமுறை வெல்லநீர் வார்க்கும் போதும் கண்ணாடிக்குவளையைக் கரண்டியால் தட்டினேன். அடுத்த வாரம் முதல் இந்த ஒலியினைக் கேட்டு சிறு தேன்குருவிக்கூட்டம் வர ஆரம்பித்து விட்டன. அவைக்கும் சாப்பாட்டு நேர அழைப்புப் புரிகிறது என்றும் ஊகித்துக் கொண்டேன்.
இவ்வாறு சிறிது சிறிதாக தேன்குருவிகள் என்னைப் பார்த்தும், நான் போடும் சத்தங்களிற்கும் பயப்படாது வரத் தொடங்கிவிட்டன. நான் வெல்ல நீர்க் குவளைகளின் அருகே ஓரிரு அடித் தூரத்தில் நின்றாலும் தேன்குருவிகள் என்னைச் சுற்றிப் பறந்து அவதானித்தவாறு வெல்லநீரைப் பருகின . இந்த அருகாமைத் தூரமும் சில நாட்களில் அகன்று விட்டது. அதாவது நான் வெல்ல நீர்க்குவளைகளைத் தொட்டால் கூட தேன்குருவிகள் குவளையை விட்டுப்பறக்காது அமர்ந்து பருகின. அடிக்கடி தமது சொண்டை வெளியே எடுத்து என்னை மேலும் கீழுமாகப்பார்த்து நான் ஒரு தீங்கையும் தரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு. பின்னர் மீண்டும் தமது உணவில் கவனம் செலுத்தத் தொடங்கின..
பறவையின அந்தரத்துக் கழைக் கூத்தாடிகள்
தேன்குருவிகள் அந்தரத்தில் செய்யும் நாட்டிய நாடகங்களைப் பார்த்தால் பறவையினங்களில் அவையே சிறந்த கழைக் கூத்தாடிகள் எனும் பட்டத்தினைத் தரத் துடிப்போம். பறவையினங்களிலேயே பின்பக்கமாக பறக்க வல்ல ஒரே இனம் தேன்குருவிகள் தாம். இவை பின்பக்கம் (fly backward) மட்டுமல்ல ஓரிடத்தில் இருந்தவாறு நேர் மேலே, கீழே மரத்தில் ஏறுவது இறங்குவது போல அந்தரத்தில் பறக்க வல்லவை. மேலும் அவற்றின் சிறு சிறகுகளால் ஒரே இடத்தில் நிலையாக நின்று அந்தரத்தில் பறக்கும் hover ஆற்றலும் உள்ளவை. இந்தச் சிறுகுருவிகள் பருமனில் நமது கைப்பெருவிரலளவில் இருப்பினும் அவை கொண்டுள்ள ஆற்றலோ என்னைப் பிரமிக்கவைத்தது.
நான் எனது தேன்குருவிகளைக் கவரும் கைமுறைகளையும் அவற்றின் முன்னேற்றங்களையும் பார்த்து திருப்தியானேன். ஆனால் கடைசி முயற்சியாக நான் தேன்குருவிகளுக்குக் கையில் உணவு கொடுக்கவேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். இதற்கு சரியான பொறுமையும் முதலில் அசையாது இருக்கப்பயிற்சியும் வேண்டும். அதே சமயம் கையில் வைத்துக்கொடுக்க வெல்ல நீரை உள்ளங்கையில் பல மணிநேரம் வைத்திருக்கவும் முடியாது. இதை எப்படிச் செய்யலாம் என்று திட்டம் போட்டேன். இதற்கு முதல் படி வேலையாக சிறு மரக்கிளையை ஒடித்து அந்த மரக்கிளையில் ஒரு வெல்லநீர்க் குவளையை 2 அடிக் கயிற்றில் கட்டி அதை நான் கையால் பிடித்து வந்தேன். இது முதுகெலும்பைப் பதம் பார்க்கும் வேலை, எனினும் படிப்படியாக வீரமானத் தேன்குருவிகள் வந்து வெல்லநீரைப் பருகத் தொடங்கின.
நானும் குவளை கட்டித் தூக்கிய கயிற்றின் நீளத்தைப் படிப்படியாக் குறைத்து வந்தேன். இது நிச்சயமாக பொறுமையாகச் செய்யவேண்டிய விடயம். பொறுமையில்லாவிடின் இவ்வளவு முயற்சியும் பலனில்லாமல் போக வாய்ப்புண்டு. தினமும் செய்ததால் 3 நாட்களில் எனது கையருகில் வந்தன தேன்குருவிகள்.
வெற்றி
இந்தப் பரீட்சார்த்த சாதனைகளில் சிலசமயம் நான் வெல்லநீர் வார்க்கும் கரண்டியில் தேன்குருவிகள் பருகியுள்ளன. ஆயினும் அந்த நிகழ்வுகள் ஒவ்வொரு தடவையும் நடைபெறும் விடயமல்ல. அதையும் செய்தால் பெருவெற்றி என்பதே எனது குறிக்கோள். எனவே கரண்டியில் தேன்குருவிகள் அதுவரை உட்கொண்டுள்ளமையால் அதன் மூலம் அடுத்து அவற்றைப் பயிற்றுவிக்க முடிவு செய்தேன்.
பறவைகள் ஏன் இவன் வெல்லக் குவளையில் இருந்து கரண்டிக்குப் போனான் என்று சிந்தித்தனவோ என்னவோ. கரண்டியை நோக்கிய அவற்றின் தயக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டன. இந்த நீண்ட மணித்தியால அனுபவங்களைக் குறைத்துச் சொல்லுகிறேன். ஒரு சில வீரமான தேன்குருவிகள் கையில் படிப்படியாக வந்து வெல்லநீரை அருந்தத் தொடங்கின. அவற்றில் மரகதப்பச்சை மயிலிறகு போன்ற அழகும், மாணிக்கம் போன்ற மினுங்கும் சிவப்ப நெஞ்சையும் கொண்ட தேன்குருவி எனது பெருங்கை விரலில் வந்து அமர்ந்து பருகியது.
அன்று எனது மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளேயில்லை. நெஞ்சு பூப்போல பூரித்தது எனலாம், ஆனந்தமோ ஆனந்தம் இறுதியில் தேன்குருவியின் தோழமை கிடைத்துவிட்டது. எனக்கு சந்தோசம் அதிகமானாலும் எனது உடல் குலுங்காது பார்த்துக்கொண்டேன். காரணம் இந்த மரகத மாணிக்கம் என்னை விட்டு அகன்றிடும் என்ற பயம் தான்.
அன்றிலிருந்து இந்தச் சிறு பறவைகள் எனது கையில் வந்தமர்வது வாடிக்கையான விடயமாகிற்று. இந்தக் காட்சியைப் பலரும் படங்களிலும் பார்த்திருக்கலாம் ஆயினும் சிறுபறவை கைவிரலில் வந்து அமர்ந்து தோழமையுடன் ஒருவரைப்பார்ப்பது, வெவ்வேறு உயிரனங்களாக இருப்பினும் இருவரும் தத்தம் இதயத் துடிப்பைத் தொடுதல் மூலம் பகிர்ந்து கொள்வது என்பது பெரும் ஆனந்தங்களில்.
யோகி அருமைநாயகம்