\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

விலையில்லா விளையாட்டு!

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 2 Comments

vilaiilla_1_620x445

நடை பழக ஒரு பொம்மை, ஒலி அறியச் சில பொம்மைகள், அடுக்கிச் சேர்க்கப் பல வகைகள், சின்னதான சமையலறை, அழகு படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் கொண்ட அழகுப் பெட்டிக்கடை (boutique), வண்ணமய வடிவம் செய்து விளையாடும் மாவு (Play Dough), கட்டி அணைத்துக் கொண்டாட மென் பஞ்சு பொம்மைகள் (soft toys), சிறிய அளவு சிற்றுந்து பொம்மைகள் என இவையெல்லாம் என் பிள்ளையின் விளையாட்டு அறையை எட்டிப் பார்த்த கணம் என் கண்ணில் பட்டவை.

இதைக் காணுகையில் எனக்குப் பல கேள்விகள் பிறந்தன. எமது விளையாட்டு அறையில் இத்தனை பொம்மைகள் இருந்தனவா? அது சரி நமக்குத் தான் விளையாட்டு அறையே தனியாக இருந்தது கிடையாதே. சிறு பிராயத்தில் விளையாட எல்லைகளாய் இருந்தது வானமும் பூமியுமே. இயற்கை அளித்த பலவும் நம் கற்பனை எனும் எந்திரத்தில் நசுங்கிப் பல பொம்மைகளாய் உருப்பெற்றன.

vilaiilla_2_420x945உலர்ந்த பனை ஓலையைச் சிறகாக்கி, சப்பாத்திக் கள்ளி முள்ளை அச்சாக்கிச் சுற்றவிட்ட காற்றாடியின் “விர்ர்ர்ர்” எனும் சத்தம் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அந்த ஓலையில் பல வண்ணம் கூட்டிச் சுற்ற விட்டதும் உண்டு. தென்னம் ஓலையை மடித்து வளைத்துச் செய்த கைக் கடிகாரம் தான் நானே உருவாக்கிய முதல் உபகரணம் (gadget). பூவரசன் பூவை வைத்து மோதிரம் செய்து என் விரல்களில் மாட்டி அழகு பார்த்தது ஒரு தனி இன்பம்.

நொனாக் காய் பறித்து தென்னங்குச்சிகள் இணைத்து தேர் செய்தது, பூவரசங்காயை வைத்துப் பம்பரம் செய்து சுற்ற விட்டது, தூக்கணாங்குருவிக் கூட்டைப் பையாக வைத்து விளையாடியது, வேப்பங்குச்சி மற்றும் தென்னங்குச்சி வைத்து வில் அம்பு செய்தது, நீர் பாயும் கால்வாயில் வரப்போர களிமண்ணில் பல வடிவங்கள் செய்தது, பூவரச இலையைச் சுருட்டிச் செய்த ஊதல் (பீபீ) என எல்லாமே கண்மூடிப் பார்த்தால் நம் முன்னர் வந்து விலக மறுக்கிறது.

vilaiilla_3_620x586
ஐப்பசி மாதப் புயல் மழையில் சரிந்து விழுந்த வாழை மரம், அதோடு சேர்ந்தே விழுந்த பிஞ்சு வாழைக் குலையைப் பறித்து வந்து, மணலைச் சோறாக்கி, அரசயிலை போட்டுப் பரிமாறிய விருந்துகள் தந்த பட்டறிவு பல பாடங்கள் சொல்லும். பனங்காயைச் சக்கரமாக்கிக் கைவண்டி செய்து அதன் துணையோடு நடை பழகியது மறக்க முடியாதது.

அன்று நாம் விளையாட எடுத்த அனைத்தும் இயற்கை தந்தது. அதை இயற்கைக்கே தந்து மறு சுழற்சி செய்தோம். இன்று வரும் விளையாட்டு பொருட்கள் பலவும் நெகிழியால் உருவானவை. இவற்றை இயற்கையில் விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. அன்று கையில் கிடைத்த பொருளை விளையாட்டுப் பொருளாய் மற்றுவதன் மூலம் நமது சிந்தனை ஆற்றல் வளர்ந்தது. இந்த காலத்தில் யாரோ ஒருவரின் எண்ணத்தில் உருவான பொம்மைகளை நாம் நுகர்ந்து களிக்கிறோம்.    

நமது சிறு பருவத்து விளையாட்டில் எதை நினைத்தாலும் எல்லாமே ஒரு விலை இல்லாத விளையாட்டுதான். அந்த நினைவுகளே இத்தனை மகிழ்வைத் தரும்போது அந்த விளையாட்டு முறைகளை மீட்டெடுத்தால் மகிழ்ச்சி பொங்கும் என்பதில் ஐயமே இல்லை.             

சச்சிதானந்தன் வெ.

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Izwarya says:

    Wow Sachi, really superb. Now I have learnt several Tamil words from this blog. Do post many such interesting topics.

  2. b.hemaprakash says:

    Mama nangal yeri,kulam,maturam anaithum valiadia kalathil yemadhu appa sachi yai par ,he doing studies well , but u Ar wondaring any were elese scold me , but in human cyc ,inheritance, prayer ,relationship handling, etc ,but you told when thing not be done say bodily ,but I am enjoyed more than u ,mama I know tors ambitions, I will help you to do your book complete

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad