ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13)
எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும்
புலத்தில் எந்தவிதமான சிக்கலுமின்றி உறவுகளுடன் வாழக்கூடிய சூழல் இருந்திருந்தால் புலம்பெயரும் தேவை இருந்திருக்காது. யுத்தம், உழைப்பு ஆகியன ஒன்று சேர்ந்து விரட்டியடிக்க, சமூகத்தில் தானும் உயர்வான நிலையினை அடைய வேண்டும் என்ற ஆவலுடன் பல இளைஞர்கள் கடல் கடந்து சென்று பணம் பெருக்கி வாழ்ந்தனர். ‘அகதி’ என்ற பதிவுரிமை பெற்றபின்னர் நல்ல வேலை, கை நிறையச் சம்பளம் எனக் கனவுகளுடன் அலைந்தனர்.
“அகதியென்று ஆன பின்னால்
………………………..
‘ஐம்பதால் மிஞ்சுமாப்போல்
வேலையொன்று தரவேண்டும்
………………………….
காரொன்று எடுப்பதற்குக்
கடனுதவி செய்யவேண்டும்
………………………..
இவைகள் தருவாயோ?
‘இல்லை’
என்று மறுப்பாயோ?”41
புலம்பெயர்ந்தவர்களின் தேவைகளும் ஆசைகளும் பட்டியல் படுத்தப்பட்டு விண்ணப்பமாக முன்வைக்கப் படுகின்றது. பாரதியின் ‘காணிநிலம் வேண்டும்’ என்ற கவிதைத் தலைப்பினை இட்டு அதே சாயலில் எழுதப்பட்ட இந்தக் கவிதையில், தன்னுடைய ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும் வெறும் கனவாகப் போய்விடக் கூடாதென்ற ஏக்கமும் இறுதியில் வெளிப்பட்டது.
ந.சுசீந்திரன் எழுதிய “அவலங்கள் விட்டொதுக்கி” என்ற தலைப்பிலமைந்த கவிதையில் பூர்வீகமாக வாழ்ந்த மண்ணில் எண்ணற்ற கனவுகளுடன் வாழ்வை நேசித்த பலர் புலம்பெயர்ந்து நாடுநாடாக அலையும் போது அவர்களின் இளமைக் காலக் கனவுகளும் அவர்களுடன் சேர்ந்து கருகுவதாகக் குறிப்பிடுகின்றார்.
“காதலிளங் கன்னியராய்க் காளையராய்
உலகை வலம் வருகின்ற எங்களது ஆசைகளே
வாழ்வை என்றும் புதிதாய்
முத்தமிடத் தேடுகின்ற புதுயுகமே
………………………………..
காசுக்காய் இளமை கருகியதனைப் பாருங்கள்
மூச்சடக்கிப் பெட்டிக்குள் பொதியாகப் போகையிலே
மூச்சடக்கி வீதியிலே முடிந்ததுண்டு நம்வாழ்வு
………………………………………..
இந்து கடல் நீங்கும் என்னுடைய சந்ததியே
உன்னோடு போமா ஓடி உயிர்பிழைத்தல்”42
உலகெங்கணும் அலைந்து திரிந்து பொருள் தேடும்போது இளமைக் காலம் போய் வாழ்வின் இடைநடுவில் தம் கதை முடிந்து விடுமோ என அச்சம் கொள்வதாகவும் தமது ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும் நிராசைகளாக ஏமாற்றம் தரக் கூடியதாக மாறிவிடுமோ என்பதும் இவர்களை அச்சுறுத்தும் பெரும் பிரச்சினையாக உள்ளமையினை உணர முடிகின்றது.
அடிக்குறிப்புகள்
- திருநாவுக்கரசு.ப, (தொ.ஆ), புலம்பெயர்ந்தோர் கவிதைகள், பக்.43-44
- மேலது, பக்.பக்.102
-தியா-