\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கோடை மகிழ்வுலா

PICNIC_08AUG2015_620x415_PIC06ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று 2015க்கான கோடை மகிழ்வுலாவை (Summer Picnic), மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஹைலேண்ட் ஏரிப் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தது. ஏரிக்கரையோரம், மரக்கூடாரம், புல்வெளி மைதானம் என ரம்மியமான லொக்கேஷன் பிடித்திருந்தார்கள். சூரிய வெளிச்சத்தில், புல்வெளியின் பச்சை மின்னிக் கொண்டிருந்தது. காலை பதினொரு மணிவாக்கில் இருந்து, மினசோட்டாத் தமிழர்கள் அங்கே கூடிக் கொண்டிருந்தனர். எண்பதுகளின் இளையராஜா பாடல்களை, ஏரிக்கரைக் காற்றில் கரைய விட்டு, சங்கத்தின் நிர்வாகிகளும், தன்னார்வலர்களும் வந்தவர்களைச் சிறு இனிப்பு மிட்டாய் கொடுத்து வரவேற்றுக் கொண்டு இருந்தார்கள்.

PICNIC_08AUG2015_620x178_PIC05Potluck என்றழைக்கப்படும் கூட்டு உணவு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், வந்தவர்கள் அவரவர் வீட்டில் சமைத்த உணவை எடுத்து வந்து, அங்கே கூடாரத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த மேஜைகளில் வைக்க, அவை பரிமாறுவதற்கு ஏற்றாற்போல் வரிசைப்படுத்தப்பட்டு, விருந்துத்துறை டாஸ்க் ஃபோர்ஸால் துரிதமாகத் தயார் நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

PICNIC_08AUG2015_620x204_PIC01வந்தவர்கள் அனைவரும் கூடி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி முடிந்ததும், மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி, இளைஞர்களின் எழுச்சி தீபம், திரு. அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் மினசோட்டா வந்து கலந்துகொண்ட நிகழ்ச்சி நினைவுகூறப்பட்டது. அச்சமயம் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அப்துல்கலாமின் லட்சியக் கனவு விதைப்புக் கூட்டமாக, அவருடைய 10 கட்டளைகளை வந்திருந்தவர்கள் உறுதிமொழியாக எடுத்துக்கொண்டனர். அது அன்றைய தினத்தின் ஒன்றுகூடலுக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தியது.

PICNIC_08AUG2015_620x626_PIC02பிறகு, புல் தரை மைதானத்தில் குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. முதலில், சாக்குப் பை ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இந்தப் பந்தயத்திற்காகவே அழகாகத் தயார் செய்யப்பட்டிருந்த அந்த வெள்ளை நிற டிசைன் கோணிப்பைகளைப் (Sack Race bags) பார்த்தபோது தான், இது ஒரு “சர்வதேச விளையாட்டுப் போட்டி” என அறிந்துகொண்டேன்!!

PICNIC_08AUG2015_620x415_PIC03விளையாட்டுப் போட்டிகளுக்குச் சிறு இடைவேளை கொடுத்து, மதிய உணவுப் பரிமாறல் தொடங்கியது. ஒரு பக்கம் அசைவமும், மற்றொரு பக்கம் சைவமும் என அமைக்கப்பட்டிருந்தன. வடை, சட்னி, உருளை வறுவல், வெஜ் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, புளி சாதம், எலுமிச்சைச் சாதம், சுண்டல் புளிக்குழம்பு, வட இந்திய ரொட்டியான நான் (Naan!!), சன்னா மசாலா, தயிர்ச் சாதம், பால் பாயாசம், பருப்புப் பாயாசம் எனப் பல வீட்டுச் சமையல் ருசி அங்கே சங்கமித்து இருந்தது. முன்னமே, மின்னஞ்சல் மூலம், உணவுப்பட்டியல் அனுப்பப்பட்டு, அவரவர் விருப்பத்தின்பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செய்யப்பட்டவை என்று ஒரு ஒருங்கிணைப்பு இருந்ததால், எவ்விதக் குழப்பங்களும் இல்லாமல், சைவம் – அசைவம் என அனைத்து வகை உணவுகளும் வெரைட்டியாகப் போதிய அளவில் இருந்தன. அவரவரே தேர்ந்தெடுத்துச் செய்த உணவுவகைகள் என்பதால், எல்லாமே பெஸ்ட்டு தான்.

PICNIC_08AUG2015_620x494_PIC07தன்னார்வலர்கள் பரிமாற, வந்திருந்தவர்கள் வரிசையில் நின்று வாங்கிச் சென்று, பிறகு அவரவர் குழுவுடன் ஆங்காங்கே அங்கிருந்த மர மேஜைகளிலும், புல்வெளியிலும் உட்கார்ந்து கதைத்துக்கொண்டே பசியாறினார்கள். குழந்தைகள், புது நண்பர்களைக் கண்டுகொண்டு, மகிழ்ச்சியுடன் ஓடியாடி விளையாட, அன்றைய மதிய உணவு ஊட்ட இன்சார்ஜ் எடுத்திருந்த பெற்றோர்கள், அவர்களை விரட்டி விரட்டி உணவு புகட்டிக் கொண்டிருந்தனர்.

PICNIC_08AUG2015_620x410_PIC08அடுத்த ரவுண்ட் உணவெடுக்கப் போனால், அதே உணவு வகை இல்லாமல், அதுபோல் இன்னொரு வெரைட்டியோ, வேறு ஒரு வெரியண்ட்டோ கிடைக்கப் பெறும் அனுபவம் அன்று கிட்டியது.

PICNIC_08AUG2015_620x318_PIC04உணவு இடைவேளைக்கு பிறகு, விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. ஸ்பூனில் எலுமிச்சைபழத்தை வாயில் வைத்துக்கொண்டு, ஓடும் போட்டியைப் பார்த்தபோது, ஊரில் தெருவில் கோவில் திருவிழாவை ஒட்டி, பொங்கல், தீபாவளிப் போன்ற பண்டிகைகளை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்து சென்றன.

PICNIC_08AUG2015_620x553_PIC10குழந்தைகளுக்கான போட்டிகள் நடந்து முடிந்த பிறகு, பெரியவர்களுக்கான போட்டிகள் தொடங்கியது. அம்மாக்கள், தங்கள் குழந்தைகளைப் பாதத்தில் ஏந்திக்கொண்டு செல்லும் விளையாட்டு ஒரு பக்கமும், அப்பாக்கள் நண்பர்களுடன் கூடி ஆடிய கபடி விளையாட்டு மற்றொரு பக்கமும் நடந்தது. வாழ்க்கையிலும், பெரும்பாலும் அப்படித்தானே நடக்கிறது?

கபடி அணிகள் அங்கேயே அப்படியே உருவாகி, போட்டிகள் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருந்தன. கபடி விளையாட்டைக் காணும் போதெல்லாம், இது போல் சுவாரஸ்யமான விளையாட்டு வேறொன்று உண்டா? என்றே தோன்றும். வந்திருந்த பெரும்பாலான ஆண்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆட்டமும் விறுவிறுப்பும் குதூகலமாக நடந்தது. “மினசோட்டா கபடிக் குழு” ரெடி என்று தயக்கமின்றிச் சொல்லி விடலாம். பார்வையாளர்களில் இருந்த பெண்கள் காட்டிய ஆர்வத்தைப் பார்த்த போது, அடுத்த ஆண்டு மகளிர் அணியும் உருவாகிவிடும் போல் தெரிந்தது.

கபடி ஆட்டங்கள் நடந்து கொண்டிருந்த போதே, இன்னொரு பக்கம் பெண்களுக்கான கோலப் போட்டி தொடங்கி விட்டது. (நேர மேலாண்மை போலும்) பத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். “தேசியம்” என்ற தலைப்பில் கோலம் போடுவதற்கு 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டது. சாக்பீஸே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், கோலப்பொடி கொண்டு கோலம் போடுவதற்கும் ஒரு அணி இருந்தது. திரும்பவும், பொங்கலை முன்னிட்டு மார்கழி மாதம் தெருவுக்குத் தெரு நம்மூரில் நடக்கும் கோலப் போட்டிகள் நினைவுக்கு வந்தன.

தமிழகத்திலிருந்து வந்திருந்த ஒரு கோல நிபுணர் குழு, கோலங்களை ஆராய்ந்து, தலைப்புக்கேற்றது, நேர்த்தியானது, எந்த வகையைச் சார்ந்தது எனத் தரம் பார்த்து, சிறந்த கோலங்களைத் தேர்ந்தெடுத்தது. (பல வருடங்களாகத் தமிழகத்தில் கோலங்கள் போட்டு வரும், இங்கே விருந்தினராக வருகை வந்திருந்த இரு அன்னையரைத் தான், நுணுக்கங்கள் பல அறிந்திருந்ததால், நிபுணர்கள் என்கிறேன். சரிதானே?!!)

கோலப்போட்டி நடக்கும் போதே, குழந்தைகளுக்கான உரியடிப் போட்டியும், குழந்தைகளின் பேராதரவுடன் நடந்து முடிந்தது. கோலப்போட்டி முடிந்தவுடன், உடனே ‘தானிய சமையல் போட்டி’க்கான தேர்வும் தொடங்கியது. ஆர்கனைஸ்சர்ஸ், என்னா பாஸ்ட்டுடே?!!!

தானியங்கள் கொண்டு சமைக்கப்படும் சமையலுக்கான போட்டியில், ஐந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். வீட்டிலேயே சமைத்து எடுத்து வரும் போட்டியென்பதால், ரெடி என்றதும், மேஜையில் ஐட்டங்கள் கலர்ஃபுல்லாக ஆஜரானது. குஸ்கா, உசிலி, பணியாரம், சுண்டல், சுசி என்று தானியங்களிலேயே தங்கள் இன்னோவேஷனைக் கன்னாபின்னாவென்று காட்டினார்கள் மினசோட்டாவின் கிச்சன் கில்லாடிகள்.

இதற்குள், சாயங்காலம் ஆனதால், அடுத்ததாகத் தேநீர் களம் இறங்கியது. கூடவே, பிஸ்கட், சிப்ஸ் வகையறாக்கள். யப்பா!! பாசக்கார பயலுவகளா!!! இப்படிப் பண்றீகளேப்பா??

தேநீருக்குப் பிறகு, தேனிசை விருந்து வேண்டாமா? பாட்டுப்போட்டி துவங்கியது. போட்டி என்னவென்றால், ஒரு தமிழ்ப்பாடலின் சரணம் ஹம்மிங் செய்யப்படும். அந்தப் பாடலின் பல்லவியைச் சரியாகக் கண்டுபிடித்துப் பாடுபவருக்கு, பரிசாக ஒரு மிட்டாயும் (காலையில் உள்ளே எண்டராகும் போது கொடுத்தார்களே!! அதேதான்!! :-)), அனைவரின் முன்பு அந்தப் பாடலைப்பாடும் வாய்ப்பும் (தண்டனை?!!) கொடுத்தார்கள். சும்மா சொல்லக்கூடாது. செம இண்ட்ரஸ்டிங். தமிழர்களின் பொதுக் குணம் என்று பாடல்கள் மீதான ஈர்ப்பைச் சொல்லலாம். அவ்வளவு ஆர்வத்துடன் அனைவரும் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் மூலம் உள்ளூர் எஸ்பிபிக்கள், மனோக்கள், ஹரிசரண்கள், சித்ராக்கள் எனப் பலரை அடையாளம் காண முடிந்தது.

இதற்குப் பிறகு, போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றோருக்குப் பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டன. வந்திருந்த அனைவரும் கூடி, ஒரு பிரமாண்ட குழு புகைப்படமும் எடுக்கப்பட்டது. இத்தனை பேரை ஒருங்கிணைத்து ஒரு போஸ் வாங்குவதும், அதனை ஒரு புகைப்பட ப்ரேமுக்குள் கொண்டு வருவதும் ரொம்பச் சிரமம் தான். கூடியிருந்த புகைப்படக்கலைஞர் குழு சிரமம் பார்க்காமல், குவியம் பார்த்து அதனை அழகாகக் காட்சிப்படுத்தினர்.

முடிவில், கயிறு இழுக்கும் போட்டி. அச்சமயம் அங்கு, அந்தக் கயிறு மட்டும் தான் டையர்ட்டாகாமல் இருந்தது. அதையும், சிறுவ- சிறுமிகள், பெண்கள், ஆண்கள் எனப் பல அணிகளாகச் சேர்ந்து இழுத்து டையர்ட்டாக்கினார்கள். அது முடிந்தவுடன், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு மிகுந்த நிறைவுடன் விடைபெற்றனர்.

அடுத்து, கட்டுரையின் கருத்து சொல்ற பகுதி. கேட்டுக்கோங்க, மக்கழே!!! 🙂

இம்மாதிரி ஒன்றுகூடல்கள் தான், ஒரே மாதிரி சென்றுகொண்டிருக்கும் சலிப்பு மிகுந்த தினசரி வாழ்க்கையில் ஆசுவாசப்படுத்தும் சந்தர்ப்பங்கள். அதிலும், தமிழால் ஒன்றிணைந்த மனங்களுக்கு, பொதுவான ரசனையுடன் கூடிய மனிதர்களைச் சந்திக்கும் போது பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. புதுத் தொடர்புகள், புது விஷயங்களை, அறியாத தகவல்களை அறிதல் என்று இவ்வகை ஒன்றுகூடல்களின் பலன் அன்றோடு முடியப் போவதில்லை. விளைவுகள், பிறகும் விளைந்துகொண்டே இருக்கும். வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்களுக்கு, அன்றைய நிகழ்வுகள் பலவகைகளில் மலரும் நினைவுகளாக இருந்திருக்கும். கண்டங்கள் தாண்டி, இங்கிருப்பதால், அதை, இதை மிஸ் செய்கிறோமோ என்றிருக்கும் மனக்குறைகளைக் களைந்து, ஒரு நிறைவைக் கொடுக்கவல்லது இவ்வகை நிகழ்வுகள். வருடாவருடம் மேலும் சிறப்புடன், மெருகேற்றத்துடன் இந்தக் கோடை மகிழ்வுலாவை ஏற்பாடு செய்யும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும், இதற்கு உழைக்கும் தன்னார்வலர்களும் பெரும் நன்றிக்கு உரித்தானவர்கள்.

இனி, அடுத்தக் கோடையில் சந்திப்போம், நண்பர்களே!!! என்றெல்லாம் மினசோட்டாவில் சொல்ல முடியாது. மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தினர் அடுத்த நிகழ்வுக்கான திட்டமிடலை இப்போதே தொடங்கி இருப்பார்கள்!!! 🙂

ஸோ, விரைவில் சந்திப்போம்!!!

–          சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad