\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

யோகசுவாமிகள்

FON“சும்மா இரு” என்ற இரு சொற்களிலுமே நாம் தற்போது இந்த நிமிடத்தில் வாழ்வதைப் பற்றிக் கரிசனை செலுத்த வேண்டும் என்றார் யோகசுவாமிகள்.

 

அசலுக்கும் நகலுக்கும்,  நல்லுறவுக்கும், வல்லுறவுக்கும், அற்பத்துக்கும்,   ஆன்மீகத்திற்கும் வேறுபாடு தெரியாது இலத்திரனியல் வாழ்க்கையில் சஞ்சரிக்கும் மனித குலத்திற்கு மெஞ்ஞானியாகிய யாழ்ப்பாணம் யோகசுவாமிகள் பற்றித் தெரிந்திருப்பது  அரிதான விடயமே.

 

ஞானிகள் தோன்றி போதிக்கும் தத்துவங்களோ மனித சிந்தனையின் உயர் கட்டத்தை விவரிக்கிறது. ஏரியில் ததும்பும் நீர்க்குமிழிகள் போல வாழ்க்கையில் அவை அவ்வப்போது எமக்கு வழியையும் காட்டுகின்றன. அந்த அண்மைக்கால யோகியின் சிந்தனைகள் பெரும்பாலும் சைவ சித்தாந்தம், மற்றும் சமூகப் பொதுத்தொண்டுகள், இயற்கை பேணல் போன்றவற்றைக்கொண்டு அமைந்தவை. யோகசுவாமிகளின் பிரதானமான தத்துவங்கள் நான்கு மட்டுமே.

 

நாம் எமது வாழ்க்கையில் சிந்திப்பவை, செயற்படுபவை யாவும்

 

  1. எப்பவோ முடிந்த காரியம்
  2. நாம் அறியோம்
  3. ஒரு பொல்லாப்பும் இல்லை
  4. முழுதும் உண்மை

யோகசுவாமிகளின் தத்துவ வாக்கியங்கள் மதம் என்றில்லாமல் பொது வாழ்க்கைக்குக் கை கொடுக்கும் நங்கூர மகாவாக்கியங்கள் என்று அவரைப் பின் பற்றிய உலகளாவிய ஈழத் தமிழரும் வெளி நாட்டுக்கலாச்சாரத்தினரும் ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு  மேலாக எடுத்துக்காட்டி வருகின்றனர்.

யோகசுவாமிகள் செந்தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்த, அண்மை நூற்றாண்டிற்குரிய தமிழ் யோகியாவார். அவர் சிந்தனையே சைவ சித்தாந்தக் கொள்கைகளும், தத்துவங்களும் தாம்.

யோகசுவாமிகள், யாழ்ப்பணக்குடா நாட்டில் வலிகாமம் பிரதேசத்தில் பிரபல மாவிட்டபுரம் கந்தர்சாமி கோவிலுக்கு அருகாமையில் அம்பலவாணரிற்கும், சின்னாச்சி அம்மாவிற்கும் 1872ம் ஆண்டி வைகாசி மாதத்தில் மகனாகப் பிறந்தவர் . அவரது இயற்பெயர் சதாசிவன். அவரது அருமைத்தாயார் சிறுவன் சதாசிவன் பத்தாம் வயதை அடையமுன்னரே காலமாகிவிட்டார். இதனால் சதாசிவன் அவருடைய உற்றாரால் வளர்க்கப்பட்டார்.

 

சதாசிவன் சிறுவயதிலேயே மாந்தோப்பு நிழல்களில் தனிமைதனைத் தழுவி தாமாகவே கல்வியில் சிறப்புக்காட்டியவர். கல்விமுடித்து அவர் அரசின் இறைபாசனத் திணைக்களத்தில் Irrigation Department பொருள் மேற்பார்வையாளராக ஈழத்தின் வன்னிக்காட்டுப் பகுதியான கிளிநொச்சியில் பணிபுரிந்து வந்தார்.

 

அவரின் இறையருள் நிழலானது பழைய யாழ்ப்பாண இராச்சியத் தலைநகரான நல்லூர் கந்தசுவாமி கோயில் புறவீதியில் நடந்து கொண்டிருக்கும் போது செல்லப்பன் அடிகளாரின் சந்திப்பு ஏற்பட்டது. செல்லப்பன் அடிகளார் நல்லூர்க் கந்தசாமி கோவிலின் தேர்முட்டி அடியில் தரித்து இருந்தார். அவ்வப்போது வந்த சதாசிவன் மீது திடீரென “டேய் நீ யார்” என்றொரு தத்துவ ஆன்மீகக் கேள்விக்கணையைத் தொடுத்தாராம். இதை கேட்டுத் திகைத்த சதாசிவனிற்கு ஞானியார் செல்லப்பன் “ஒரு பொல்லாப்பும் இல்லை, இதுவே அது, அதுவே இது யாருக்குத்தான் தெரியும்” என்றார். அந்த அறநெறித் தத்துவங்கள் சதாசிவனிற்கு அண்மையில் பிரகாசமான மெஞ்ஞான ஒளிதவிர மற்ற ஒன்றையும் இல்லாத நிலைக்குட்படுத்தியது.

அதே போன்று இன்னொரு தரம்  நல்லூர்க் கோவிலடிச் சந்திப்பிலும் செல்லப்பன் அடிகள் சதாசிவனாகிய யோகசுவாமிகளிடம் “உள்ளே போ தியானம் செய், இவ்விடம் தரித்திரு நான் மீழும் வரையில்” என்று கூறினாராம் சதாசிவம் அடிகள் மூன்று நாள் கழித்து திரும்பிய போதும் யோகசுவாமிகள் தம் குரு திரும்பும் வரை, அடிகள் அறக்கட்டளைப்படி அதே இடத்தில் தியானித்துக் காத்திருந்தார்.

 

யோக சுவாமிகள் குருநாதரின் அறக்கட்டளைக்கேற்ப   அன்றிலிருந்து நல்லூரையே தமது வதிவிடமாக்கிக் கொண்டார். இதன் பின்னர் குருநாதர், யோகர் சுவாமிகளையும், இன்னும் ஒரு சீடனையும் பல வித அறச் சோதனைகளிற்கு உள்ளாக்கினார். கற்பாறை மீது பகலும் இரவுமாகத் தொடர்ந்து 40 நாட்கள் தியானித்தல், அதைத் தொடர்ந்து செல்லப்பன் அடிகளாரின் வேண்டுகோள் படி யோகசுவாமிகள் ஒரு

 

வழிபாட்டுத்தலத்தில் இருந்து மற்றையதற்குப் பிச்சையெடுத்து செல்லும் சஞ்சரிக்கும் யோகியாக மாறினர்.

 

ஈழ நாட்டின் வடபகுதியிலிருந்து தென்பகுதியில் சுமார் 300 மைல்கள் தாண்டியிருக்கும் கதிர்காம முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை மேற்கொண்டு சென்றார். 1911இல் யோகசுவாமிகள் யாழ்ப்பாணம் குருநாதர் செல்லப்பன் அடிகளாரிடம் மீண்டார். குருநாதரும், கூட இருந்த பக்திமான்களின் முன்னே அவரை வரவேற்று,  “வா பிரபஞ்சமானது பொறுத்தருளும் வரை உனக்கு ஆன்மீக மௌலிதனைச் சூட்டுகிறேன்” என்றாராம். அதே ஆண்டில் செல்லப்பன் அடிகள் சிவபதம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து யோகசுவாமிகள் தமது குருநாதர் அறக்கட்டளைப்படி யாழ்ப்பாணக்குடா நாட்டில் தென் மேற்கு கடலருகே உள்ள கொழும்புத்துறை என்னும் ஊரில் பெரும் மரமொன்றின் அடியில் அடை மழையோ, கொடிய வெய்யிலோ, எலும்பைக் குத்தும் கூதலையோ பாராது தமது தியானிப்பையும், போதனைகளையும் தொடர்ந்தார்.

அவரைப் பின்பற்றி சைவர்கள், கிறித்தவர்கள், இஸ்லாமியர், பௌத்தர் என்றில்லாமல் சகல மக்களும் பின்பற்றினர். யோகியாகி அவர் இயற்கை இன்னல்களைப் பொருட்படுத்தவில்லை எனினும் மெஞ்ஞானப்புகலிடம் பெறவந்த சீடர்கள், அன்பர்கள் வற்புறத்தலால் அண்டையில் ஒரு ஓலைக்குடிலில் வாழ்ந்தார்.

 

அவர் மக்களின் வேண்டுகோளை ஏற்று பின்னர் ஈழநாட்டின் சகல பகுதிகளிற்கும் புகையிரதம் மூலம் சென்று வந்தார். யோகசுவாமிகள் இந்திய பூமியில் காசிக்கும், சிதம்பரத்திற்கும் யாத்திரை சென்று அருணாசசல மலையேறி இரமண மகரிசியுடன் மௌன சஞ்சாரத்தியானம் செய்து யாழ்ப்பாணம் மீண்டார். மௌனத்தில் ஆழ்ந்த யோகியிடம் சீடர்கள் ‘சுவாமி நீங்கள் பின்னேரம் வரையும் பக்கத்தில் இருந்தும் மகரிசியுடன் பேசவே இல்லையே’ என்று அங்கலாயித்தமைக்கு அவர் தாமிருவரும் “சொல்வதற்கானவற்றை சொல்லியதாயிற்று” என்று மனோவியல் வலிமையை எடுத்துக்கூறினாராம்.

 

யோகசுவாமியின் தியானம், ஐம்புலனிகளிற்கப்பால் கைமுறையில் காட்டிய ஆத்ம ஒளி அருகிலிருந்த யாவரும் உணரக்கூடியதாக இருந்தாகக் குறிப்பிடப்படுகிறது. யோகசுவாமிகளின் கூற்றுக்கள், தத்துவங்கள் நற்சிந்தனைகள் என்ற தலைப்பிலும் மேலும் சிவ தொண்டன் என்ற மாதாந்தப் பத்திரிகை மூலமும் 1934ம் ஆண்டிலிருந்து பரவத்தொடங்கியது.

 

யோகசுவாமிகளை அவரின் அருமை பசு வள்ளி செல்லமாக தலையை ஆட்டி வயோதிக காலத்தில் இடுப்பை முறித்து அவர் நடமாட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. எனினும் அவர் தொடர்ந்தும் தமது எழுத்தாற்றலைப் பேணி பல சிந்தனைகளையும் தந்தார். யோகசுவாமிகள் தமது ஆசிரமத்தில் 1964 பங்குனித் திங்களில் சிவபதம் அடைந்தார்.

 

  • யோகி அருமைநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad