\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இந்தியா 69

20150815_14484229 மாநிலங்கள் தமிழ் உட்பட இருபதிற்கும்  மேற்பட்ட அலுவலக மொழிகள், சில மதங்கள், பல சாதிகள், கணக்கில் அடங்கா  கடவுள்கள், இயற்கை மற்றும் இன வேறுபாடுகள், அனைத்து இடங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் , இத்துணை வேற்றுமைகளையும் வைத்துக்கொண்டு, உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகக் கடந்த அறுபத்தி ஒன்பது   ஆண்டுகளாக வெற்றிநடை போட்டுக்கொண்டு இருப்பது நம் இந்திய நாடாகும். பல தலைவர்களின் வழிகாட்டுதல்கள், பல்லாயிரக் கணக்கில் களபலிகள் மற்றும் தொடர்ச்சியான தியாகங்களின் பயனாக நம்மை ஆண்டு வந்த அங்கிலேயர்களை விரட்டி, நம் விடுதலையை நாம் பெற்ற நாள் ஆகத்து 15. இந்தியன் என்பதையும் கடந்து, மொழி மற்றும் இன உணர்வே நம் பலருக்கு மேலோங்கி இருப்பதே இன்றைய நிதர்சனம். இவை அனைத்தையும் உடைத்து, ஒட்டுமொத்த நாட்டையும், இந்தியன் என்ற ஒற்றப் புள்ளியில் உணரச் செய்யும் நிகழ்வுகள் வெகுசிலதே, அவற்றுள் மிக முக்கியமானது நம் சுதந்திரத் திருநாள் ஆகும். இந்த ஆண்டு நமது 69வது சுதந்திரத் திருநாள் இந்தியா மற்றும் உலகப்பந்தில் எல்லா இடங்களிலும் வாழ்ந்து வரும் நம் அனைத்து இந்தியச் சொந்தங்களால் தேசப்பற்றுடனும், விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது.

மினசோட்டாவில் வாழ்ந்துவரும் நம் இந்தியச் சொந்தங்களும், இந்தியாவைப் போன்று மொழி மற்றும் இன அடிப்படையில் ஒன்றிணைந்து சங்கம் அமைத்துச் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். இந்திய மினசோட்டாச் சங்கம் இங்கு செயற்பட்டு வரும் அனைத்துச் சங்கங்கள் மற்றும் இங்கு வசிக்கும் நம் இந்திய உறவுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இந்த ஆண்டிற்கான சுதந்திர தின விழாவை, மினசோட்டாத் தலைநகரான செயிண்ட் பால் – காபிடல் வளாகத்தில் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தி முடித்தனர்   

20150815_141459காலையிலேயே அனைத்துச் சங்கங்களும் மைதானத்திற்கு வந்து, அவரவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த இடங்களில் குடில்கள் அமைத்து, மக்களை வரவேற்பதற்கு ஆயத்தமாய் இருந்தனர், பிற்பகல் 1.30 மணிக்கு அனைத்துச் சங்கங்களின் அணிவகுப்புடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாகவும், வித்தியாசமாகவும், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்திக் கொண்டிருக்கும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தினர் இந்த வருடம் தமிழின் பழமையான கலைகளான சிலம்பம், பறை மற்றும் பொய்க்கால் குதிரை ஆகியவற்றுடன் அணிவகுத்து வந்தது சிறப்பாகவும், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் அமைந்தது. அணிவகுப்பு விழா மேடையை நெருங்கியதும், விழாக் குழுவினரால் மக்களின் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டனர். அணிவகுப்பின் இறுதியில் அங்கு கூடியிருந்த அனைவரும், கொடியேற்றும் மையப் பகுதியில் குழுமியிருக்க, நம் மூவர்ணக் கொடியும், அமெரிக்க தேசியக் கொடியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.  நம் மூவர்ணக் கொடியின் அருகில், சமீபத்தில் மறைந்த, நம் முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான பாரத ரத்னா, டாக்டர் ஆ.ப.ஜ அப்துல் காலம் அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

20150815_133446நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த, அமெரிக்க அரசு அதிகாரிகளை அறிமுகப்படுத்தி, அனைத்து அதிகாரிகளும் ஒரு சில மணித்துளிகள், அவர்களின் பார்வையில் நம் நாட்டின் பெருமைகளையும், உலக அரங்கில் நாம் செய்து வரும் சாதனைகள், மினசோட்டாவில் நம்முடைய பங்களிப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல , அங்கு கூடியிருந்த மக்களின் மத்தியில் கைதட்டல்களும், ஆரவாரமும் தொடர்ந்து கொண்டே இருந்தன. தமிழையும், தமிழர்களையும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதே பெரும்பான்மையான நம் இந்திய சமூகத்தின்  இயல்பு, இதை உடைக்கும் விதமாக அங்கு கூடி இருந்த அனைவரும் நம் கலாம் அவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதின் மூலம், கலாம் அவர்கள் ஒட்டுமொத்த இந்தியர்களின் போற்றுதலுக்கும், நேசத்திற்கும், மரியாதைக்கும் உரிய  தலைவராக, மனிதராக  நம்மிடம் வாழ்ந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியது. இது நாமனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

20150815_145246முதலில் அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்க தேசியப் பாடலும் முழு மரியாதையுடன் பாடப்பட்டது. அதன்பின் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நம் மூவர்ணக் கொடி அனைவரின் கரவொலிகளுக்கு மத்தியில் ஏற்றப்பட்டு, பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியதும் நம் தேசிய கீதம் அங்கு கூடியிருந்த அனைவராலும் முழு மரியாதையுடனும், உணர்ச்சியுடனும் பாடி முடிக்கப்பட்டது.  இத்தருணத்தில், மொழி, இனம், மதம் அனைத்தும் உடைபட்டு நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வே மேலோங்கி இருந்தது. தேசியகீதத்தின் முடிவில், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் , கூடியிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு கொடியேற்றம் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. கொடியேற்றினால் இனிப்புத் தரவேண்டும் என்ற நம் பாரம்பரியப் பழக்கத்தை, ஏனோ இங்கு யாரும் கடைபிடிக்கவில்லை

கொடியேற்றத்திற்குப் பிறகு அங்குக் கூடியிருந்த மக்கள் கூட்டம், உணவுத்திடலை நோக்கி மெல்ல நகரத்தொடங்கியத, இது உணவுத் திருவிழாவா என்று ஐயம் ஏற்படும் அளவிற்கு பலவகையான உணவுத் திடல்கள் அமைத்து, அங்குக் கூடியிருந்த அனைவரையும் பசியாற்றிக்  கொண்டிருந்தனர். மினசோட்டாவில் இவ்வளவு இந்தியர்களா என்று புருவத்தை உயர்த்தும் அளவிற்குக் கூட்டத்தை திடல்களின் அருகில் காணமுடிந்தது.

காவல்துறை உங்கள் நண்பன்” என்று சொன்னாலும், அவர்களை அணுகுவதில் சிறு தயக்கமும் அச்சமும் நம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது, அமெரிக்காவிலும் நமக்கு அதே நிலை தான, இதற்கு முற்றிலும் மாறாக, நிகழ்ச்சியின் பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்களிடம், நம் மக்கள்  மிக இயல்பாகப் பேசியும், அவர்களுடன், அவர்களின் வாகனத்தில் அமர்ந்து, தொப்பியை அணிந்து பல கோணங்களில் புகைப்படத்தை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்க, காவலர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டு, சிரித்த முகத்துடன் இருந்ததைப் பார்க்கும் பொழுது உண்மையில் காவல் துறை நம் நண்பர்கள்

தான் என்று நம்ப முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பு அம்சமாக அமைந்தது அங்கு கூடியிருந்த நம் சர்தார்ஜி நண்பர்களின் பங்களிப்பு. குடில்கள்  அமைத்து அவர்கள் அணியும் தலைப்பாகையை விரும்பிய அனைவருக்கும், பாசத்துடனும்,சந்தேகங்களுக்குப் பொறுமையுடன் பதில் அளித்துக் கொண்டே கட்டி விட்டு அழகு பார்த்தனர். பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும் அவர்களின் தலைபாகை கிட்டத்தட்ட எட்டு முழ வேட்டியின் நீளம். சர்தார் நண்பர்களின் பாசத்தால் அங்கு பலர் திடீர் சர்தார்ஜிக்களாக வலம் வந்தனர்.

“Make your own stage, your audience is audience is waiting” என்ற ஆங்கில வரியினை மெய்ப்பிக்கும் வகையில், மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த நண்பர்கள், அவர்களின் குடிலின் அருகிலே, பறை இசையுடன், பொய்க்கால் குதிரை ஆட்டத்தை ஆடத் தொடங்கிய ஒரு சில நிமிடங்களுக்கெல்லாம், தேனை நோக்கி எறும்புகள் அணிவகுப்பதை போன்று, சிதறிக் கிடந்த மக்கள் கூட்டம், பொய்க்கால் குதிரையை நோக்கி அணிவகுத்துப் பின் சூழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் கண்டு களித்தனர், பத்து நிமிடங்கள் தொடர்ந்த  நடனம் பலத்த கைதட்டலுடன் முடிவு பெற்றது, இறுதியில் பலர் குதிரையின் அருகில் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் மைய அரங்கில் கலை நிகழ்சிகளும், ஆங்காங்கே விளையாட்டுப் போட்டிகளும் மற்றும் நண்பர்களின் அரட்டைக் கச்சேரிகளும் என்று இந்த ஆண்டு சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டப்பட்டது. வரும் நாட்களில் நம்மிடையே நிலவிவரும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து, வேறுபாடுகளை உடைத்து, அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வை வளர்த்து, ஊழல் மற்றும் லஞ்சம் இல்லா நாடாக மாற்றுவதை நம் அடிப்படைக் கடமையாக ஏற்று அதை செயல்படுத்தி, அடுத்த வருட சுதந்திர தினத்தை மேலும் சிறப்பாகக் கொண்டாடுவோம் என்ற நம்பிக்கையுடன்

என்றும் அன்புடன்,

விஜய் பக்கிரி   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad