மரணம் மகத்தானது
மரணமே, நீ மரிக்க மாட்டாயா?
மண்டிக் கிடக்கும் ஊடக மெங்கும்
மடலாய்ப் பிறந்து மலையாய் வளர்ந்து
மனதை அரித்த மடமை வரிகள்!
உண்டோ இல்லையோ என்ற சர்ச்சையில்லை!
உயர்குலம் இழிகுலம் என்ற பேதமில்லை!
உலகில் பிறப்பது எதுவும் நிலையில்லை!
உன்னதத் தத்துவமிதை உணர்த்தா வேதமில்லை!
இளமை முதுமை என்ற முரணில்லை!
இன்றோ என்றோ என்ற கணக்கில்லை!
இங்கோ எங்கோ என்றும் குறிப்பில்லை!
இருளில் படரும் நிழலது தெரிவதில்லை!
மரித்தவரின் மகிமையை நமக்கு நினைவூட்டி
மனிதரின் மறதியைப் பரிகசிப்பது மரணம்!
மறைந்திருக்கும் சுயமன மமதையை அசைத்து
மடிவாய்நீயும் ஒருதினமெனச் சிரிப்பது மரணம்!
இணையில்லா நட்பென்றும் ஈடில்லா உறவென்றும்
இம்சிக்கும் விலங்கினை உடைப்பது மரணம்!
இந்திரிய இச்சைகளை, இச்சகத்து இணைப்புகளை
இரைச்சலின்றி அறுத்து இதமளிப்பது மரணம்!
கடமைகள் புரிந்தும் கடுந்தவம் தரித்தும்
கரைசேராப் பயணத்தின் கலங்கரை மரணம்!
கட்டிய வேடம் கரைந்தே கலைந்திட
களைந்தே மறுவேடமணிய இடைவெளி மரணம்!
மகவாய்ப் பிறந்தும் மண்ணுலகில் நிலைத்தும்
மணமாய்ப் புசித்தும் மனைகள் குவித்தும்,
மகிழ்ச்சியில் திளைத்தும் மலரா அமைதியை
மறுப்பின்றி அளிக்கும் மரணம் மகத்தானது!
– ரவிக்குமார்.