\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11

Filed in இலக்கியம், கதை by on August 31, 2015 0 Comments

IMG_2201(பகுதி 10)

முன்கதைச் சுருக்கம்:

கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, கணேஷ் அதனைப் போலீஸ் அதிகாரி ராஜேந்திரனிடம் விளக்கி கார்டையும் ஒப்படைக்கிறான்.

ஆனால், ராஜேந்திரன் தனது பர்ஸ்ஸுடன் சேர்த்து அந்தக் கார்டைத் தவற விட்டுப் பின் அதனைப் பணத்திற்கு ஆசைப்பட்டு எடுத்த துப்புறவுத் தொழிலாளி மாசானின் வீட்டிற்கருகில் கண்டுபிடிக்கிறார். அதனைத் தோண்டி எடுக்கையில், அந்த எஸ்.டி. கார்டிற்கு அருகில், புதைக்கப்பட்ட ஒரு பெண் பிணமாகக் கிடைக்கிறாள். டாக்டர் தேசிகனின் மகளைக் கடத்தி வைத்து, தட்சிணா மூர்த்தியைக் கொலை செய்தால் புஷ்பாவை விட்டு விடுவதாக  மிரட்டி மருத்துவமனைக்குக் கடத்திவருகிறார் தனவந்தர் ராமச்சந்திரனும் அவரின் ஆட்களும். தட்சிணா மூர்த்தி படுத்திருந்த ரெகவரி அறையில் அவனைக் கொலை செய்ய முயலுகையில், கையும் களவுமாக சிறைப்படுத்தப்படுகிறார்கள். இதற்கு முன்னதாகவே செல்வந்தர் வேலாயுதமும் சிறைப்படுத்தப்பட்டிருகிறார்.  

இதற்கிடையில், கல்லூரிக்கு வந்த பாரதி கடத்தப்பட்டதை அறிந்த கணேஷ், நண்பனுடன் அவளைத் தேடிப் புறப்படுகின்றான். அதற்குள்ளாக பாரதி மீட்கப்பட்டு வீடு சேர்க்கப்படுகிறாள். வேலாயுதத்தின் நண்பரும், இந்தக் கடத்தலுக்குத் தலைமை தாங்கியவருமான ஆடிட்டர் விஸ்வனாத்தும் கைது செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்ட சபாரத்தினம் ஆசாரியின் மகன் வேலாயுதம் கைது செய்யப்பட்டவுடன் தன் தந்தை வேலாயுதம் கொடுக்கவிருந்த நகை ஆர்டரை வேண்டாமென்று மறுத்த விஷயத்தைப் போலீஸுக்குச் சொல்வது என்று முடிவெடுத்து, ஒரு முறை ஃபோன் செய்த லக்‌ஷ்மணன் கமிஷனரின் குரல் கேட்டதும் பயத்தில்ஃபோனைக் கட் செய்து விட்டான்.

கைதுசெய்யப்பட்ட மூவரையும் கமிஷனர் ராஜேந்திரன் விசாரிக்கத் தொடங்குகையில், மத்திய மந்திரியிடமிருந்து ஃபோன் வருகிறது. அதே நேரத்தில், ராஜேந்திரனின் உதவியாளர்கள் டாக்டர் தேசிகனிடம் டாக்டர் புஷ்பா இறந்தது பற்றி எவ்வாறு தகவல்தருவது என்று அவருக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் நடேசனுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.

அதன் பிறகு என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.

திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணி:

பலமுறை கலந்தாலோசித்து, டாக்டர். நடேசனும் போலீஸ் அதிகாரிகள் பிரேமும், உதயகுமாரும் டாக்டர். தேசிகனிடம் அவரின் மகள் மரணம் குறித்துச் சொல்லிவிடுவது என்று தீர்மானித்தனர். எவ்வாறு சொல்வது என்று பலமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டனர். நிதானமாக, ஆனால் தெளிவாகச் சொல்லிவிடுவது என்ற தீர்மானத்துடன் ரூமிற்குள் நுழைந்தனர். இவர்கள் எப்பொழுது வருவார்கள் என்று படுக்கையில் படுத்துக் கொண்டே எதிர்பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் தேசிகன், இவர்கள் உள்ளே வருவதைப் பார்த்ததும், அவசர அவசரமாக “என்ன ஆச்சு, புஷ்பாவுக்கு என்ன ஆச்சு” என்று கேட்க, “டாக்டர், நீங்க கொஞ்சம் தைரியமா இருக்க வேண்டிய டைம்” என்று பக்குவமாய் ஆரம்பித்தார் டாக்டர் நடேசன்.

