வேலை
கொரியர் பையன் கொடுத்துவிட்டு போன கவர் சாவித்ரியின் அருகில் கிடந்தது.
சாவித்திரி அதை கவனித்ததாக தெரியவில்லை . பார்வை எங்கோ நிலைத்திருக்க சிந்தனை அப்பாவை சுற்றி வந்ததது. அப்பா எப்படி இருந்தார் இந்த வீட்டில் எல்லாமும் அவரே என்ற நிலை…
ஆறு மாதத்துக்கு முன் அந்த விபத்து அவரை அள்ளிக்கொண்டு போனதும் குடும்பம் தத்தளித்து விட்டது .இன்றோடு ஆறு மாதம் முடிந்து விட்டது .
அப்பாவின் மறைவு ஏற்படுத்திய தாக்கம் அவளிடம் இருந்து இன்னும் மாற வில்லை…
இந்த காலத்து சினிமாவில் காதல், கவிதையில் காதல், கதைகளில் காதல், இளையோர் எண்ணம் முழுவதும் காதல்.
காதல் தோல்வி வந்துட்டா உலகமே இருண்டதாக கவலை…
என்னம்மா இது “காதல்… காதல்… காதல்… இதை விட்டா வாழ்க்கையிலே வேறு எதுவுமே இல்லையா?”
“இருக்கு, நிறைய இருக்கும்மா. இன்றைய உலகம் இதை புரிஞ்சிக்கணும். அது இருக்கட்டும்.”
“சாவித்திரி நீ இந்த குடும்பத்தின் மூத்த பெண் நீ தான் எனக்கு பிறகு இந்த குடும்பத்த நல்லா பாத்துக்கணும். தம்பி தங்கைகளை நல்ல நிலைக்கு கொடுண்டு வரணும் உன்னை தான் மலையா நம்பி இருக்கேன்.”
என்று அப்பா பேசும் போதெல்லாம் என்ன அப்பா இப்படி பேசுகிறார்? எம்.எஸ்.சி வரை படிக்க வச்சிருக்காரே. இந்த படிப்பை வச்சி கிட்டு இந்த குடும்பத்த காப்பாத்துறதா கஷ்டம் என்று எண்ணுவாள். நீங்க கவலை படாதீங்கப்பா என்று சொல்லுவாள்.
ஆனால் அப்பா போன பிறகு தான் உலகத்தின் உண்மை அவளை சுடத்தொடங்கியது. அவள் படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை. அலைந்து அலைந்து நொந்து போனது தான் மிச்சம் .
அப்பா அலுவலகத்தில் இருந்து வர வேண்டிய பணம் கூட இன்னும் வந்த பாடு இல்லை. இத்தனைக்கும் பல முறை அலைந்தாயிற்று. “அவருக்கு செய்யாமலா?” என்று சொல்லுவதோடு சரி.
“சாவித்திரி எல்லாம் வேஷம்மா. அவங்களுக்கு உரியத நீ வெட்டினா தான் வேலை நடக்கும். உன் கிட்ட எப்படி கேக்குறதுன்னு பாக்குறாங்க அவளவு தான். எல்லாம் லஞ்சம் வாங்கும் பிசாசுகள். இவர்களை திருத்தவே முடியாது”
என்று எதிர்வீட்டு தாத்தா கூறுவதில் கூட உண்மை இருக்குமோ என்று அவளுக்கு தோன்றியது .
“என்னடி சாவித்திரி இப்படி கல்லாட்டம் உக்காந்திருக்க?” எதோ லெட்டர் வேற கிடக்கு.
“இப்ப வந்ததா? யாரிடம் இருந்துன்னு பார்த்தியா?”
அம்மாவின் சத்தத்தை கேட்டு கடிதத்தை பார்த்தாள். ஆறுதல் கடிதமோ ? பிரித்து பார்த்தாள் வியப்பில் புருவங்கள் உயர்ந்தன. அம்மா ஆர்வத்தோடு அவளையே பார்த்து கொண்டு இருந்தாள்.
“வேலை வந்திருக்கு”
“வேலையா? அத இப்படி மெதுவா சொல்ற? என்ன வேலை?”
“கார்பரேசன் ஸ்கூல்ல டீச்சர் வேலை”
“அப்படியா? ஆண்டவன் காதுல நம்ம பிராத்தனை விழுந்திடிச்சி… அதை கொண்ட முதல்ல சாமி படத்து கீழ வச்சி தரேன்…” என்று கடிதத்தை வாங்கி கண்ணில் ஒத்தி கொண்டு போனாள்.
மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இடை நிலை ஆசிரியையா? “எம்.எஸ்.சி படிச்ச நம்மை எப்படி?” ஓ போன வருடம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இடை நிலை ஆசிரியராக போக தயாரா என்று கேட்டு இருந்தார்கள். அப்பா கூட சரி என்று சொல்லிடுமா. செகண்டரி கிரேடு டீச்சரா சேர்ந்து பி.ஜி டீச்சரா ஆயிடலாம்னு சொல்லுறாங்க என்று சொன்னார். அவளும் ஒப்புதல் கடிதம் எழுதி இருந்தாள் அது தான் இப்பொழுது ….
அவளுக்கு இன்னொன்று வியப்பாக இருந்தது. வேலைக்கான உத்தரவு பள்ளி கல்வி துறையின் இணை இயக்குனரிடம் இருந்து வந்து இருந்தது. அவர் அரசு பள்ளிகளின் அதிகாரி. மாநகராட்சி பள்ளிக்கு உத்தரவு போட்டு இருந்தார்.
மறு நாள் சாவித்திரி காலை 8:00 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டாள். அம்மா பக்கத்து தெரு கோவிலில் அர்ச்சனை செய்து வந்த திருநீறை பூச்சி விட்டு வீட்டுக்கு வெளிய வந்து நின்று கொண்டு நல்ல சகுனம் பார்த்து அனுப்பி வைத்தாள்.
ராயபுரத்தில் இறங்கி மாநகராட்சி பள்ளியை தேடி கண்டு பிடிச்ச பொழுது மணி 11:00 க்கு மேல் ஆகிவிட்டது. பள்ளியின் உள்ளே சென்று தலைமை ஆசிரியையை பார்த்து வேலைக்கான உத்தரவை கொடுத்தாள்.
வாங்கி பார்த்த தலைமை ஆசிரியையை முகத்தை சுழித்தப்படி
“இது மாநகராட்சி பள்ளி இதுக்கு பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவு கொடுத்து இருக்காங்களே. இது வரை இப்படி வந்ததே இல்லை. எங்களுக்கு மாநகராட்சி கல்வி அதிகரி தான் உத்தரவு தரனும்.”
“சின்னசாமி இங்க வாங்களேன்” யாரையோ அழைத்தாள்.
“என்ன மேடம்?” என்று நடுத்தர வயதுக்காரர் ஒருவர் வந்தார்.
“இந்த உத்தரவை பார்த்தீங்களா?” என்று வந்தவரிடம் காட்டினார்.
அவர் வாங்கி பார்த்தார் .
“இது என்ன மேடம்? புதுசா இருக்கு? நீங்க எதுக்கும் நம்ம E.O கிட்ட ஒரு கையெழுத்து வாங்கி வர சொல்லிடுங்க.”
“அதான் நினைச்சேன்.”
“மிஸ்… பேரு என்ன?”
“ஆங்.. சாவித்திரி”
“நீ மாநகராட்சி போய் அங்க E.O இருப்பாரு அவர்கிட்ட இதுல ஒரு கையெழுத்து வாங்கி வந்துடேன். நீ எப்ப வாங்கிட்டு வந்தாலும் இன்னைய தேதியில் கையெழுத்து போடலாம்” என்று கூறினார்.
சாவித்திரி வேறு வழி இன்றி உத்தரவை எடுத்துக்கொண்டு மாநகராட்சி வந்தாள். மாநகராட்சி கல்வி அதிகாரி இல்லை. கேட்டதற்கு “E.O தானே இதோ வந்துடுவார்” என்றார்கள்.
காத்து இருந்து காத்து இருந்து கால்கள் வலித்தது. மாலை மணி 5 ஆகிவிட்டது இனிமேல் வர மாட்டார் நீங்க நாளைக்கு வாங்க என்றார்கள். சோர்வுடன் வீடு திரும்பினாள். மறுநாள் நேரே பள்ளிக்கி போய் தலையை காட்டி விட்டு மாநகராட்சி வந்தாள். இன்றைக்கு E.O வை பார்க்க முடிந்தது. உத்தரவை அவரிடம் கொடுத்து தலைமை ஆசிரியை கையெழுத்து கேட்டதாக கூறினாள்.
உத்தரவை பார்த்த E.O முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“எங்க மாநகராட்சி பள்ளிக்கு அவங்க உத்தரவு போடுறாங்களா? அதுக்கு நான் ஏன் கையெழுத்து போட்டு தரனும்” என்றார்.
“தலைமை ஆசிரியை என்னை பணியில் சேர அனுமதிக்க மாட்டேங்குறாங்க” என்றாள் சாவித்திரி.
“அதுக்கு நான் என்ன பண்றது? யாரு உத்தரவு போட்டங்களோ அவங்க கிட்ட போய் சொல்லு என்கிட்ட ஏன் வார?” எரிந்து விழுந்தார் E.O. சாவித்திரி பேசாம இருந்தாள்.
போமா என்று விரட்டினார் E.O. வெளியே வந்த சாவித்திரி மணியை பார்த்தாள். மணி 4.30 இனிமேல் எங்கு போவது பஸ் பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.
மறுநாள் பள்ளிக்கு போனாள். E.O கையெழுத்து போட மறுத்ததை கூறினாள். “அதுக்கு நான் என்ன பண்றது? கையெழுத்து வாங்கி வந்திடு அப்ப தான் நான் அனுமதிப்பேன்… நாளைக்கி நீ எப்படி அனுமதிச்ச என்று கேட்டா நான் பதில் சொல்லணுமே.”
சாவித்திரி பஸ் பிடித்து பள்ளி கல்வி இயக்குனரகம் வந்தாள் .
“என்ன வேண்டும் உங்களுக்கு… எதுக்கு இணை இயக்குனரை பார்க்க வேண்டும்” P.A கேட்டார் . விஷயத்தை சொன்னாள் .
“அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்… சரி சரி அங்க உக்காருங்க…” என்றார் .
12:00 மணிக்கு வந்த இணை இயக்குனர் அமைச்சரிடம் இருந்து அழைப்பு என்று உடனே போய் விட்டார். இணை இயக்குனரை அன்றைக்கு பார்க்க முடியவில்லை. இதே போல் 2, 3 நாட்கள் ஆகிவிட்டது. நாலாவது நாள் இணை இயக்குனரை பார்த்து விட்டாள்.
“ஆமா நாங்க உத்தரவுதான் கொடுக்க முடியும்… உங்க கூட வந்து பள்ளியில் சேர்த்தா விட முடியும்? வேலை வேணும் வேலை வேணுங்குறீங்க.. வேலைக்கு உத்தரவு கொடுத்தா இப்படி வந்து நிக்குறீங்க. போமா இது அரசு உத்தரவு இதை யாராலும் மீற முடியாது. போய் வேலையில் சேருங்க” என்றார்.
சாவித்திரி மீண்டும் பள்ளிக்கு போனாள். தலைமை ஆசிரியை தன் நிலையை மாற்றி கொள்ளவே இல்லை.
வேறு வழியின்றி மாநகராட்சி போனாள். இப்படியே 12 நாட்கள் ஓடிவிட்டது. இவளை போலவே இன்னும் சிலர் மாநகராட்சி வந்து அலைவதைக்கண்டாள். எல்லோரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் சிக்கல் தீருவதற்கு வழி தான் தெரியவில்லை.
மறுநாள் சாவித்திரி மாநகராட்சி அலுவலக மைதானத்தில் நின்று கொண்டு இருந்த போது ஒருவர் அவள் அருகில் வந்து
“ஏம்மா நீங்க பரமசிவம்பிள்ளை மகள் தானே?” என்று கேட்டார்.
“ஆமாம்..” என்றாள்.
“என்ன விஷயமா இங்கே வந்து இருக்கீங்க? நான் உங்க அப்பாவால் வளர்க்கப்பட்டவன். உங்க அப்பா செய்த உதவியால் படித்து இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கேன். உங்களுக்கு உதவ வேண்டியது என் கடமை. சொல்லுங்க” என்றதும் சாவித்திரி முழு விவரமும் கூறினாள் .
“எங்கே அந்த உத்தரவை கொடுங்க” என்று வாங்கியவர் “என் கூட வாங்களேன்” என்று உள்ளே போனார் .
மாநகராட்சி அலுவலகத்தில் அவருக்கு எல்லோரும் காட்டிய மரியாதை அவர் ஒரு பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது .
நேரே E.O இடம் சென்ற அவர்
“ஏன் சார் இந்த உத்தரவில நீங்க கையெழுத்து போட்டா என்ன? ஏன் இப்படி ஒன்றும் இல்லாததை கௌரவ பிரச்சினை ஆக்குறீங்? உங்களை போன்றவர்களால் அரசு செய்யும் உதவிகள் மக்களுக்கு சரியாக போய் சேர்வதில்லை.”
“இல்ல சார்…” என்று இழுத்த E.O உத்தரவை வாங்கி கையெழுத்திட்டார்.
“சார் என்னை போல நிறைய பேர் நிக்குறாங்க சார்” என்றபடி வாங்கி கொண்டாள் சாவித்திரி .
“எல்லோருக்கும் கையெழுத்து போட்டு அனுப்புவார்மா. நீங்க உங்கள் அப்பா மாதிரியே மற்றவர்கள் பற்றியும் கவலை படுவது எனக்கு பெருமையா இருக்கு. எதாவுது உதவி வேணும்னா என்னை வந்து பாருங்க” என்று தனது விசிடிங் கார்டை எடுத்து தந்தார்.
அதை பெற்று கொண்ட சாவித்திரி நன்றியுடன் வெளியே வந்தாள். இன்றைக்கு மிகவும் நேரம் ஆகிவிட்டது நாளைக்கு போய் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம் என்று எண்ணியவாறு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
மறுநாள் பள்ளிக்கு சென்றவள் தலைமை ஆசிரியையிடம் உத்தரவை கொடுத்தாள். வாங்கி பார்த்த தலைமை ஆசிரியை
“வெரி குட் ஆனால் இந்த பள்ளியில் அந்த ஆசிரியர் பணிக்கு நேற்று ஒருத்தர் வந்து சேர்ந்த்திட்டார். வெரி சாரி. நீ வேறு எதாவுது பள்ளிக்கு உத்தரவு வாங்கிட்டு போ” என்றாள்.
சாவித்திரி என்ன செய்வது என்று தெரியாமல் கையில் உத்தரவோடு நின்று கொண்டு இருந்தாள்.