\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்கத் தமிழ் பெற்றோர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!! – சுமதிஸ்ரீ

Filed in அன்றாடம், பேட்டி by on August 31, 2015 1 Comment

DSC_6480தமிழக இளைய தலைமுறைப் பெண் மேடைப் பேச்சாளர்களில் முக்கியமானவரான திருமதி. சுமதிஸ்ரீ அவர்கள் சமீபத்தில் தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மினசோட்டா வருகை தந்தார். சிரிக்க வைத்து, கூடவே சிந்திக்கவும் வைக்கும் மேடைப்பேச்சுக்குச் சொந்தக்காரரான இவருக்கு எழுத்தாளர், கவிஞர், சினிமாப் பாடலாசிரியர் என வேறு பல முகங்களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், அனைவரிடமும் எளிமையாகப் பழகும் பண்புள்ள பாசமிகு சகோதரி. நமது பனிப்பூக்களுக்கு, இவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இங்கே.

உங்கள் வாழ்வில் மேடைப்பேச்சு எங்கு துவங்கியது?

பொதுவா, நடிகைகளிடம் எப்படி நடிக்க வந்தீங்கன்னு கேட்டா, அது ஒரு விபத்து என்பார்களே, அது போல், நான் பேச வந்ததும் ஒரு விபத்து தான். திருச்சி மேலப்புதூர் ஜூலியானாள் நடுநிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஏதோ ஒரு கலவரம் என்று ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள். எனக்கு ரிக்க்ஷா மாலையில் தான் வருமென்பதால், பள்ளித் தலைமையாசிரியர் சிஸ்டர் எத்திலின் அவர்கள் அறையில் அமர்ந்து மாலை வரை படித்துக் கொண்டிருந்தேன். கிளம்பும்போது, அவர்கள் என்னிடம்காலையிலிருந்து படித்துக்கொண்டு இருந்தாயே, என்ன படித்தாய்?” என்று கேட்டார்கள். அப்ப, நான்காம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் கப்பலோட்டிய தமிழன் பற்றிய ஒரு கட்டுரை இருந்தது. அது அச்சமில்லை, அச்சமில்லை என்று பாரதியின் வரிகளுடன் தொடங்கும். அதை சிஸ்டர் சொல்லச் சொன்னதும், பயமின்றி, திக்கல், திணறல் இல்லாமல் சொன்னதும், என்னைப் பாராட்டியதுடன் அதை அடுத்த நாள் காலையில், பள்ளி மாணவர் கூட்டத்தில் சொல்லச் சொன்னார்கள். அன்று பேசியது தான் என் முதல் மேடைப்பேச்சு. எட்டாம் வகுப்பு அக்காக்கள் மட்டுமே மேடையில் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், எனக்கு அன்று கிடைத்த வாய்ப்பில் நான் பேசியது, பலருக்கும் பிடிக்கப்போக, என்னை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அங்கு பேசச் சொன்னார்கள். அந்தப் பள்ளியில் இருந்து வெளியே வரும் வரை, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று எனது பேச்சு அங்கே தொடர்ந்தது.

கேள்வி: மேடைப்பேச்சில் உங்களது வளர்ச்சிக்கு எதையெல்லாம், யாரையெல்லாம் காரணமாகக் கூறுவீர்கள்?

மேடைப்பேச்சு வளர்ச்சிக்குத் திறமை மட்டுமில்லாமல், அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் முக்கியத் தேவை. எந்தெந்த மேடைகளில் பேசுகிறோம் என்பது மிகவும் முக்கியம். எனது பேச்சுப் பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியவர்கள் என்று இருவரைக் குறிப்பிடுவேன். முதலாவது, திரு. மாது அவர்கள். திரு. சுகிசிவம், திரு. அப்துல் காதர், திரு. சத்யசீலன் போன்றவர்களது குருவான தமிழறிஞர் பேராசிரியர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களது மகன். 2005 இல், காரைக்குடி கம்பன் கழகத்தில்முரண்பாட்டில் தலை நின்றவர் வாலியா, கைகேயியா, கும்பகர்ணனா?” என்ற தலைப்பில் வாலி என்று பேசினேன். அன்று ஒரு துண்டுச்சீட்டில், மாது அவர்கள் எனது தொலைப்பேசி எண்ணைக் கேட்டு வாங்கினார். அந்தத் துண்டுச்சீட்டு தான், எனது பேச்சு வாழ்க்கைக்குக் கடவுச்சீட்டு எனலாம். அவர் மூலம் பிறகு எனக்கு அருணகிரிநாதர் விழாவில் பேச வாய்ப்புக் கிடைத்தது. அது எனது இரண்டாவது இலக்கிய மேடை. அதன்பிறகு, எனக்குத் தொடர்ந்து மேடைகளில் பேச வாய்ப்புக் கிடைத்தது. அதே போல், பேராசிரியர் திரு. தி.ராஜகோபால் அவர்கள், அச்சமயம் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி முன்பாக, சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பேசும் வாய்ப்புக் கிடைக்கக் காரணமாக இருந்தார். அன்று நான் பேசி முடித்ததும், முதலமைச்சர் என்னை அருகே அழைத்துப் பாராட்டினார். அது மட்டுமில்லாமல், இன்னும் நிறைய பெரிய மேடை வாய்ப்புகள் எனக்குக் கிடைக்க, திரு. ராஜகோபால் அவர்கள் காரணமாக இருந்தார். இவர்கள் இருவருக்கும் நான் என்றுமே நன்றியுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

கேள்வி: கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த நீங்கள், எப்படி அதை விட்டுவிட்டு, பேச்சுத்துறையில் முழுமையாக ஈடுபட்டீர்கள்?

கோபிச்செட்டிப்பாளையம் பிகேஆர் மகளிர் கல்லூரியில், நான்கு வருடங்கள் வேலை பார்த்தேன். பிரசவத்திற்குப் பிறகு, குழந்தைக்காக வேலையை விட்டேன். பிறகு, கல்லூரிக்கு வேலை பார்க்க வேண்டும் என்றால், குழந்தையைக் கூட்டிச் செல்ல முடியாது. அதுவே, மேடைப்பேச்சு என்றால் பேசும் ஒரு மணி நேரம் மட்டும் தான் குழந்தையைப் பிரிந்து இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அதனால், பேச்சுத்துறையில் இருந்த வரவேற்பினாலும், குழந்தை வளர்ப்புக்கும் அதுவே வசதியாக இருந்ததாலும், திரும்பக் கல்லூரி வேலைக்குச் செல்லத் தோன்றவில்லை. முழு நேரப் பேச்சில் ஈடுபட்டேன்.

கேள்வி: உங்கள் கணவரைப் பற்றியும், குழந்தையைப் பற்றியும் சொல்லுங்கள்.

கணவர் பெயர், பெனடிக்ட். நாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். காதலித்தபோது, என்னை பைக்கில் உட்கார வைத்து, பேச்சுப் போட்டிக்கெல்லாம் அழைத்துச் செல்வார். இன்றுவரை அது தொடர்வது, நான் செய்த அதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே மாற்றி விடும் வலிமை உள்ள ஒன்று. ஓட்டப் பந்தய வீரராக இருப்பார்கள், பாடுபவராக இருப்பார்கள். ஆனால் திருமணம் என்பது அவர்களை ஒரு குடும்பத் தலைவி என்று தான் வைத்திருக்கும். என் விஷயத்தில், இன்றுவரை நான் பேசப்போகும் போது, பென்னி கூட வருவார், ஊக்குவிப்பார் என்பதில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. பென்னியோட ஊக்குவிப்பு இல்லையென்றால், நான் இன்று அமெரிக்காவரை வந்திருக்க மாட்டேன்.

என் பாப்பா பெயர், லக்ஷனா. அவள் வயிற்றில் இருந்த போது, ஒன்பது மாதங்கள் வரை மேடையில் பேசினேன். அவள் பிறந்து ஒன்றரை மாதத்தில், மீண்டும் மேடையேறினேன். கைக்குழந்தையாக இருந்தது முதல், இப்போதைய ஆறு வயது வரைக்கும், நான் பேசும் போது அமைதியாக, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருப்பாள். எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டாள். என் பேச்சுப் பயணத்தில், அவளின் பங்களிப்பும் அதிகம்.

கேள்வி: உங்களுக்கு முன்மாதிரியாக நினைக்கும், உங்களுக்குப் பிடித்த பேச்சாளர்கள் யார்?

ரொம்பச் சின்ன வயசுல, பேச்சாளர்களைப் பெரிதும் கவனித்ததில்லை. பிறகு, 1990களில் பொதிகை தொலைக்காட்சியில் கவியரங்கு நிகழ்ச்சிகளில், செந்தமிழில் வைரமுத்து பேசும் பேச்சை விரும்பிக் கேட்டதுண்டு. தற்சமயம், எனக்கு இலங்கை ஜெயராஜ் ஐயா, சுகிசிவம் ஐயா, தெ.ஞானசுந்தரம் ஐயா ஆகியோரது பேச்சு ரொம்பவும் பிடிக்கும். அவர்களை என் முன்மாதிரிகளாகச் சொல்லுவேன். அவர்கள் போல் பேச வேண்டும் என்று நினைப்பதுண்டு. நான் இலங்கை ஜெயராஜ் ஐயாவிடம் பிரமிக்கும் விஷயம் என்னவென்றால், அவர் சிலப்பதிகாரமும் பேசுவார், பெரிய புராணமும் பேசுவார், திருக்குறளும் பேசுவார், இளைஞர்களுக்கான விஷயங்களும் பேசுவார். ஒரு நடமாடும் நூலகம் என்றே அவரைச் சொல்லலாம்.

கேள்வி: உங்களது இலக்கிய வாசிப்பு எப்பொழுது தொடங்கியது?

நான் எம்.. தமிழ் படித்திருந்தாலும், அச்சமயம் கம்ப ராமாயணம் தெரியாது, சிலப்பதிகாரம் தெரியாது, பெரிய புராணம் என எந்த இலக்கியமும் அப்போது படித்ததில்லை. பிறகு, மேடைப் பேச்சுக்காக இவையனைத்தையும் படிக்க ஆரம்பித்தேன். ஆழ்ந்த இலக்கியத்தைப் படிக்கும் வாய்ப்பைக் கல்வி எனக்குக் கொடுக்கவில்லை. பேச்சுக்காகத்தான், இலக்கியம் படிக்கத் தொடங்கினேன்.

கேள்வி: தற்சமயம் என்ன மாதிரியான இலக்கிய வாசிப்பைத் தொடருகிறீர்கள்?

தொடக்கத்தில், மேடைக்காகப் படிக்க ஆரம்பித்தாலும், பிறகு எனது விருப்பத்திற்காகவும், நான் தெரிந்து கொள்வதற்காகவும், இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். கம்பராமாயணத்தில் இரண்டாயிரம் பாடல்களாவது, இந்த மாதத்திற்குள் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு படிப்பதுண்டு.

கேள்வி: சமகால இலக்கியம் படிப்பதுண்டா?

பொதுவா, என் பேச்சிடையே நிறையக் கவிதைகள் சொல்லுவேன். அழகிய பெரியவன் எழுதியதீட்டுநாவல் குறித்து, எல்லா மேடைகளிலுமே பேசுவேன். அதேபோல் ஆண்டாள் பிரியதர்ஷிணியின்தகனம்நாவல் குறித்தும் பேசுவேன். கண்மணி ராசாவின்லட்சுமிக் குட்டிஎன்று ஒரு கவிதைத் தொகுப்பு இருக்கிறது. இது போன்ற சமகால இலக்கியங்களில் இருந்து எனது பேச்சுக்கான தலைப்புக்கேற்ற விஷயங்களை எடுத்துப் பேசுவதுண்டு. புரியாத மாதிரி எழுதும் கவிதைகளைத் தவிர்த்து விடுவேன். கவிதை என்றால் படிப்பவர்களுக்குப் புரியணும் என்பது என் எண்ணம். யாருக்குமே புரியாதமாதிரி, எழுதுற கவிதையால் யாருக்கு என்ன பயன் என்று ஒரு கேள்வி எனக்குள்ளே இருக்கிறது.

கேள்வி: உங்களுக்குக் கவிதாயினி என்று ஒரு முகமும் உள்ளது. அது பற்றி?

சிறுவயதில், பேச்சுப் போட்டிகளில் கலந்துவிட்டு, காத்திருக்கும் சமயங்களில், எனது ஆசிரியர் அங்கே பக்கத்தில் நடக்கும் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றுக்கும் அனுப்பி வைப்பார். அச்சமயம், பேச்சுப்போட்டிகளில் கிடைப்பது போல், கவிதைப் போட்டிகளிலும் பரிசுகள் கிடைத்ததால், அதிலும் பங்கேற்றதுண்டு. என்னை மிகப்பெரிய கவிஞர் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். ஆனால், என் வாழ்க்கையில் நான் எழுதிய மிகச் சிறந்த கவிதை என்று என்னுடையதகப்பன்சாமிஎன்னும் ஒரு கவிதையைச் சொல்லுவேன். அந்தக் கவிதையைப் படித்துவிட்டு, காதல் திருமணம் செய்த மகளிடம் பேசாத மூன்று அப்பாக்கள் திரும்பத் தங்கள் மகள்களிடம் பேசிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

கேள்வி: நீங்கள் எழுத்தாளராக ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

எனது முதல் புத்தகம்சாதனைகள் சாத்தியமேஎன்ற கட்டுரைத் தொகுப்பு. அது கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, தற்கொலை எண்ணத்தைக் கைவிட்ட ஒரு மாணவன் இருக்கிறான். அது எனக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது. இரண்டாவது புத்தகம்கோடரிக்காம்பில் பூக்கள்என்ற சிறுகதைத் தொகுப்பு. மூன்றாவதுதகப்பன் சாமிகவிதைத் தொகுப்பு. இந்த மூன்று புத்தகங்களையும் சேர்த்து எம்.ஃபில்.லுக்காக ஒருவர் ஆய்வு செய்திருக்கிறார். ‘கோடரிக்காம்பில் பூக்கள்புத்தகத்தையும்தகப்பன் சாமிபுத்தகத்தையும் இருவர் ஆய்வு செய்திருக்கிறார்கள். நான்காவது, ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்‘. இந்தப் புத்தகம் பரவலாகப் பேசப்பட்டது. ஏனென்றால், தகப்பன்சாமி கவிதையை ஏன் எழுதினேன் என்பதற்கான விடை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. இந்தப் பேட்டியைப் படிக்கும் அமெரிக்கத் தமிழர்களுக்கும் இதை ஒரு வேண்டுகோளாய் வைக்கிறேன். இந்தப் புத்தகத்தை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். ‘மகரந்தச் சுவடுகள்என்று அந்திமழை.காம் (www.andhimazhai.com) என்ற இணையதளத்தில் எழுதிய தொடர் தற்போது ஐந்தாவது புத்தகமாக அச்சில் வர இருக்கிறது. அடுத்ததாக, ஃபெட்னா வந்ததிலிருந்து இங்கு மினசோட்டா வந்து இந்தப் பேட்டி கொடுத்தது வரையான எனது அமெரிக்கப் பயண அனுபவம் விரைவில் புத்தகமாக வர இருக்கிறது.

கேள்வி: திரைப்படப் பாடலாசிரியர் ஆனது பற்றிச் சொல்லுங்கள்.

சினிமாவில் பாட்டெழுதுவேன் என்று கனவிலும் நினைத்தது கிடையாது. ஆனால், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார் என எல்லாக் கவிஞர்களுடனும் எனக்கு அறிமுகம் இருந்தது. கவிதைத் தொகுப்பு மூலமாக, பாடலாசிரியராக வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு முதலில் வாய்ப்புக் கிடைத்த திரைப்படம் வெளியாகவில்லை. ஆனால், அதில் பாடல் எழுதியது தெரிந்த நண்பர்கள் அதைப் பற்றியே கேட்க, எனக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. எனக்கு முன்பே நன்கு அறிமுகமாயிருந்த, திரு. ஜேம்ஸ் வசந்தனிடம் அது பற்றிக் கூறினேன். அவர் அதை ஞாபகம் வைத்திருந்து ஒருநாள் அழைத்தார். அவசரமாக ஒரு பாடலை அரை மணி நேரத்தில் எழுதித்தரக் கேட்டார். எழுத இருந்த வேறொரு கவிஞரிடம் இருந்து கிடைக்காததால், அவருக்கு அப்பாடல் அவசரமாகத் தேவையிருந்தது. அச்சமயத்தில் என்னை அழைத்து அந்த வாய்ப்பளித்ததற்கு, அவருக்கு நான் நன்றி சொல்லவேண்டும். முதலில் பாடல் எழுதிய போது திணறிய நான், இச்சமயம் அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்தில் எழுதி முடித்துவிட்டேன். எப்பொழுது எனது பாடல் வெளிவரும் என்று கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாக மனதிற்குள் லட்சியத்துடன் எழுதிக் கொடுத்தேன். அதுகூட்டம்என்னும் படத்திற்காக. இரண்டாவதாக சரத்குமார் நடித்தசண்டமாருதம்படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கிடைத்தது. பிறகு, ஜேம்ஸ் வசந்தம் அவர்கள் இசையமைத்து, இயக்கியவானவில் வாழ்க்கைஎன்ற படத்திற்காகத் தமிழ் நாட்டின் பெருமைகளைச் சொல்லும் ஒரு பாடலை எழுதினேன். ஆக, இதுவரை மூன்று படங்கள் வெளியாகி இருக்கின்றன. நான்கு படங்கள் வெளியாக இருக்கின்றது.

