\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வானவில்லின் மறுபக்கம்

Filed in இலக்கியம், கதை by on August 31, 2015 0 Comments

vaanavil-620x620நீ இன்னும் மேல மேல பறந்துகிட்டே இருக்கணும்மா.. எழுந்திரு ..” அமெரிக்காவில் மேற்படிப்புப் படிக்க வாய்ப்புக் கிடைத்த விஷயம் அறிந்தவுடன் அவளது அக்கா சாந்தி அவளை ஆசிர்வதித்துச் சொன்னது ராஜியின் மனதில் ஓடியது. எவ்வளவு பெருமைப்பட்டார்?

‘எங்க வம்சத்தில யாருமே வெளிநாட்டுக்குப் படிக்கப் போனதில்லை .. இவ அமெரிக்கால நாலு காலேஜுக்கு அப்ளை பண்ணா .. நாலு காலேஜ்லேயிருந்தும் சேரச் சொல்லி   லெட்டர் அனுப்பியிருக்காங்க .. எங்க சேர்றதுன்னு அவ தான் டிசைட் பண்ணணும்..’ கிட்டத்தட்ட திருவான்மியூர் சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைவரிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போன சாந்தியக்காவின் முகம் கண் முன்னே தெரிந்தது. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு பார்வை மங்கலானது. மினியாபொலிஸின் மே மாத மழையால் சதசதவென்றிருந்த நடைபாதையில் குத்து மதிப்பாக நடந்து கொண்டிருந்தாள். சற்று நேரத்துக்கு முன் எமிலியும், ஜெஸ்ஸியும் சிரித்தது கோபமூட்டியது சாந்தியின் கனவுகளை எல்லாம் அவர்கள் உடைத்தெறிந்து விட்டதாக குற்ற உணர்ச்சி பொங்கியது ராஜிக்கு. சாந்திக்கு மட்டுமல்லாமல் தங்களது வம்சத்துக்கே தீராத அவமானமல்லவா? நடந்து கொண்டே இருந்தாள் அவள்… இலக்கில்லாமல்.  இதற்கு என்ன தீர்வு?

மிக நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் ராஜி. அவளுடைய அக்கா சாந்தி தான் அவளுக்கு எல்லாம். எட்டு வயதில், அவளுடைய தந்தை இறந்ததிலிருந்து குடும்பச் சுமை முழுவதையும் ஏற்றுக் கொண்டதோடு ராஜியைத் தனது மகள் போலவே நினைத்து வளர்த்தவள் சாந்தி. தங்கள் குடும்பத்தை எப்படியாவது முன்னுக்குக் கொண்டுவரப் படாத பாடுபட்டு உழைத்தவர். கரூரில், டி.என்.பி.எல். அலுவலகத்தில் நிர்வாக நிலையில் பணியாற்றினாலும் பெரிய வருமானம் இல்லை. அவரது நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தது ராஜி மட்டும் தான். பிளஸ் 2 தேர்வில் அவள் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று, பயோமெடிக்கல் படிக்க வேண்டும் என்று கேட்ட போது, ஒரு கேள்வி கேட்காமல் கடனை உடனை வாங்கி அவளைச் சென்னையில் ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்து விட்டாள் சாந்தி. தூரத்துச் சொந்தமான நடேச மாமாவின் வீட்டில் தங்கிக் கல்லூரிக்குச் சென்று வர ஏற்பாடும் செய்து தந்தாள். நல்ல முறையில் துவங்கிய ராஜியின் கல்லூரி வாழ்வில் சோதனையாக வந்தது நடேச மாமாவின் சில்மிஷங்கள். கிராமத்துப் பெண்ணின் இயல்பைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயன்ற அவரின் சீண்டல்களின் விகற்பத்தை அவள் அறிந்திருக்கவில்லை. காதோரம் நரை துளிர்த்திருந்தாலும், ராஜியின் பருவமும் வாளிப்பும் அவரை முறுக்கேற்றிக் கொண்டிருந்தன. அவளது அப்பாவித்தனம் அவருக்குத் தைரியத்தை அளிக்கச் சில சமயங்களில் நேரிடையாகத் தவறு செய்யக் கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு நெருங்கிய போதுதான் அவரது வக்கிரம் தெரிய வந்தது. யாரிடமும் சொல்ல முடியாமல் குமைந்து போனாள் ராஜி. மெல்ல அவளது படிப்பைப் பாதிக்கும் அளவுக்கு அந்த மனவுளைச்சல் அதிகரித்த போது பொறுக்க முடியாமல், கல்லூரி ஹாஸ்டலில் தங்க முடிவெடுத்தாள். ஆனால் அக்காவிடம் இதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் சுத்தி வளைத்து ஏதேதோ காரணங்களைச் சொல்ல, தனது தங்கையை விடுதியில் தங்க வைக்க மனமில்லாத சாந்தி மாற்றல் வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தாள்.

கரூரில் இருந்தபோதாவது ஓரளவுக்குச் சமாளிக்க முடிந்தது. சென்னைக்கு வந்த பின்பு சேமிப்பு என்பதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாமல் போனது.  ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் கதை தான். இருந்தாலும் ராஜி படிப்பை முடித்துவிட்டால் தனது சுமை குறையும் என்ற கனவோடு வாழ்ந்து வந்தவள் சாந்தி. ராஜி பட்டப்படிப்பை முடித்த போது தொலைவில் வெளிச்சம் தெரிவது போலுணர்ந்த போதும், அவளது மேல்படிப்புக்கு அமெரிக்காவில் சிறந்த வாய்ப்புகள் இருப்பதாகக் கல்லூரிப் பேராசிரியர்கள் எடுத்துச் சொன்னது அந்த வெளிச்சத்தை மேலும் தள்ளிப் போட்டது. அந்தச் சிறிய வயதில், அவ்வளவு எளிதில் எவருக்கும் கிடைக்காத வாய்ப்பு அவளைத் தேடி வந்தாலும், அவளைத் தனியே அனுப்புவதற்கு அரை மனதோடு தான் ஒப்புக் கொண்டாள் சாந்தி.

மினசோட்டா வந்த புதிதில் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது ராஜிக்கு. மெம்ஃபிஸில் இருக்கும் தனது மேனேஜரின் அண்ணன் உதவி செய்வார் என்று  சாந்தி சொன்னது எவ்வளவு அபத்தம் என்பது பலமுறை அவரது எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயன்றும் பேச முடியாமல் போனபோது தெரிந்தது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விரிந்திருந்த கல்லூரி கேம்பஸில் நேரத்துக்கு வகுப்பைக் கண்டுபிடித்து போவதற்குள் தலை சுற்றிப் போனது. மாட்டுக்கறியோ, பன்றிக்கறியோ சேர்க்காத உணவை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, பாத்ரூம் எப்போது காலியாக இருக்கும் என்றறிந்து வரிசையில் நின்று குளிப்பது வரை அனைத்தும் போராட்டமாகவே இருந்தது. கல்லூரி வளாகத்துக்கு வெளியே இன்னொரு உலகம் இருப்பது கூடத் தெரியாமல் இருந்தது. வகுப்பிலும், டார்ம் அறையில் இருந்தவர்களுடன் பழகவும் அச்சமாக இருந்தது. அவசியம் ஏற்பட்டால் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதோடு முடிந்து போனது அவளது உரையாடல்கள். ஸ்கைப்பில் சாந்தியோடும் அவளது பன்னிரண்டு வயது மகளோடும் பேசும் சந்தர்ப்பங்களுக்காக மனம் காத்துக் கொண்டிருக்கும்.

அந்தச் சமயத்தில் அறிமுகமானவள் தான் ஜோசஃபின். ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவள். யதேச்சையாக நூலகத்தில் கிடைத்த அறிமுகம், மெல்ல வகுப்பு இடைவேளைச் சந்திப்புகள், கஃபெடேரியா என வளர்ந்தது. ராஜியால் தன்னுடன் டார்ம் அறையில் தங்கியிருக்கும் செல்சியை விட ஜோசஃபினிடம் இயல்பாகப் பேசிப் பழக முடிந்தது, செல்சி நல்லவள் தான். ஒரு சராசரி அமெரிக்கப் பெண்ணைப் போலத் தன் வேலையை அவள் பார்த்துக் கொண்டாள். ராஜியிடம் அதிகமாகப் பேச மாட்டாள் என்றாலும், அவ்வப்போது அவளுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து வந்தாள். எப்போதும் செல்ஃபோனில் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பாள். அதில் நிறைய ஆண் நண்பர்கள். ஓரிருவர் அவளைத் தேடி அறைக்கும் வருவர். சில இரவுகளில்  நெடுநேரம் கழித்து அவள் அறைக்குத் திரும்புகையில் குப்பென்று வாசம் இருக்கும். அவளுடன் வரும் பாய் ஃப்ரெண்ட் ராஜி இருப்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் அவளது உதட்டில் அழுந்த முத்தமிட்டுச் செல்வான். இதெல்லாம் அவளுக்கு உள்ளூர அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தின. இருந்தாலும் தனக்கு எந்த இடையூறும் இல்லாத வரையில் தானுண்டு தன் படிப்புண்டு என்ற மனநிலையில் அவற்றை எல்லாம் கண்டு கொள்ள மாட்டாள்.

மற்ற பெண்களிடம் இல்லாத ஒரு நெருக்கம் ஜோசஃபினிடம் ஏற்பட்டது. அவளும் அமெரிக்காவுக்கு புதிதாகையால் ஏறத்தாழ ராஜியின் நிலையில் இருந்தது கூட ஒரு காரணமாகயிருக்கலாம். இருவரும் அவரவருக்குத் தெரிந்ததைப் பறிமாறிக் கொள்வதிலும், தெரிந்து கொள்ள வேண்டியதை அலசுவதும் வழக்கமாகிப் போனது.

மாலை நேரங்களில் மிசிசிப்பி நதியோரத்தில் தங்களது சிறுவயது நாட்களைப் பேசிக் கொண்டு நடப்பதில் இருவருக்கும் ஒரு அலாதி இன்பம். ஃபிரான்ஸில் அவளது நடுத்தரக் குடும்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் ஏறத்தாழ இருவரும் ஒரே நிலையில் இருப்பதாகத் தோன்றியது ராஜிக்கு. இருவரது குடும்பமும் இவர்களது படிப்பை நம்பிக் காத்திருப்பது புரிந்தது. தனக்கு உற்ற தோழி ஒருத்தி கிடைத்திருப்பதை சாந்தியிடம் சொன்ன போது அவளுக்கும் சற்று நிம்மதி ஏற்பட்டது.

இலையுதிர் பருவம் முடிந்து அடுத்த பருவம் தொடங்க இருக்கையில் ஜோசஃபினின் அறையிலிருந்த அமேண்டா வெளியேறிவிட்டாள். அந்த நேரத்தில் ஜோசஃபினுக்கு வேறு எவளோ புதிதாக வருவதற்கு பதில் ராஜி தன்னுடன் வந்து தங்கினால் என்னவென்று தோன்ற, ராஜிக்கும் அந்த யோசனை பிடித்துப் போனது. பில்லிங் செண்டரில் பேசிய போது அவர்களும் சில சம்பிரதாய நடவடிக்கைகளுக்குப் பிறகு ஒப்புக் கொண்டனர்.  ஜோசஃபினின் அருகாமை மிகவும் பிடித்துப் போனது ராஜிக்கு. அவரவர்க்கு வகுப்பு இல்லாத சமயங்களில் இருவரும் ஒன்றாகவே பொழுதைக் கழித்தனர். எதோ ஒரு வகையில், குறைந்தபட்சம் போன ஜென்மத்திலேயாவது, தனக்கும், ஜோசஃபினுக்கும் ஒரு சொந்தம் இருந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி அவளுக்குத் தோன்றும். ஜோசஃபினும் அதை ஆமோதிப்பாள்.

ரு நாளிரவு சாப்பாட்டுக்குப் பின்னர் பேசிக் கொண்டிருக்கையில் ஆண் நண்பர்களைப் பற்றிப் பேச்சு வந்தது. செல்சியைப் போல ஜோசஃபினுக்கு ஆண் நண்பர்கள் கிடையாது. வகுப்பில் உடன் படிக்கும் நண்பர்களை எப்போதாவது வழியில் பார்த்தால் பேசுவாளே தவிர யாரும் அறையைத் தேடி வர மாட்டார்கள். ராஜிக்கோ நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஆணுடனும் அவ்வளவு பழக்கமில்லை.

‘அதென்னவோ தெரியவில்லை .. ஒருவருமே என் மனதை ஈர்க்கவில்லை..’ என்றாள் ஜோசஃபின்.

‘ஒருவேளை நீ அவர்களைப் புரிந்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லையாக இருக்கும்’ அன்றிரவு லாண்டரியில் போட்டு எடுத்துவந்த துணிகளை மடித்துக்கொண்டே சொன்னாள் ராஜி.

பென்சிலால் புத்தகத்தில் கிறுக்கிக் கொண்டிருந்த ஜோசஃபின் ..’இருக்கலாம் .. ஆனால் இவனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் அல்லவா? அதுவே கூட வந்ததில்லை..’

‘ப்ரையன் பாக்க ஹாண்ட்ஸமா தானே இருக்கான் .. ‘

‘கடவுளே .. அவனைஎல்லாம் பாய் ப்ரெண்டா நினைக்கக் கூட முடியாது… அவன் முரட்டு சுபாவம் கொண்டவன்… ரொம்பவும் மூடியான ஆள் ..’

‘ஒ அப்படியா .. பார்த்தால் அப்படித் தெரியவில்லை..’

‘ஆண்கள் எல்லோரும் மனதால் முரடர்கள் .. சிலருக்கு உடல் பலமும் சேர்ந்திருக்கும்.. எல்லா ஆண்களுக்கும் வக்கிர எண்ணங்கள் உண்டு .. பெண்களின் கண்களைப் பார்த்து பேசும் ஆண்கள் மிக மிகக் குறைவு .. அவர்களும் பார்வையைக் கீழே இறக்கினால் இவளுக்குத் தெரிந்து விடுமோ என்ற பயத்தால் தவிர்க்க முயல்பவர்கள்.. ‘

‘என்ன இப்படிச் சொல்கிறாய்?’ துணி மடிப்பதை நிறுத்தி விட்டுக் கேட்டாள் ராஜி.

பென்சிலால் கிறுக்கிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அறையின் மூலையிலிருந்த சிறிய ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்கிரீமை எடுத்துக்கொண்டு தனது படுக்கையிலமர்ந்து தொடர்ந்தாள்.. ‘ஆமாம்டி .. எனக்கு அலுத்துப் போச்சு .. பதிமூணு வயசு .. ஏன் அதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சிடுச்சி .. எப்பவும் எதோ ஒரு ஆணின் பார்வை .. மேலாடையைத் தாண்டி, பிராவை ஊடுருவிப் பார்க்கும் .. எவனும் உண்மையான நட்போட, அன்போட பேசியதில்லை.. தொடக்கத்திலே.. அந்த வயசில எனக்கு ஒண்ணும் புரியல .. புரியத் தொடங்கின நேரத்தில அந்தப் பார்வைகள் ஊசியாக் குத்தின .. எத்தனை ஆண்கள் .. இவனாவது  ஆதரவா, அன்பா இருப்பானோன்னு ஒவ்வொருத்தனையும் நினைப்பேன் .. ஹூஹூம்.. ஒருத்தனும் தேறலை.. நம்பிக்கை போயிடுச்சி .. எவனும் மாறமாட்டான் .. கொஞ்ச கொஞ்சமா அந்த ஊசிப் பார்வைகள் மரத்துப் போச்சு …’

ஐஸ்கிரீமை சின்ன ஸ்பூனால் சுவாரசியமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் ராஜி துணி மடிப்பது நின்று, ஸ்பூன் சத்தத்தைத் தவிர அறை நிசப்தமாய் இருப்பதை உணர்ந்து நிமிர்ந்தாள் .. ‘என்னடி .. எமொஷனலாக்கிட்டனா?’ என்று அருகே நெருங்கியவள் ராஜியின் கண்களில் நீர் கோர்த்திருப்பதைப் பார்த்தாள். ‘சாரி .. எதோ பேசி உன்னைக் கன்ஃப்யூஸ் பண்ணிட்டேன் ..’

‘இல்லை.. என்னையும் பல ஊசிகள் குத்தியிருக்கு .. ‘ கண்ணில் கோர்த்துக் கொண்டிருந்த நீர் விழி விளிம்பைத் தாண்டி கன்னத்தில் உருண்டது. துடைத்துக் கொண்டாள். ‘ஒன்பதாவது படிக்கையில் ‘ரெகார்ட் நோட்டைத் திருத்திட்டேன்.. அருமையா வரைஞ்சிருக்கே’ என்று முதுகில் தடவிக் கொடுத்து சன்னமான குரலில் ‘..இன்னைக்கு ‘பாடி’ போடலையா?’ என்று கேட்ட ரங்கநாதன் சார்; கடைத்தெருக்களில் இடிப்பது போல் சைக்கிள் ஓட்டி வந்து மாரை அழுத்திச்  சென்ற பதினோறாம் வகுப்புப் பையன்கள்; சென்னையில் தங்கியிருந்த போது குளியலறைக் கதவிடுக்கில் எட்டிப் பார்த்த மாமாவின் கண்கள் என பலவற்றையும் சொல்லிக் கதறினாள்.

‘நீ சொன்னியே அன்பு அதெல்லாம் கூட நான் எதிர்பார்க்கலை.. முன்பின் தெரியாத ஏதோவொரு பெண்ணுக்குக் கிடைக்கும் சாதாரண மரியாதை கூட எனக்குக் கிடைக்கலை.. சில சமயங்களில் இப்படி ஒரு பிறப்பு எனக்குத் தேவையான்னு கூட தோணியிருக்கு .. வளர்ந்த பின்னாடி இந்தக் கேள்வியெல்லாம் கேப்பேனோன்னு பயந்துகிட்டுத்தான் என் அம்மா, அப்பா அப்போவே போய்ச் சேர்ந்துட்டாங்க..  ‘ குலுங்கிக் குலுங்கி அழுதாள் ராஜி. ஐஸ்கிரீம் டப்பாவை வைத்த ஜோசஃபின் ராஜியின் தலையைப் பிடித்துத் தோளில் சாய்த்து அழுந்தப் பிடித்துக் கொண்டாள். அழுகைக்கு நடுவிலும் அது புதிய அனுபவமாக இருந்தது ராஜிக்கு. யாரிடமும் இது போல் அரவணைப்புக் கிடைத்ததில்லை அவள் வாழ்க்கையில். அம்மா இருந்திருந்தால் ஒருவேளை இது பழகியிருக்குமோ? மேலும் அழுகை கொப்பளித்துக் கொண்டு வந்தது. ஜோசஃபினை இறுகக் கட்டிக்கொண்டாள். அழுகை நிற்கவில்லை. ராஜியின் வலது தோளைப் பிடித்து நிமிர்த்திய ஜோசஃபின், அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். அழுததில் ராஜியின் முகம் சிவந்திருந்தது. சட்டென அவள் பின்தலையைப் பிடித்திழுத்து ராஜியின் உதட்டில் முத்தமிட்டாள். ராஜி இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நெருக்கமும் முத்தமும் என்னவோ செய்தது. பதினைந்து நொடிகள் அழுந்த முத்தமிட்டு விலகி அவளைப் பார்த்தாள் ஜோசஃபின். அவள் கண்களில் நீரினூடே அனல் தெரிந்தது. இம்முறை ராஜி அவளை நெருங்கி உதட்டில் முத்தமிடத் தொடங்கினாள்.

லேசாக மழை தூவத் தொடங்கியிருந்தது. வெகு தூரம் நடந்து வந்தது போலிருந்தது ராஜிக்கு. அன்று மாலை முதல் நடந்த விஷயங்கள் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்ததால் இருட்டில், எந்தத் திசையில் எவ்வளவு தூரம் நடந்திருப்போம் என்பது புரியவில்லை. சாலையில் வாகனங்கள் குறைந்து விட்டிருந்தன. காற்றில் கலந்த சிலுசிலுப்பு அருகில் நதிக்கரை இருப்பதைச் சொன்னது. கையில் இருந்த செல்ஃபோனில் மணி பனிரெண்டரையைத் தாண்டியிருந்தது. ஏன் இவர்களுடன் வெளியில் சென்றோம் எனத் தோன்றியது அவளுக்கு.

கோடை விடுமுறை தொடங்கியதால் ஜோசஃபின் ஊருக்குச் சென்றிருந்தாள். அறையில் தனித்திருக்கப் பிடிக்காமல் வெளியே மரத்தடியில் இருந்த சிமெண்ட் பெஞ்சிலமர்ந்து எதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது தான், பக்கத்து அறையிலிருக்கும் எமிலி தனது தோழிகள் சிலருடன் வந்தாள். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு தனது தோழிகளை அறிமுகம் செய்தாள். அவர்கள் தனது ஊரிலிருந்து வந்திருப்பதாகவும், அவர்களுக்கு இரவு ஒரு டின்னர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொல்லி அவளையும், ஜோசஃபினையும் கலந்துகொள்ளச் சொன்னாள். ஜோசஃபின் ஊருக்குப் போயிருப்பதாக ராஜி சொன்னதும், தனியாக இருப்பதற்கு விருந்தில் கலந்து கொண்டால் மாறுதலாக இருக்கும் என்று வற்புறுத்தி வரச் செய்தாள்.

அவர்கள் தங்கியிருந்த விடுதிக்குப் பக்கத்திலே ஒரு சிறிய உணவகத்தில்  தான் பார்ட்டி. அங்கே போனபின்னர் தான் ப்ரையன் உட்பட சில ஆண்களும் வந்திருந்தது தெரிந்தது. அதுவே சின்னச் சங்கடமாக இருந்தது அவளுக்கு. மேலும் அங்கிருந்த பலரும் மது அருந்தியது அவளுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் சற்று நேரத்தில் கிளம்பிவிடலாம் என்று நினைத்து அமர்ந்திருந்தாள்.

எதை எதையோ பேசி, கும்மாளமடித்து ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். ராஜியும் ஊரிலிருந்து வந்திருந்த இன்னொருத்தியும் தான் குடிக்கவில்லை. மற்றவர்களுக்குப் போதை ஏறிப் போயிருந்தது. பாத்ரூம் சென்று வந்த ஒருவன் தவறுதலாக பெண்களின் கழிப்பறைக்குள் நுழைந்துவிட்டதைச் சொன்னான். வெட்கமில்லாமல் மற்ற பெண்களும் அவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தது அருவருப்பைத் தந்தது. மேலும் சில ஆண்கள் பெண்களின் நடையையும், அங்கங்களையும் கிண்டலடிக்கத் துவங்கினர். ராஜிக்கு இருப்புக் கொள்ளவில்லை. செல்ஃபோனைப் பார்த்துவிட்டுத் தனக்கு நேரமாவது போல் பாவ்லா செய்து கிளம்ப எத்தனித்தாள்.

‘ஏன் ராஜி.. ஜோசஃபின் வெயிட் பண்றாளா?’ என்றான் ப்ரையன். குபீரென்று சிரிப்பு வெடித்தது அங்கே.

‘நிறுத்து ப்ரையன் ..’ என்று சொல்லி ராஜியைப் பார்த்து ‘ உனக்கு நேரமாகுதுன்னா நீ கிளம்பு ராஜி’ என்றாள் எமிலி.

‘ஓ நீயும் அவங்களோட ‘பார்ட்னரா’ .. நான் இத்தனை நாள் ராஜியும், ஜோசஃபினும் மட்டும் தான் ‘பார்ட்னர்ஸ்’னு நினைச்சுகிட்டிருந்தேன். அவங்க ரெண்டு பேரும் தான் எங்க போனாலும் ஒட்டிகிட்டுப் போவாங்க … உன்னை அவங்களோட பார்த்ததில்லையே .. ‘ ப்ரையன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜோ என்பவன்,

‘ஓ ரியலி? ஜோசஃபின் லெஸ்பா.. அதனால தான் உன் பருப்பு அங்கே வேகலையா ..’ என்று ப்ரையனைக் கிண்டலடித்தான். இன்னொருவன் ‘இதெல்லாம் எங்களுக்குத் தெரிஞ்சா நாங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாம இருக்கலாமில்ல?’ என்று சொல்லியவாறு செல்ஃபோனில் ராஜியைப் படமெடுத்தான். எமிலி பாய்ந்து அவனைத் தடுத்தாள்… ராஜிக்கு அழுகை பொங்கியது .. அங்கிருப்பவர்களை வெட்டிப் போடவேண்டுமென்று தோன்றியது.. எதுவும் இயலாத காரியம் என்று தோன்றவே .. விருட்டென வெளியில் வந்தாள்.. பின்னாடியே ஓடி வந்த எமிலி அவளிடம் எதையும் பெரிதாக்க வேண்டாமென்றும், அந்த செல்ஃபோன் படத்தை அழித்து விடுகிறேன், போதையில் எதோ சொல்லிவிட்டார்கள் நான் அவர்களை உன்னிடம் நாளை மன்னிப்புக் கேட்கச் செய்கிறேன் என்று என்னென்னவோ பேசினாள். ராஜி அவளைப் பார்க்கக் கூட நிற்காமல் அழுது கொண்டே நடந்தாள். சற்று தூரம் பின்தொடர்ந்த எமிலி, நின்று, செய்வதறியாமல்  ராஜி நடந்து சென்று இருட்டில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

லேசாகக் கால் வலிக்கத் துவங்கியிருந்தது ராஜிக்கு. அழுகை மட்டும் நின்ற பாடில்லை. வெளியில் தெரிந்தால் எவ்வளவு பெரிய அவமானம். மற்றவர்களின் பார்வையை எப்படி எதிர்கொள்வது. உலகமே குற்றவாளியைப் போலப் பார்க்குமே! அக்காவின் முகத்தை எப்படிப் பார்ப்பது? சற்றே சிதிலமடைந்திருந்த கம்பிகளினூடே பாலத்தின் பக்கச் சுவற்றின் மேலேறி நின்றாள். வானத்தை  அண்ணாந்து பார்த்தாள். நள்ளிரவின் நிலவொளி தரையில் விழாதவாறு மறைத்துக்கொண்டிருந்த மேகங்கள் அவளது நிலையைக் கண்டு அழுவது போல் தூறத் தொடங்கியது.

‘என்னை மன்னித்து விடு ஜோசஃபின்..’ சரேலனப் பாய்ந்தாள்… அலைகள் அடங்கிப் போயிருந்த மிசிசிப்பி, கைகளை விரித்து அவளை அணைத்துக் கொள்ளத் தயாரானது.

இன்னும் கீழே கீழே பறந்துகொண்டேயிருந்தாள் ராஜி.

   மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad