தோழன்
பரந்து வளர்ந்த அரச மரம். ஒரு குறுநில மன்னனின் முழுச்சேனையும் அதனடியில் அமர்ந்தாலும் அனைவருக்கும் நிழல் தருமளவு விஸ்தாரமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருந்த அற்புத மரம். அதனடியில் கருங்கற்களைக் கொண்டு ஒரு மேடைபோல் அமைக்கப்பட்டு அதன் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்லாலான விநாயகர் சிலை. விநாயகர் சிலைக்கு அடியில் செதுக்கப்பட்ட சிறிய மூஞ்சூரு மற்றும் மோதகச் சிலைகள் அத்தனையும் தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டிருந்தன. சிலையைச் சுற்றிக் கம்பியினாலான கூடு ஒன்று அமைக்கப்பட்டு, அதைப் பூட்டி வைத்து யாரும் விநாயகரைத் திருடிவிடாது கடவுளை மனிதன் பாதுகாத்துக் கொண்டிருந்தான்.
அனுதினமும் காலைக் கடன்களை முடித்துக் குளித்து முடித்தபின் வீட்டிற்கு மிக அருகிலிருக்கும் இந்த அரச மரத்தடி விநாயகரைச் சென்று தொழுது, வலம் வருவது கணேஷின் வழக்கம். அன்று வழக்கத்துக்கு மாறாக உச்சி வெயில் நேரத்தில், மிகவும் சிரத்தையுடன் விநாயகரை வலம் வந்து கொண்டிருந்தான் கணேஷ். கற்பூரம் ஒன்றையும் ஏற்றி வைத்து குவித்த கரங்களுடன் ஒரு மனதாய்க் கடவுளை நினைந்து நடந்து கொண்டிருக்கும் கணேஷை அருகில் கவனித்துப் பார்க்கையில், கண்களில் பிரவாகமாகக் கண்ணீர் வழிந்தோடுவது தெரிய வரும். அழுது சிவந்த கண்களும், ஈரமான கன்னங்களும் அவன் சில மணி நேரங்களாகவாவது அழுது கொண்டிருக்கிறான் என்று தெளிவுபடுத்தின. அருகில் சென்று அவன் முணுமுணுப்பாய்ச் செய்யும் பிரார்த்தனைகளைக் கேட்கையில் அவன் அழுகையின் காரணம் விளங்கிற்று.
”பிள்ளையாரே, அப்பனே, என் மணியக் காப்பத்து…”
திரும்பத் திரும்ப மந்திர உச்சாடானம் போலச் சொல்லப்பட்டது இந்த வார்த்தைகளே….
மணி யார்?
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர், கணேஷ் அவனின் அம்மாவின் வயிற்றில் இருந்த காலம். அம்மா நிறைமாத கர்ப்பிணி. கணேஷின் அண்ணன் மகேஷிற்கு எட்டு வயது, அக்காள் அருணாவிற்கு ஆறு வயது. அவர்கள் இருவரும் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டியுள்ள நண்பனின் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் வீட்டு நாய், இரண்டு நாட்களுக்கு முன்னர் போட்டிருந்த மூன்று குட்டிகளுடன் பலா மர நிழலில் உறங்கிக் கொண்டிருக்க, அதன் அழகைக் கண்டு மனதைப் பறி கொடுத்தனர் மகேஷும் அருணாவும். தன் நண்பனின் தாய் தந்தையரிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு குட்டியைத் தாங்களே எடுத்துச் செல்ல அனுமதி பெற்றனர். அன்று வீடு வந்து சேர்ந்தவன் மணி.
கணேஷைவிட ஒரு மாதம் மூத்தவன். கணேஷ் பிறக்கு முன்னரே, அந்த ஒரு மாதத்திற்குள் கணேஷின் இல்லம் முழுவதும் பழகி விட்டிருந்தான். மகேஷும், அருணாவும் மணியைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டனர். வீட்டிலிருக்கும் அத்தனை நேரமும் மணி பின்னரே விளையாடிக் கொண்டிருப்பர் இருவரும். இரவில் தங்களுக்கு மத்தியில் பாயில் போட்டுக் கொண்டுதான் தூங்குவர். ஒரு மாதம் கழித்துப் பிறந்த கணேஷ் கூட இரண்டாம் பட்சமாகத்தான் கருதப் பட்டான்.
கணேஷ் பிறந்தபின் மணியும் அவனும் சேர்ந்தே வளர்ந்தனர். மனிதனுக்குரிய வளர்ச்சிப் பருவ விதிகளின்படி அவன் மெதுவாக வளர்ந்தான் ஆனால் மணி விரைவாக வளர்ந்து தனியனாய்த் தனது தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு உயர்ந்தான். கணேஷிற்கு அந்நிலையை அடைய அநேக காலம் தேவைப்பட்டது. சொல்லப்போனால் இன்னும் அந்நிலையை முழுவதுமாக அடைந்து விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மகேஷும், அருணாவும் பெரியவர்களாகி விட்டார்கள். அவர்களுக்கு என்று வேறு பொழுது போக்குகள் வந்துவிட்டன. கணேஷும், மணியும் இந்தச் சமயத்தில்தான் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டிருந்தனர். காலையில் எழுந்தவுடன் பல் கூடத் தேய்க்காமல், பழையதாகி இத்துப் போன ரப்பர் பந்து ஒன்றை எடுத்துக் கொண்டு வெளித் திண்ணையில் அமர்வான் கணேஷ். தனக்காகத்தான் வந்து அமர்கிறான் என்ற உணர்வுடன் அவன் பின்னாலேயே வாலை அசைத்துக் கொண்டே வரத்துவங்குவான் மணி. பந்தைத் தன் பலம் கொண்ட மட்டும் வீசியெறிய, மணி விடாமல் ஓடிச் சென்று அதனைக் கவர்ந்து வந்து திரும்பக் கொடுப்பான். பள்ளி செல்லும் வழியெல்லாம் அவன் பின்னர் நடந்து பள்ளி வாசல்வரைச் சென்று கணேஷை வழியனுப்பிவிட்டு வீடு திரும்புவான் மணி. எப்படித்தான் அவனுக்கு நேரம் என்ன என்று தெரியுமோ, மிகச் சரியாக மதிய உணவு இடைவேளையில், பள்ளியின் மைதானத்தில் கணேஷ் எப்பொழுதும் அமர்ந்து உணவு உட்கொள்ளும் மரத்தடியில் வந்து நிற்பான் மணி.
நாள் முழுவதும் கூடவே ஓடி ஆடிய மணியும் கணேஷும் இரவில் உறங்கும் பொழுதும் அருகருகே படுத்துறங்குவர். மணி வாயைத் திறந்து பெருமூச்சு விட்டுக் கொண்டே தூங்க, கணேஷ் தன் சிறு விரல்களை மணியின் வாயில் வைத்துக் கொண்டே உறங்கிப் போவான். மணி தன் நண்பனுடைய விரல் வாயிலுள்ளது என்பதை உணர்ந்து, வாய் மூடினால் எங்கே காயம் பட்டுவிடுமோ என்று வாய் மூடாமலேயே உறங்கப் பழகிக் கொண்டிருந்தான். அது ஒரு ஆத்மார்த்தமான உறவு.
எங்காவது ஊர் சென்று திரும்பினால், வீட்டின் நுழைவாயிலிலேயே வைத்து ஆசையுடன் முன்னிரு கால்களைத் தோளில் வைத்து முகத்தினைத் தன் நாக்கினால் வருடி வரவேற்பான் மணி. அது அவன் பாணியில் ஆரத்தழுவது. அம்மா அப்பாவைப் பார்ப்பதற்காகத் திரும்புவதை விட மணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையே அவனிடம் பெரிதாய் ஓங்கி நிற்கும். மணியும் அதே எதிர்பார்ப்பில் இருந்திருப்பது போலத் தோன்றும்.
சில சமயங்களில், டவுன் பஞ்சாயத்துக்குத் திடீரென ஊரில் உலாவரும் தெரு நாய்களெல்லாம் மனிதர்களுக்குத் தொல்லை விளைவிக்கிறது என்று ஒரு ஞானோதயம் பிறக்கும். வளர்க்கும் நாய்கள் அனைத்திற்கும் உடனடியாக ஒரு லைசென்ஸ் வில்லை வாங்கி, நாயின் கழுத்தில் மாட்டிவிட வேண்டும், அவையில்லாத நாய்களெல்லாம் உடனடியாக அடித்துக் கொல்லப்படும் என்று ஒரு புதிய விதிமுறையைக் கொண்டு வருவர். இதனைச் சரியாகவும் விளம்பரப் படுத்த மாட்டார்கள், போதிய அவகாசமும் தரமாட்டார்கள். கணேஷின் அப்பாவிடம் கல்வி பயின்று, படிப்புச் சரியாக வராததால் பாதியில் விட்டுவிட்டு, பஞ்சாயத்து போர்டில் துப்புறவுத் தொழிலாளராகப் பணியாற்றும் மாசான் அண்ணன் விஷயம் தெரிந்தவுடன் வீட்டிற்கு ஓடி வந்து தகவல் கொடுத்துவிடுவார். அந்தத் தகவல் தெரிந்ததிலிருந்து, லைசென்ஸ் வில்லை வாங்கி மாட்டும் வரை, மணியை நாய் பிடிப்பவர்களிடமிருந்து காப்பதற்காக கணேஷின் குடும்பம் படும் அவஸ்தை எழுத்தில் விவரிக்க இயலாத அளவு பெரிய பகீரதப் பிரயத்தனம்.
இதுபோன்ற கண்டங்களைக் கடந்து இன்று வரை வாழ்க்கையின் அத்தனை சுக துக்கங்களிலும் கூட இருந்த மணி, மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருக்கிறான். அந்தப் போராட்டத்திலிருந்து அவனை மீட்க தான் எப்பொழுதும், எதற்காகவும் நம்பும் அரசர மரத்தடி விநாயகர் ஒருவரால் மட்டுமே இயலும் என்ற நம்பிக்கையோடு, அவரிடம் சென்று விண்ணப்பம் செய்து கொண்டிருந்தான் கணேஷ்.
வழக்கமாய்ச் சுற்றும் ஒன்பது பிரதட்சணங்கள் முடிந்து நீண்ட நேரமாகி விட்டது. எண்ணிக்கை எதுவும் மனதில் வைத்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறான். மனது முழுக்க மணி, வாய் முழுக்க அதே மந்திர உச்சாடனம் – “அப்பனே, பிள்ளையாரே, மணியை மட்டும் காப்பாத்து, நான் 101 தேங்காய் உடைக்கிறேன்”
அவனது மந்திர உச்சாடானத்தை இடைமறித்தது தூரத்திலிருந்து ஓடிவந்த பக்கத்து வீட்டுக் கார்த்திக்கின் அழுகுரல். “கணேசா, மணி போயிருச்சுரா………………….”. உணர்வைக் குலைத்து உயிரைப் பிளந்தது அந்தச் செய்தி. பதினைந்து வயதும் நிரம்பியிராத கணேஷிற்கு முதல் குடும்ப உறுப்பினரின் மரணச் செய்தி. அழுகை கட்டுப்படுத்த முடியாத எல்லையை அடைந்திருந்தது அப்போது.
வீட்டிற்கு வந்து முன் திண்ணையில் கிடத்தப்பட்டிருந்த மணியைப் பார்க்கையில் கணேஷின் அழுகை கரை புரண்டோடத் தொடங்கியிருந்தது. புலம்பல்கள் ஆரம்பித்திருந்தன. நிதர்சனம் உணர்ந்த பெரியவர்கள் அமைதியாய் நின்று கொண்டிருக்க, அன்பு மட்டுமே கொண்டு வேறு எதுவும் புரியாத கணேஷ் தன் நண்பன் மணியின் பிரிவைத் தாங்க இயலாது அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான்.
”இந்தப் பிள்ளையாரைக் கும்புடறத இன்னையோட நிறுத்துறேன்.. எவ்வளவு கேட்டும் செய்யாத இவரெல்லாம் ஒரு சாமியாம்..” வெறுப்பில் தெய்வ நிந்தனையில் இறங்கியிருந்தான். அனேகமாக அவன் தினமும் காலையிலெழுந்து சென்று துதிக்கும் பழக்கத்திற்கு அன்றே கடைசி நாளாக அமைந்திருக்கும்.
காலங்கள் பல உருண்டோடியது. உறவுகள், அனுபவங்கள் எனப் பலவற்றைப் பார்த்தாகி விட்டது. இன்று தன் மகள் விடாமல் நச்சரித்தாலும் அவளுக்கு ஒரு நான்கு கால் நண்பனைப் பெற்றுத் தர மறுக்கிறான் கணேஷ். மணியை இழந்த வலி இன்றும் மறக்காத கணேஷ், தன் மகளுக்கும் அந்த வலி நேரக்கூடாது என்ற காரணத்தால்…….
வெ. மதுசூதனன்.