கேள்வி: ஃபெட்னா அனுபவம் பற்றிக் கூறுங்கள். நீங்கள் ஃபெட்னா வருவது, கடந்த வருடமே முடிவாகிவிட்டதல்லவா?

முதன்முதலில், 2007இல் நான் இணையத்தில் பிரவுஸ் (browse) பண்ணக் கத்துக்கிட்டேன். நமக்குத் தேவையானதை கூகிள் தேடிக்கொடுக்கும் என அறிந்து, முதன்முதலா கூகிள்ல தேடினது, தமிழ்ச் சங்கங்கள் என்று தான். ஏன்னா, பேச்சாளர்கள் எல்லோருமே உலகம் முழுக்க இருக்கிற தமிழ்ச் சங்கங்களுக்குப் போவாங்கன்னு தெரியும். அப்ப அந்தத் தேடுதலில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையான ஃபெட்னா தான் முதலில் வந்தது. எல்லோருக்கும் அமெரிக்கா சென்று பேச ஒரு ஆசை இருக்கும் இல்லையா? அதனால, ஃபெட்னாவுக்கு ஒரு மெயில் தட்டினேன். இந்த மாதிரி நான் நல்லா பேசுவேன், ஃபெட்னாவில் ஒரு வாய்ப்புக் கொடுங்க என்று. அதுக்கு ஒரு பதில் கிடைச்சுது. உங்க மெயில் கிடைத்தது. நாங்கள் பரிசீலிக்கிறோம் என்று. எனக்கு ரொம்பச் சந்தோஷம். ஃபெட்னாவில் இருந்து நம்மைக் கூப்பிடப் போகிறார்கள் என்று. அந்தச் சமயம், என்னிடம் பாஸ்போர்ட்டே கிடையாது. அந்தச் சமயத்தில் அப்படி ஒரு ஆர்வம் இருந்தது. இப்ப, நான் யாரிடமும் வாய்ப்புக் கேட்பதில்லை. அதற்குப் பிறகு, அடுத்தடுத்த நாட்களில் அதை மறந்து விட்டேன். நான் கர்ப்பம் ஆனேன். குழந்தை பிறந்தது. பேச்சுத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். தமிழ் நாட்டில் பல இடங்களுக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆனால், அமெரிக்கா வந்து பேச வேண்டும் என்பதை மறந்தே விட்டேன்.

இப்ப, ஃபேஸ்புக் வந்த பிறகு, ஃபெட்னாவில் உள்ள நாஞ்சில் பீட்டர் ஐயா, சிவக்குமார் போன்றவர்கள், என் ஃபேஸ்புக் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து என் பேச்சைக் கவனித்து லைக் போடுவதுண்டு. அதில் அன்னிய தேசம் பற்றி நான் பேசிய வீடியோவைக் கண்டு, “ஐந்து நிமிடத்திற்குள், தமிழ் நாட்டிற்குள் இருக்கும் இத்தனை பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். நீங்கள் கண்டிப்பாக ஃபெட்னா வரவேண்டும்என்று அழைத்தார். அதனால் 2015 ஃபெட்னாவிற்கு 80% கண்டிப்பாக வருவேன் என்று போன வருடமே தெரிந்திருந்தது. இங்கு வந்தபிறகு தான் தெரிந்தது, முதலில் 2007 இல் ஃபெட்னாவில் இருந்து ஒரு பதில் இமெயில் வந்தது என்று சொன்னேனே,  அது ஆட்டோமெட்டிக்காக வரும் இமெயிலாம். சமீபத்தில் தில்லைக்குமரன் அவர்களிடம் கேட்டபோது தான், அது பற்றித் தெரிந்தது. (சிரிப்பு)

முத்தமிழ் விழாவாக இயல், இசை, நாடகம் என்று நமது கலைகளைக் காப்பாற்றும் விதமாக, ஃபெட்னா இதை நடத்திவருவது, சிலம்பாட்டத்திலிருந்து, பறை, தோல்பாவைக் கூத்து, வில்லுப் பாட்டு, பொய்க்கால் குதிரை எனத் தமிழ் நாட்டிலேயே குறைந்துவிட்ட இக்கலைகளை இங்கு நடத்துவது சிறப்பாக இருக்கிறது.

என்னுடைய வாழ்க்கையில் ஃபெட்னா மேடையில் நான் பேசியது, எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம். வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து மக்கள், ஒரு குடும்ப விழா போல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது, எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஃபெட்னாவில்தமிழன் தன் அடையாளத்தை நிலை நிறுத்தப் பெரிதும் தேவைமொழியா? கலையா?” என்ற தலைப்பில் ஒரு கருத்துக்களம் நடத்தினேன். அனைவரும் அது நன்றாக இருந்ததாகக் கூறினார்கள்.

கேள்வி: உங்கள் பார்வையில் அமெரிக்கா?

முதல் விஷயம், இங்கு தமிழுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம். கணிப்பொறி சார்ந்து வேலை பார்க்கும் தமிழர்கள், பெற்றோர்களாக, தமிழ்மொழியைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது, தமிழ்ப் பள்ளிக்குக் கூட்டிச் செல்வது, நமது நடனத்தைக் கற்றுக் கொடுப்பது போன்றவை மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதைவிட, அமெரிக்கா என்றால் ஒரு சொகுசான வாழ்க்கை என்று தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். இங்கு வந்து பார்த்தால் தான், இங்குள்ள நிலவரம் தெரிகிறது. எட்டு மணி நேரம் அலுவலகம் சென்றுவிட்டு வந்து, வீட்டில் அவர்களே சமைக்கிறார்கள். பிரசவ நேரத்தில் அம்மா, மாமியார் யாரும் இல்லாமல், கணவனும், மனைவியுமே சேர்ந்து தங்களைக் கவனித்துக் கொள்வதும், பிறகு குழந்தையைப் பார்த்துக் கொள்வதும், தனியாக இச்சூழலைச் சமாளிப்பதும், மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. பிரசவம் போன்ற வலி, வேதனை நிறைந்த நாட்களிலும், வீட்டு வேலை, தோட்ட வேலை பார்ப்பது, சமையல் செய்வது, கார் ஓட்டுவது என்று அனைத்து வேலைகளையும் செய்வதைப் பார்க்கும் போது, அமெரிக்கப் பெண்கள் மீது பெரும் மதிப்பும், வியப்பும் ஏற்படுகிறது. தமிழ் நாட்டில், நாம் தான் சொகுசாக இருக்கிறமோ என்று தோன்றியது.

கேள்வி: மினசோட்டா பற்றி?

மினசோட்டா என்ற பெயரை, இங்கு வருவதாக முடிவான பின்பு தான் அறிந்தேன். இங்குள்ள பிற ஊர்களுக்குச் செல்லும்போது, மினசோட்டா, மினியாபோலிஸ் சின்ன ஊர் என்றே சொல்வார்கள். ஒரு கிராமம் என்பது போலவே ஒரு எண்ணத்தை உருவாக்கியிருந்தார்கள். இங்கு வந்தபிறகு தான், இதுவும் ஒரு பெரிய ஊர் என்று தெரிந்தது.

மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தில், முத்தமிழ் விழாவிற்கு, ரொம்பப் பொறுப்புடன், தங்கள் வேலைகளைச் செய்தார்கள். நான் கலந்து கொண்ட கருத்துக்களம் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை மிகவும் திட்டமிட்டுச் செய்தார்கள். முதல் நாள், சூறாவளி வந்து நிகழ்ச்சி நடக்குமா, நடக்காதா என்று இருந்த நிலையில், சோர்ந்துவிடாமல், அதற்கேற்ப திட்டமிட்டு, பள்ளியில் மின்சாரம் இல்லாத காரணத்தால், உடனே இருநூறு பேருக்கு வீட்டிலேயே சமைத்து எடுத்துக்கொண்டு வந்தார்கள். இன்று வேண்டாம் என்று சாதாரணமாக நிகழ்ச்சியைத் தள்ளி வைத்திருக்க முடியும். இருந்தாலும், முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது என்று உறுதியுடன், குறைந்த நேரத்தில், மாற்று ஏற்பாடுகள் செய்து, நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடித்தது, பெரிய விஷயம்.

பிறகு, நிகழ்ச்சியில் அளித்த பாரம்பரிய உணவுகள் பற்றிச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து கம்பு வரவழைத்து, கம்பங்கூழ் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் இவ்வளவு நாட்கள் இருந்தாலும், இப்பொழுது அமெரிக்கா வந்து மினசோட்டாவில் தான், நான் உளுந்தங்கஞ்சி எல்லாம் சாப்பிட்டேன். அதேபோல், பழைய சோறு. “தமிழ்நாட்டில் இருந்து வந்து இருக்கிறீர்கள். நீங்கள் பழைய சோறு சாப்பிடுவீர்களா?” என்று தயங்கிக் கேட்டார்கள். “நான் கொடுங்கஎன்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன். தமிழ் நாட்டில் பழைய சோறு சாப்பிட்டாலும், பழைய சோறு சாப்பிட்டோம் என்று சொல்லமாட்டார்கள். இங்கு அப்படி இல்லாமல், நமது பாரம்பரிய உணவுகளை விட்டுவிடாமல்அனைவருக்கும் அளித்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

கேள்வி: இதுவரை மேடைப்பேச்சுக்காக நீங்கள் பெற்ற பாராட்டுக்களில் நெகிழ்ச்சியானதாகக் கருதுவது எதை?

பொதுவாக, என்னதான் நல்லா பேசினாலும், மனசார வாய்விட்டுப் பாராட்டுவது என்பது குறைவு என ஒரு மனக்குறை இருக்கும். சமீபத்தில் கரோலினாவில், மேடையில் பேசிவிட்டு, சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது, ஒரு குட்டிப்பொண்ணு, பெயர் ஸ்ரீயா, என்னிடம் வந்துஆண்ட்டி, நீங்க ரொம்ப நல்லாப் பேசினீங்க. நீங்க சொன்ன காக்காக் கதை ரொம்ப நல்லாயிருந்தது. அதைச் சொல்லத்தான் வந்தேன். நீங்க சாப்பிட்டுட்டு இருந்ததால, வெயிட் பண்ணிட்டு இருந்தேன்என்று சொன்ன போதுஆ ரொம்பவும் சந்தோஷமா இருந்தது. ஒரு ஐந்து வயதுப் பெண், நம்மைத் தேடி வந்து பாராட்டும்போது, அது தான் எனக்கு மிகப்பெரிய விருதாகத் தெரிந்தது.

கேள்வி: நீங்கள் தமிழகத்தில் இருக்கும் குழந்தைகளிடம் நெருங்கிப் பழகி இருக்கிறீர்கள். அதே போல், தற்சமயம் அமெரிக்க இளம் தலைமுறையினரையும் சந்தித்திருப்பீர்கள். இவர்களிடம் கவனித்ததைக் கொண்டு, இங்குள்ள பெற்றோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

சொல்ல விரும்புவது என்பதை விட, இவர்களிடம் நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். பொதுவாக, திருக்குறள் என்பது இரண்டு மதிப்பெண் கேள்வி என்பதாகவே மதிக்கப்படும் போது, ஏழு வயதில் 1330 குறள்களையும் சொல்லும் அத்விகாவின் பெற்றோர் போன்றவர்கள் அமெரிக்கா வந்த பிறகும், குழந்தைகளுக்குத் திருக்குறளைக் கற்றுக் கொடுப்பது, தமிழ் இலக்கியங்களை, தமிழகக் கலைகளை அறிமுகம் செய்து வைப்பது போன்றவற்றைப் பார்க்கும் போது, அமெரிக்கத் தமிழ்ப் பெற்றோர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளத்தான் நிறைய இருக்கிறது என்று தோன்றுகிறது.

கேள்வி: மேடைப்பேச்சில் நுழையும் இளம் தலைமுறையினருக்கு, நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

அறிவுரை என்று இல்லை. ஒரு ஆலோசனை என்று வைத்துக் கொள்ளலாம். முதலில் நிறையப் படிக்க வேண்டும். அது முக்கியம். அடுத்தது, மேடையில் ஒருவர் கூறிய கருத்து உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் நிறையப் பேர் பேசுவார்கள். சரியான தகவல்களைக் கொண்டு போய் மக்களிடம் சேர்க்க வேண்டிய பொறுப்பு, பேச்சாளர்களுக்கு இருக்கிறது. இதற்கு நிறையப் படிக்க வேண்டும்.

கேள்வி: பொதுவாகப் பார்வையாளர்களது மனநிலை, பேச்சாளர்களிடம் எதிர்பார்ப்பு போன்றவை உங்கள் பார்வையில் என்னவாக இருக்கிறது?

சிலர் நகைச்சுவையாகவே பேசிக் கொண்டிருந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். செய்திகள் கேட்கணும்ன்னு இருக்கிறவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நகைச்சுவை வேண்டும் என்பவர்கள். நகைச்சுவை இல்லாமல் பேச முடியாது. செய்தியை மட்டுமே கூறிக்கொண்டு இருந்தால் கேட்போருக்கு போரடித்துவிடும். பேசிக்கொண்டு இருக்கும் போது, பார்வையாளர்களது மனநிலை தெரிந்துவிடும். ஒரு மணி நேரம் தனிப்பேச்சு என்றால், நான்கு செய்திகளுக்கு நடுவே ஒரு நகைச்சுவை அல்லது ஒரு கதை என்று பிரித்துக்கொள்வேன். அதனால், இதுவரை எனது பேச்சு பார்வையாளர்களுக்குப் போரடித்ததில்லை என்று நம்புகிறேன்.

கேள்வி: பேச்சாளராக நீங்கள் அடைய நினைப்பது?

எனது அனுபவத்தில், சில மூத்த பேச்சாளர்களது புறக்கணிப்பை நான் சந்தித்திருக்கிறேன். பிரபலமாக இருக்கும் சில மூத்த பேச்சாளர்கள், வளர்ந்து வரும் பேச்சாளர்களை அங்கீகரிப்பது இல்லை என்ற வருத்தம் எனக்குண்டு. சீனியர், ஜூனியர் வேறுபாடுகளைப் பார்க்கிறேன். அது போல் இல்லாமல், நான் எனது அடுத்த தலைமுறையினரை அரவணைத்துச் செல்ல வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய அதிகபட்ச லட்சியம். இன்னொன்று, நான் என்னவெல்லாம் மேடையில் பேசுகிறேனோ, அதுபோல் நடந்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறேன். மேடையில் அன்பு, கருணை என்று பேசிவிட்டு, மேடைக்குக் கீழே அடித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லாமல், மேடையில் பேசுகிற வார்த்தைகளுக்குச் சத்தியமாக நடந்து கொள்ள வேண்டும் என்கிற லட்சியம் எனக்கு எப்போதும் உண்டு.

இளம் தலைமுறையினரிடம் அக்கறை காட்டும் இவர், மேலும் உயரங்கள் தொட, பனிப்பூக்களின்  சார்பாக எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தவுடன் நேர்காணல் இனிதே நிறைவுற்றது. மினசோட்டாவில் தனது அமெரிக்கச் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டவர், அடுத்ததாக கனடா சென்று, பிறகு ஜூலை மாத இறுதியில் இந்தியா திரும்பினார்.

நேர்காணல், தொகுப்புசரவணகுமரன்.

புகைப்படங்கள்ராஜேஷ் கோவிந்தராஜ்.

பேட்டி எடுத்த தினம்ஜூலை 21, 2015.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. narayankannan says:

    மேலும் பல நாடுகளில் உங்கள் மேடை பேச்சு தொடரவேண்டும்
    தமிழை உங்களை போன்ற பேச்சாளர்களால் தான் வளரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad