உலகத் தாய்மொழி தினம்
ஒரு இனத்தின் அடையாளம் மொழி, இனக்குழுக்கள் தம் இனத்தவரிடையே தன் உணர்வுகளை வெளிப்படுத்தத் தனித்தன்மையான முறைகளைக் கையாண்டதன் விளைவே மொழிகளின் தோற்றம்.
உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன, இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு, அரசாட்சி நடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி அதற்கு மொழியும் விதிவிலக்கல்ல. பேரரசுகள் காத்த மொழிகள் அனைத்தும் இன்றும் தழைத்தோங்குகிறது. கடந்த சில நூற்றாண்டுகளிலும் இதே நிலைதான். நாட்டு எல்லைகளை அதிகரிக்கவும், தன் அதிகாரங்களை விரிவு படுத்தவும் தயக்கமே இல்லாமல் பல மொழிகள் அழிக்கப்பட்டுள்ளன. சனநாயகம் என்ற பெயரிலும் இதே நிலைதான், அதிகாரத்தை நிலைநாட்ட மொழிகளை அழிக்கத் தயங்குவதில்லை.
தமிழ்மொழியை 2000 ஆண்டுகள் தொடர்ந்து காப்பாற்றியதில் சேர, சோழ, பாண்டியரின் இடைவிடாத ஆட்சியும் ஒரு காரணம். அவற்றை விடத் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிதையாமல் நிலைத்திருப்பதற்குக் காரணம் தமிழ் மக்களே.
உலகின் மொழிகளைக் காப்பாற்றும் ஒரு சிறு முயற்சியாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1999ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21ஆம் நாளை உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடுகிறது, உலகின் மொழிகளைக் காப்பதற்கும் அதன் அவசியத்தை உணர்த்துவதற்குமே இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
ஆங்கிலேயர் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கிய போது மத அடிப்படையில் பாகிஸ்தானையும் உருவாக்கினர். 1947ல் ஆங்கிலேயரிடம் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் தற்போதைய வங்கத் தேசத்தையும் (பங்களாதேஷ்) உள்ளடக்கியது. ஒரே மதத்தைக் கடைபிடிக்கும் நாடாகப் பாகிஸ்தான் இருந்தாலும் உருது மொழியைக் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் மீது திணிக்கப்பட்டது. வங்க மொழியைப் பல நூற்றாண்டுகளாகப் பேசி வந்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள், தம் மதத்திற்காகவும் மொழியை விட்டுக்கொடுக்க மறுத்தனர். இதற்காகப் பாகிஸ்தான் நாட்டு அரசின் உருது மொழிக்கொள்கையை எதிர்த்து ஒரு பெரிய மாபெரும் போராட்டம் நடைபெற்றது. வங்க மொழியையும்
தேசிய மொழியாக அங்கீகரிக்கக் கோரி இந்தக் கிழக்கு பாகிஸ்தான் தழுவிய போராட்டம் பல ஆண்டுகள் நடைபெற்றது. இதன் உச்சமாக டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் 1952ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் அரசுக் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
தன் தாய்மொழிக்காகத் தன்னுயிரை இழந்த அப்துல் ஜப்பார், அபுல் பர்கட், ரஃபிக்குதின் அகமது, முகமது சலாவுதின் & அப்துஸ் சலாம் ஆகியோரின் நினைவாக உலகத் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து பிரித்து வங்கதேசத்தை உருவாக்க இந்தியா பெரும் பங்காற்றியது, அரசியல் காரணங்களுக்காக, மொழிப்பற்றினால் அல்ல என்பது தனியான செய்தி.
இதன் மூலம் நாம் அறிவது மொழி என்பது மத நம்பிக்கைகளையும் கடந்தது.
இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு ஐரோப்பிய கண்டம், அவற்றின் நாடுகளைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும் கிருத்துவ மதத்தை (சில உட்பிரிவுகளாக) பின்பற்றும் மிகப்பெரும்பான்மையான மக்கள் தொகை கொண்டது.
பண்பாட்டிலும் மரபிலும் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒத்த பழக்க வழக்கங்கள் கொண்டவை. ஒரே பொருளாதாரத்தையும் பின்பற்றப் பல நாட்டு நாணயங்களையும் விட்டொழித்து ஒரே நாணயத்திற்கும் தன்னை மாற்றிக்கொண்டார்கள். இருப்பினும் அவை பல நாடுகளாக எல்லைக்கோடுகளை வரைந்து தனி நாடுகளாக இருப்பது மொழிவாரியாகத்தான்.
இதன் மூலம் நாம் அறிவது மொழி என்பது மதம், பண்பாடு, பொருளாதாரம் ஆகிய கூறுகளையும் கடந்தது.
மேலும் ஒரு செய்தி, கனடா நாட்டில் கியூபெ என்ற மாகாணத்தின் முதன்மை மொழி ஃப்ரெஞ்ச். இதை நடைமுறை படுத்தப் பல்வேறு சட்டங்கள் உள்ளது, எடுத்துக்காட்டாகக் கணினியின் Operating System முதன்மை மொழி ஃப்ரெஞ்ச் மொழியில் தான் இருக்க வேண்டும், அந்த மாகாணத்தின் அனைத்து அரசாங்க இணையதளங்கள், ஏன் தனியார் இணையதளங்களும் முதல்மொழியாக ஃப்ரெஞ்ச் மொழியில் இருக்க வேண்டும் என்பது சட்டம். இதைப்போன்ற சட்டங்களினால் தான் ஒரு மொழியைத் தழைத்தோங்கச் செய்ய முடியும். அரசாட்சியில் மொழி காக்கப் பட்டதும் இந்த முறையில் தான்.
பல்லாயிரம் ஆண்டுகளாக உலகம் அளப்பரிய மாற்றங்களைக் கண்டிருக்கிறது, ஆனாலும் தமிழ்மொழி கன்னித்தமிழாகவே நிலைத்திருக்கிறது, ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்மொழியின் சிதைவு விரைந்து நடைபெறுகிறது, 60 ஆண்டுகளுக்கு முன்பு 565 சிற்றரசுகளாக இருந்த குறுநிலப்பகுதிகளாக இருந்தவற்றை ஒரே நாடாக வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, அனைவரின் தனித்தன்மையையும் மொழியையும் காப்பாற்றும் உறுதி மொழியுடன் உருவானது.
இந்திய நாடு ஐரோப்பிய நாடுகளை விடப் பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட நாடு, ஆதலால் தான் சுதந்திரத்துப் பின் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தான் அழிந்த/அழிந்து கொண்டிருக்கும் மொழிகள் ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகமயமாக்கத்தின் மற்றுமொரு கொடிய முகம் மக்களின் தனித்தன்மையை ஒப்புக்கொள்ள மறுக்கும் அரசுகள் முன்னேற்றத்திற்குத் தேவை என்று கூறி மக்களின் மீது பொதுவான மொழியைப் புகுத்துவதுதான்.
ஆங்கிலேயர் ஆண்ட நாடுகள் அனைத்திலும் வரலாற்றுச் சின்னங்களும், மொழியும் சிதையாமல் காக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில் இந்தியச் சனநாயகத்தில் வரலாறும், பண்பாடும், மொழிச்சிதைவும் அதிகரித்து இருக்கிறது. இந்திய நாட்டின் பல்வேறு மொழிகளைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு, அதில் தவறி இருக்கிறார்கள்.
தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாக மரபு மாறாத தனித்தன்மையான எந்த மொழிக்குடும்பத்திலும் சாராத செம்மொழி. இந்த உண்மையை அறிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள இந்திய அரசிற்கு 60 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. மொழியைக் காப்பாற்ற அதற்கான சட்டங்களையும் உதவிகளையும் அரசாட்சி செய்ய வேண்டும்.
அமெரிக்க நாட்டில் மினசோட்டா மாநிலத்தில் வாழும் நாம் இங்கு வாழும் இனக்குழுக்களான ஹூமாங், சோமாலி மக்களைப் பற்றி அறிந்திருப்போம். மக்கள்தொகையில் மிகச்சிறுபான்மையான இந்த மக்களின் மொழியைக் காப்பாற்ற அமெரிக்க அரசும் மாநில அரசும் பெரும் பொருளுதவி வழங்குகிறார்கள். இதற்கு முதன்மை காரணம் அம்மக்கள் தன் மொழியை முதன்மை படுத்துவதுடன் அதை மக்கள் கணக்கெடுப்புகளிலும் பள்ளிகளிலும் பதிவு செய்வது தான்.
அமெரிக்க நாடு அனைத்து மொழிகளையும், இனங்களையும், நம்பிக்கைகளையும் மதிக்கும் நாடு. நாம் தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசுபவர் என்று அனைத்துக் கணக்கெடுப்பு, பள்ளிப் பதிவுகளிலும் குறிப்பதும் மிக அவசியம். அமெரிக்கத் தமிழர் என்ற அடையாளத்துடன் தமிழை நம்முடைய முதன்மை மொழியாகவும் தாய்மொழியாகவும் பதிவு செய்ய மறவாதீர்கள், எந்த நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியிருந்தாலும் தமிழ் மொழியே நம்மை இணைக்கிறது.
தமிழ்மொழி தமிழகத்திலும் ஈழத்திலும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தாய்மொழியாக, உணர்வாக, உயிராக நிலைத்திருக்கிறது.
பொருள்தேடி கடல்கடந்து சென்று குடியேறிய நாடுகளிலும் தன் அடையாளத்தை மறக்காமல் சிங்கப்பூர், மலேயா போன்ற நாடுகளில் தமிழ் மொழி காக்கப்படுகிறது. தேசிய மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழி அன்றாடம் 90 மில்லியன் மக்கள் பேசும் உலகின் ஒரே செம்மொழி, இந்த உண்மையை நாமும் உணர்ந்து இந்த உலகிற்கும், வல்லரசான இந்த அமெரிக்க மண்ணில் வாழும் மக்களுக்கும் உணர வைக்க நம்மால் ஆனவற்றைத் தொடர்ந்து நடைமுறை படுத்துவோம்.
மொழி என்பது மொழிவதற்கு, அன்றாட வாழ்வில் தமிழரிடையே தமிழ் மொழியில் பேசுவோம், தமிழைப் படிப்போம், மின்னஞ்சல் எழுதுவோம். நம்முடைய அடுத்த தலைமுறைக்குத் தமிழ் மொழியை எடுத்துச் செல்வதன் மூலம் தமிழ்மொழி அமெரிக்க மண்ணில் தழைத்தோங்கும். அடுத்த தலைமுறை தமிழரை இம்மண்ணிலேயே உருவாக்குவதன் மூலமே இது சாத்தியம்.
நம் தாய்மொழியை வணங்கி, உலகத் தாய்மொழித்தினத்தை கொண்டாடுவோம்
– மா. சிவானந்தம்