\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இறக்கும் மனிதர்கள் ; இறவாப் பாடல்கள்

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 1 Comment

msviswanathan_620x620

சென்ற ஜூலை மாதம், பதினான்காம் நாள்…..

சென்னை சாந்தோம் பகுதியின் வாகன இரைச்சல்களுக்கு நடுவே உயர்ந்து நிற்கிறது அந்த வெள்ளை வீடு. சூரியனின் ஒளி விழுந்து அந்தச் சூட்டால் ஆர்ப்பரித்த கடலலைகளின் ஓலம் விட்டு விட்டுக் கேட்கிறது. மலர் மாலைகளின் வாசம் காற்றில் தவழ்ந்து அருகிலிருக்கும் கடற்புறத்தின் வாடையை நசுங்கச் செய்கிறது. ஆங்காங்கே மீனுக்காகப் பறந்து செல்லும் பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டே செல்கின்றன. மிகவும் ரம்மியமான காலைப் பொழுது. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த பல நட்சத்திரங்கள், முக்கியப் பிரமுகர்கள் வந்திறங்குகிறார்கள். பொதுவாகவே அவர்களைக் கண்டால் குதூகலித்துக் கூக்குரலிடும் மக்கள் அமைதியுடன் நிற்கின்றனர். அருகிலிருக்கும் பங்களாக்களின் நாய்கள் கூட அமைதி காக்கின்றன. அவ்வப்போது சன்னமாய் அழுகுரல்கள். கூடியிருப்பவர்கள் முகத்திலும், வந்தவர்கள் முகத்திலும் சோகம் அப்பிக் கிடக்கிறது. எதையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அனைவரும். சற்று நேரத்தில் வந்து நிற்கிறது அந்த வண்டி. ஐந்தாறு தலைமுறைகளாக ஒலித்து, அடங்கிப் போன நாதம் வந்து இறங்குகிறது . இல்லையில்லை இறக்கப்படுகிறது. ஆம், முடிந்து போனது தமிழ்த் திரையிசையின் சகாப்தம்!!!

அன்றைய மலபார் பகுதியின் எலப்புள்ளி கிராமத்தில், 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தவர் விஸ்வநாதன். தந்தை பெயர் சுப்பிரமணியம். தாய் நாராயணிக்குட்டி. அவர்களது வீட்டின் பெயர் மனையங்கம். சுப்பிரமணியம் என்ற பெயரில் பலர் இருந்ததினால், வீட்டின் பெயரோடு மனையங்கத்துச் சுப்பிரமணியம் என்று அழைக்கப்பட்டார். விஸ்வநாதனுக்கு நான்கு வயதாகியிருந்த போது அவரது தந்தை சுப்பிரமணியம் இறந்து விடக் குடும்பம் தடுமாறிப் போனது. விஸ்வநாதன் பிறந்த பிறகு குடும்பத்தில் பல துர்ச்சம்பவங்கள் நடப்பதாக உறவினரும், அக்கம்பக்கத்தாரும் அவரை வெறுக்கத் துவங்கிட, மனமுடைந்த நாராயணிக்குட்டி விஸ்வநாதனோடு தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்து ஊரிலிருந்த குளத்தை நோக்கிச் சென்றார். அதே சமயம் தன் மகள் நாராயணிக் குட்டியைக் காணவந்த கிருஷ்ணன் நாயர், இருவரையும் வீட்டில் காணாததினால் பதறிப் போய்த் தேடி அலைகையில் குளக்கரையில் இருவரையும் கண்டு, சமாதானப்படுத்தி அவர்களைத் தனது ஊரான கண்ணனூருக்கு அழைத்துச் சென்றார்.

இளவயதிலேயே விஸ்வநாதனுக்கு இசை மீது நாட்டம் அதிகமிருந்தது. ஏழ்மையின் காரணமாகப் பள்ளிக்குப் போகாமல் இசை மோகத்தினால் உள்ளூர் திரையரங்கில் முறுக்கு விற்கும் வேலையில் சேர்ந்து பாடல்களை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார். அது மேலும் ஆர்வத்தைக் கிளப்பிவிட இசைப்பள்ளியில் சேர்ந்திடத் துடித்தார். இசைப்பள்ளிக் கட்டணமான மூன்று ரூபாய்க்கும் குடும்பத்தில் வழியில்லை., கண்ணனூரில் இசைப் பயிற்சி நடத்தி வந்த நீலகண்ட பாகவதரின் வீட்டுக்கு வெளியே நின்று அவர் மற்ற மாணவர்களுக்குச் சொல்லித் தருவதைக் கேட்டு வீட்டுக்கு வந்து அவற்றைப் பாடிப் பார்ப்பது விஸ்வநாதனின் வாடிக்கையாகிப் போனது. ஒரு நாள் யதேச்சையாகத் தன் வீட்டின் முன் வந்து நின்று இசை கேட்கும் சிறுவனைப் பார்த்த நீலகண்ட பாகவதர் அவனை அழைத்துப் பேச, அவனுக்குள் இருந்த இசையார்வத்தைப் பார்த்து இலவசமாகப் பயிற்சியளிக்கத் தொடங்கினார். இதற்குப் பிரதிபலனாக அவரது வீட்டு வேலைகளைப் பார்த்து வந்தார் விஸ்வநாதன். ஒரு சில ஆண்டுகளில் இசையில் தேர்ச்சி பெற்று மேடை அரங்கேற்றம் நடத்தவும் தயாராகிவிட்டிருந்தார். 13 வயதில் திருவனந்தபுரத்தில் நடந்த அவரது அரங்கேற்றத்திற்கு மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. பத்திரிகைகள் பலவும் அவரின் இசை ஞானத்தைப் பாராட்டிப் புகழ்ந்து எழுதின.

இசையின் மீது தீராத காதலிருந்தாலும், நடிப்பிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதற்குக் காரணம் மேடையேறிப் பாடலாம் என்பதே. அவ்வப்போது சிறு சிறு நாடகங்களில் தலை காட்டி வந்த விஸ்வநாதனின் ஆர்வத்தைப் பார்த்த அவரது மாமா, ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் சேர்த்து விட எப்பவாவது நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆசையில் அங்குப் பணி புரிந்தவர்களுக்கு உணவு பறிமாறுவது, வெற்றிலை வாங்கி வருவது போன்ற எடுபிடி வேலைகளைச் செய்து வந்தார் விஸ்வநாதன். ஒய்வு நேரங்களில் ஜுபிடர் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைக்கும் முறைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தார். ஒரு நாள் அபிமன்யு படத்துக்காக எஸ்.எம்.எஸ். பல டியூன்களை முயன்றும் திருப்தி ஏற்படாமல் போகவே தனது ஆர்மோனியப் பெட்டியை மூடி வைத்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார். அன்றிரவு அந்த ஆர்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு அந்தப் பாடலுக்கு நண்பனிடம் பல விதங்களில் மெட்டமைத்துக் காட்டினார்

விஸ்வநாதன். மறுநாள் தனது ஆர்மோனியம் இடம் மாறியிருப்பதைக் கவனித்த எஸ்.எம்.எஸ். காரணம் கேட்க, உடனிருந்த நண்பன் முந்தின நாளிரவு நடந்தது அத்தனையும் கூறிவிடக் கோபத்துடன் விஸ்வநாதனை அழைத்த எஸ்.எம்.எஸ். அவரை வாசிக்கச் சொல்லிக் கேட்டு அசந்து போனார்., அந்த மெட்டை அப்படியே பயன்படுத்திக் கொள்வதாகவும், ஆனால் அதற்குத் தன் பெயரைப் போட்டால் மட்டுமே எடுபடும் என்று சொல்லி அந்த மெட்டையே திரைப்படத்தில் இடம்பெறச் செய்தார். ‘அபிமன்யு படம் வெளிவந்த போது ‘புது வசந்தமாமே வாழ்விலே’ என்ற அந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்குப் பிரதிபலனாக விஸ்வநாதனுக்குக் கிடைத்தது உணவு பரிமாறிய பிறகு, ஒய்வு நேரத்தில் பாடகர்களுக்கு மெட்டை பாடிக் காண்பிக்கும் வேலை. இதே போன்று மூன்று படங்களில் விஸ்வநாதனின் பல மெட்டுகள், எஸ்.எம்.எஸ். பெயரில் வெளிவந்தன. பின்னர் ஜூபிடர் பிக்சர்ஸ் சென்னைக்கு மாற்றலான போது பலரை வேலையிலிருந்து விலக்கினார்கள். விஸ்வநாதனின் பெயரும் அந்தப் பட்டியலில் இருப்பதைக் கண்ட எஸ்.எம்.எஸ்., ஜூபிடர் சோமுவிடம், அபிமன்யு படம் ஓடியதற்கு இந்தப் பையன் இசையமைத்த பாடல் தான் காரணம் என்று நடந்தவற்றைக் கூறி விஸ்வநாதனையும் சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னைக்கு வந்த பிறகு சி.ஆர். சுப்புராமனிடம் சேர்ந்தார் விஸ்வநாதன். அங்கு ஏற்கனவே வயலின் பிரிவில் இசைக் கலைஞராக இருந்தவர் ராமமூர்த்தி. சுப்புராமனிடம் இசைக் கலைஞர்களுக்கு இசைக் குறிப்புகள் எழுதிக் கொடுத்து மெட்டுக்களை விளக்குவது விஸ்வநாதனின் பணியானது.

அச்சமயத்தில் ‘ஜெனோவா’ என்ற படம் தமிழ், மலையாள மொழிகளில் தயாரித்து வந்த ஈச்சப்பன் படத்துக்குக் கல்யாணம், ஞானமணி என்று இரு இசையமைப்பாளர்கள் இருந்த போதும் பாடல்களுக்குப் புதிய இசையமைப்பாளரைத் தேடிக்கொண்டிருந்தார். எஸ்.எம். ராஜா என்பவர் விஸ்வநாதனை அறிமுகம் செய்து வைக்க ஈச்சப்பனுக்கு உடனே பிடித்துப் போனது. அப்படத்தின் நாயகனான எம்.ஜி.ஆருக்கு விஸ்வநாதனைப் போடுவதில் உடன்பாடில்லை. அவன் ஆஃபிஸ் பாயாக இருந்தவன், இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது அனுப்பி விடுங்கள் என்ற போது, இந்தப் படத்தின் பாடல்களை இவன் தான் போடப் போகிறான். அதில் மாற்றமில்லை. உங்களுக்கு நடிக்க விருப்பமில்லை என்றால் விலகிக் கொள்ளலாம் என்று உறுதியுடன் சொல்லிவிட, விஸ்வநாதன் ஐந்து பாடல்களுக்கு மெட்டமைத்தார். இவை அத்தனையும் பகலில் சுப்புராமனின் குழுவில் ஆர்மோனியம் வாசித்து இரவில் ஒளிப்பதிவு செய்தவை. ஜெனோவா பாடல்கள் பிரபலமான பின்பு, முதலில் எதிர்த்த எம்.ஜி.ஆர். விஸ்வநாதனின் குடிசைக்குச் சென்று அவரை வாழ்த்தினார்.

1952ல் சி.ஆர். சுப்புராமன் உடல் நலக் குறைவால் காலமாகிவிட அவர் பணிபுரிந்து வந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் படங்களை முடித்துக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது விஸ்வநாதனுக்கு. ராமமூர்த்தியின் துணையுடன் அவர் இசையமைத்த சில பாடல்கள், குறிப்பாகத் தேவதாஸ் படத்தின் ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ மிகப் பிரபலமடைந்தன. இந்தச் சமயத்தில் ‘பணம்’ படத்தைத் தயாரித்த என்.எஸ்.கிருஷ்ணன், இவர்கள் இருவரையும் இசையமைப்பாளர்களாக முறைப்படி அறிமுகப்படுத்த எண்ணினார். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த சங்கர்-ஜெய்கிஷன் பாணியில் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்திப் பெயரை உருவாக்கினார்.

விஸ்வநாதனுக்கு ராமமூர்த்தி வயதிலும் அனுபவத்திலும் பெரியவரானதால் அவர் பெயரை முதலில் போட விரும்பினார். ஆனால், என்.எஸ்.கே. ‘வி’ ஃபார் விக்டரி என்ற முறையிலும் பெரியவரானதால் பின்னிருந்து தாங்கிப் பிடிப்பார் என்று சமாதானப்படுத்தி விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற பெயரையே இந்த இரட்டையருக்கு வைத்தார். 1952 முதல் இவர்கள் இருவரும் தமிழ்த் திரையுலக இசையின் இலக்கணத்தையே மாற்றினர். அதுநாள் வரை சமூகப் படங்களிலும் கர்நாடக ராகங்களின் அடிப்படையில் அமைந்திருந்த திரையிசையை மெல்லிசை என்ற பாதைக்கு அழைத்துச் சென்றது இவர்கள் தான் என்றால் அது மிகையில்லை. இவர்களின் பெரும்பாலான பாடல்களுக்கு எம்.எஸ்.வி,யின் ஆர்மோனியமே மெட்டமைத்தது. டி.கே.ஆர். அம்மெட்டுகளைப் பாடகர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் சொல்லிக் கொடுத்து மெருகூட்டும் வேலையைச் செய்தார். இந்த இரட்டையரின் இசைச் சாதனைகளைப் பட்டியலிட்டுச் சுருக்கிவிட முடியாது. இருவரும் இணைந்து ஏறத்தாழ எழுநூறு படங்களுக்கு இசையமைத்தனர். பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளையில், இடையிசைகளில் புகுந்து விளையாடினர். ஒவ்வொரு படத்திலும் பல புதுமைகளைப் புகுத்தி வந்தனர்.

அக்காலப் பாடல்கள் பெரும்பாலும் காட்சிக்குத் தகுந்தாற்போல் எழுதப்பட்டுப் பின்னர் மெட்டமைக்கப்பட்டவை. படத்தின் கதாபாத்திரத்தின் தன்மைக்கும், காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுடன் சொற்கள் எந்த விதத்திலும் சிதைந்து விடக் கூடாது என்பதில் பெரும் கவனம் செலுத்துபவர் எம்.எஸ்.வி. ‘பேசும் தெய்வம்’ படத்தில் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ பாடலுக்கு மெட்டமைத்த சமயத்தில் அதில் வந்தவொரு வரி நெருடலை ஏற்படுத்த கண்ணதாசனிடம் சண்டைக்குப் போனாராம் அவர். கண்ணதாசன், ‘நான் எழுதவில்லை.. இது பாரதியார் எழுதிய பாடல்’ என்று சொன்னதுக்கு அவர் எந்த ஃப்ளோர் ரெகார்டிங்கில் இருக்கிறாரோ தேடி அழைத்து வாருங்கள். ‘பாட்டிசைத்து’ என்பது ‘பாட்டி செத்து’ ன்னு வருது என்ற வெகுளி அவர். இதற்குக் காரணம் தனது ஆரம்ப காலத்தில் பாபநாசம் சிவன், கண்டசாலாவின் குரலில் ‘உலகே மாயம்’ பாடலின் பதிவைக் கேட்டு எம்.எஸ்.வியைக் கூப்பிட்டுக் கன்னத்தில் அறைந்து ‘இவனை மாத்து…உல்கே மாயம் ன்னு பாடறான்’னு சொன்னது தான் என்பார்.

மேலும் அக்காலப் பாடல்களின் காட்சியமைப்புகள் சோகம், கோபம், வெறுப்பு, ஆற்றாமை, மகிழ்ச்சி, காதல், கேளிக்கை, பாசம், ஆன்மீகம் எனப் பலவித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்தவை. பெரும்பாலான பாடல்கள் கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை போன்ற ஜாம்பவான்களால் எழுதப்பட்டவை. பாடல்கள் மட்டுமே ஒரு பார்வையாளனைத் திரையரங்குக்குக் கொண்டு வரும் துருப்புச் சீட்டாகப் பயன்பட்டவை. பீம்சிங், கே.எஸ்.ஜி, கிருஷ்ணன் பஞ்சு போன்றவர்கள் குடும்பப் படங்களும், ஸ்ரீதர், திருலோகச்சந்தர் போன்றவர்கள் காதல் படங்களும், பாலச்சந்தர் சமூக, குடும்பப் படங்களும், எ.பி. நாகராஜன் ஆன்மீகப் படங்களும் எடுத்து வர அத்தனை சவால்களுக்கும் ஈடுகொடுத்து தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியவர் எம்.எஸ்.வி.

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு பெரிய நடிகர்களின் விசிறிகளைத் திருப்திப்படுத்த வேண்டிய பெரும் சுமை இருந்த போதிலும் சர்வசாதாரணமாக அதைச் செய்து வந்தனர் இருவரும். இது மட்டுமின்றி எஸ்.எஸ்.ஆர்., ஜெமினிகணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களின் படங்களையும் தூக்கி நிறுத்திய பெருமை இவர்களது இசைக்கு உண்டு. தான் இசையமைக்கும் போது இன்னார்தான் நடிகர் என்ற பிம்பங்களை மறந்து, கதாபாத்திரம், பாடல் வரிகளையே மனதில் வைத்து இசையமைத்ததாகச் சொல்வார் எம்.எஸ்.வி. பாடகரைத் தேர்ந்தெடுக்கும் போது மட்டும் அந்தந்த நடிகருக்குப் பொருத்தமான குரலைத் தேடிப் போவதுண்டு.

பல ஆண்டுகள் சேர்ந்து இசையமைத்து வந்து இரட்டையரைப் பிரிக்க நடந்த முயற்சிகள் 1965ல் வெற்றியடைந்தன. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்குப் பிறகு இருவரும் பிரிந்து செயல்பட முடிவெடுத்தனர். இந்தப் பிரிவின் துவக்கத்தில் சிலர் தலையிட்டு சிவாஜியின் படங்களுக்கு டி.கே.ஆர். இசையமைக்க, எம்.ஜி.ஆர். படங்களுக்கு எம்.எஸ்.வி. இசையமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இருவருமே தொடக்கத்தில் ஏற்றுக் கொண்டாலும் காலப் போக்கில் அவை மறைந்து விட்டன. பிரிவுக்குப் பின்னரும் இருவரும் நண்பர்களாகவே இருந்தனர்.

எம்.எஸ்.விக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு தனிப் பிணைப்பு உண்டு. இருவருக்கும் இருந்த தொழிலுறவு திரைத்துறையில் வேறு எந்த இருவருக்கும் இருந்திருக்குமா என்பது சந்தேகம். தம்பி என்று கண்ணதாசனும், அண்ணே என்று எம்.எஸ்.வியும் அழைத்து வந்தாலும் இருவருக்கும் போட்டிகள் அதிகமுண்டு. ஆனால் இருவருக்கும் எந்தநாளும் கர்வம் வந்ததில்லை. சின்னச் சின்னத் தொழில்முறைச் சச்சரவுகள் ஏற்பட்டதுண்டு. கே.எஸ்.ஜியின். கற்பகம் திரைப்படத் தயாரிப்புச் சமயத்தில் இருவருக்கும் ஒரு பிணக்கு ஏற்பட்டது. தனது வரிகள் தான் பாடலைப் பிரபலப்படுத்துகின்றன என்ற தொனியில் பேசிய கண்ணதாசனிடம் அவரது வரிகள் இல்லாமல் பாடலைப் பிரபலப்படுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விட்டு ‘கற்பகம்’ படப் பாடல் முழுவதையும் வாலியை எழுத வைத்துப் பிரபலமாக்கிக் காட்டினார். அப்படத்தில் ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு…’ என்ற பாடலில் சில வரிகள் முடிவடையாமல் இசைகளால் நிரப்பபட்டிருக்கும். முதலிரவுக் காட்சியில், தனது தந்திரத்தைப் புகுத்தி இசையாலே உணர்வுகளைக் காட்ட முடியுமென்று நிரூபித்ததற்கு இது ஒரு சான்று. இந்தப் பிணக்கு ஒரு சில நாட்களிலேயே முடிந்து இருவரும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை உருவாக்கித் தந்தனர். இந்தப் படத்தின் காட்சியினால் உந்துதல் அடைந்த கே.பாலச்சந்தர் தனது ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் இறுதிக் காட்சியை உரையாடலின்றி முழுக்க முழுக்க எம்.எஸ்.வியின் பொறுப்பில் விட்டிருப்பார். திருமணக் காட்சியின் துவக்கத்தில் மகிழ்ச்சி வழிந்தோடும் நாதஸ்வரம் போலிஸ் வரவு, மரணச் செய்தி, மணமகள் மாற்றம் என அத்தனை உணர்ச்சிகளையும் இசை மட்டுமே தூக்கி நிறுத்தியிருக்கும். எவரும் நினைத்துப் பார்க்க முடியாத இயக்குனர், எவரும் நினைத்துப் பார்க்க முடியாத இசை.

எம்.எஸ்.வி.யின் பெரும் பலம் அவரது கிரகிக்கும் திறன். பாடல் காட்சியை கேட்டுவிட்டு, பாடல் வரிகளைப் பார்த்தவுடன் அவரது விரல்கள் தானாக மெட்டை உருவாக்கிவிடும். பல சமயங்களில் அந்த மெட்டை மெருகேற்றி மெருகேற்றி, பலப் பல பாவங்களைக் காண்பிக்கும் திறனைப் பெற்றிருந்தார். பல இயக்குனர்களுக்குப் பிரபல பாடகர்கள் பாடிய பின்னரும் எம்.எஸ்.வி. கம்போஸிங்கில் அவரே பாடியது போலில்லை என்ற குறையுண்டு. ‘யாரந்த நிலவு’ படத்தின் பாடலைப் பாடிக் காட்டிய போது தனது குரலுக்கு இந்த மெட்டு ஒத்து வராது என டி.எம்.எஸ். பின்வாங்க, அவரைக் கட்டாயப்படுத்தி மிக மிக மென்மையான குரலில் பாடவைத்தவர் எம்.எஸ்.வி. பல சந்தர்ப்பங்களில் பாடகர்கள் அவர் சொல்லிக் கொடுப்பதைப் போல் பாடத் திணறியதுண்டு. வாணி ஜெயராம், எம்.எஸ்.வி. சொல்வதில் பத்து சதவீதத்தைப் பாடினால் போதும், பாடல் வெற்றிபெரும் என்ற இலக்கை வைத்துக் கொண்டவர். சுசிலா பலமுறை எம்.எஸ்.வி எதிர்பார்க்கும் துல்லியத்தை அளிக்க முடியாமல் வருந்தியதுண்டு என்று உரைத்தவர். ஆனால் எம்.எஸ்.வி. பாடகருக்கு எட்டக் கூடிய ஸ்தாயிக்குத் தனது மெட்டை வளைத்துக் கொண்டவர்.

பாலும் பழமும் போனால் போகட்டும் போடாவில் பிண்ணணியில் ஒலிக்கும் ‘ஓஹோ ஒ’ என்று குரல் கொடுத்து, ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ படத்தில் ‘ம்ஹூம்’ என்று ஹம்மிங் கொடுத்து வந்தவர் பின்னர்ப் பலப்பல பாடல்களைப் பாடியுள்ளார். ‘பார் மகளே பார்’ பாடல் இவரது குரலில், டி.எம்.எஸ்.ஸின் குரலின் பாடலை விட உணர்ச்சி பூர்வமாக உள்ளதை அறியலாம். திரையிசையுலகில் ‘பிச்சுக்கு விச்சு’ என்ற ஒரு வாக்கு உண்டு. அந்த அளவுக்கு உச்ச ஸ்தாயிகளைச் சர்வ சாதாரணமாக எட்டக் கூடியவர் எம்.எஸ்.வி. ‘எதற்கும் ஒரு காலமுண்டு’ என்ற சோகப் பாடலாயிருந்தாலும், ‘சம்போ சிவசம்போ’ பாடலும், ‘ஆலால கண்டா’ எளிதில் எட்டிவிடக் கூடியவர். ‘சம்போ சிவசம்போ ‘ பாடலைத் தெலுங்கில் பாட எஸ்.பி.பி. அவ்வளவு கஷ்டப்பட்டதாகப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

எம்.எஸ்.வியின் இசைக் கோர்ப்பு அசாத்தியமானது. அவரது இசை நுணுக்கங்கள் காலத்தை முந்தியிருந்ததால் வெகுஜனங்களுக்கு அவற்றைப் புரிந்து கொள்ள இயலவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் கேட்பவரகளைச் சுண்டியிழுக்கும் என்பதைத் தாண்டிப் பல சுவாரசியமான அம்சங்களைக் கொண்டவை அவரது இசை நுணுக்கங்கள். ஒரே பாடலில் பல ராகங்களின் சாயல் இருக்கும்; பல்லவியை விடச் சரணங்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். ‘அன்புள்ள மான் விழியே’ பாடலைக் கூர்ந்து கவனித்தால் அடுத்தடுத்த வரிகள் வேறுபட்ட ராகங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால் சரணத்தையும் பல்லவியையும் சேர்க்கும் விதம் மிக மிக அலாதியானது. பெரும்பாலும் இசைக் கருவிகள் இல்லாமலேயே இந்த வித்தையைச் செய்திருப்பவர் எம்.எஸ்.வி. மற்றொரு விஷயம் தாளம். அவரது பாடல்களில் பெரும்பாலான பாடல்களில் பல்லவி மேற்கத்திய தாளத்தில் அமைந்திருந்தாலும், சரணங்கள் தபேலாவின் ஒலியில் பரிமளிக்கும். இதற்கு விதிவிலக்காகப் பல்லவியில் தபேலாவையும், சரணங்களில் ட்ரம்ஸ், பாங்கோ போன்ற கருவிகளையும் பயன்படுத்தியிருப்பார். ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ பாடலில் டிஸ்கோ பாணி இசைக்கு மிருதங்கத்தையும், தவிலையும் பயன்படுத்தியிருப்பார். இது போன்ற எண்ணற்ற முரண்களை அழகிய ஸ்வரங்களாக மாற்றிய வல்லமை எம்.எஸ்.விக்கு மட்டுமே உண்டு.

‘வண்ணக் கிளி சொன்ன மொழி என்ன மொழியோ’ பாடலில் எலக்ட்ரிக் கிட்டாரை ‘டாம்ப்’ எனும் முறையில் மாண்டலினோடு பயன்படுத்தியதைச் சொல்வதா, ‘கர்ணன்’ படம் முழுதும் வடநாட்டுப் பின்புலத்தை நிலைநாட்ட ஷெனாய், சரோட், ஜலதரங் கருவிகளைப் பிரதானமாக உபயோகித்ததைச் சொல்வதா, ‘அவள் பறந்து போனாளே’ என்ற சோகப் பாடலின் தொடக்கத்தில் சிந்தசைசர்கள் உதவியின்றி ‘ப்ரிட்ஜ்’ பாணியில் கிட்டார் இசையைப் புகுத்தியதைச் சொல்வதா, ‘அன்புள்ள மான் விழியே’ கிட்டார், மாண்டலின் இணையைச் சொல்வதா, உப்புத் தாளின் உதவியோடு ரயிலோசையினை உண்டாக்கிய ‘சித்திரை மாதம் பவுர்ணமி நேரம்’ பாட்டைச் சொல்வதா, பால் கறக்க உதவும் குவளையின் துணையோடு குறைந்த இசைக் கருவிகளைக் கொண்டு உருவான கிராமியப் பாடலான ‘தாழையாம் பூ முடிச்சு ‘ பாடலைச் சொல்வதா, வயலினின் துணையோடு உருவான ‘வான் நிலா நிலா அல்ல’ பாடலைச் சொல்வதா, ‘சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே’ பாடலில் பல வித ராகத்தில் சிரிப்பினை ஸ்வரங்களில் அடக்கியதைச் சொல்வதா,  இசைக் கருவிகளின் துணையின்றி ‘விசில்’ (சீட்டியொலி) முன்னிறுத்திய ‘நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்’ பாடலைச் சொல்வதா? ‘ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல்’ பாடலில் உலகயிசை வகைகளை அடுக்கியதைச் சொல்வதா, வெகுஜனப் பாடலான ‘அடி என்னடி ராக்கம்மா’ பாட்டை..’ கேட்பவர்களை இன்றும் எழுந்து ஆடவைக்கும் ஆளுமையைச் சொல்வதா. அதே படத்தில் ‘கேட்டுக்கோடி உறுமி மேளம்’ பாட்டில் கிராமத்து அப்பாவியின் வரிகளுக்கு மேற்கத்திய மெட்டமைத்து, ‘ஒ மை ஸ்வீட்டி’ என நாகரிகப் பெண் பாடும் வரிகளுக்கு நாட்டுப்புற இசையமைத்துப் புதுமை காட்டியதைச் சொல்வதா,  பலே பாண்டியா படத்தில் ‘மாமா, மாப்பிள்ளை’ பாடலில் கர்நாடக ஸ்வரங்களை ஹாஸ்யத்துடன் கலந்திருப்பதைச் சொல்வதா? ‘வர வேண்டும் ஒரு பொழுது’ எனும் கலைக்கோயில் பாடலில் ஜாஸ் இசையை அறிமுகப்படுத்தியதைச் சொல்வதா,  ‘தங்க ரதம் வந்தது வீதியிலே’ என்று கீர்த்தனை இசைத்ததைச் சொல்வதா,  இன்னும் நூறு பக்கங்கள் எழுதினாலும் அடங்காத பட்டியலிது..

ஆர்மோனியப் பெட்டியின் முன் அமரும் வரை அந்தப் பாடலைப் பற்றிச் சிந்திப்பதில்லை என்று அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் அவரைப் பல மாதங்கள் அலைக்கழித்த நெஞ்சம் மறப்பதில்லை பாடலுக்கு அலையோசையின் சந்தத்திலேயே மெட்டமைத்தாகச் சொல்வார். கவிஞர் கண்ணதாசனையும் பல மாதங்கள் தவிக்க விட்டது இந்தப் பாடல் தான். ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்த மற்றொரு ஸ்ரீதர் படமான ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் முத்தான முத்தல்லவோ இருபது நிமிடங்களில் உருவாகிய பாடல். கர்ணன் படப் பாடல்களுக்காக இவர்கள் இருவரும் ஒரு மாதம் தங்க ஏற்பாடுகள் செய்து கொடுத்துப் பாடல்களோடு தான் வரவேண்டும் என்று சொல்லி அனுப்பிய பி.ஆர். பந்துலு நான்கு நாட்களில் இருவரும் பாடல்களோடு சென்னை வந்து நின்றபோது ஆச்சரியப்பட்டுப் போனார். ஏற்கனவே வேறொரு இசையமைப்பாளரை நியமித்துத் திருப்தி ஏற்படாமல் போகவே எம்.எஸ்.வியை நியமிக்க, படக்குழுவினர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்ட நிலையில் எட்டுப் பாடல்களை 120 விதவிதமான மெட்டுக்களில் உருவாக்கித் தந்தவர் எம்.எஸ்.வி. புதிய பறவையில் எங்கே நிம்மதி பாடலுக்கு 300 கருவிகளுக்கு மேல் கையாண்டவர் தண்ணீர் தண்ணீர் ‘கண்ணான பூமகனே ‘ பாடலில் ஸ்ருதிக்காகக் கிட்டாரும், கடமும் மட்டுமே பயன்படுத்தியதும் உண்டு.

ஆர்மோனியம் மட்டுமின்றிப் பியானோ, கீபோர்டு வாசிப்பதில் அசாத்திய திறன் படைத்திருந்தார் எம்.எஸ்.வி. ரஷ்யப் பயணத்தின் போது ‘செக்காய்ஸ்கியின் இசையை முதன் முதலாக அறிந்து கொண்டு அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்த பியானோவில் அதை வாசிக்க அந்த அருங்காட்சியகமே எழுந்து நின்று கைத்தட்டி ஆர்பரித்ததைக் கவிஞர் கண்ணதாசன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். பல மேற்கத்தியக் கருவிகளையும் இசையையும் தமிழுக்குக் கொண்டு வந்தவர் எம்.எஸ்.வி.

‘ஆடவரெல்லாம் ஆட வரலாம்’ ஜாஸ் பின்னணியும், ‘பட்டத்து ராணியில்’ எகிப்திய இசையும், ‘பன்சாயி காதல் பறவைகளில் ‘ ஜப்பானிய இசையும், ‘கண் போன போக்கிலே’ வில் ரஷ்ய இசையும் பல, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ , கல்யாண நாள் பார்க்கச் செல்லலாமா பாடல்களில் ஜாஸ் ஸ்விங் பின்னணியும், ‘துள்ளுவதோ இளமை’ பாட்டில் மெக்சிகன் இசையும், ‘அழகி ஒருத்தி இளநி விக்கிறா’ பாட்டில் பைலா இசையும், ‘நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக் கனா’ பாட்டில் கஜலும் இன்னும் எண்ணற்ற ஜாலங்களைச் செய்து காட்டியவர்.

அது நாள் வரை திரைக்குப் பின்னால் இயங்கி வந்த இசைக் கலைஞர்களை மேடையேற்றி முதல் முதல் மேடைக் கச்சேரி செய்த பெருமை இவரையே சாரும். இந்திய பாகிஸ்தான் போர் நடந்து வந்த போது போர்முனைக்குச் சென்ற திரைக் குழுவினரோடு சென்று தோளில் ஆர்மோனியத்தை மாட்டிக் கொண்டு பாடி மகிழ்வித்தவர் எம்.எஸ்.வி.

அவற்றைப் பற்றிப் பேசும் போது ‘ இதெல்லாம் நானா செய்தேன்?’ என்று இரண்டு கரங்களையும் மேல்நோக்கிக் காண்பிக்கும் அளவுக்கு மிஞ்சிய தன்னடக்கம் கொண்டவர் எம்.எஸ்.வி.. நாம் வற்புறுத்திக் கேட்டால் ‘நான் இசையை அமைக்கவில்லை’ வார்த்தைகளில் இருக்கும் இசையைத் தேடிக் கண்டுபிடிக்கிறேன் அவ்வளவு தான் என்பார். எவ்வளவு உயரத்தில் இருந்த போதிலும் தற்பெருமையோ கர்வமோ கொண்டவரில்லை எம்.எஸ்.வி. மாறாக மிகுந்த அடக்கமும், எளிமையும் கொண்டவர். பல இயக்குனர்கள் வேறு இசையமைப்பாளர்களைப் பிரிந்து வந்த போது, அந்த இசையமைப்பாளர்களைச் சந்தித்து அவர்களிடம் அனுமதி பெற்ற பின்பே அப்படங்களில் பணியாற்றினார். வி.குமார், ஏ.எம். ராஜா, கே.வி.மகாதேவன் எனப் பலரும் இதில் அடக்கம். அதே போன்று மொழி மாற்றப் படங்களிலும் மூலப்படத்தின் பாடலை அப்படியே பயன்படுத்தச் சொல்லிக் கேட்ட இயக்குனர்/ தயாரிப்பாளர்களிடமிருந்து பணிவோடு விலகியவர் அவர். படகோட்டி படத்தில் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதிவிட மேலும் ஒரு பாடல் தேவைப்பட்ட சமயத்தில் அவருக்கு உடல்நலமின்றிப் போய்விட பலரும் வேறொரு பாடலாசிரியரை நாடிய போது, அத்தனை அருமையான பாடல்களை வாலி எழுதிய பிறகு வேறொருவரைத் தேடிச் செல்வது முறையல்ல என்று கருதிய எம்.எஸ்.வி. வாலியின் வீட்டுக்கு ஆர்மோனியத்துடன் சென்று மெட்டமைக்க, படுக்கையில் படுத்த படி வாலி எழுதிய பாடல் ‘அழகு ஒரு ராகம்.’ இப்படி, அவரவருக்குக் கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் உரிய முறையில் கிடைக்க வேண்டும் என நினைத்தவர் எம்.எஸ்.வி.

இதை எல்லாவற்றையும் மீறி மிகச் சிறந்த மனிதப் பண்புகளைக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. தனது குருநாதரான எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்குப் பாராட்டு விழாவினை முன்னிருந்து நடத்தினாலும், குருவுடன் மேடையில் அமர்வது முறையாகாது என்று மேடையேற மறுத்து விட்டார். அதே போன்று அவர் மிகவும் மரியாதை கொண்டிருந்த இந்தி இசையமைப்பாளர் நௌஷத் எம்.எஸ்.வியின் பாராட்டு விழாவுக்கு வந்திருந்த போதும் அவர் முன் அமராமல் நிகழ்ச்சி முழுதும் நின்றவாறே ரசித்தவர். எஸ்.எம்.எஸ்.ஸின் இறுதிக் காலத்தில் அவரைத் தன் வீட்டில் வைத்து மருத்துவ உதவிகள் செய்தது மட்டுமல்லாமல், அவர் இறந்தபின்பு பிள்ளையின் நிலையிலிருந்து இறுதிச் சடங்குகளைச் செய்தவர். சந்திரபாபு சொத்துக்களை இழந்து திரையுலகால் ஒதுக்கப்பட்டபோது அவரைத் தனது வீட்டில் வைத்துப் பார்த்துக் கொண்டார்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஏறத்தாழ 1700 படங்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி. இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசையமைத்து 2004 ஆம் வெளிவந்த விஸ்வதுளசி அவரது இறுதிப் படமாக அமைந்தது. அதற்குப் பின்னர் அவர் சில படங்களுக்கு இசையமைத்தாலும் அவை வெளிவராமல் முடங்கிப் போயின. விஸ்வதுளசி படத்துக்கு அமெரிக்காவின் ‘ரெமி அவார்டு’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐம்பது ஆண்டுகளாகத் திரைத்துறையில் பணியாற்றிப் பலருக்கு வெற்றிப்பாதை அமைத்துக் கொடுத்து, தேசிய விருது கிடைக்கக் காரணமாக இருந்த எம்.எஸ்.விக்குக் குறிப்பிடத்தக்க விருதுகள் கிடைக்காதது அவ்விருதுகளுக்கான தலைக்குனிவே. மியூசிக்கல் என்ற பெயரில் இன்று பல விளம்பரங்கள் நடந்தாலும் தமிழில் ஒரே மியூசிக்கலான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திற்குத் தமிழ்நாடு அரசின் விருது கிடைக்கும் என்று அவரது விசிறிகள் காத்திருந்த போது, பலவித அரசியலால் அந்த விருதும் தன பெருமையை இழந்தது. 1963ம் ஆண்டுக் கவியரசு கண்ணதாசன், ஸ்ரீதர், ஜெமினி கணேசன், சந்திரபாபு முன்னிலையில் சிவாஜி கணேசனால் அளிக்கப்பட்ட ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் மட்டுமே இருவருக்குமே நிலைத்துப் போனது.

இப்படிப் பல புதுமைகளைப் புகுத்தி, சரித்திரங்களைப் படைத்துச் சாகாவரம் பெற்ற பாடல்களைக் கொடுத்த எம்.எஸ்.வி. கடந்த ஜூலை பதினான்காம் நாள் இறந்து விட்டார். அவர் அடிக்கடி குறிப்பிடும் ‘இறக்கும் மனிதர்கள் ; இறவாப் பாடல்கள்’ எனும் கூற்றின் பின்தான் எவ்வளவு உண்மை பொதிந்துள்ளது.

தமிழ்த் திரையிசை இன்று வெவ்வேறு வடிவங்களைக் கண்டிருந்தாலும் எம்.எஸ்.வி. அமைத்துத் தந்த ராஜபாட்டையை விட்டு வெளியே வரவில்லை என்பதே அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. அவரது தாக்கமும், சாயலுமின்றி இன்று வரை வேறொரு இசையமைப்பாளர் வரவில்லை; என்றும் வரமுடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ‘நீராடுங் கடலுடுத்த’ தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தமிழர்கள் மறக்காத வகையில் அதற்கு இசைவடிவமளித்த எம்.எஸ்.வி. யும் மெல்லிசையாக வாழ்ந்திருப்பார்.

–   ரவிக்குமார்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. N Ravi Velan says:

    It is stupid not to give the credit equally to TKR in duo music.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad