தும்பிக்கை தரும் நம்பிக்கை
நாமெல்லாம் அதன் மேலே
இந்த வரிகளைக் கேட்டால் எல்லோருக்கும் அவரவரது வாழ்க்கையில் நடக்கும் ஏற்றங்களும் இறக்கங்களும் நினைவுக்கு வரும். அதுவே இந்த வரிகளில் உள்ள உண்மைக்கு அத்தாட்சி. எந்த ஒரு காரியம் செய்யும்போதும் சில தடங்கல்கள் வரத்தான் செய்யும். அதைப் பொறுமையுடனும் மனத்தெளிவுடனும் எதிர்க்கொண்டால் தடங்கல்கள் விலகி வெற்றிக்கு வழி கொடுக்கும். பொறுமையும் மனத்தெளிவும் எளிதில் எல்லோருக்கும் கிட்டுவதில்லை. தெய்வபக்தி இதற்கு பெரிய அளவில் உதவுகிறது. எந்த ஒரு காரியம் துவங்குவதற்கு முன்னர்ப் பிள்ளையாரை வணங்கி துவங்கினால் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை. சைவம் வைணவம் எனப் பல பிரிவுகள் இருந்தாலும், கணபதியைத் துதிப்பதில் எல்லோரும் ஒன்றுபடுகின்றனர்.
விநாயகச் சதுர்த்தியின் பொழுது பாடகர் சீர்காழிகோவிந்தராஜன் அவர்களின் கம்பீர குரலில்
விநாயகனே வினைத் தீர்பவனே!
வேழ முகத்தோனே ஞான முதல்வனே
விநாயகனே வினை தீர்பவனே!
எனும் பாடல் தெருவெங்கும் ஒலிக்கும். ஊரே விழாக்கோலம் கொண்டு பூக்களையும் தோரணங்களையும் மண்ணினால் ஆன பிள்ளையார் சிலைகளையும் வணிகர்கள் விற்றுக்கொண்டு இருப்பர். எல்லோரும் மிகுந்த பக்தியுடன் விநாயகப் பெருமானை வணங்கி கொழுக்கட்டையைப் பிரசாதமாகப் படைத்து கொண்டாடுவர்.
பல தெய்வங்கள் இருக்கையில் விநாயகப் பெருமானை மட்டும் காரியம் துவங்கும்முன் ஏன் வணங்கவேண்டும்? அதன் உள்ளர்த்தம் என்ன? சீர்காழி கோவிந்தராஜன் தனது பாடலில் அவரை ஞான முதல்வனே என அழைக்கிறார். எந்தக் காரியத்திலும் வெற்றி பெற ஞானம் மிக முக்கியமானது. அதை எவ்விதம் அடைவது?
ஒளவையார் சொன்னது போலக் கற்றது கையளவு, கல்லாதது உலகளவு. யானை முகத்தனை பார்த்தால் அவருடைய காது மட்டும் பெரிதாகக் காணப்படும். அதுதான் ஞானத்தின் ரகசியம். பெற்றோரிடத்தில் தொடங்கி, குரு கற்றுக்கொடுத்த ஞானத்தைச் செவி கொடுத்து கேட்டு அதை மனதில் கொண்டு ஞானத்தைப் பெருக்கி கொள்ளலாம். ஞானம் இருந்தால், தடைகள் நீங்கும் எனச் சொல்லவில்லை. ஆனால் ஞானம் இருந்தால், தடைகள் ஏற்படும்பொழுது அதை எப்படிச் சந்திப்பது என்ற மனத்தெளிவு ஏற்படும்.
இதை விநாயகப் பெருமானின் கதையிலேயே பார்த்துள்ளோம். நாரதர் ஒர் அபூர்வ கனியை கொண்டுவந்து சிவனிடம் கொடுத்து இதைப் பகிராமல் உண்ணவேண்டும் எனச் சொல்கிறார். இதைக்கேட்ட விநாயகரும் முருகரும் கனிக்காகப் போட்டியில் இறங்குகிறார்கள். முருகப் பெருமான், தன் வாகனாமான மயிலின் மீதேறி உலகை வலம் வர கிளம்பினார். ஞானத்தின் முதல்வனான கணபதியோ தந்தை தாயை வலம் வந்தால் உலகை வலம் வந்ததாகப் பொருள் என்பதை அறிந்து அதைச் செயலாக்கிப் போட்டியில் வெற்றிப் பெற்றார். ஞானம் எப்படிப் போட்டியில் வெற்றி பெற செய்தது என்பதற்கு இது ஒர் உதாரணம்.
மனத்தெளிவால் மட்டும் தடைகளைத் தாண்ட முடியாது. மனத்தெளிவு நமக்குப் பலத்தைக் கொடுத்தால், அதை விவேகமாகப் பயன்படுத்த பொறுமை மிக அவசியம். பெரியோர் சொல்லிய “ஆத்திரகாரனுக்குப் புத்தி மட்டு” பழமொழி நினைவிற்கு வருகிறதல்லவா? ஆத்திரமும் அவசரமும் புத்தியைப் பயன்படுத்த விடாமல் செய்துவிடும். இதையும் விநாயகர் அவரின் உருவத்தின் மூலம் உணர்த்தி இருக்கிறார்.
காட்டு விலங்குகளில் மிகுந்த பலம் வாய்ந்த மிருகங்களில் சிங்கம், புலி, யானை எனப் பல உண்டு. அதில் பெரும்பாலான மிருகங்கள், மாமிசம் உண்டு பலம் பெற்றவை. யானையோ இலை, தழைகளைச் சாப்பிட்டுப் பலம் பெற்ற மிருகம். சிங்கம், புலி, சிறுத்தை பலம் படைத்தாலும் அதைச் சாந்தமான மிருகமாக மாற்ற முடியாது. அனால் யானை பலம் படைத்தாலும், சாந்தமாகக் காணப்படுகிறது. அந்தப் பொறுமை நமக்கும் வேண்டும் என்பதற்காகத் தான் யானை முகம் கொண்டு காட்சி அளிக்கிறார் விநாயகர். இடுக்கண் வருங்கால் நகுக எனும் திருக்குறளுக்கு ஏற்ப தடைகளைக் கண்டு துவண்டு விடாமல், புன்முறுவலோடு அதைத் தகர்த்தெறிவோம்.
மனிதன் உட்பட விலங்கினங்களுக்கு இரண்டு கை, இரண்டு கால், அல்லது நாலு கால்கள் உண்டு. ஆனால் யானைக்கு மட்டும் நாலு கால்களோடு தும்பிக்கையும் உள்ளது. விநாயக சதுர்த்தி அன்று நீங்கள் தடைகளை நீக்கும் விநாயகரை வழிப்பட்டு அந்தத் தும்பிக்கையே நமக்கு நம்பிக்கையாக மாறி செய்வினை வெற்றி பெற அருள் புரியட்டும்.
-பிரபு