\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மாவுப் பண்டம்

Filed in இலக்கியம், கதை by on July 28, 2015 0 Comments

FONன்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுதே ஒரு யோசனையாக வந்தாள் கலை. வீட்டிற்கு வந்தவுடன் வீட்டின் மையப் பகுதியின் வாசலில் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த செல்வியை வீட்டுக்கு வருமாறு சைகை செய்தவாறு, மையப் பகுதியின் அருகில் இருந்த சிறிய குறுக்குச் சந்தில் நடந்தாள். வீட்டின் பின் புறம் ஒரு சிறு அறை போல் காணப்பட்ட, அந்த அறையின் கதவினைத் தன்னிடம் உள்ள சாவி கொண்டு திறந்தாள்.

அந்தச் சிறிய அறை போல இருந்த வீட்டில் உள்ளே ஒரு பகுதி சமையல் அறையாகவும் இன்னொரு பகுதி சிறிய ஒரு அறையாகவும் பிரிக்கபட்டு இருந்தது. சமையல் அறையில் சிறு சிறு பாத்திரங்கள் வைக்கப்பட்டு ஒரு சிறிய அலமாரி. மளிகைச் சாமான் அடுக்கி வைக்க ஒரு சிறு அலமாரி, ஒரு சிறிய அடுப்பு. கலை தான் வரும் பொழுது வாங்கி வந்த காய்கறிகளை சமையல் அலமாரியில் வைத்து விட்டு வந்தாள். அவள் முகம் ஏதோ சிந்தனையில் இருந்ததைக் காட்டியது. வீட்டின் இன்னொரு பக்கம் இருந்த அறையில், ஒரு சுவர் ஓரமாக ஒரு சிறிய பீரோ இருந்தது. இன்னொரு புறம் சுவற்றில் சிறிய முருகர் படம் தொங்கிக் கொண்டிருந்தது. தன்னுடைய அலுவலகச் சேலையை மாற்றி அதைக் கொடியில் போட்டு விட்டு, வீட்டு உபயோகத்திற்க்கு வைத்துள்ள ஒரு நூல் சேலையில் மாறினாள். வீட்டின் வெளியில் இருந்த சின்னக் குளியல் அறையில் முகம், கை, கால் கழுவி வந்தாள். செல்வி ஏதோ படித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தபடி சாமிப் படம் முன் இருந்த அகல் விளக்கை ஏற்றினாள்.

“செல்வி வீட்டுப் பாடம் பண்ணிட்டியா?” .

“பண்ணிட்டேன் அம்மா”.

“சரி இங்க வா, இந்த உண்டியல்ல உன் கையால ஒரு ரூபா போடு”

“ஹை உண்டியல்ல பணம் சேக்கரோமா?. இந்த வாட்டி எங்க போகப் போறோம்?”..

“எங்கியும் இல்ல”.

“பின்ன எனக்கு ஏதாவது பொம்மைக்கா?”

“இல்ல”

“பின்ன எதுக்கு?”

“சும்மா தொண தொணன்னு கேள்வி கேட்காம போய் விளையாடு, இல்ல படி”

எட்டு வயது நிரம்பிய செல்வி அம்மாவை ஒரு முறை முறைத்து விட்டு ஓடிப் போய் விளையாடத் தொடங்கினாள்.

முருகர் படம் முன் உண்டியலை வைத்து விட்டுக் கண் மூடி தியானித்தாள். வெறுமையாக இருந்த நெற்றியில் திருநீரை இட்டுக் கொண்டு, சமையல் அறை சென்று தான் வாங்கி வந்த சிறிய காய்கறிகளையும், ரவையையும் சேர்த்து ஒரு உப்புமா போல் தயார் செய்தாள்.

ஐந்து வருடம் முன்பு வரைக் கொஞ்சம் நன்றாகவே வாழ்ந்தவர்கள் தான் கலை, செல்வி, பழனி மூவரும். பழனி ஒரு ஆட்டோ ஓட்டுனர். ஒரு முறை சவாரி முடிந்து வரும் பொழுது ஒரு சிறிய விபத்தினில் திடீரென்று காலமாகிப் போனார். என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப் போனாள் கலை. கணவன் இறந்த துக்கம் ஒரு புறம், ஒன்றுமே புரியாத எட்டு வயதுச் செல்வி ஒரு புறம், இனி எஞ்சிய வாழ்வை எப்படிக் கடப்பது என்ற குழப்பம் ஒரு புறம். ஆட்டோ ஒட்டுனர் சங்கம் மூலமாகக் கிடைத்த பணம் கொண்டு சில காலம் வாழ்க்கையை ஓட்டினாள். ஒரு ஆறு மாதம் கழிந்தது. அதற்கு இடையில் ஒரு துணிக் கடையில் அவளுக்கு ஸேல்ஸ் வேலையும் கிடைத்தது. அப்பொழுது இருந்த வீட்டைக் காலி செய்து விட்டு அவள் வேலை செய்யும் கடைக்கு அருகிலேயே ஒரு சிறிய போர்ஷன் பார்த்துக் குடி பெயர்ந்தனர். வீட்டுக்காரர் குடும்பம் நல்ல மாதிரியாக இருக்கவே, தினமும் அவள் வேலை பார்த்துத் திரும்பும் வரை, பள்ளியில் இருந்து திரும்பிய செல்வியை அவர்கள் வீட்டின் முன் விளையாட விட்டிருந்தாள்.

கலை வீட்டிற்கு வந்தவுடன், இருவருமாக இரவு உணவு உண்ட பிறகு, பள்ளிக் கதை பேசுவது மற்றும் பாடம் படிப்பது என்பதாக நேரம் தள்ளுவார்கள். செல்வி மிக நல்ல பெண். நன்றாகப் படிக்கிறாள். கலையும் தன்னால் முடிந்த அளவு அவளுக்கு வேண்டியதை வாங்கித் தந்து பார்த்து கொண்டாள். சம்பளம் அதிகம் இல்லை என்றாலும், இருவர் வாழ்க்கை ஒட்டும் அளவிற்கு இருந்தது.

இருவருக்கும் எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு. தங்களுக்கு ஆசையாக இருக்கும் பொருள் ஒன்றை வாங்குவதற்க்கு பணம் சேமிப்பது. ஒரு முறை செல்வி கடையில் இருக்கும் ஒரு பொம்மையை ஆசையாகக் கேட்டாள் அதற்காக இருவருமாகச் சேர்ந்து தினம் ஒரு ரூபாய் உண்டியலில் சேர்த்து, இரண்டு மாதம் கழித்து அந்த பொம்மையை 60 ரூபாய்க்கு வாங்கி கொண்டார்கள். ஒரு முறை மங்காடு கோயில் போக நினைத்து மூன்று மாதம் பணம் சேர்த்தார்கள், ஒரு நாள் பேருந்தில் சென்று வந்ததை இன்று வரை சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போவாள் செல்வி. இப்படியாக சிறு கூடு போல் அழகாக இருந்தனர் இருவரும்.

மூன்று வாரம் முன்பு கலை வேலை முடிந்து திரும்பும் பொழுது, அவள் நடந்து வரும் வழியில் ஒரு புது உணவகம் திறக்கப்பட்டு இருந்தது. அதன் பேர் என்னவென்று புரியவில்லை. அதனை கடக்கும் பொழுது ஒரே அருமையாக வாசனை அடித்தது. அந்த இடத்தில் பல நவ நாகரீக யுவதிகள், யுவன்கள் நின்று, பேசிச் சிரித்தபடி எதையோ  சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அதன் பெயரும் தெரியவில்லை.

அதன் மணமும், சுவையும் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள ஒரே ஆவலாகிப் போனது கலைக்கு. அதிகம் படிக்கவில்லை என்பதால் அவளுக்கு யாரிடம் கேட்பதற்கு வெட்கமாக வேறு இருந்தது. அங்கிருக்கும் யுவதிகள் அணிந்திருக்கும் உடையும் பேச்சும், ஒரே அலட்டல் போல் தோன்றியது.

தினம் அந்த வழியாக வேலைக்குப் போகும் பொழுதும், வரும் பொழுதும், இதே கவனமாக இருந்தாள் இன்று மாலை தயங்கித் தயங்கி உள்ளே சென்று அந்தக் கடையில் வேலை செய்பவரிடம்,

“அண்ணா இது என்ன சாப்பாடு அண்ணா?” என்று கேட்க,..” இது பேர் பிஸா என்று பதிலளித்தார்” ..

“அப்படின்னா?”.

“அது ஒரு மாவு மாதிரி அதுக்கு மேல நெறைய சீஸ் போட்டு காய் எல்லாம் போட்டு சமைக்கணும்”.

“சீஸ் ன்னா ?.”

“அட என்ன உன்னோட தொந்தராவாப் போச்சு . சீஸ் ன்னா அது ஒரு பால் பொருள் தயிர் மாதிரி.நீ ஏதாவது வாங்கறியா இல்லையா? “

சிறிது நேரம் தயங்கிய கலை, அந்தப் படங்களில் இருக்கும் ஒரு மாவுப் பண்டத்தின் ரொம்ப அழகாக இருந்த ஒரு படத்தை காட்டி. “இதன் விலை என்ன?” என் கேட்டாள். “அதுவா 155 ரூபாய்உன்கிட்ட காசு இருக்கா? இல்லன்னா இடத்த காலி பண்ணு.”

“155 ரூபாயா? நாங்க ரெண்டு பெரும் ஒரு வாரம் சமைச்சுச் சாப்பிடலாம். ஒரே ஒரு வேளை சாப்பிட 155 ரூபாயா?” மனதிற்குள் சிந்தித்தபடி நடந்து கொண்டிருந்தவளுக்கு, அப்படி என்ன தான் இருக்கு அதில, அத சாப்பிட்டு பார்க்கணும் என்ற ஆவல் அதிகமாக உருவாகியது.

இதோ இன்று வீட்டிற்கு வந்து உண்டியலில் ஒரு ரூபாய் போட்டு சேர்க்கத் துடங்கினாள். செல்வி மீண்டும், “அம்மா உண்டியல் காசு இந்த வாட்டி எதுக்கும்மா சேர்க்கறோம்?” என ஆவலாகக் கேட்க, குழந்தையின் முகம் பார்த்த கலை, “நான் நடந்து வரும் பொழுது ஒரு கடையில ஏதோ ஒரு மாவுப் பண்டம் பார்த்தேன் செல்வி.”

“மாவுப் பண்டமா? தின்பண்டம் மாதிரி அது என்ன?”

“மாவுல பண்ணினதாம், அதைச் சாப்பிட ஒரே கூட்டம் செல்வி. நாம கூட காசு சேர்த்து வெச்சு ஒரு நாள் சாப்பிடலாம்.” “சரிம்மா “.. ” அது என்ன வென்று புரியாமலேயே, அதனைப் பற்றிக் கனவு காணத் தொடங்கினாள்.

தினம் தினம் காலை, மாலை அந்த இடத்தைப் பார்க்கும் பொழுது ஒரு நாள் சாப்பிடலாம் என்று நினைத்தபடி வாசனை நுகர்ந்து செல்வாள் கலை. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும், இருவரும் சேர்ந்து சென்று அந்தக் கடையை பார்த்தபடி சிறிது நேரம் நிற்பார்கள். ஒரு மாதிரியாக பணம் சேர்த்தாயிற்று. நாளை வாங்கிச் சாப்பிடலாம் என்று இருவரும் மிகக் குதூகலத்துடன் படுத்து உறங்கினர்.

மறு நாள் காலை திடீரென்று காரணமே இல்லாமல் செல்விக்கு ஜுரம் அடித்தது. அவசரமாக அரசு மருத்தவரிடம் கூட்டிச் சென்று காண்பித்த கலை, மருத்தவர் எழுதித் தந்த மருந்துச் சீட்டுக்கு மருந்து வாங்க பணம் தேவைக்காக உண்டியலை உடைத்து காசு எடுத்துக் கொண்டாள். நல்ல வேலையாக பணம் சேர்த்தது அந்த மாவுப் பண்டம் வாங்கிச் செலவு செய்யவில்லை என்று முருகருக்கு நன்றி சொன்னாள்.  ஒரு வாரம் கழித்துச் செல்வி உடல் நிலை சரியாகி, பள்ளி செல்ல,கலையும் வேலைக்குச் செல்லத் தொடங்கினாள்.

திரும்பவும் அந்த கடையைக் கடக்கும் பொழுது, நன்றாக உற்றுப் பார்த்தாள். காலையிலேயே இரு பெண்கள் அமர்ந்து ஏதோ பேசியபடி குடித்து கொண்டு இருந்தனர். தேவை இல்லாமல் அவர்கள் மேல் கோபம் வந்தது கலைக்கு. வேற வேலை கிடையாது போல இருக்கு இவர்களுக்கு. எப்பப் பாரு உக்காந்து சாப்டுட்டே இருக்கறது. எங்கேந்து காசு வரும் இவங்களுக்கு?.. மனதினில் நொந்தபடி வேலைக்குச் சென்றாள். அன்று முழுவதும் வேலையில் மனம் இல்லை. அந்த பண்டம் தின்றே ஆக வேண்டும் என்ற வெறி வந்தது. மாலை வீடு திரும்பும்போது அதே இரண்டு பெண்கள் உட்கார்ந்து பேசியபடி தின்று கொண்டு இருந்தனர். சடாரென்று அங்கிருந்த ஒரு கம்பம் பின் மறைந்து கொண்டாள் கலை. அந்த இரு பெண்களும் பாதித் தின்ற பின் அப்படியே மீதியை வைத்துவிட்டுக் கிளம்பினார்கள். கடையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் மற்ற இடங்களில் கவனமாக இருக்க. வீடு வீடு வென்று சென்று அந்த மீதி இருந்ததை எடுத்துக் கொண்டு விறுவிறுவென நடந்து அந்த இடம் விட்டு அகன்றாள்.

ஒரே குதூகலமாகிப் போனது. அந்த மிஞ்சிய பண்டத்தை எடுத்து ஒரு வாய் கடித்த பொழுது, ஏனோ அது தொண்டையை விட்டு இறங்க மறுத்தது. குதூகலம் போய்க் குற்ற உணர்வு வரத் துவங்கியது.

வாயில் இருந்த துண்டை காறித் துப்பி விட்டு. கையில் இருந்ததைக் குப்பையில் போட்டு விட்டு விறு விறுவென்று வீட்டிற்கு நடந்தாள். வீட்டிற்குள் போனதும், செல்வி அம்மா பசிக்குது என்ன சமைக்கற?

“ராத்திரி இன்னிக்கு கஞ்சி தான் அம்மா. நீ படி நான் இப்போ வெச்சுத் தரேன்” ..

“சரி” என்று கூறிய செல்வி

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல்.”

என உரக்கப் படித்தாள்.

-லக்‌ஷ்மி சுப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad