\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இலட்சிய சிகரம்

Abdul_kalam_MN_620x415நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக் கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா நூறு கோடி மக்கள்

இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்

இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக !!!

பாரத ரத்னா, அறிவியல் அறிஞர், அரசியல் வாதி, தமிழ்க் கவிஞர், இளந்தலைமுறையினருக்குச் சிறப்பான ஒரு வழி காட்டி, இந்தியத் திருநாட்டின் முன்னாளைய அதிபர், நாற்பது பல்கலைக் கழகங்கள் தேடிச் சென்று டாக்டர் பட்டம் வழங்கிய ஒரு மாமேதை, சமீபகாலப் பொதுவாழ்க்கையில் மிகவும் அரிதாகிவிட்ட நேர்மையையும் எளிமையையும் வாழ்நாளின் கடைசிவரை கடைபிடித்த உத்தம சீலர், புராணங்களில் கூறப்பட்டது போன்ற இச்சாமரணி (தான் நினைத்தது போலவே மரணத்தை எய்துபவர்கள்) போன்ற பல்வேறு பெருமைகளையும் சிறப்பம்சங்களையும் ஒருங்கே பெற்ற டாக்டர் அ.பெ.ஜ. அப்துல் கலாம் அவர்கள் எழுதிய கவிதையே மேலே கொடுக்கப்பட்டுள்ள கவிதை.

இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான கலாம் அவர்கள் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி இந்நிலவுலக வாழ்வை நீத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய மக்கள் அனைவரையும் மற்றும் உலகின் பல மூலைகளிலும் வாழும் பெருவாரியான இந்தியர்களையும், குறிப்பாகத் தமிழர்களையும் அன்னாரின் மரணம் பெருமளவு பாதித்ததென்றால் அது மிகையாகாது. அவரின் ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பாக இந்தக் கட்டுரையைத் தீட்டுவதன் மூலம் பனிப்பூக்கள் குழு அந்தப் புனிதரின் மரணத்திற்குத் தங்களின் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்துகிறது.

அவுல் பக்கீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம், 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி, இராமேஸ்வரத்தில் வாழ்ந்து வந்த இந்திய முஸ்லிம் தம்பதிகளான ஜெனுலாபுதீன் அவர்களுக்கும், ஆஷியம்மா அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர். இளமைக் காலத்தில், குடும்ப வறுமையின் காரணமாக, வருமானத்திற்குக் கூடுதல் செய்யும்பொருட்டு பள்ளிப் பருவத்திலேயே அதிகாலையில் செய்தித் தாள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டார். இராமேஸ்வரம் ரெயில் நிலையத்திற்கு வந்து போகும் புகைவண்டியிலிருந்து அதிகாலை நேரத்தில் விசிறியடிக்கப்படும் செய்தித்தாள் கட்டுக்களை எடுத்துப் பிரித்து வீடுவீடாகச் சென்று விநியோகிக்கும் ஒரு சிறுவன் பின்னாளில் அகில இந்தியாவுக்கும் முதற்குடிமகனானார் என்று எண்ணிப் பார்க்கவே மயிர்க் கூச்செறிகின்றதல்லவா?

கடைசிவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மாச்சாரியாகவே வாழ்ந்து முடித்து, தனது வாழ்நாளில் எவ்விதத்திலும் குற்றம் குறை காண முடியாத அளவு அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்து, மகாத்மா காந்தி வாழ்ந்த காலங்களில் நாம் வாழ்ந்திருக்கவில்லையே என்று வருத்தம் கொள்ளும் என் போன்ற சாமனியர்களின் குறைதீர்க்க மண்ணுலகு வாழ்வு வாழ்ந்து முடித்த பெரியவர் டாக்டர் அப்துல் கலாம் ஆவார்.

இராமேஸ்வரம் தொடக்கப்பள்ளியில் தன் பள்ளிப் படிப்பைத் துவங்கிய கலாம், மிகச்சூட்டிகையான பிள்ளையாக இருந்தாலும் சுமாரான மதிப்பெண்கள் எடுப்பவராகவே இருந்தார். இராமேஸ்வரத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்த அவர், திருச்சியிலுள்ள செயிண்ட் ஜோஸஃப் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் 1955 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (M.I.T) சேர்ந்து விண்வெளிப் பொறியியல் படிப்பில் (Aerospace Engineering) முதுகலைப் பட்டம் பெற்றார். இப்படிப்பின்போது, செய்முறைப் பயிற்சியில் சரியான கவனமில்லையென்று அவரின் ஆசிரியர் தனது ஏமாற்றத்தைத் தெரிவித்துக் கொண்டு, அந்த செய்முறைத் தேர்வினை வெற்றிகரமாக முடித்திடாவிடின் அவரது உதவித் தொகையை (Scholarship) முழுவதுமாக நிறுத்திவிடுவதாக மிரட்டினார். அதன்பிறகு கடின உழைப்பின்மூலம் அந்தச் செய்முறைத் தேர்வை முடித்திட அவரின் முதுகலைப் பட்டமும் இனிதே நிறைவேறியது.

முதுகலைப் படிப்பிற்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் (Defense Research and Development Organization – DRDO) ஒரு விஞ்ஞானியாக வேலைக்குச் சேர்ந்தார். இந்திய இராணுவத்திற்கு ஹெலிகாப்டர் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என்று பெருமையுடன் அழைக்கப்படும் டாக்டர். விக்ரம் சாரபாய் அவர்களிடம் நேரடியாகப் பணிபுரியும் அரிய வாய்ப்பினை இங்குதான் பெற்றார் எனினும் DRDO பணி குறித்து ஒரு அதிருப்தியுடனேயே இருந்தார் டாக்டர். கலாம். பின்னர் 1969 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (Indian Space Research Organization – ISRO) மாற்றப்பட்டு அங்கு உள்நாட்டுச் செயற்கைக்கோள் பாய்ச்சும் வாகனம் (Satellite Launcher) தயாரிக்கும் துறையின் திட்ட இயக்குனர் ஆக்கப்பட்டார். இவரது பணிக் காலத்தில் எஸ். எல். வி. 3 வாகனம் உருவாக்கப்பட்டு அது ரோகினி செயற்கைக் கோளைப் புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக ஏவியது. இந்த சாதனையைத் தன் வாழ்நாளின் ஒரு பெரிய மைல்கல்லாகக் கலாம் கருதினார்.

இந்திய தேசத்தின் முதல் அணு ஆயுத சோதனையான புன்னகைக்கும் புத்தன் (Smiling Buddha) திட்டத்தைப் பார்வையிடுவதற்காகப் பிரதிநிதியாக டாக்டர். ராஜா ராமண்ணாவால் அப்துல் கலாம் அழைக்கப்பட்டார். கலாம் ப்ராஜக்ட் டெவில் மற்றும் ப்ராஜக்ட் வேலியண்ட் ஆகிய இரண்டு திட்டங்களும் இயக்குனராகப் பணியாற்றினார். அன்றைய பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி, மத்திய அமைச்சரவையின் பரிந்துரையைமீறி ISRO வின் ஆராய்ச்சிக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்ததற்கு டாக்டர். கலாம் அவர்களின் முயற்சி முழுமுதற் காரணமாகும். அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் அவர்களும் கலாமின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்ததோடு, மத்திய அரசின் நிதியுதவியும் மற்றும் ஆதரவும் கிடைப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இப்பணிகளுடன் கூடி, டாக்டர். கலாம் 1992 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பிரதம மந்திரியின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் பணி புரிந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் கலாம் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையான பொக்ரான் II அணு ஆயுதச் சோதனையில் அரசியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின்மூலம் பெரிய பங்களித்தார்.

இருதய நோயினைக் குணப்படுத்தத் தேவையான கருவிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியிருந்ததால் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்பட்டது. ஏழைகள் எவ்வாறு அவ்வளவு பணத்தைச் செலவிட முடியும் என்ற ஆதங்கத்தில் உந்தப்பட்டுத் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார். டாக்டர் சோமராஜுவுடன் சேர்ந்து 1998 ஆம் ஆண்டு இதயநோயாளிகளைக் குணப்படுத்துவதற்கான ஸ்டெண்ட் கருவியைக் கண்டுபிடித்தார். இதற்கு, கலாம்-ராஜு ஸ்டெண்ட் என்றே பெயர் வைக்கப்பட்டது. பின்னர் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான காலிப்பர் தயாரிப்பிலும் அப்துல் கலாமின் பங்களிப்புகள் மிக முக்கியமானவை.

அதன்பிறகு, 2002 ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்பின் மிக உயர்ந்த பதவியான, இந்திய தேசத்தின் முதல் குடிமகன் – ஜனாதிபதி – பதவி டாக்டர் கலாமுக்குக் கிடைத்தது. அவர் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்ட திருமதி. லக்‌ஷ்மி சாகலை எளிதாகத் தோற்கடித்து இந்தப் பதவியைப் பெற்றார். பொதுவாக ஜனாதிபதி பதவி என்பது பொதுவாக சம்பிரதாயத்துக்கான பதவி என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கையில், அந்தப் பதவியின் உண்மையான அதிகாரத்தை ராஜதந்திரத்துடன் உபயோகித்து நாட்டை இரண்டு முறை பேராபத்திலிருந்து காத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரின் பதவிக் காலத்தில், மக்களின் அதிபர் என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

இந்திய ஜனாதிபதிகளிலேயே, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், டாக்டர் ஜாகிர் ஹுஸேய்ன் அவர்களுக்கும் அடுத்தபடியாக ஜனாதிபதி ஆவதற்கு முன்னரே பாரத ரத்னா விருது பெற்ற மற்றொருவர் டாக்டர் அப்துல் கலாம் என்ற பெருமையுடையவர்.  பல பெருமைப்படத்தக்க முயற்சிகளை மேற்கொண்ட கலாம், தனது ஜனாதிபதிக் காலத்தில், ஒரு சில சர்ச்சைக்குரிய முடிவுகளையும் எடுக்க வேண்டியதாயிற்று.

தனது பதவிக் காலத்திற்குப் பிறகு, இரண்டாவது முறையாக அவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென்பதே பலரது விருப்பமாக இருந்தது. பல அரசியல் கட்சிகளும் அதனை ஆதரிப்பதற்குத் தயாராக இருந்தாலும், போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவதென்றால் தனக்கு உடன்பாடு என்றும், இல்லையாயின் தான் தேர்தலில் போட்டியிடத் தயாரில்லையென்றும் அவர் முடிவெடுத்தார். மீண்டும் 2012 ஆம் ஆண்டு பிரதீபா படேலின் பதவிக்காலம் முடிவுற்றதும் பலரும் கலாமே திரும்ப வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டாலும், அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை.

ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் அவர் முழுமூச்சாக சமூகநலனுக்காகவே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்று சொல்லலாம். நாட்டை வலுவாக்க இளைஞர்களாலேயும், குழந்தைகளாலேயும்தான் இயலும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த அவர், முழுநேரமும் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தனது உரையின் மூலம் அவர்களைச் சிந்திக்க வைத்து, உத்வேகம் கொள்ளச் செய்வதையே தனது முழுமுதற் பணியாக ஏற்றுக் கொண்டார். பல IIM நிறுவனங்களிலும், IISC மற்றும் IIT போன்ற நிறுவனங்களிலும் சென்று சொற்பொழிவுகள் செய்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதில் மும்முரமாக இருந்தார். இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வில் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.

வாழ்க்கையில் பல உயரிய பதவிகளை வகித்து, பலராலும் எட்ட இயலாத உயரங்களைத் தொட்டிருந்தாலும், பணிவு என்பது இயல்பாக வாய்க்கப்பட்டவராக அவர் இருந்தது மிகவும் போற்றுதலுக்குரியது. இந்தப் பண்பே அவரின் அறிவுரைகள் பலரின் மனதிலும் ஆழமாய்ப் பதிவதற்குக் காரணமாக இருந்தது என்றால் அக்கூற்றில் சற்றும் மிகைப்படுத்துதல் இருக்காது.

இதுபோன்ற வியத்தகு பெருமைகளையுடைய பெருந்தகை, நம்மண்ணில், நம் காலத்தில் வாழ்ந்தார் என்பதே தமிழர்களாகிய அனைவருக்கும் மிகப் பெருமையான விடயம். குருத்துகள் அனைத்தையும் கனவு காணச் சொன்ன அந்த நிஜ வாழ்க்கை நாயகன், பல இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் நெஞ்சினில் நீங்கா இடம் பெற்று நீடுழி வாழ்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. வாழும் நாட்களில் விந்தைபல புரிந்த அந்தப் பெரியவர் தனது சாவிலும் விந்தை புரிந்தார் என்பதே நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய குறிப்பாகும். நான் இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு உரையாற்றும் தருவாயில் மரணம் சம்பவிக்க வேண்டும் என்பதே அவரின் மிக முக்கிய ஆசைகளில் ஒன்றாம் – அதேபோல், அனைத்து மாணவர்களும் பார்த்துக் கொண்டிருக்கையில், அவர்களுடன் உறவாட, உரையாடத் தொடங்குகையில் அவரின் மரணம் சம்பவித்து, ஒரு மனிதனின் மரணத்தையே பொறாமைப் படும்படிச் செய்த அப்துல் கலாம் குறித்துப் புகழ்ந்து எழுதுமளவுக்கு நம் எழுத்துக்கு வலுவில்லை என்பதே உண்மையாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

என்ற பொய்யாமொழிப் புலவனின் கூற்றுப்படி வானுறையும் தெய்வங்களுக்குள் ஒன்றாகச் சென்று சேர்ந்த கலாம் அவர்களின் மரணத்திற்கு நாம் தரும் சன்மானம் அவர்கண்ட நெறியில் வாழ்ந்து, அவர் கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றேயன்றி வேறெதுவுமில்லை என்றியம்பி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வணங்கி அமைவோம்.

   வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad