உலகச் செம்மொழி – அத்தியாயம் 17
(அத்தியாயம் 16 செல்ல இங்கே சொடுக்கவும்)
இன்றைய தமிழுக்கும் கொடுந்தமிழுக்கும் சற்றே வித்தியாசங்கள் இருப்பினும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்னும் தமிழ் மறபிற்கு ஏற்ப பல புதியவைகள் உள்வாங்கப்பட்டும், சில கழிக்கப்பட்டும் தமிழ் இன்றைய நவீனத் தமிழாக உருப்பெற்று உள்ளது. இது மற்றைய திராவிடம் போல் பிற மொழிகளுடன் கலந்து தனித்தியங்கும் தன்மை போகாமல் மூலமொழியின் சாரத்தோடே பல்லாயிரம்ஆண்டுகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளமையான மூத்த மொழி தமிழ் மொழி. இந்திய துணைக்கண்டத்து மொழிகள் அனைத்தையும் வட திராவிடம், நடு திராவிடம் மற்றும் தென் திராவிடம் எனப் பிரிக்கும் தேவநேயப் பாவாணர் கூற்றிற்கு இணங்க அனைத்து மொழிகளிலும் தமிழின் சாரமும் வீச்சும் சற்று அதிகமாகவே இருக்கும்.
உலக வரைபடத்தில் கிழக்கில் உள்ள சப்பான் முதல் தாய்த் தமிழகம் வரையிலான பகுதிகளில் ஆங்காங்கே வழங்கப்படும் மொழிகளில் தமிழ் எவ்வாறு கலந்திருக்கின்றது என்பதை இத்தொடரில் கண்டுவந்தோம்.
தாய்த் தமிழகத்திலும் இந்தியத் துணைக் கண்டத்திலும் உள்ள மொழிகள் எவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையாக உள்ளன என்பதைப் பாவாணரின் கூற்றில் அறிந்த நாம் இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு மேற்கு நோக்கி அரபு தேசம் செல்லும் நேரம் வந்துவிட்டது. இந்திய மொழிகளைப் பற்றிச் சொன்ன இந்தக் கட்டுரையில் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்குமான தொடர்பைப் பற்றிச் சொல்லாமலே நகர்கின்றோம்
என்பது தெரிந்தாலும், அரபு தேசம் செல்வதற்காக கஜா படகைக் கொண்டு வந்ததால் மட்டுமல்லாது, உலகின் பழமையான மொழிகள் என்று சொல்லப்படுகின்ற லத்தின், கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம், சீனம்
ஆகியவற்றிற்கும் தமிழுக்குமான தொடர்பை ஒன்றாக ஆராய்வதே மேல் என்ற நோக்கில் இப்போது தலைமலை (கோழிக்கோடு) இருந்து படகேறி பாம்புக்கடல் வழியாக நாம் நாகர் தேசம் அடைவோம்.
அரேபியருக்கும் தமிழர்களுக்கும் உள்ள ஒற்றுமை இன்று நேற்று வந்ததல்ல. இது சில ஆயிரம் ஆண்டுகளாய் இருந்துவரும் கடல் வணிகம் காரணமாக ஏற்பட்டது. மொழியாளர்களின் கூற்றுப்படி
அரபி என்பது அரவி என்னும் சொல்லில் இருந்து வந்திருக்க வேண்டும். ஆகையால் தான் நான் ‘ பாம்புக்கடல் வழியாக நாம் நாகர் தேசம் அடைவோம்’ என மேலே குறிப்பிட்டேன்.
அரேபியத்தில் வணங்கப்படும் அல்லாஹ்’வுக்குரிய மூலச் சொல் அல், இல், எல் என்பது ஆகும். “எல்’ என்றால், சூரியக் கடவுள் என்ற பொருள் உண்டு. உருவம் இல்லாத ஒளிக் கடவுள் என்ற பொருள் படியே
அல்லாஹ் என அழைக்கபடுகிறார்.
அல் அல்லது இல் என்பது உருவம் இல்லாதது என்ற பொருளில் வழங்கப்படுகின்றது.
’அல் ஒரு பொழுதில்’ ,‘அல்லும் பகலும்’ போன்ற சொற்கோவைகள் தமிழ் இலக்கியத்தில் ஒத்த பொருளில் வழங்கப்படுகின்றது.
(தொடரும்)
-சத்யா-