ஒரு பத்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு, நிதானமாய், பொறுமையாய், பக்குவமாய் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னார் டாக்டர் நடேசன். எல்லாவற்றையும் கேட்ட டாக்டர் தேசிகன் ஒருமுறை மூர்ச்சையானார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி மனதைத் தேற்றும் விதமாக முடிந்த அளவு தைரியம் சொல்கிறார்கள் டாக்டரும் நர்ஸும். சிறு குழந்தையைப் போல் கதறி அழத் தொடங்குகிறார் டாக்டர் தேசிகன். எதையெதையோ சொல்லிப் புலம்பிக் கொண்டே அழுகிறார். சிறு வயதிலிருந்து தன் மகள் எப்படியெல்லாம் வளர்ந்தாள் என்பது அவரின் மனக்கண்முன் ஓட, துக்கம் தாளாமல் புலம்பிக் கொண்டே இருந்தார் அவர். புஷ்பாவுக்குக் கிட்டத்தட்ட ஆறு வயது இருக்கையில் தனது மனைவியை இழந்த டாக்டர் தேசிகன், மகளின் நல்வாழ்வுக்காக இன்னொரு திருமணம் செய்து கொள்ளாது தனி ஒருவராய் இருந்து அவளை வளர்த்தவர். அவள்மீது தன் உயிரையே வைத்திருந்தார்.

அழுது அழுது, இனி தன் மகள் திரும்பி வரப்போவதில்லை என்ற நிதர்சனம் உணர்ந்த அவருக்கு, தனது சோகம் கோபமாக மாறிவிட்டிருந்தது. தன் மகளைக் கொன்றது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு வெறியே அவரின் மனதுக்குள் தாண்டவமாடத் தொடங்கியிருந்தது. “என் மகளைக் கொன்னது யாருன்னு கண்டுபுடிச்சுட்டீங்களா, ஆஃபிஸர்ஸ்” என்று பிரேம், மற்றும் உதயகுமாரைப் பார்த்துத் தன் கேள்வியைத் திருப்பினார் டாக்டர் தேசிகன்.

திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணி முப்பது நிமிடம்:

கடந்த இரண்டு மணி நேரமாக, வேலாயுதம், ராமச்சந்திரன் மற்றும் விஸ்வநாதன் மூவரையும் வெவ்வேறு செல்களில் வைத்துத் தனது திறமை முழுவதையும் காட்டி “விசாரித்துக்” கொண்டிருந்தார் கமிஷனர் ராஜேந்திரன். இரண்டு மணிநேரங்களுக்கு முன்னர் வந்த மத்திய அமைச்சரின் தொலைபேசி அழைப்பு அவரின் கோபத்தைப் பன் மடங்கு அதிகரித்திருந்தது. ஃபோனில் பேசிய மத்திய அமைச்சர், நேரடியாக இல்லாமல் தந்திரமாக இவர்கள் மூவரையும் விடுவிக்கச் சொல்லித் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருந்தார். ராஜேந்திரனின் புகழ் முழுவதும் அறிந்திருந்ததால், நேரடியான மிரட்டலுக்குள் இறங்கவில்லை அவர். ஆனாலும், மறைமுகமாகச் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி முடிக்க, ராஜேந்திரனும் அதே டிப்ளமஸியுடன் இவர்களை வெளியில் விட இயலாது என்று கூறி, ஃபோனைத் துண்டித்தார். ராஜேந்திரனுக்குத் தெரியும் இன்னும் சில மணி நேரங்களில் கோர்ட் வாசல் திறந்தவுடன் இந்த மூவருக்கும் பெயில் மனு தாக்கல் செய்யப்படும், தங்களது செல்வாக்குகளைப் பயன்படுத்தி வெளியில் வந்து விடுவார்கள் என்று. இருந்த அந்தக் கொஞ்ச நேரத்தில் இவர்களின் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார் ராஜேந்திரன்.

யாருமே எதிர்பார்க்காத வகையில், வன்முறையைக் கடை பிடித்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன். செல்வந்தர்கள் மூவரும் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சொகுசாய் வளர்த்த உடம்பில் அங்கங்கு சில ரத்த ரேகைகள் பதியத் தொடங்கியிருந்தன. தக்‌ஷிணாமூர்த்தியைக் கொல்ல முயன்றது, டாக்டர் தேசிகனைக் காலில் சுட்டது, பாரதியைக் கடத்தியது போன்ற விஷயங்களுக்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாக ராஜேந்திரன் நம்பினார். சபாரத்தினத்தின் கொலை, டாக்டர் புஷ்பா கொலை போன்றவற்றிற்கான ஆதாரங்கள் இல்லாவிடினும் இவற்றோடு தொடர்பு இருப்பதாக அதை உணர்ந்தார். இவைகுறித்த உண்மைகளை இந்த மூவரிடமிருந்தும் கறப்பதே தனது தலையாய பணியாக உணர்ந்திருந்தார் ராஜேந்திரன்.

மூவரில், விஸ்வநாதனால் அடி பொறுக்க முடியவில்லை. தனது மொத்த செல்வாக்கும் இந்த அதிகாரியிடம் பயன்பெறவில்லை, இவர் நம்மை அடிக்கத் தொடங்கிவிட்டார் என்று உணர்ந்த மறுநிமிடமே ஒன் பாத்ரூம் போய்விட்ட அவர், இரண்டு மூன்று அடிகளுக்குள் தனக்குத் தெரிந்த அத்தனை உண்மைகளையும் கக்கி விட்டார். துரதிருஷ்டம் என்னவென்றால், அவருக்கு அதிகம் விஷயம் தெரிந்திருக்கவில்லை என்பதே. ராமச்சந்திரனும், வேலாயுதமும் மிகவும் உறுதியாக இருந்தனர். அவர்களிடமிருந்து எதுவும் கறக்க இயலவில்லை. வெளியில் வந்தவுடன் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கருவிக் கொண்டிருந்தனர் இருவரும்.

விசாரணை நடந்து கொண்டிருக்கையில், மறுபடியும் டெலிஃபோன் மணி இசைக்க, எழுந்து சென்று ராஜேந்திரன் ஃபோனை எடுத்தார். இதன் மூலம் ஒருசில நிமிடங்கள் இந்தப் பொய்யர்களிடமிருந்து தனக்கு ஓய்வு கிடைப்பதாக அவர் நம்பினார். ஃபோனில் மறுமுனையில், இறந்து போன சபாரத்தினம் ஆசாரியின் மகன் லக்‌ஷ்மணன் பதட்டமாகப் பேசத்தொடங்கியிருந்தான். “ஐயா, ஒரு முக்கியமான விஷயம், மொதல்ல சொல்ல மறந்துட்டேன், இப்ப சொல்லணும்னு தோணுது” என்று இழுக்க, “சொல்லுங்க, நீங்க யாரு” என்று ராஜேந்திரன் அவனிடம் உண்மையைக் கேட்கத் தயாரானார். தனது சகாக்களுக்கு சைகைகளின் மூலமே எதிர்முனையில் பேசிக் கொண்டிருப்பவனில் கால் எங்கிருந்து வருகிறது என்று ட்ரேஸ் செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார்.

”அப்பச்சி சாவுறதுக்கு முன்னால, வேலாயுதத்துகிட்ட போய், அவரு பிஸினஸ் வேணானு சொல்லிபுட்டு வந்தார் அதுனால எதாவது தகராறு வந்திருக்குமோன்னு எனக்கு கொஞ்சம் சந்தேகம்.” லக்‌ஷ்மணன் சொல்லச் சொல்ல, ராஜேந்திரனின் ஆர்வம் வளர்ந்து கொண்டே வந்தது. “எதுக்காக உங்க அப்பா அந்த பிஸினஸை வேண்டாம்னு சொன்னார்” எனக் கேட்க, “அவிங்க பணம் நல்ல வளில வரலன்னு அப்பச்சிக்கு ஒரு நெனப்புங்க” என்று அப்பாவியாய்ப் பதில் அளித்தான் லக்‌ஷ்மணன். “நல்ல வழியில வரலன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்று ராஜேந்திரன் குடைய, எனக்கு அதப்பத்தி ஒண்ணும் தெரியாது, ஆனா அவுங்க மூணு பேரும் ஏதே சட்டவிரோதமான செயல்களைச் செயதாகனு அப்பச்சிக்குப் பட்டது என்றான். “ம்ம்.. அப்புறம் என்ன சொன்னாரு உங்க அப்பா” எனக் கேள்வியைத் தொடர, “நான் வேண்டாம்னு சொன்னாலும் கேக்கலங்க, என் மாமனாரு வீட்டுக்குப் போகயில, அதுக்குப் பக்கத்துல இருக்குற மனமகிழ் மன்றத்துல எப்போதும் இருக்குற வேலாயுதத்தையும் ஒரு எட்டுப் போயி பாத்துட்டு வரேன்னு அப்பச்சி சொல்லிட்டுப் போனாக, அதுக்கப்புறந்தான்…… “ வார்த்தையை முழுவதும் முடிப்பதற்கியலாமல் வாயை மூடிக்கொண்டு அப்பாவை நினைத்து அழலானான் லக்‌ஷ்மணன்.

மறுமுனையில் ஃபோனைக் கையில் வைத்தவாறே, செல்லுக்குள் அமர்ந்திருந்த வேலாயுததைக் கோபத்துடன் பார்க்கலானார் ராஜேந்திரன்.

செவ்வாய்க் கிழமை அதிகாலை ஐந்து மணி:

கொத்தரிக் குப்பத்திலிருந்து எடுக்கப்பட்ட புஷ்பாவின் இறந்த உடலை அவள் வேலைபார்த்த அதே விஸ்வேஸ்வரய்யா மருத்துவமனையின் மார்ச்சுவரிக்கு எடுத்துச் சென்றனர். போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு முன்னர், டாக்டர் தேசிகன் ஒருமுறை பார்க்கலாம் என்று விதிவிலக்களிப்பட்டதால், ஆக்ஸிஜன் மாஸ்க் சகிதமாக ஸ்டெர்ட்சரில் தள்ளப்பட்டு டாக்டர் தேசிகன் கொண்டு வரப்பட்டார்.

பல வருட டாக்டர் வாழ்க்கையில் கணக்கிலடங்காத நோயாளிகளையும், சாகக் கிடப்பவர்களையும், செத்த பிணங்களையும், ரத்தமும் சதையும் கலந்த கலவைகளையும் பலமுறை பார்த்து முழுவதுமாய் இவற்றுக்குப் பழக்கப்பட்டுப் போயிருந்தாலும், தனது சொந்த மகளின் இறந்த உடலைப் பார்க்கும் துணிச்சல் அவருக்கு வரவில்லை. அந்த உடலையும், அது இருந்த நிலையையும், இடது மார்பிலே குண்டு பாய்ந்து பல மணி நேரங்களாகியிருந்தாலும், மண்ணில் புதைக்கப்பட்டுப் பின்னர் தோண்டி எடுக்கப்பட்டிருந்தாலும் அந்தக் காயம் முழுவதுமாய்க் கண்களுக்குப் புலப்பட்டது அவரின் ஆத்திரத்தை இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது. பித்துப் பிடித்தவர் போலக் கத்தத் தொடங்கினார். படுக்கையை விட்டு எழுந்திருக்க உடல் வலு இல்லாவிடினும், பெரிய குரலில் கதறுவதற்கு முடியாவிட்டாலும் அந்தக் கத்தலிலிருந்து ஆத்திரத்தின் அளவு பார்ப்பவர்களுக்கு உடனடியாக விளங்கும். அந்த சோகமான நிலையிலும் சற்றுக் கூர்ந்து கவனித்த டாக்டர் தேசிகன், மூடியிருந்த பிணத்தின் வலது கைக்குள் ஏதோ இருப்பதைக் கண்டறிந்தார். போலீஸ்காரர்களிடம் உடனடியாகச் சுட்டிக்காட்ட, க்ளவுஸ் அணிந்த மெடிக்கல் டாக்டர்ஸ் பகீரதப் பிரயத்தனத்துடன் பிணத்தின் கைக்குள் இருந்ததை எடுக்க முயல, அது, சால்ட் அண்ட் பெப்பர் என்று குறிப்பிடப்படும் வெள்ளையும், கருப்பும் கலந்த ஒரு கொத்து முடி…..

பிரேமும், உதயகுமாரும் அதி கவனமாக அந்த முடியை எடுத்துப் பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொண்டு, டி.என்.ஏ. சோதனைக்கனுப்புவதற்குத் தயாரானார்கள்.

செவ்வாய்க் கிழமை அதிகாலை ஐந்து மணி முப்பது நிமிடம்:

கடந்த இரண்டு மூன்று மணி நேரங்களாகத் தனது படுக்கையறையில், படுக்கையில் படுத்து இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தாள் பாரதி. கடந்த இருபது மணிநேரமாங்களாய் நடந்து முடிந்த பல விஷயங்களும் மனக்கண்முன் சினிமா போல ஓடிக்கொண்டிருந்தன, காலையில் பார்த்த கொலையில் தொடங்கி, தான் கடத்தப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டதும், கிட்டத்தட்ட கொலை செய்யப்படும் நிலையை அடைந்து, எமலோக வாசல் கதவைத் தட்டி விட்டு மீண்டும் திரும்பி வந்ததும் திரும்பத் திரும்ப மனதுக்குள் வந்து போய்க்கொண்டிருந்தன. இவையெல்லாம் சேர்த்து அசுரக் களைப்பைக் கொடுத்து ஆழமான உறக்கத்தைத் தந்திருக்க வேண்டும், ஆனால் தூக்கம் வருவதற்காகப் போராடிக் கொண்டிருந்தாள் பாரதி. ஏன்?

முக்கிய காரணம் கணேஷ். அப்பாவிடம் பேசியது போல அவன் தன்னைக் காதலிக்கிறானோ என்ற எண்ணம். நேரடியாகக் கேட்டு விடலாமா என்று யோசிக்கிறாள். நோ, கேட்டு அவன் ”சீ, சீ, நீ இப்படியா நெனச்ச, நான் உன்ன நல்ல பொண்ணுன்னு நெனச்சனே” என்று கூறி விட்டால்? கேட்காமலேயே இருக்கலாம் என்றால் இந்த இக்கட்டான நிலையிலிருந்து அமைதி பெறுவது எப்படி? குழப்பத்திற்கு மேல் குழப்பம் அவளுக்கு.

படுக்கையிலிருந்து எழுந்து, வீட்டின் மொட்டை மாடியில் சென்று அதிகாலைச் சூரியனை, லேசாக வீசும் சில்லென்ற காற்றையும் அனுபவிக்கலாமென்று முடிவெடுத்தாள். பாதிப் படியேறி வருகையிலே மொட்டை மாடிக்குச் செல்லும் கதவு திறந்திருப்பதைப் பார்த்துச் சற்று ஆச்சரியமடைந்தாள். கதவைத் தாண்டி உள்ளே நுழைய, மாடியின் விளிம்பில் நின்று கொண்டு சூரியனை வேடிக்கை பார்த்தவண்ணமிருந்த அப்பா கண்ணில் பட்டார். யாரோ வரும் சத்தம் கேட்ட அவர் சட்டெனத் திரும்ப, மகளைப் பார்த்து, “என்னம்மா, தூங்கலையா” என்றார். “நீங்க ஏம்பா தூங்கல?” என்று இவள் பதில் கேள்வி கேட்க, “மே பி… மே பி… ரெண்டு பேரையும் ஒரே விஷயம் பாதர் பண்ரதோ?” என்று புத்திசாலித்தனமான கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தார்.

“அப்பா…. என்ன நம்புறீங்கதானே” என்று கிட்டத்தட்ட அழும் நிலைக்குச் சென்று விட்ட மகளைக் கரிசனத்துடன் அணைத்த தந்தை, “என்னம்மா சொல்ற, உன்ன நம்பாம யாரை நான் நம்பப் போறேன். கணேஷண்டயே நேரடியாக் கேட்டுடும்மா… அப்படி நோக்கும் அவனைப் புடிச்சிருந்தா நேக்கு சம்மதந்தான்… என்ன, உங்க படிப்பு முடியற வரைக்கும் நீங்க பக்குவமா வெய்ட் பண்ணணும், இது படிப்பை பாதிக்காமலும் பாத்துக்கணும்” பேசிக் கொண்டே போன அப்பாவை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள் பாரதி.

(தொடரும்)

– வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad